Sat. May 18th, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கனிமொழி கருணாநிதி எம்பி ஒற்றை நபராக சுற்றி சுற்றி வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் பரிதாப நிலையை பார்த்து, கலைஞரோடு சம காலத்தில் அரசியல் பயணம் மேற்கொண்டிருந்த திராவிட சித்தாந்தவாதிகள் வருத்தத்தில் உள்ளார்கள்.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட துயரத்தில் இருந்தே மீள முடியாமல் ஒருகோடி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள், வரலாறு காணாத மழைக்கு பயந்து போய் முடங்கி விடாமல் வாழ்வாதாரமே கேள்விக்குறியான பிறகும் கூட, ஒரு வாரத்திற்குள்ளாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை தரும் அம்சமாகும்.

100 சென்டி மீட்டர் அளவுக்கு வானத்தை கிழித்துக்கொண்டு பேய் மழை பெய்த போதும், 48 மணிநேரத்திற்குள்ளாகவே வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார்கள் காயல்பட்டினம், திருச்செந்தூரைச் சேர்ந்த மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்து, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் உடமைகளை முழுவதும் இழந்துவிட்டிருக்கும் சோகம் ஒருபக்கம் என்றால், உயிர்களை காப்பாற்றிக் கொள்ளவே வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களின் நிலைமைதான் மிகவும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி,தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கு மேலான மக்கள் உயிர் அச்சத்தோடு தவித்துக் கொண்டிருந்த போது, ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் துயரங்களை துடைத்தெறியும் வகையில் களத்தில் நிற்காமல், அரசியல் ஆதாயத்தை முதன்மையாக நினைத்து, டெல்லிக்கு பறந்து சென்றதை, எதிர்க்கட்சியினர், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதை நினைத்துதான் திமுகவினர் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான கோபத்தை ஓரளவுக்கு தணிக்கும் வகையில் பேய் மழை பெய்த நாளிலேயே களத்தில் முழுவீச்சில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார் தூத்துக்குடி எம்பியும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வியுமான கனிமொழி எம்பி.

டிசர்பர் 16 ம் தேதி முதல் டிசம்பர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 24 மணிநேரத்திற்கு மேலாக கொட்டிய அடை மழையால், தூத்துக்குடி மாவட்டமே வெள்ளத்தில் மூழ்கியது. திங்கட் கிழமை காலையில் தூத்துக்குடிக்கு விரைந்த கனிமொழி எம்பி., அடை மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்திலும் பேருந்தில் பயணம் செய்து, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்து, பேரிடரை எதிர்கொள்ளும் துணிச்சலை ஏற்படுத்தினார். அன்றைய தினம் இரவு முழுவதும் களத்திலேயே மக்களோடு மக்களாக நின்று நிவாரணப் பணிகளை வழங்கி, நம்பிக்கை இழந்து தவித்த மக்களுக்கு ஆறுதலை தந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அவரது புதல்வரும் இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, சேலத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார்.

தூத்துக்குடி எம்பியாக ஐந்து ஆண்டுகள் சேவையாற்றிய கனிமொழி எம்பிக்கு, மாவட்டம் முழுவதும் பரிட்சயம் என்பதால், மூலை முடுக்கில் இருந்து எல்லாம் உதவி கேட்டு வந்த அபலைக்குரல்களுக்கு ஆறுதல் அளித்து ஒற்றை ஆளாக ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கனிமொழி எம்பி.

தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனும் கீதா ஜீவனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், கீதா ஜீவன் மட்டுமே கனிமொழி எம்பியுடன் பல பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.


பேய் மழை பெய்த டிசம்பர் 17 முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அமைச்சர் வசித்து வந்த ஏரல் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால், ஊரை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், அனிதா ராதாகிருஷ்ணனால் மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. டிசம்பர் 20 ஆம் தேதி அமைச்சரையே தீயணைப்பு படை வீரர்கதான் பாதுகாப்பாக மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு வெளியேறி திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று மக்களுக்கு ஆதரவு தரும் நிலையில் கூட கனிமொழிக்கு நேரம் இல்லாமல் இருந்தது. அதற்கு மற்றொரு அரசியல் காரணமும் கூறப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திற்கும் கனிமொழி கருணாநிதி செல்லக் கூடாது என்று திமுக தலைமை கறாரான உத்தரவை ஏற்கெனவே பிறப்பித்திருக்கிறது என்கிறார்கள் தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள்.

