அமைச்சர் எ.வ.வேலுவை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை கண்டு கலக்கமடையாத திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள், கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை கண்டுதான் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எ.வ.வேலுவின் விசுவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியின் பின்னணியில் மறைந்து கிடக்கும் மர்மங்களை விரிவாக பார்ப்போம்…
இந்தியா கூட்டணியில் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை உற்சாகமாக எதிர்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு செக் வைக்கும் விதமாக மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு அடுத்து குறி வைக்கப்பட்டவர் தான் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
ஆனால், அவருக்கு முன்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் சிக்கி கொண்டார்.
அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காட்டிய கெடுபிடியை பார்த்து, திமுக தலைமையே அதிர்ந்துதான் போனது என்கிறார்கள் அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகிகள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தாராளமாக பணத்தை செலவழிப்பதை தடுக்கும் வகையிலேயே திமுகவை குறி வைத்துவிட்டது மத்திய பாஜக அரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர்.
ஆளும்கட்சியான திமுகவின் ஆவேசத்தை கொஞ்சம் கூட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொருட்படுத்தவில்லை.
ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு பல நுறு கோடி ரூபாயை வாரி வழங்கி கொண்டிருக்கும் திமுக எம்பியும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரான கல்வித்தந்தை என்று திமுக பிரமுகர்களால் புகழப்படும் ஜெகத்ரட்சகனை குறி வைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.
ஒரு வாரத்திற்கு மேல் ஜெகத்ரட்சகன் எம்பிக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பிரபல ஹோட்டல்கள், மருத்துவமனைகள், மதுபான ஆலை என 50 இடங்களில் சல்லடை போட்டு சோதனை நடத்தினார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
விடாது கருப்பு என்பதை போல, ஜெகத்ரட்சகன் எம்பியை நிலை குலைய செய்யும் வகையில் வருமான வரிததுறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையை பார்த்து, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உண்மையிலேயே அதிர்ந்தே போனார்கள்.
ஜெகத்ரட்சகன் எம்பிக்கு அடுத்து மணல் கொள்ளை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மீதும் வருமான வரிததுறை பாயும் என டெல்லியோடு நெருக்கமான தொடர்பில் இருந்து தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறி வந்தனர்.
பாஜக தலைவர்கள் கூறியதைப் போலவே, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான கல்லூரி, மருத்துவமனைகளிலும் அவரோடு தொடர்புடைய நிறுவனங்களாக கூறப்படும் கட்டுமான நிறுவனங்கள்,, தொழில் அதிபர்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையை பார்த்து, அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது குடும்பத்தினர் கொஞ்சம் கூட பயப்படவே இல்லை என்று கூறுகிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள்.
ஆனால், கோவையில் உள்ள திமுக பெண் பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதுதான் அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசிகளை கலக்கமடைய வைத்துள்ளது.
அமைச்சர் எ.வ.வேலுக்கும் மீனா ஜெயக்குமாருக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்தப்படும் வகையில் அமைந்துவிட்டது வருமான வரித்துறையினரின் சோதனை என்று புலம்புகிறார்கள் திருவண்ணாமலை திமுக மூத்த நிர்வாகிகள்.
கோவை மாவட்டத்தில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த மீனா ஜெயக்குமாரை, தமிழகம் முழுவதும் பிரபலமடைய வைத்துவிட்டது வருமான வரித்துறை என்று கூறும் அண்ணா அறிவாலய நிர்வாகிகள், பத்து பதினைந்து நாட்களுக்கு முன்புதான், ஊடகங்களிலும் திமுக மூத்த நிர்வாகிகளிடமும் மீனா ஜெயக்குமாரின் செல்வாக்கு பற்றி சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியான மீனா ஜெயக்குமார், கோவை மாவட்டத்தை கடந்து கரூர் மாவட்டத்திலும் அரசியல் செய்வதற்கான மிகப்பெரிய பொறுப்பை திமுக தலைமை தூக்கி தந்துவிட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஆவேச குரல்களை எழுப்பியதை எல்லாம் திமுக மூத்த நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில்பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்ய துணிந்தவர்தான் மீனா ஜெயக்குமார் என்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் உள்ள துரைமுருகன் ஆகியோரின் நம்பிக்கையை பெற்றிருந்த மீனா ஜெயக்குமார், கோவை மாவட்டத்தில் திமுக முன்னோடிகளை மதிப்பதே இல்லை என்றும் குமறி வந்தார்கள்.
