Sat. May 18th, 2024


நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்..

சேலத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக மாநில இளைஞர் அணி மாநில மாநாடு,, பத்துநாட்கள் தள்ளி வைக்கப்பட்டதால், ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் சோகமாகிவிட்டார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்திருக்கும் திமுக மூத்த தலைவர்கள், ஆளும்கட்சியான திமுகவின் வேட்பாளராக எம்பி தேர்தலை எதிர்கொண்டால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், தொகுதியை தேர்வு செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

தற்போதைய திமுக எம்பிக்களில் 10 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்று அண்ணா அறிவாலயத்தில் பேச்சு பலமாகவே கேட்கிறது. கடலூர் எம்பி ரமேஷ், கொலை வழக்கில் சிக்கியுள்ளதால், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
அதேபோல, சேலம் எம்பி பார்த்திபனுக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று சேலம் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் மட்டுமின்றி, ஆளும்கட்சியின் தலைமைக்கு மிக மிக நெருக்கமான திமுக பெரும்புள்ளிகள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

தருமபுரி எம்பி செந்தில்குமாரின் அரசியல் செயல்பாடுகள் மீதும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீதும் ஆளும்கட்சி தலைமை அதிருப்தியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. செந்தில்குமார் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதியில் அதிமுகவின் வெற்றி எளிதாகி விடும் என்று மனக்குமறல்களை வெளிப்படுத்துகிறார்கள் தருமபுரி மாவட்ட திமுக முன்னோடிகள்.

திமுக தலைமையின் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு எம்பியாக, திருநெல்வேலியைச் சேர்ந்த ஞான திரவியத்திற்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
தற்போதைய திமுக எம்பிக்களை கலைந்து போட்டு ஆட்டம் ஆடி வரும் ஆளும்கட்சி தலைமையின் ஒப்புதலோடு சென்னையில் இருந்து விருதுநகர் எம்பி தொகுதி இடம் பெயர்கிறார் பிரபல விஐபி என்று கிசுகிசுக்கிறார்கள் அண்ணா அறிலாய மூத்த நிர்வாகிகள்.


மிக்ஜம் புயல் பாதிப்பால் ஆளும்கட்சியான திமுக மீது சென்னை மக்களின் கோபம் அதிகமாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதை உணர்ந்து தொகுதி மாறுகிறாரா விஐபி என்று விசாரித்தால் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தான் கிடைக்கிறது. 2024 எம்பி தேர்தலையொட்டி திமுக முன்னணி நிர்வாகிகளிடையே எழுந்துள்ள ஆடு புலி ஆட்டத்தை இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது 39 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். எய்ம்ஸ் செங்கலை காட்டி பிரசாரம் செய்ததும், பிரதமர் மோடிக்கு எதிராக பேசி டெல்லி அரசியலை கிடுகிடுக்க வைத்ததும், அப்போதைய தேர்தல் நேர ஹாட் நியூஸ்ஸாக மாறியிருந்தது. அதேசமயம், திமுக வேட்பாளர்களை பாராட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின்,, பிரபல விஐபி பெண்மணி வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது கூறிய வார்த்தைகள்தான், 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக 2019 தேர்தலில் போட்டியிட்ட பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனை, அழகாக வேட்பாளர்.. தென்சென்னை தொகுதி மக்களுக்கு கிடைத்திருக்கிறார் என்று தேர்தல் பிரசாரத்தின் போதே புகழ்ந்து தள்ளினார் உதயநிதி ஸ்டாலின்.
அழகான வேட்பாளர் என்ற பட்டபெயர், தேர்தல் காலம் மட்டுமின்றி அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்றைக்கும் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழச்சியின் உடன் பிறந்த சகோதரர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் ஆட்சியில் நிதியமைச்சராகவும் மின்சாரத்துறை அமைச்சராகவும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இளமை துடிப்போடு திமுகவின் தலைவராக களம் கண்ட காலத்திலேயே தென் மாவட்டத்தில் தளபதியாக திகழ்ந்தவர் தங்கபாண்டியன். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது தியாகத்தை போற்றும் வகையில், அவரது புதல்வர் தங்கம் தென்னரசுவை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்து, அமைச்சராக்கியும் அங்கீகரித்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

தந்தையின் வழியில் மு.க.ஸ்டாலினும், தங்கபாண்டியனின் மற்றொரு வாரிசான தமிழச்சி தங்கபாண்டியனை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட வைத்து டெல்லி நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பி வைத்தார். பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவருக்கு அரசியல் எல்லாம் சரிபட்டு வருமா என்று திமுக தலைமையோடு நெருக்கமாக இருந்தவர்களே கேள்விகளை எழுப்பிய போது, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில் அடிக்கடி சுற்றி வந்து மக்களை நேரிடையாகவே சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்.

எம்.பி பதவிக்காலத்தை நிறைவு செய்யும் நேரத்தில், மிக்ஜம் புயல், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சோதனை காலமாக அமைந்துவிட்டது என்கிறார்கள் தென்தென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள்.
மிக்ஜாம் புயலில் தென்சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று இருந்த தமிழச்சி தங்கபாண்டியன், டிசம்பர் 7 ஆம் தேதி அவசரமாக சென்னை திரும்பினார். வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை படகுகளில் மீட்டு, நிவாரணப் பொருட்களையும் வழங்கினார் தமிழச்சி.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, சென்னை வாக்காளர்களை கடுமையாக பாதித்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் உதவிக்குப் பிறகும் கூட புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், திமுக அரசு மீது கோபமாகவே இருக்கிறார்கள். மழைக்கால நிவாரணம், சீரமைப்பு என திமுக அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக சொல்லி விட முடியாத நிலைதான் நிலவிக் கொண்டிருக்கிறது என்று தேர்தல் பணிகளில் நீண்ட கால அனுபவம் கொண்ட திமுக முன்னணி நிர்வாகிகளே கவலையோடு கூறுகிறார்கள்.