டிசம்பர் 18 முதல் இன்றைய தேதி வரை தூத்துக்குடி நகரத்திலேயே தங்கியிருந்து பகல், இரவு பாராமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தனியொரு ஒருவராக களப்பணி ஆற்றி வரும் கனிமொழி எம்பியின் மக்கள் சேவையை பார்த்து பார்த்து தூத்துககுடி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். ஆளும்கட்சியான திமுக மீதான கோபத்தையும் கூட கனிமொழியின் ஆத்மார்த்தமான மக்கள் சேவைதான் தணித்துக் கொண்டிருக்கிறது.

கலைஞரின் புதல்வி கனிமொழி என்ற அடிப்படையில் கூட இல்லாமல், தூத்துக்குடி தொகுதியின் எம்பி என்ற அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கனிமொழியின் துயர் துடைக்கும் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், முதல்வரின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார் என்று காரணம் காட்டி, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கனிமொழி எம்பியை புறக்கணித்தை பார்த்து, தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னோடிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

அரசு அதிகாரிகள் உடன் வராதபோதும் அயர்ச்சி அடையாமல், திமுக நிர்வாகிகளுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பயணித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட கனிமொழியின் அயராத உழைப்பைப் பார்த்து, திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, அனைத்துகட்சி அரசியல் பிரமுகர்களும் மனதார பாராட்டினார்கள்.
தனிப்பட்ட கனிமொழி எம்பிக்கு நல்ல பெயர் கிடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரின் செல்வாக்கை குறைக்கும் வகையில் திமுக தலைமை பிறப்பித்த அவசர உத்தரவு தான் தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளை ஆவேசப்பட வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வருக்குப் பதிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்ய வருகிறார் என்று மூத்த அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சென்னையில் இருந்து தகவல் பறந்தது. சேலத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் திருநெல்வேலிக்கு விரைந்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் இணைந்து கொண்டதுடன், சென்னையில் இருந்து வந்திருந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ், வருவாய் துறை முதன்மை செயலாளர் பிரபாகரன் ஐஏஎஸ் என உயரதிகாரிகள் பட்டாளும் இணைந்து கொண்டது. கிட்டதட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் போது மூத்த அமைச்சர்கள், உயர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடன் வலம் வருவதைப் போலவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடபுடலான வரவேற்பு வழங்கப்பட்டது.

மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் புடை சூழ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். தூத்துக்குடி நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் சென்று மிட்பு பணிகளை விரைவு படுததினார். அதே நேரத்தில் தனியொருவராக கனிமொழி கருணாநிதி எம்பி, தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று ஆறுதல் கூற கூட யாரும் எட்டி பார்க்காத மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். திமுக அரசு எப்போதும் ஆதரவாக நிற்கும் என்று நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிக நேரம் செலவிட்டதால், கனிமொழி எம்பியின் களப்பணிக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டது. கலைஞர் மு.கருணாநிதியின் வாரிசு, அரசியலில் நீண்ட காலம் அனுபவம், தூத்துக்குடி மாவட்ட மக்களுடன் நேரிடையான பரிட்சயம் என 5 ஆண்டு காலமும் தூத்துக்குடி மக்களுக்கான உழைத்த கனிமொழி எம்பியின் கடுமையான மக்கள் பணி, உதயநிதி ஸ்டாலின் வருகையால், இரட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்று ஆதங்கப்படுகிறார்கள் தூத்துக்குடி மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பகல் இரவு பாராமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கி கொண்டிருக்கும் நேரத்தில், அவரை பற்றி சர்ச்சைக்குரிய செய்தி எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த நேரத்திலேயே அவருக்கு எதிரான சர்ச்சை றெக்கை கட்டி பறந்தது. திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதியுடன் காட்சியளித்ததும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயரதிகாரிகளுக்கும் கட்டளைகளை பிறப்பித்ததும் சமூக வளைதளங்களில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. மாரி செல்வராஜுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பேரிடர் காலத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெறுவதற்கு உயிரை கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கனிமொழி கருணாநிதி எம்பிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். 5 ஆண்டு காலம் தூத்துக்குடி மக்களுக்காகவே பாடுபட்டு வந்த கனிமொழிக்கு, மேலும் மேலும் நல்ல பெயர் கிடைப்பதற்கு ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் கனிமொழியின் கட்டளைகளுக்கு அடிபணியும் வகையில் உத்தரவு பிறப்பித்திருந்தால், கலைஞரின் வாரிசுகளிடையே மனக்கசப்பு இல்லை என்பதை வெளியுலகத்திற்கும் தெரிந்திருக்கும். அப்படிபட்ட நல்லதொரு வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினே கெடுத்துக் கொண்டார் என்று ஆதங்கப்படுகிறார்கள் கலைஞர் மு.கருணாநிதியோடு அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்த திராவிட சிந்தனையாளர்கள்.

டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்குள்ளாவெகவே நான்கு மாவட்டங்களிலும் வெள்ள நீர் வடிய தொடங்கியதால், பெரும்பான்மையான மக்கள் நிம்மதி பெருமூச்சுடன், எதிர்கால சவால்களை சந்திக்க தயாராகிவிட்டார். சென்னையில் சிறு மழை பெய்ததாலே புலம்புகிற மக்களையே பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு, வீடு, வாசலை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்த பிறகும், உயிராவது மிஞ்சியதே என்ற நம்பிக்கையோடு அன்றாட சவால்களை எதிர்கொள்ள மன தைரியத்துடன் உழைக்க தயாராகிவிட்டார்கள்.

இந்திய வரலாற்றிலேயே இதற்கு முன்பு எப்போதும் பெய்யாத மழை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த போதும் கூட, உயிர் பயத்தில் தென் மாவட்ட மக்கள் தவித்த போதும் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக நிற்காமல் புறக்கணித்தது, தென் மாவட்ட மக்களின் மனங்களை பெரிய அளவில் காயப்படுத்திவிட்டது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

ஆளும்கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட டெல்லிக்கு சென்றுவிட்டார் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தர்மயுத்த நாயகர் ஓ.பன்னீர்செல்வத்தால் தென்மாவட்ட மக்களிடம் ஏற்பட்ட கசப்புணர்வை நீங்கி கொள்ள, அடை மழை காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களிலும் அடை மழை பெய்து கொண்டிருந்த போது, அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உற்சாகமாக பங்கேற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சித் தலைவரும் அரசியல் ஆதாயத்தத்திற்குதான் முன்னுரிமை கொடுக்கிறார் என்ற முணுமுணுப்புகள் எழுந்த பிறகே, அவசர அவசரமாக திருநெல்லிவேலிக்கு பயணமானார் எடப்பாடி பழனிசாமி.

இந்திய வானிலை ஆய்வு மையத்தாலேயே முன்கூட்டியே கணித்து சொல்ல முடியாத அளவுக்கு அடை மழை பெய்திருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தனித்துவம் மிக்க மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லி, தனிநாடு கோரிக்கைகள் கூட அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில், தமிழ்நாட்டில் இருந்து தென் மாவட்டங்களே தனியாக பிரிந்து சென்று விடும் அளவுக்கு இயற்கை சரியான பாடம் கற்பித்திருக்கிறது.

அரசியல் ஆராய்ச்சிகள் மேம்பட்டிருந்தாலும், தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இயற்கை முன்பு மனித சக்தி ஒன்றுமே இல்லை என்பதை 4 மாவட்டங்களில் கொட்டி பேய் மழை நிரூபித்திருக்கிறது.
இயற்கையிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, துயர் மிகுந்த நேரங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களும் முழுமையாக சிதைக்கப்பட்ட பிறகும் கூட தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போல, கடுமையான வெள்ளப் பாதிப்பை வைத்து திராவிட மாடல் அரசுக்கு எதிராக அரசியல் செய்து வருவதை போலதான் மத்திய பாஜக அமைச்சரின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன என்ற விமர்சனம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழராக இருந்தும், தாய் ஸ்தானத்தில் இருந்தும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், உடனடியாக மத்திய அரசின் பேரிடர் கால நிவாரண நிதியை ஒதுக்காத நிர்மலா சீதாராமன் மீது கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் இரண்டு மாவட்ட மக்கள் துடைத்தெறிந்து விட்டார்கள்.

பிரதமர் மோடியின் கட்டளையை ஏற்று வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெயரளவுக்குதான் மக்களின் வேதனைகளை காது கொடுத்து கேட்டார். பல லட்சம் மக்களின் துயரை துடைக்கும் சக்தி, தம்மிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளாத நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பு காலத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார் என்று வேதனையை பட கூறுகிறார்கள் தமிழக பாஜக முன்னணி நிர்வாகிகள்.

ஏழைக்கு உதவ வேண்டும் என்று கனிமொழி எம்பியின் மனம் துடிக்கிறது. முழுமையான ஆட்சி அதிகாரம் இல்லை. நிர்மலா சீதாராமனிடம் அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் இருக்கிறது. ஆனால், கண்ணீர் சிந்தும் கண்களை துடைக்க வேண்டும் என்ற மனிதநேயம் துளியும் இல்லை என்பதுதான் காலக்கொடுமை.