Sun. Dec 3rd, 2023

வயிற்றுப் பிழைப்புக்கு தமிழ் சோறு போடாததால், தகுதியற்ற மனிதருக்கு பல்லக்கு தூக்கும் அவலம்..

தமிழ்நாடு பாரதிய ஜனதாவில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகள், அண்ணாமலைக்கு எதிராகவே கடுமையாக  கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தலைவர் பதவிக்கே தகுதியில்லாதவர்

என்பதுதான் ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் சிந்தனையோட்டமாக இருந்து வருகிறது.

பாரதிய ஜனதாவுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களுக்கு இல்லாத அக்கறை, அரசியல் துறவறத்தை மேற்கொண்ட மணியனுக்கு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதுதான், படுகேவலமான அரசியல் பிழைப்பு என்று காந்திய சிந்தனை வாதிகள் நெற்றிக் கண்களை திறக்கிறார்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால், அண்ணாமலை தலைமையால் 10 முதல் 15 சதவீத வாக்குகளை உறுதியாக பெற்றுவிடும்.

2026 ல் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும்.

பழம்பெரும் தலைவர்களால் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

குக்கிராமங்களில் உள்ள மக்கள் கூட அண்ணாமலையை பற்றியும் பாஜகவை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பாராட்டுகளை அள்ளி குவிப்பவர்கள் பரம்பரை பாஜக தலைவர்கள் இல்லை.

காந்திய சிந்தனையை வாழ்க்கை நெறியாக கொண்டிருப்பதாக பகல்வேடம் கட்டும் தூய மனிதர்தான். 

 மணியன் என்று சொன்னால் சென்னையில் மட்டுமல்ல,  தமிழ்நாட்டிலும் யாருக்குமே தெரியாது. அதே நேரத்தில் தமிழ் அருவி மணியன் என்று கூறினால், அரசியலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இலக்கியவாதிகளுக்ம் தமிழ் ஆர்வலர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வழங்கப்பட்ட பட்ட பெயருக்கே மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தும் வகையில்தான் மணியனின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று குமறுகிறார்கள் அவரது பாதையில் பயணிக்கும் ஜனநாயக வாதிகள்.

தனி மனித வாழ்க்கையிலும் இலக்கிய துறையிலும் மணியனுக்கு எதிராக ஒரு சொல் கூட அநாகரிகமாக கூறிவிட முடியாது. ஆனால், அரசியலில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மணியன் முன்நின்று ஆற்றிய செயல்கள் அனைத்துமே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அரசியலில் சந்தித்த அசிங்கங்களை எல்லாம் கதர் ஆடை மறைத்து விடும் என்ற நம்பிக்கையில், தமிழகத்தை மீட்டெடுக்கும் லட்சிய புருஷராக அண்ணாமலை அவதாரம் எடுத்திருக்கிறார் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் முழங்கி வருகிறார் மணியன்.

அரசியல் என்பது நாற்றமெடுத்த சாக்கடை என்பதை முழுமையாக மறந்துவிட்டு, சந்தன குளியலுக்கு இணையானது என்பதை போல, அண்ணாமலையின் அரைவேக்காட்டு தன அரசியலை, உலக மகா அரசியல் சித்தாந்தம் போல முழங்க ஆரம்பித்திருக்கிறார் மணியன் என்பதுதான் அவருக்கு பிடித்திருக்கும் கெட்ட நேரம் என்று ஆதங்கப்படுகிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான இலக்கியவாதிகள்.

மணியனுக்கும் நாஞ்சில் சம்பத்திற்கும் இடையே நடைபெற்ற வார்த்தை போரை போல ஒரு தரம் தாழ்ந்த அரசியல் உரையாடல்களை இதற்கு முன்பு தமிழகம் சந்தித்தது கிடையாது. இனிவரும் காலங்களிலும் எதிர்பார்கக முடியாது.

நாஞ்சில் சம்பத்தின் அநாகரிகமான வசவுகளால் இனிமேல் அரசியலில் ஈடுபட மாட்டேன் என சத்தியம் செய்து துறவறம் பூண்டவர் மணியன்.

