Sat. Nov 23rd, 2024

கோவை மாவட்டத்தில் திமுக பெண் அரசியல் பிரபலங்களுக்கு நேரம் சரியில்லை என்று பொது சேவையில் நீண்டஅனுபவம் கொண்ட சமூக ஆர்வலகர்கள் குற் றச்சாட்டுகளை முன்வைப்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது திராவிடமாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் முதல் முறை முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு கடும நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என்று கூறப்படும் அளவுக்கு கோவை பெண் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டதும், மீனா ஜெயக்குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளதும் கோவையைச் சேர்ந்த பாரம்பரிய திமுக பிரமுகர்களை தலை குணிய வைத்துவிட்டது என்கிறார்கள்ன கலைஞர் காலத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள்.

மீனா ஜெயக்குமாருக்கு அடுத்து மற்றொரு பெண் பிரமுகரான கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் அடாவடியும் கோவை மாநகர மக்களிடம் அதிகளவில் வெறுப்பை சம்பாதித்துள்ளதாக புலம்புகிறார்கள் கோவை மாநகர திமுக முன்னோடிகள். 

இன்றைய தேதியில் அரசியல் அனாதை போன்ற நிலைக்கு தான் கோவை மேயர் கல்பனா தள்ளப்பட்டுள்ளதாக பரிதாபபடுகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை மாநகர திமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் உள்ளாக்கியிருக்கும் மேயர் கல்பனா, திமுக தலைமைக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் மறைந்த திமுக தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் இருந்தே கட்சி மற்றும் ஆட்சிப் பணியில் ஆற்றல் மிகுந்த செயல் வீரர் என்று மூத்த திமுக முன்னோடிகளால் கொண்டாடப்படும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவையே பகிரங்கமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கல்பனாவுக்கு நெருக்கமான திமுக பெண் கவுன்சிலர்கள்.  

திருச்சி மாவட்ட திமுகவின் ஒற்றை ஆளுமையான அமைச்சர் கே.என்.நேருவுடன் மோதுகிறாரா? கோவை மேயர் கல்பனா.. ஏன் இந்த கெட்ட நேரம் என்ற கேள்விகளோடு கோவை மாநகரில் விசாரணையை துவக்கிய போது அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அலை அலையென பெருக்கெடுத்தன.

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்ற போது, கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றியிருந்த அதிமுகவிற்கு கடுமையான போட்டி கொடுக்கும் வகையில் தனியொருவராக நின்று வியூகம் அமைத்தார் செந்தில் பாலாஜி.

மொத்தமுள்ள கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளையும் திமுகவே கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு களமாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒவ்வொரு வார்டுக்கும் 3 கோடி ரூபாய் வீதம் என மொத்தமாக கோவை மாநகராட்சி தேர்தலுக்கு மட்டும் 300 கோடி ரூபாய் செலவழித்தார் என்று அதிமுக தரப்பிலேயே திகிலுடன் கூறினார்கள்.

கோவை மாவட்ட அதிமுகவில்  அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் எஸ்.பி.வேலுமணியின் தேர்தல் சித்துவிளையாட்டுகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு, கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதை கண்டு அதிர்ந்து போன, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு விழா மேடைகளிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியை வெகுவாக பாராட்டி தள்ளினார்.

மாநகராட்சி தேர்தலில் வெற்றி மட்டுமே முக்கியம் என்ற அடிப்படையில் கோவை மாவட்ட பாரம்பரியமிக்க திமுக நிர்வாகிகளின் ஆலோசனைகளை கூட புறம்தள்ளிவிட்டு,  கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமே தனித்தே முடிவு செய்தார். அப்படிபட்ட தேர்வின் போதுதான், இன்றைக்கு வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கும் மீனா ஜெயக்குமாருக்கு, கவுன்சிலர் தேர்தலில் சீட்டே கொடுக்காமல் புறம்தள்ளினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