இந்த பின்னணியோடு, கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்தி, கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில், கட்சி கட்டுப்பாடை மீறி பேசிய மீனா ஜெயக்குமார், கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் கார்த்திகை ஒருமையில் அழைத்து தகாத வார்த்தைகளில் திட்டியது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
தனது மனைவியை கோவை மேயராக்க வேண்டும் என்பதற்காகவே தனக்கு கவுன்சிலர் தேர்தலில் சீட் தரவில்லை என்று திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் மீனா ஜெயக்குமார்.
கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது என முன்னணி நிர்வாகிகள் அறிவுரை கூறிய போதும் மீனா ஜெயக்குமார் தனது ஆவேசத்தை குறைத்து கொள்ளவில்லை. மீனா ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி விவகாரம் குறித்து புகாராக தரும்படி மீனா ஜெயக்குமாரிடம் கூறி அமைதி படுத்தினார்.
மீனா ஜெயக்குமாரின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைமைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அன்றைய தேதியில் திமுக மகளிர் தொண்டர் அணி மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த மீனா ஜெயக்குமாரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட சென்னைக்கு அடிக்கடி சென்று வந்த மீனா ஜெயக்குமார், அமைச்சர் எ.வ.வேலுவுடனான செல்வாக்கை காட்டி, கோவை மாவட்டத்தில் திமுக முன்னோடிகளை கலக்கமடைய வைத்தார்.
மீனா ஜெயக்குமாரின் அட்ராசிட்டியை பார்த்து நொந்து போன பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், 10 ஆண்டுகளாக தான் திமுகவில் உள்ளார் மீனா ஜெயக்குமார். கடந்த 2006 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற போது உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுடன் மீனாவின் கணவர் ஜெயக்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கும் உரிமத்தை பெற்ற ஜெயக்குமார், கோவையில் சிறிய அளவில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த மீனாவை, திமுகவில் உறுப்பினராக்கி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஜெயக்குமார்.
2010 காலகட்டத்தில் ஏற்பட்ட அறிமுகத்தில், கணவன், மனைவி இருவரில் ஒருவர் எ.வ.வேலுவின் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மீனா ஜெயக்குமாரின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டியவர் அமைச்சர் எ.வ.வேலு.
கட்சியிலும், வசதி வாய்ப்பிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவால், கோவையில் செல்வாக்கு மிகுந்த பிரபலமாக வலம் வர தொடங்கினார் மீனா ஜெயக்குமார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் எ.வ.வேலு மூலம் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார் மீனா ஜெயக்குமார். அப்போது காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது.
2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்த போதும், கோவை மாவட்ட அதிமுக தலைவர்களுடன் நல்ல நட்புடனே வலம் வருகிறார் மீனா ஜெயக்குமார் என புரவலாக புகார் கூறப்பட்டது. அதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத மீனா ஜெயக்குமார் 2016 தேர்தலின் போது மீண்டும் சிங்காநல்லூர் தொகுதிக்கு குறி வைத்தார். அப்போது மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கார்த்திக்கும் அதே தொகுதிக்கு சீட் கேட்டார்.
மீனா ஜெயக்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் சிங்காநல்லூர் தொகுதியை குறி வைத்த போது, அதே தொகுதிக்குட்பட்ட திமுக பகுதி செயலாளர் எம்.எஸ். சாமியும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக களம் இறங்க துடித்தார். ஆனால், கார்த்திக் மீது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததால், மீனா ஜெயக்குமாரும், எம்.எஸ்.சுவாமியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கூட்டு சேர்ந்து கார்த்திக்கை எதிர்க்க தொடங்கினார்கள்.
இருவருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவு முழுமையாக கிடைத்தது. மீனா ஜெயக்குமார் ஏற்கெனவே எ.வ.வேலுவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்த நேரத்தில் எம்.எஸ்.சுவாமியும் எ.வ.வேலுவின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரையும் ஒருசேர வளர்த்தெடுத்தார் அமைச்சர் எ.வ.வேலு.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ரியல் எஸ்டேட், அறக்கட்டளை என பொருளாதாரத்தில் மிதமிஞ்சியவராக வளர்ந்திருந்த மீனா ஜெயக்குமார், சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த கார்த்திகை எதிர்த்து கடுமையாக போராடினார். சிங்காநல்லூர் அல்லது கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, 25 கோடி ரூபாய் பணத்துடன் அண்ணா அறிவாலயத்தையே சுற்றி சுற்றி வந்தார் மீனா ஜெயக்குமார்.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கியதுடன், சிங்காநல்லூரில் கார்த்திக் எம்எல்ஏவையே மீண்டும் போட்டியிட அனுமதித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த பத்தாண்டு காலமாக கார்த்திக்குடன் மோதல் போக்கை கடைப்பிடித்த வந்த மீனா ஜெயக்குமார், மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில், தான்தான் திமுக மேயர் வேட்பாளர் என்று செய்திகளை பரவவிட்டு, திமுக தலைமை அறிவிக்காத முன்பே, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தவர் மீனா ஜெயக்குமார்.
