Sat. May 18th, 2024

மத்திய அமைச்சரோ, மாநில அமைச்சரோ.. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் தரும் வரவேற்புதான், அந்தந்த அமைச்சரின் மனிதநேயத்தை பறை சாற்றும். தென் தமிழகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் நிர்மலா சீதாராமன் வருகையையும் ஆய்வுப் பணியையும் ஆரவாரமாக வரவேற்கவில்லை.

அதற்குப் பதிலாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி இருப்பதை வைத்து பார்க்கும் போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சருக்கு, குறிப்பாக தாய் ஸ்தானத்தில் உள்ள நிர்மலா சீதாராமனைப் போல, இதற்கு முன்பு எந்தவொரு மத்திய அமைச்சரும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பையும் எதிர்கொண்டதில்லை என்பதுதான் வரலாறாக இருக்கிறது.

இன்றைய நல்லரசு சிறப்புச் செய்தி தொகுப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தமிழக வருகையை முன்னிட்டுள்ள எழுந்துள்ள ஆதரவையும் வரவேற்பையும் விரிவாக பார்ப்போம்.

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மட்டுமின்றி, தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளுக்கு ஏற்ப உரிய நிதியை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என்ற விமர்சனம், தமிழ்நாட்டை கடந்து தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலியில் ஒரு வாரத்திற்கு மேலாக திராவிட மாடல் அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முனைப்பு காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இரண்டு கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையில்லாமல் தலையிட்டுவிட்டார் என்று தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்பவே, பிரதமர் அலுவலகமும் சூடான கருத்துகளை பகிர்ந்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டிற்குள் மட்டும் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி விவகாரத்தை டெல்லியிலும் பேசுப் பொருளாக மாறியிருப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டார் நிர்மலா சீதாதாரமன் என்ற வருத்தம், மத்திய பாஜக அரசுக்கு தலைமை ஏற்றிருக்கும் பிரதமர் மோடிக்கும் ஏற்பட்டிருப்பதாக டெல்லி தகவல் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் சாதாரணமாக கடந்து போக வேண்டிய காற்றழுத்தம், வரலாறு காணாத வகையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நேரத்தில், மத்திய பாஜக அரசு செய்த உதவிகளை பெரியளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்தான் டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று மத்திய பாஜக மூத்த அமைச்சர்கள் பலரும் கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதை பிரதமர் அலுவலகம் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போகிற போக்கில் பேசிய விஷயத்தை, மத்திய பாஜக அரசுக்கு எதிரான விமர்சனமாக மாறுவதற்கு மத்திய பாஜக அமைச்சர்களே காரணமாக அமைந்துவிட்டார்களே என்று பிரதமர் வருத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள் டெல்லி மூத்த ஊடகவியலாளர்கள்.
பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், திமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான அரசியல் சண்டையாக மாறுவதை டெல்லி பாஜக மேலிடமும் விரும்பவில்லை என்றும் கூறுகிறார்கள்.
மத்திய அரசிடம் இருந்துதான் நிதி கேட்கிறோமே தவிர, மத்திய அமைச்சர்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை எதிர்கொண்ட விதத்தையும், பிரதமர் அலுவலகம் ரசிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியருக்கிறது.
ஆளுநர் தமிழிசை, அரசியலில் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆளுநர் பதவிக்கு உரிய கண்ணியத்தை மறந்துவிட்டு, அரசியல் ரீதியாக கருத்துகளை முன் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று மத்திய பாஜக அரசின் மூத்த அமைச்சர்களே வருத்தத்தோடு சுட்டி காட்டியிருக்கிறார்கள்.

இயற்கை சீற்றத்தால், தமிழகத்தில் 8 மாவட்ட மக்கள் மிகுந்த துயரத்தில் இருந்து வரும் நேரத்தில், ஆளுநர் தமிழிசை போலவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அரசியல் செய்து கொண்டிருப்பதை பிரதமர் மோடியே ரசிக்கவில்லை என்று டெல்லியில் உள்ள மூத்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அடுத்து, நிதியமைச்சர் என்ற முக்கிய பதவியில் உள்ள நிர்மலா சீதாராமன், தான் வகிக்கும் பதவிக்கு உரிய கண்ணியத்தை மறந்துவிட்டு, டெல்லியில் அமர்ந்து கொண்டு அமைச்சர் உதயநிதிக்கு பதிலடி கொடுப்பதை போல பேட்டியளித்ததை பிரதமர் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மூத்த அமைச்சர்கள் கண்டிக்கவே செய்தார்கள் என்று கவலையோடு கூறுகிறார்கள் டெல்லியில் உள்ள பாஜக முன்னணி நிர்வாகிகள்.