திமுக தலைமையோடு மிகுந்த நெருக்கம் கொண்ட மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரின் அழுத்தமான சிபாரிசை கூட ஏற்றுக் கொள்ளாமல் மீரா ஜெயக்குமாரை புறக்கணித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்றாடம் காட்சியான, பலமான அரசியல் பின்னணியோ, அன்றாட செலவினங்களை சமாளிக்க கூட திண்டாடி வந்த கல்பனா ஆனந்தகுமாரை கவுன்சிலர் தேர்தலில் நிற்க வைத்து கோடி ரூபாய்களுக்கு மேல்செலவழித்து வெற்றி பெற வைத்தது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் காலம் காலமாக செல்வாக்கு மிகுந்த திமுக தலைவர்களின் அறிவுரைகளையும் கூட காது கொடுத்து கேட்காமல் கல்பனா ஆனந்தகுமாரை கோவை மேயர் பதவியில் அமர வைத்து ஒட்டுமொத்த கோவை மாவட்ட அரசியலிலும் அதிர்வேட்டுகளை போட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஓராண்டுக்கு முன்பு தான்தோன்றிதனமாக அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்த முடிவிற்கு, இன்றைய தேதியில் கோவை மாநகர மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் மேயர் கல்பனாவின் அதிகார திமிரால், பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகிறோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த விசுவாசம் காட்டி வருபவர் என்ற பெருமைகளால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொற்பேச்சை கேட்டு அடக்க ஒடுக்கமாக மேயர் பணியை ஆற்றி வந்தவர் கல்பனா ஆனந்தகுமார்.

செந்தில் பாலாஜியின் கெட்ட நேரம், கல்பனா ஆனந்தகுமாருக்கு அதிர்ஷடம் தரும் காலமாக மாறிவிட்டதுதான் காலத்தின் விளையாட்டு என்கிறார்கள் கோவை மாநகர திமுக முன்னோடிகள்.

சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டின் காரணமாக கடந்த ஜுன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யும் வரை, கரூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி ஆட்சியர் அலுவலக நிர்வாகமுத்தையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுபோலவே, மாவட்ட திமுகவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே  மாவட்ட திமுக பொறுப்பாளர்களும் செயல்பட்டு வந்தனர்.

பொருளாதாரத்தில் செந்தில் பாலாஜியை விட பல மடங்கு உயர்ந்திருந்த பாரம்பரிய திமுக பொறுப்பாளர்கள் கூட, செந்தில் பாலாஜியை மீறி, திமுக தலைமையுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருங்க கூட முடியவில்லை. இப்படிபட்ட நேரத்தில், மேயர் கல்பனா, மூச்சு கூட விடாமல் பொம்மை போல மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

திமுக கவுன்சிலர்களிடமும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்களிடமும் பேசும் சத்தமே அலுவலக அறையை விட்டு கேட்க முடியாத அளவுக்குதான் அடக்கி வாசித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அனுமதியின்றி, மாநகரில் ஆய்வுப் பணிகளுக்கு செல்லாமல், சாவி கொடுத்த பொம்மை போலவே மேயருக்கு உரிய அதிகாரத்தை அனுபவிக்காமல் அடக்கம் ஒடுக்கமாக , இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற அப்பாவி தோற்றத்திலேயே நடமாடி வந்தார்.

ஆனால், ஜுன் மாதத்தில் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றவுடன், ஓராண்டுக்கு மேலாக அப்பாவி வேடம் போட்டு நாடகமாடிய கல்பனா ஆனந்தகுமார், காய்ந்த மாடு கம்பக்கொல்லையில் புகுந்த மாதிரி, காசு, துட்டு, மணி என அலைய தொடங்கினார்.

மாநகர திமுக நிர்வாகிகளிடம் மட்டுமல்ல, பெண் கவுன்சிலர்கள் உள்பட அனைத்து திமுக கவுன்சிலர்களிடமும் மேயருக்கு உரிய அதிகாரத்தை காட்டிய போது, கோவை மாநகர திமுக நிர்வாகிகள் ஆத்திரமடைய தொடங்கினார்கள்.

மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி இளம் ஐஏஎஸ் அதிகாரி எம்.பிரதீப்பை கூட மிரட்ட தொடங்கினார். தான் சொல்லும் ஒப்பந்ததாரர்களுக்கு தான் வளர்ச்சித் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிகாரமாக கட்டளைகளை பிறப்பிக்க தொடங்கியதை கண்டுதான் ஒட்டுமொத்த மாநகராட்சி அதிகாரிகளும் ஆவேசமடைந்தார்கள்.

மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மட்டுமல்ல, மேயர் தலைமையில் தனிப்பட்ட முறையில் நடைபெற்ற மாநகராட்சி ஆய்வுக் கூட்டங்களிலும் கூட, கமிஷன் கொடுக்கும் தகுதியற்ற ஒப்பந்ததாரர்களுக்கு  சலுகைகளை காட்ட வேண்டும். திட்ட பணிகளை முடிக்காத முன்பே மாநகராட்சி நிதியை ஒதுக்க வேண்டும் என கறாரான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் கல்பனா ஆனந்தகுமார்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் ஆகிய 4 மாதங்களிலும் மட்டுமே 50 கோடி ருபாய் அளவுக்கு கமிஷன் பணத்தை கலெக்ஷன் செய்திருக்கிறார் மேயர் கல்பனா என அதிரடியாக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் மேயருக்கு மிகமிக நெருக்கமான திமுக பெண் கவுன்சிலர்கள். 

கமிஷன், கரெப்பஷன், கலெக்ஷன் என்ற தீராத வசூல் வேட்டையோடு களத்தில் வெறியோடு குதித்த கல்பனாவுக்கு அப்போதைய ஆணையாளர் எம்.பிரதீப் மற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தார்கள்.

தனக்கு எதிராக புகார்களை கூறும் திமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் மேயர் கல்பனா ஆனநத குமார். 2022க்கு முன்பு வரை திமுகவில் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல், அட்ரஸே தெரியாமல் இருந்த கல்பனா ஆனந்தகுமாருக்கு இவ்வளவு திமிரும், பிடிவாதமும், பேராசையும் தேவையா என கொந்தளிக்கிறார்கள் கோவை திமுக மூத்த முன்னோடிகள்.

இப்படிபட்ட பின்னணியோடு, கடந்த மூன்று மாதமாக மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் ஆளும்கட்சியான திமுகவின் மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கல்பனாவின் எதிர் அணியில் உள்ள திமுக பிரமுகர்கள்.  மேயர் கல்பனாவின் அடாவடி அரசியலை  எதிர்த்து நேரடியாக மோதிக் கொண்டிருப்பவர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்,   மத்திய மண்டல தலைவரும் திமுக பெண் பிரமுகருமான  மீனா லோகு தான். கடந்த 6 மாத காலமாக ஒவ்வொரு மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மேயர் கல்பனா பாகுபாடு கட்டி வருவதாக பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார், மீனா லோகு.

நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் கூட மேயர் கல்பனாவுக்கு எதிராக ஆவேசம் காட்டிய மீனா லோகு, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய  ஒப்பந்தங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.ஜுலை மாதத்தில் அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதீப் ஐஏஎஸ்ஸால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட திட்டங்களுக்கு கூட உரிய அனுமதி வழங்காமல் மேயர் கல்பனா கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குமறினார் மீனா லோகு. ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் மேயர் கல்பனாவுக்கு எதிராக மீனா லோகு உள்ளிட்ட பெண் திமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்து பேசுகிறார்கள்.

திமுக மேயருக்கு எதிராக பெண் கவுன்சிலர்கள் உள்பட அனைத்து திமுக கவுன்சிலர்களும் மன்ற கூட்டத்தில் அடுக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஊடகங்களில் முழுமையாக வெளியாகி திமுக அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது என்று கொந்தளிக்கிறார்கள் மாநகர திமுக முக்கிய புள்ளிகள்.

மீனா லோகுவை போலவே, வட்க்கு மற்றும் மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்களும், கோவை மாநகர் முழுவதுமு சிதிலமடைந்த சாலைகளை புனரமைக்கும் பணிகளுக்கும் மேயர் கல்பனா நிர்வாக அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதேபோல, அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, 100 வார்களுக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் என்று மேயர் கல்பனாவுக்கு எதிராக ஆத்திரத்தை கொட்டுகிறார்கள் திமுக கவுன்சிலர்கள்.

கோவை மாநகராட்சி திமுகவில் அனுதினமும் வெடித்துக் கொண்டிருக்கும் உட்கட்சி பூசலை பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியை எளிதாக்கிவிடலாம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுவரை இல்லாத உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக, கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் என்று ஆதங்கப்படுகிறார்கள் பாரம்பரிய திமுக நிர்வாகிகள்.