கட்சிக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக மீனா ஜெயக்குமார் செயல்படுவதை அப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டித்தார். ஆனால், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோருடனான நட்பின் காரணமாக, கோவை மாவட்டத்தில் திமுக முன்னோடிகளுக்கு கட்டுப்பாடாமல் தான்தோன்றித்தனமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார் மீனா ஜெயக்குமார்.
அதிமுக வலுவாக உள்ள கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளிடமும் வெறுப்பை சம்பாதித்து இருக்கும் மீனா ஜெயக்குமாரை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், அதிமுக வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என திமுக தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்களாக துரைமுருகனும் எ..வ.வேலுவும் இருந்த போதும், இரண்டு அமைச்சர்களின் வற்புறுத்தலை உதாசீனப்படுத்தப்பட்டு, மீனா ஜெயக்குமாருக்கு கவுன்சிலர் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜி பவர் ஃபுல் அமைச்சராக கோவை மாவட்டத்தில் இருந்த வரை மீனா ஜெயக்குமாரால் தலையெடுக்கவே முடியவில்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் இன்றைய தேதியில், பீனிக்ஸ் பறவை போல உயர்ந்து எழுந்தார் மீனா ஜெயக்குமார்.
6 மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, திமுகவின் துணை அமைப்பான கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
60, 70 வயதை கடந்த பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள், கோவை மாவட்டத்தை கடந்து திமுக தலைமையோடு நெருக்கம் வைத்துக் கொள்ள முடியாத நேரத்தில், அடாவடி அரசியல்வாதியான மீனா ஜெயக்குமாரின் அசுர வளர்ச்சி, கோவை மாவட்ட திமுக முன்னோடிகளின் மனதை புண்ணாக்கிவிட்டது.
மீனா ஜெயக்குமாரின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை பெரிதாக நம்பியிருந்த கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, திமுக தலைமை, மீனா ஜெயக்குமாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதை பார்த்து சோகத்தில் விழுந்து விட்டார்கள்.
அமைச்சர் செந்திலபாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக அரவக்குறிச்சி தொகுதிக்கு மீனா ஜெயக்குமாரை நியமித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புதான் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் இன்றைய தேதியில் புகைச்சலை ஏற்படுத்திவிட்டது.
மீனா ஜெயக்குமாரின் ஒவ்வொரு அடி முன்னேற்றத்திலும் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவு இருக்கிறது என்பதால்தான், மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் அவரது மகன் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட போது, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது போல, மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக கொண்டாடிவிட்டார்கள் என்கிறார்கள் மீனா ஜெயக்குமாரின் எதிர்முகாமைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள்.
திமுகவினருக்கு அநீதி இழைக்கப்பட்டால், ஆவேசத்துடன் ஒன்று திரளும் திமுக நிர்வாகிகள் முதல்முறையாக மீனா ஜெயக்குமார் விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக எதிர்ப்பு காட்டாமல் பதுங்கி கொண்டது கோவை மாவட்ட திமுக வரலாற்றில் புதிய நிகழ்வு என்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் தனது சமுதாயத்தைச் சேர்ந்த மீனா ஜெயக்குமாரையும், எம்.எஸ்.சுவாமியையும் அமைச்சர் எ.வ.வேலு பினாமியாக வளர்த்தெடுக்கிறார் என்பதை வருமான வரித்துறை கூட மோப்பம் பிடித்து இருவரின் கொட்டத்தை அடக்கிவிட்டது. ஆனால், ஒட்டுமொத்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அதிகமான வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கும் மீனா ஜெயக்குமாரையும் எம்.எஸ்.சுவாமியின் அடாவடி அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டிய திமுக தலைமை மௌனமாக இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை என்று மனம் நொந்து பேசுகிறார்கள் கோவை பாரம்பரிய திமுக குடும்ப முன்னோடிகள்.