சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை அடுத்து, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால் திராவிட மாடல் ஆட்சியும், பொதுமக்களும் நிம்மதியடைந்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைத்து அரசியல் ஆதாயம் அடைவதற்காக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களை தூண்டிவிடும் வகையில் வன்மத்துடன் பேசி வருவதை, ஜனநாயகவாதிகள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகக் கூடாது என்று அதிக அக்கறையோடு பேருந்து இயக்கம் தடைபட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற்கொண்ட சேவைகள் வியப்பிற்குரியது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்ஸும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸும் ஒரு வார காலத்திற்கு மேலாக நிம்மதியின்றி தவித்த போதும், ஒன்று இரண்டு அசம்பாவித நிகழ்வுகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக இரண்டு நாள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாகவே சமாளித்து இருக்கிறார்கள்.
பொங்கல் திருநாளில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வது சிரமமாகிவிடுமோ என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், ஜனவரி 9 மற்றும்10 ஆகிய இரண்டு நாட்களிலும் வெளியூர் பயணம் பாதிக்கப்படவில்லை என்பதை வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் செய்தித்துறையும் மாநிலம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் குறித்த முழு தகவல்களையும் பிரதான ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சென்றதெல்லாம், 15 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கவே இல்லை.
ஜனவரி 11 ஆம் தேதி வியாழக்கிழமை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போராட்டத்தை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கே அதிக நேரம் செலவிட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சி உள்பட ஒட்டுமொத்த அதிமுக ஆட்சியின் 15 ஆண்டு காலமும் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பொற்காலமாக இருந்ததே இல்லை.. போராட்ட காலமாகதான் அமைந்திருந்தது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது நல்லரசு.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் அதிமுக அரசுக்கு எதிராக மூன்று முறை அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள், போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை நினைவுக்கூர வேண்டியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய தேதியில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே மறுத்துவிட்டார் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை தான் அப்போதும் தொழிற்சங்கங்கள் முன்வைத்திருந்தன.
ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை எடுத்துக்கூறி, கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரசின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த போது, சென்னையில் மட்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளாமல், விழுப்புரம், வேலூர் என பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று, பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு பேருந்துகளை முழுமையாக இயக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆய்வு ஆகியவை பற்றியும் மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுகளையும் உடனுக்குடன் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்றது தமிழ்நாடு அரசின் செய்தித்துறை.
2019 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டன. 2019 ஆம் ஆண்டில் இருந்தே சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாகவும் இருந்தது. 2017லும் 2019 லும் முதல் அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான். இன்றைக்கு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குற்றம் சொல்கிற எடப்பாடி பழனிசாமி, 2017, 2019 மற்றும் 2021 லும் தினக்கூலி அடிப்படையில்தான் ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் நியமித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற முயற்சிகளை மேற்கொண்டாரே தவிர, தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இத்தனைக்கும் 2017 ல் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி அரசு, அதிமுக ஆட்சி முடியும் வரை ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருவதுதான். இத்தனை ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அதிமுகதான் ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது எவ்வளவு அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். 2017 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்களுடன் எடப்பாடி பழனிசாமி அரசில் இருந்த கல்வி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து என மூன்று துறைகளுக்கான மூன்று அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளையே, கிடப்பில் போடப்பட்டதன் விளைவுதான், இன்றைய தேதியில் தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வீரியப்படுத்தியிருக்கிறது.
முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற காலத்திலேயே, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையான நிதியை, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ஒதுக்குவதில்லை என்று குற்றம் சுமத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறி, அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் லட்சணத்தை அமல்படுத்தியிருந்தார்கள்.
அதிமுகவின் ஒட்டுமொத்த ஆட்சிக்காலத்தில் குற்றுயீராக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தை சீரமைப்பது என்பது தற்போதைய திராவிட மாடல் அரசுக்கு சவாலான ஒன்றுதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் வேண்டுகோளில் இருக்கும் நியாயத்தையும் புறக்கணித்துவிட முடியாது.
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று தொழிற்சங்கங்கள் கேட்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு, இனி வரும் காலங்களிலாவது நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையையொட்டி, வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தொழிற்சங்கங்கள் கொடுத்த நெருக்கடியை விட, பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆட்சிக்காலத்தில் செய்த துரோகத்தை எல்லாம் மறந்துவிட்டு, போக்குவரத்து கழக பணியாளர்களை தூண்டிவிடும் வகையில் பேசியதும், அதிமுகவின் கைப்பாவையாகிவிட்ட, ஊடகவியலாளர்களுக்கு அவமானத்தை தேடித் தந்து கொண்டிருக்கும் தீய சக்தி சவுக்கு சங்கரும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
2000 ஆம் ஆண்டில் இருந்தே வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக
2011 சட்டமன்றத் தேர்தலின் போது, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை 2021 ஆண்டு வரை பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் மூச்சே விடவில்லை. 2011ல் ஆட்சியை கைப்பற்றிய அதிமுக, பேருந்து கட்டணத்தை 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தியதன் மூலம் லாபத்தில் இயங்கிய போதும், 12 வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தாதது மட்டுமின்றி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இதர பணப் பயன்களையும் கூட வழங்காமல், அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது என்று 2013 அக்டோபர் மாதமே கடுமையாக குற்றம் சாட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதைவிட, அதிமுக ஆட்சியின் அவலத்தை சுட்டிக்காட்டும் வகையிலும் சோக நிகழ்வுகள் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அரசு கழக பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது.