தென் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய உளவுத்துறை அனுப்பி வைத்த அறிக்கை, திருச்செந்தூருக்கு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பிய 800க்கும் மேற்பட்ட பயணிகள், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் உயிருக்கு போராடியது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த துயரம், கால்நடைகள் ஆயிரக்கணக்கில் பலியானது உள்பட முழு சேத விபரத்தையும் பிரதமர் அலுவலகம் மிகவும் நுட்பமாக ஆய்வு செய்து, பிரதமர் மோடிக்கு அறிக்கை அளித்திருக்கிறது.

பேராபத்தில் இருந்து தென் தமிழக மக்கள் தப்பித்து இருந்தாலும் திருநெல்லிவேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் சேதத்தில் இருந்து மக்கள், மீண்டு எழுவது என்பது சாதாரணமாக விஷயம் இல்லை என்பது பிரதமர் மோடிக்கு விரிவாக விளக்கி கூறியிருக்கிறார்கள் மத்திய பாஜக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் தமிழக அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நடவடிக்கைகளுக்குதான் மத்திய பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மிகவும் இக்கட்டான நேரத்தில், எதிர்கால வாழ்க்கைக்கு உரிய சவால்களை தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாநில அரசோடு மோதல் போக்கை மத்திய அரசு மேற்கொள்வது நியாயமாக இருக்காது என்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.

பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கி கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்று கூறும் டெல்லி மூத்த ஊடகவியலாளர்கள், திமுக அரசோடு நேரிடையாக மோதிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்கு தேர்ந்தெடுத்ததின் பின்னணியில் பிரதமரின் மனிதநேயம் மறைந்திருக்கிறது என்கிறார்கள்.
சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கிய நேரத்தில், வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி. மத்திய அரசுக்கு உரிய கடமையுணர்வோடு சென்னை வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசோடு கலந்து ஆலோசிக்கும் வகையில், தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வெள்ள பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களோடு டெல்லிக்கு திரும்பினார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஆய்வுப் பணிக்கு உதவும் வகையில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீட்பு படையினர்தான் அதிக எண்ணிக்கையில் களத்தில் இருந்தனர்.

மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் போது எதிர்கொண்ட நெருக்கடிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீட்பு படையினர், வெள்ள சேதாரம் குறித்த முழுமையான அறிக்கையை வழங்கியிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வெள்ள சேதாரத்தை ஆய்வு செய்ய மீண்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கையே தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனால், அப்படியொரு முடிவு எடுக்காமல், அமைச்சர் உதயநிதியை, முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு பிரதமர் மோடி தேர்வு செய்திருக்கிறார் என்றால், அதில் உள்ள ராஜதந்திரத்தை உன்னிப்பாக ஆராயந்து பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த செய்தியாளர்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உதயநிதிக்கு எடுத்த பாடம், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் தமிழகத்தில் பொதுமக்களிடம் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள், மத்திய பாஜக அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறார்கள்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக முழுவீச்சில் செய்து கொண்டிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோருக்கு பொதுமக்களிடம் இருந்து பெரிதாக எதிர்ப்பு கிளம்பவில்லை.

கஷ்டத்தில் மக்கள் உழன்று கொண்டிருக்கும் நேரத்தில் திராவிட மாடல் அரசு மக்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறது. உதவி செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. உபத்திரம் செய்யக் கூடாது என்பதற்கு மாறாக, தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பிற்கு உரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்குவதற்கு தடையாக இருக்கும் நிர்வாகச் சிக்கலை எடுத்துக் கூறி, பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குதான் மத்திய பாஜக அமைச்சர்கள் முயற்சி செய்து இருக்க வேண்டும்.

தமிழக மக்களின் கோபத்தை தணிப்பதற்கு பதிலாக மேலும் மேலும் கோபத்தை அதிகரிக்க செய்யும் வகையில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் டெல்லி பேட்டி அமைந்துவிட்டது என்பதை முழுமையான உணர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்கிறார்கள் மத்திய பாஜக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

நிர்மலா சீதாராமனால் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பதற்கான முயற்சியாகதான், தமிழக வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் நடத்திய ஆலோசனையை பார்க்க வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடி தனித்த ஆர்வத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து சேத விபரங்களை கேட்டதையும், துயரம் மிகுந்த நேரத்தில் மத்திய பாஜக அரசு துணை நிற்கும் என்ற வாக்குறுதியை அளித்தையும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒருபோதும் விரோத போக்கு நீடிக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் உள்ள டெல்லி மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தென் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதான் அனுப்பி வைக்கிறேன் என்ற தகவலை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாகவே கூறியிருக்கிறார் பிரதமர் மோடி என்பதையும் வெள்ள பாதிப்பை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று பிரதமர் நினைத்திருந்தால், நிர்மலா சீதாராமனின் வருகை குறித்த தகவலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூலமாகவோ அல்லது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மூலமோ வெளிப்படுத்தியிருக்க முடியும்.

