Sat. May 18th, 2024

தூக்கத்தை இழந்துவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்…

2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த தவறுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியிருக்கிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில், அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களின் நற்குணங்களை புடம் போட்ட தங்கம் போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் சோதித்து பார்த்திருக்க வேண்டும்.
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முதல் அமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைத்த போது, தமது தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை முழுமையாக தவிர்த்திருக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. 2021 ம் ஆண்டில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது உறுதியானவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சியில் யார் யாரெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று பிரபல ஊடகங்கள் பட்டியலை வெளியிட்டன. மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையிலும், புதியவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தகவல் வெளியானது.


ஒட்டுமொத்த ஊடகங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக திமுக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் பெயர்களை பார்த்து, ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் கடுமையாக அதிருப்தியடைந்தார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி, நேர்மையான, ஜனநாயக ரீதியாக 5 ஆண்டு காலம் ஆட்சி புரியுமா என்ற சந்தேகம், திமுக முன்னணி நிர்வாகிகளுக்கே ஏற்பட்டிருந்ததுதான் உண்மை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டதை பார்த்து, கொதித்து போனார்கள் பாரம்பரிய திமுக முன்னணி தலைவர்கள்.
செந்தில்பாலாஜியை பற்றி அதிமுக தலைவர்களே கடுமையாக விமர்சனம் செய்யாத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாக பிரசாரம் செய்தார்கள். அதிமுக அமைச்சராக செந்தில்பாலாஜி பணியாற்றிய நேரத்தில் செய்த ஊழல்களை எல்லாம் வரிசையாக பட்டியலிட்டு விமர்சனம் செய்தவர் மு.க.ஸ்டாலின்.


2 இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு, திமுக எம்எல்ஏவாக்கியதுடன், அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்தறை என இரண்டு செல்வாக்கு மிகுந்த துறைகளை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


திமுகவில் இணைந்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்த்து, திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர், வெளிப்படையாகவே அதிருப்தி குரல்களை எழுப்பினார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தவிர, இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்பட மாவட்ட அளவிலான திமுக முன்னணி நிர்வாகிகள் அனைவருமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே விமர்சனங்களை கடுமையாக முன் வைத்தார்கள்.
மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே விசுவாசமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு முதன் முதலில் களங்கத்தை ஏற்படுத்தியவர். அமைச்சராகவே இருக்கும் போதே சிறைச்சாலைக்கு சென்றவர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பணமோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜியை, வழக்கு முடிந்து நிரபாரதி என்று தீர்ப்பு வருவதற்கு முன்பே அவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டது ஏன் என்று இன்றைக்கும் கூட புரியாமல் அடிமட்ட திமுக நிர்வாகிகள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றம் வரை சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பணமோசடியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது.
செந்தில்பாலாஜிக்குப் பிறகு இரண்டாவது அமைச்சர் என்ற முறையில் பொன்முடியும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரனை, திமுக முன்னணி நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்கிற அளவுக்கு துணிந்துவிட்டதுதான் சோகம்.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது க.பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக, அதிமுக அரசு தொடர்ந்த வழக்கு, விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை, 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. க.பொன்முடியின் குற்றத்திற்கு அவரது மனைவி விசாலாட்சியும் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்று குற்றம்சாட்டி இருவர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சுந்தரமூர்த்தி, தீர்ப்பு வழங்கி க.பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுவித்தார்.


முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, பொன்முடி வழக்கில் தீர்ப்பு வெளியானது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுவித்ததை அடுத்து, அந்த தீர்ப்பை எதிர்த்து 2017 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசின் அறிவுரையின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.


6 ஆண்டுகளுக்கு முன்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியவரும் இதே நீதியரசர் ஜெயச்சந்திரன்தான்.
2017 முதல் 2023 ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வெளியாகும் வரை, வழக்கு விசாரணை காலத்தில் நீதிபதிகள் பலர் மாறியிருக்கிறார்கள். பொன்முடி தரப்பின் இறுதி வாதம் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இறுதிகட்ட வாதம் என இருதரப்பு வாதமும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 2023 அம் ஆண்டில் இருந்து நடைபெற்று , தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இறுதிகட்ட விசாரணை நடைபெற்ற போது, திமுக தரப்புக்கு நீதியரசர் மீது எந்தவொரு சந்தேகமும் எழவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்த போதும் கூட அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை செயலாளராக பணியாற்றியிருக்கிறார் ஜெயச்சந்திரன் என்று பொன்முடிக்கு ஆதரவாக வாதாடிய என்.ஆர்.இளங்கோ உள்பட எந்தவொரு திமுக முன்னணி நிர்வாகிகளும் விமர்சனத்தை முன் வைக்கவில்லை.