2001 ல் தீபாவளி போனஸ் கேட்டு நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, 5000 பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதைவிட துயரம் தரக்கூடிய செய்தி, 28 பேர் உயிரிழந்தார்கள் என்பதை நினைவுக்கூரும் போது, அதிர்ச்சி மேலிடுவதை தவிர்க்கவே முடியவில்லை.
தற்காலிக பணியாளரை வைத்து அரசு பேருந்தை இயக்கியபோது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 33 பேர் பயணித்த சரக்கு வாகனத்தின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 28 பேர் அநியாயமாக உயிரிழந்தார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதைய போக்குவரத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன். இன்றைக்கு பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்து வரும் நேரத்தில்தான், தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலையும், அரசு போக்குவரத்துக் கழக வேலைநிறுத்தப் போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் அடைய மிகவும் மெனக்கெடுகிறார்.
அரசு பேருந்து பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தில், இவ்வளவு துயரமான நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்பதை எல்லாம் மறைத்துவிட்டு, தற்போதைய திமுக ஆட்சியில் நடைபெற்ற சிறிய அளவிலான அசம்பாவிதங்களை ஊதி பெரிதாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிற போது, தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைப்பதற்குதான் அவரது தலைமையிலான அதிமுக துடிக்கிறது என்றே குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தைவிட, தற்போதைய திமுக அரசு, வேலைநிறுத்தப் போராட்டத்தை அணுகிய விதமும், முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், அரசு நிர்வாக பார்வையில் நேர்மையாகவே இருக்கிறது என்கிறார்கள் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்.
அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் அதிரடி
அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் நாளான ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்த அதிரடி அறிவிப்பு தான், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வரலாற்றில் ஆச்சரியத்திற்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது.
ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் ஆடிப்போய்விட்டனர். அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் 9,764 பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் 100 சதவீதம் அளவுக்கு இல்லாமல் 112 சதவீதமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அதன் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸும் வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்த அதே நேரத்தில், தொழிற்சங்க நிர்வாகிகளை சோர்வடைய வைத்துவிட்டது என்கிறார்கள்.
ஜனவரி 10 ஆம் தேதியே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரைக்கு ஏற்ப, தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்ததன் மூலம், பொதுமக்கள் நிம்மதியடைந்தார்கள். தை திருநாள் விழாவிற்காக சொந்த ஊர் செல்வதற்கு தயாராக இருந்த பொதுமக்கள், துளியும் அச்சமின்றி, ஜனவரி 12 ல் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு குடும்பத்தினரோடு பயணமானார்கள்.
தமிழ்நாட்டிலேயே, சென்னையில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள் என்பதால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமும் விரைவாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், தை திருநாள் பண்டிகை கோலாகலத்தில் எந்த சிக்கலும் எழவில்லை.
பொங்கல் பண்டிகை காலத்தில் தொழிற்சங்கள் அறிவித்த வேலைநிறுத்தம், பொதுமக்களிடமும், திராவிட மாடல் ஆட்சியாளர்களிடமும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், இரண்டே நாட்களில் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால், பொதுமக்களும், போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும், போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்ஸும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அதேபோல, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பிருந்தே தமிழ்நாடு அரசின் செய்தித்துறை, இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஏற்படும் பீதியை முழுமையாக தவிர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அயர்ச்சியடையாமல் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
தமிழக அரசுடனான தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை, அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் என முழுமையான தகவல்களை உடனுக்குடன் பிரதான ஊடகங்களான தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடம் கொண்டு சென்றது செய்தித்துறை. அதுவும், வேலைநிறுத்தம் தொடங்கிய 9 ஆம் தேதி அதிகாலை முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்து ஆர்ப்பாட்டம், மறியல் என தொழிற்சங்கள் தீவிரம் காட்டிய ஜனவரி 10 ஆம் தேதி காலை வரை, 30 மணிநேரத்திற்கு மேலாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும், தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் இணை இயக்குனர் அண்ணாதுரை உள்பட தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தித்துறை அலுவலர்கள் ஒருமணிநேரம் கூட ஓய்வே எடுக்காமல், மாவட்டந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் புள்ளி விபரங்களை தருவித்து, உடனுக்கு உடன் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து, பண்டிகை கால பயத்தை போக்கினார்கள் என்று தலைமைச் செயலக அலுவலர்களே வியப்பு நீங்காமல் தெரிவித்ததையும் வாசகர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
நிறைவாக, கடந்த 20 ஆண்டு காலத்தில், அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து சிஐடியு தொழிற்சங்கம், உண்மையான அக்கறையுடனேயே போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியோ, திமுக ஆட்சியோ, பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு ஏற்பவே, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே உரக்க குரல் கொடுத்து வந்திருக்கிறது.
2021 ல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் வரும் காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே உழைக்கும் வர்க்கத்தினரின் வேண்டுகோளாக இருக்கிறது.