தமிழிசை போல, நிர்மலா சீதாராமனைப் போல, பிரதமர் மோடி திராவிட மாடல் அரசுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. அரசியல் வேறு.. ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை பிரதமர் மோடி நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளும் வகையில்தான், யாரால் காயம் ஏற்படுத்தப்பட்டதோ, அவர் மூலமாகவே மருந்து தடவி ஆறுதல் படுத்த வேண்டும் என்ற அக்கறையின் காரணமாகவே நிர்மலா சீதாராமனை தேர்வு செய்து தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ய அனுப்பி இருக்கிறார் பிரதமர் மோடி.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பிரதமரின் கட்டளையை ஏற்று தென் மாவட்டங்களில் ஆய்வு செய்யும் தகவலை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் நிர்மலா சீதாராமனுக்கு இயல்பாகவே அதிகமான வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர் உதயநிதியோடு மோதல் போக்கை கடைப்பிடித்தற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை என்று நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களிலும் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் நிர்மலா சீதாராமனின் தமிழகம் வருகைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நிர்மலா சீதாராமனின் வலைதள பக்கத்திலேயே கருத்துகளை நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்து வருவதன் மூலம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு இயல்பாகவே மனிதநேயம் இருக்குமானால், அரசியலை மறந்துவிட்டு, மத்திய நிதியமைச்சர் என்ற பதவிக்கு உரிய கண்ணியத்தோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து, சேத விபரங்கள் குறித்து தமிழக அரசு தரும் அறிக்கையை ஏற்று, உரிய நிவாரண நிதியை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் அரசியல் கடந்து நிற்கும் ஜனநாயக சக்திகளின் வேண்டுகோளாக இருக்கிறது.

ஒருமாநிலத்தில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் மத்திய அமைச்சர், அந்த மாநிலத்தின் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவதுதான் வழக்கம். அந்த மரபை கூட நிர்மலா சீதாராமன் புறக்கணித்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது, மத்திய நிதியமைச்சர் பதவிக்குரிய மாண்பையே குலைத்துவிட்டார் அவர் என்று கூறுகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

நிர்மலா சீதாராமனை விட அரசியலிலும், மத்திய அரசு நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், நிர்மலா சீதாராமனின் பயணத் திட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றிய விபரம் குறிப்பிடவில்லை. டெல்லியில் இருந்து நேரடியாக தென் மாவட்டத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன், ஆய்வுவை முடித்து கொண்டு மீண்டும் டெல்லிக்கே திரும்பி விட்டார்.

பிரதமரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். தமிழக மக்களின் மீது உண்மையான அன்பு இருந்திருக்கும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியிருப்பார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை போலதான் நிர்மலா சீதாராமன் நடந்து கொள்கிறார். மத்திய பாஜக அரசின் நிதியமைச்சராக பதவி வகிக்கிறோம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமே நிர்மலா சீதாராமனிடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில்தான் தென்மாவட்ட ஆய்வுப் பயணம் அமைந்துவிட்டது என்று வேதனையோடு கூறுகிறார்கள், தமிழக பாஜக முன்னணி தலைவர்கள்.

தமிழிசைப் போல, அண்ணாமலையைப்போலவே, உயர்ந்த பதவியில் இருந்தாலும் வெறுப்பு அரசியலுக்கு தானும் விதிவிலக்கல்ல என்று நிர்மலா சீதாராமனே வெளிப்படையாக நடந்து கொள்வதால்தான் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பே கிடைப்பதில்லை என்று மிகுந்த மனவருத்ததோடு கூறுகிறார்கள் தமிழக பாரதிய ஜனதா முன்னணி நிர்வாகிகள்.

தமிழக வருகையின் போது தரையோர கடைகளில் கீரைகளை வாங்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நிர்மலா சீதாராமனின் மனிதநேயம் வெளிப்படப்போகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், தூத்துக்குடியில் ஆய்வை முடித்த பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்பிவிட்டார். பிரதமர் மோடியின் கண்டிப்பு காரணமாக நிர்மலா சீதாராமனின் ஆணவம் அடக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளிடம், பெண்களிடம், பாதிக்கப்பட்ட மக்களிடம் துயரத்தில் பங்கெடுப்பதை போல முகத்தை வைத்துக் கொண்டு நிர்மலா சீதாராமன், குறைகளை கேட்டறிந்தார்.
நிர்மலா சீதாராமனின் மனதை வெள்ள சேதங்கள் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், டெல்லி திரும்பிய 24 மணிநேரத்திற்குள்ளாகவே மத்திய அரசின் பங்களிப்பாக நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு தமது முழு சக்தியையும் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசில் நிர்மலா சீதாராமனின் செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை, மத்திய பாஜக அரசு ஒதுக்கும் நிதியில் இருந்தும், எவ்வளவு விரைவாக தமிழகத்திற்கு கிடைக்கிறது என்பதை பொறுத்தே அறிந்து கொள்ள முடியும்.
தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருக்கிறது.