இந்த பின்னணியோடு தான், தென் சென்னை எம்பி தொகுதியை கைகழுவிவிட்டு, விருதுநகர் எம்பி தொகுதியை குறி வைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் தமிழச்சி தங்கபாண்டியன் சொந்த மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவும் அமைச்சருமான தங்கம் தென்னரசு, உடன்பிறந்த சகோதரர் என்பதால், தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் எளிதாக வெற்றி பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையோடு, விருதுநகர் எம்பி தொகுதியில் போட்டியிடுவதற்கான காய்நகர்த்தலை இப்போது இருந்தே தொடங்கிவிட்டார் என்கிறார்கள் தமிழச்சிக்கு மிகமிக நெருக்கமான திமுக நிர்வாகிகள்.


தமிழச்சியின் காய் நகர்த்தல்களைப் பார்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கதிகலங்கி போயிருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர். அகில இந்திய காங்கிரயின் இளம்தலைவர் ராகுல்காந்தியின் தீவிர விசுவாசியமான மாணிக்கம் தாகூர், 2024 எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.


மாணிக்கம் தாகூரைப் போலவே மற்றொரு பிரபலமான காங்கிரஸ் எம்பிக்கும் 2024 எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் மூத்த நிர்வாகிகள்.
டாக்டர் செல்லக்குமார் கடந்த பல மாதங்களாக, கிருஷ்ணகிரி எம்பி தொகுதியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார். சென்னையின் நிரந்தரவாசியான டாக்டர் செல்லக்குமார், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியடைந்தார்கள்.


எம்பி தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி சென்ற பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி தொகுதி வளர்ச்சிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று டாக்டர் செல்லக்குமாருக்கு எதிராக புகார்கள் அதிகமாகவே கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. எம்பி செல்லக்குமாரால் கிருஷ்ணகிரி தொகுதிக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதற்கு இணையாகவே, தொகுதி மக்களுக்கு எந்தவொரு தீங்கும் செய்யாதவர் செல்லக்குமார் என்று கூறுகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழம் பெரும் காங்கிரஸ் நிர்வாகிகள்.


2024 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் ஆளும்கட்சியான திமுகவே நேரடியாக போட்டியிடப் போகிறது என்று ஆளும்கட்சி எம்எல்ஏவான பிரகாஷின் தீவிர விசுவாசிகள் உறுதிபட கூறுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர், திமுக வேட்பாளராக கிருஷ்ணகிரி எம்பி தேர்தலில் போட்டியிடுவதை டெல்லி சக்தியாலும் கூட தடுத்து நிறுத்த முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.


விருதுநகர், கிருஷ்ணகிரி வரிசையில் மேலும் இரண்டு தொகுதிகள் காங்கிரஸை விட்டு போய்விடும் என்பதும் அண்ணா அறிவாலய நிர்வாகிகளின் முணுமுணுப்புகளாக உள்ளன. ராமநாதபுரம் தொகுதியிலும் திமுக வேட்பாளரே களம் இறங்க வேண்டும் என்று ஆளும்கட்சி தலைமை தீர்மானித்திருக்கிறது. கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக்கிற்கு வேறு தொகுதி ஒதுக்கும் யோசனையும் இருக்கிறது என்கிறார்கள்.


சிட்டிங் திமுக எம்பிக்களில் கடலூர் ரமேஷை போல, சேலம் திமுக எம்பி பார்த்திபனுக்கும் 2024 தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படும் என்று உறுதியாக கூறுகிறார்கள் ஆளும்கட்சி தலைமைக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள்.

சுடுகாட்டு ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் எம்பி தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார். முன்னாள் அதிமுககாரர் என்று தெரிந்த போதும் கூட, டி.எம்.செல்வகணபதியை எம்பி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், ஆளும்கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் கசிய தொடங்கியிருக்கிறது.


திமுகவில் எம்பி தேர்தலையொட்டி நடந்து வரும் காய் நகர்த்தல்களை அதிமுக தலைமையும் உண்ணிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுகவே நேரடியாக களம் கண்டாலும் கூட ஆளும்கட்சியோடு முட்டி மோதிவிடுவது என்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகனும், கே.பி.முனுசாமியும்.

தருமபுரி தொகுதியில் தனது மகனை நிறுத்தி எம்பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறார் கே.பி.அன்பழகன். கிருஷ்ணகிரி தொகுதியில் தனது உறவினர் அல்லது தீவிர விசுவாசியான தொழில் அதிபர் ஒருவரை அதிமுக வேட்பாளராக நிறுத்த ரகசியமாக காய் நகர்த்தி வரும் கே.பி.முனுசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் இப்போது இருந்தே அழுத்தமாக சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்.

சென்னை மிக்ஜாம் புயல் தாக்கி ஆளும்கட்சியை நிலைகுலைய வைத்துள்ள நேரத்தில், திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க அதிமுக தலைமையும் இப்போதிருந்த தேர்தல் வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது என்கிறார்கள் எடப்பாடியாருக்கு மிகமிக நெருக்கமான அதிமுக பிரமுகர்கள்.
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளை தவிர்த்து, எஞ்சிய 36 தொகுதிகளிலும் எம்பி தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்பதுதான் இன்றைய தேதியில் அரசியல் சூடான செய்தியாகும்…

நன்றி வாசகர்களே.. மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்போடு மீண்டும் சந்திக்கிறோம்.