மேயர் கல்பனாவின் அதிகார வெறி குறித்தும், சீனியர்களான திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தி வருவதையும், கான்ட்ராக்டர்களிடம் 2 பர்சென்ட் கமிஷனை கறாராக வசூலித்துக் கொண்டிருப்பதையும், தற்போதைய மாவட்ட அமைச்சரான சு.முத்துசாமியிடம் நேரடியாகவே புலம்பியுள்ளார்கள் கோவை மாநகர திமுக பொறுப்பாளர்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியால் மேயர் பதவியில் அமர வைக்கப்பட்டவர் கல்பனா என்பதால், அவருக்கு எதிராக ஒட்டுமொத்த திமுக பொறுப்பாளர்களும் அடுக்கும் குற்றச்சாட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தவிர்த்து வருகிறார் என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.

ஆனால், மேயர் கல்பனாவின் அடாவடி அரசியலை கேட்டு கொதித்துப் போன நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 100 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சித் திட்டப் பணிகளை முடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதமாக எந்தவொரு கோப்பிலும் கையெழுத்து போடாமல் திமிருதனத்தை வெளிப்படுத்தி வரும் மேயர் கல்பனாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரிலேயே விரிவாக எடுத்துக் கூறிவிட்டார் என்று அவருக்கு மிகமிக நெருக்கமான திமுக முக்கிய புள்ளிகள் தகவல்கள் தெரிவிக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடம் இருந்து மேயர் பதவியை பறிக்க அமைச்சர் கே.என்.நேரு தீவிரம் காட்டி வருகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார் மேயர் கல்பனா என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ரகசிய உத்தரவை அடுத்து, கோவையில் உளவுத்துறை போலீசாரும் திமுக முன்னோடிகள், மீனா லோகு உள்ளிட்ட பெண் திமுக கவுன்சிலர்களிடம் முழுமையாக விசாரித்து, உண்மைகளை திரட்டி தனக்கு எதிராக அறிக்கையை கொடுத்திருக்கிறது என்பதை அறிந்த பிறகும் கூட மேயர் கல்பனாவின் திமிரு அடங்கவில்லை என்று குமறுகிறார்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைத்துவிடும். அதன் பிறகு கோவையில் அவர் வைத்ததுதான் சட்டம். செந்தில் பாலாஜி இருக்கும் வரை தனது மேயர் பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது. செந்தில் பாலாஜியை கேட்காமல், மேயர் பதவியில் இருந்து தன்னை முதல்வர் நீக்க மாட்டார் என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசி வரும் மேயர் கல்பனா., அமைச்சர் கே.என்.நேருவே நேரிடையாக போன் செய்து கோப்புகளில் கையெழுத்து போட சொன்னால் கூட அவரது பேச்சை கேட்க மாட்டேன். 100 கோடி ரூபாய் மதிப்புடைய கான்ட்ராக்டுகளில் தனது பங்காக 2 பர்சென்ட் கமிஷன் கைக்கு வரும் வரை, மாதந்தோறும் கூட்டப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தை கூட இனிமேல் நடத்த மாட்டேன் என சவடால் விட்டுக் கொண்டிருக்கிறாராம் மேயர் கல்பனா.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதை போல, முதல்முறையாக உச்ச பதவியான மேயர் இருக்கையில் அமர்ந்துள்ள கல்பனா ஆனந்தகுமார் அதிகார வெறியில் தலை கால் புரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

கோவை மக்களிடம் நல்ல பெயரை பெற்று தரக்கூடிய வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் அளவுக்கு கமிஷன் பணம் மேயரின் கண்களை மறைத்துவிட்டது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நல்லாட்சியை தந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகனும் முதல்ருவமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றியை பெறவேண்டும் என்றால், மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்தகுமாரை விரைவாக தூக்கியெறி வேண்டும் என்று விரக்தி மனப்பான்மையோடு கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் செல்வாக்கிற்கு வெற்றி கிடைக்குமா.,?அல்லது பேராசை பிடித்து அலையும் மேயர் கல்பனாவின் கெட்ட நேரம், மேலும் மேலும் வலுப் பெறுமா..?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி ஆக்ஷனுக்காக காத்திருக்கிறார்கள் கோவை மாவட்ட திமுக முன்னோடிகள்.