டிசம்பர் 21ம் தேதி பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கிய பிறகே, நீதியரசரின் ஜாதகத்தை தோண்டியெடுத்து, வழக்கு தொடக்க நிலையின் போது நீதிபதி, அதிமுகவின் சட்டத்துறை செயலாளராக பணியாற்றியிருக்கிறார் என்று உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், நீதிமன்றத்திலேயே திமுக மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றவாளி என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்த நாள் அன்று தான் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, நீதிபதியின் பழங்கால வரலாறு தெரியவந்திருக்கிறது என்றும் என்.ஆர்.இளங்கோ கூறியிருப்பதுதான், அரசியல் களத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


திமுகவுக்கு எதிராக தீர்ப்புகள் வரும் போதெல்லாம், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து நியாயம் தேடிக் கொள்வதற்கு முன்பாக, நீதிபதிகளை விமர்சனம் செய்வது திமுகவினருக்கு வாடிக்கையான ஒன்று என்கிறார்கள் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ள அரசியல் நோக்கர்கள்.


க.பொன்முடிக்கு எதிரான தீர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் கூட வரவேற்று இருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 30 நாட்களுக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் போது, தீர்ப்பு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றால், பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் பொங்கல் திருவிழாவிற்குப் பிறகு சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரபல சட்ட வல்லுநர்கள்.
க.பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானதுதான் என்று விழுப்புரம் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகளே வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவர் பொன்முடி. தன்னை தவிர மற்ற அனைவரும் பிச்சைக்காரர்கள் என்ற சிந்தனையிலேயே 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர் என்று ஆவேசமாக கூறும் முன்னணி திமுக நிர்வாகிகள், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மீதே பொன்முடிக்கு மரியாதை இருந்தது இல்லை. இன்றைய தேதியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரு பொருட்டாகவே மதித்தவரும் பொன்முடி இல்லை என்கிறார்கள்.
க.பொன்முடியை போல, திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணன், கேகேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
க.பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதையும் கூட திமுக முன்னணி பிரமுகர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் அளவுக்கான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தான் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், பொன்முடி வழக்கில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து குவிப்புக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்தையும் சுட்டி காட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள்.


திமுக முன்னணி பிரமுகர்களுக்கு கடந்த காலங்களில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகளை எல்லாம் எளிதாக மறந்துவிடுகிறார்கள். 1996 முதல் 2001 வரை திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திருச்சி செங்குட்டுவன் 81 லட்சம் ரூபாய் அளவுக்குதான் அதிகமாக சொத்து குவித்து இருந்தார். அவருக்கு எதிரான வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பொன்முடி அமைச்சராக இருந்த அதே கால கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டயதைடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு அனுமதித்துள்ளார். இதே வழக்கில்தான் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் சிக்கியுள்ளார்.

தற்போதைய வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்பட மொத்தமாக 10 அமைச்சர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் 2021 முதல் இன்றைய தேதி வரையிலான ஊழல் குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் தோண்டியெடுத்து, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருவதற்கு மறைமுகமாக மத்திய பாஜக அரசும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.


முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் சொத்து குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை தமது அமைச்சரவையில் இடம் அளிக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர்த்து இருந்தால், அவரது தலைமையிலான திராவிட மாடல்
அரசுக்கு எதிரான ஊழல் அரசு என்ற அவப்பெயர் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், 2021ல் ஆட்சி அமைக்கும் போதே, காலத்திற்கும் அழிக்க முடியாத அவப்பெயரை சுமத்து நிற்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினே தவறான முடிவை எடுத்து விட்டார் என்று விமர்சனம் செய்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.


இன்றைய தேதியில் ஆளும்கட்சியான திமுக அரசுக்கு ஏற்பட்டிருககும் நெருக்கடியைப் போல, முந்தைய அதிமுக ஆட்சியில் இடம் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகார்கள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருந்து வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீதும் டெண்டர் முறைகேடு வழக்குகள், நீதிமன்ற விசாரணையில்தான் இருந்து கொண்டிருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், சிறைத் தண்டனைக்கு உள்ளாவதும் திமுகவுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை.

அதிமுகவுக்கும் பெரிய அளவிலான சேதாரத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய அதிரடி தீர்ப்பு நிரூபித்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை வாசமும், பொன்முடிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையும் திமுகவுக்கு அழிவைத் தேடி தரும் என்பதைப்போல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் தமிழக அரசியல் களத்தில் இருந்து புறக்கணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
திராவிட ஆட்சிகளின் அஸ்தமனம் தொடங்கிவிட்டது என்பதுதான் இன்றைய தேதியில் பெரும்பான்மையான மக்களிம் உள்ள சிந்தனைப்போக்கு என்பதை மறுப்பதற்கு இல்லை.