சராசரி மனிதர்களின் சத்தியத்தை போல, மணியனின் சத்தியமும் அமைந்ததுதான் வேதனைக்குரிய ஒன்று.

ஆன்மிக அரசியலை முன்னெடுத்த ரஜினிகாந்த்தை நம்பி மீண்டும் அரசியல்வாதியாக  அரிதாரத்தை பூசினார் மணியன்.

ரஜினியால்தான் தமிழகத்திற்கே விமோசனம் கிடைக்கும் என்று முழங்கினார் மணியன். ஆனால், ரஜினி முன்வைத்த கோட்பாடுகளை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளே ஏற்க தயங்கிய நேரத்தில், கொஞ்சம் கூட சிரமம் படாமல் நேரடியாக முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்வது சாத்தியமான ஒன்று அல்ல என்ற உண்மை உரைத்தவுடன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கிக் கொண்டார் ரஜினிகாந்த்.

அரசியலில் இருந்து திடீரென்று ரஜினிகாந்த் ஒதுக்கிக் கொண்டதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மணியன்.

தமிழக அரசியலில் பழுத்த அனுபவம் மிகுந்த தேசியவாதிகள் மட்டுமல்ல, திராவிட சித்தாந்தத்தில் ஊறி திளைத்த அரசியல் தலைவர்களும் கூட சொல்ல துணியாத தத்துவத்தை வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும் மணியனால், அண்ணாமலையை எப்படி புகழ முடிகிறது. ஒட்டுமொத்தமாக மனசாட்சியை மணியன் விற்றுவிட்டாரா என்று ஆவேசப்படுகிறார்கள் காந்தியவாதிகள்.

தன்னை ஒரு இந்து சனாதனி என்று பெருமையாக கூறுகிறார் மணியன்.

மகாத்மா காந்தியை, வீர துறவி விவேகானந்தரை, மகாகவி பாரதியை பஞ்சாயத்திற்கு இழுக்கும் மணியன், மாபெரும் தலைவர்கள் காலத்தில் தலைதூக்காத

சனாதனத்தின் கொடூர கரங்கள், இன்றைக்கு நாடு முழுவதும் மக்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்நிறுத்தி நிகழ்த்தும் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டிதனத்தை ஆதரிப்பது எவ்வளவு கொடுமையானது என்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

மகாத்மா தன் வாழ்நாள் முழுவதும் பேணி காப்பாற்றிய  பண்புகளில் பொய் பேசாமல் இருப்பதுதான் முதன்மையானதாக இருந்து வந்தது.

அரசியலில் திடீரென்று உச்சத்திற்கு சென்றுவிட்ட அண்ணாமலை, தான் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலையை சொல்வதற்கே மூன்று மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார்.

மூன்று மாதங்கள் திரும்ப திரும்ப பொய் பேசி வந்த அண்ணாமலை, கடிகாரத்தின் விலையை பகிரங்கமாக சொல்லிய போதும் அதன் விலையில், வாங்கிய பில்லில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் வெளிப்பட்டன.

இப்படிபட்ட அண்ணாமலையைதான் உத்தமர் என்றும் ஒப்பற்ற தலைவர் என்றும் புகழ் பாடுகிறார் மணியன்.

ஐபிஎஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, ஒரு மாதத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அவ்வளவு தொகையையும் நண்பர்கள் தருகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதை அவரோடு கை கோர்த்து நடை போடும் பாஜக நிர்வாகிகளே கூட எள்ளி நகை ஆடுகிறார்கள்.

மாதத்திற்கு எட்டு லட்ச ரூபாய் என்றால், வருடத்திற்கு 96 லட்சம் ரூபாய். ஒரு கோடி ரூபாய்க்கு நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே குறைவு.

அபாரான பேச்சாற்றாலையும், இதயத்தை உருக வைக்கும் இலக்கிய சொற்பொழிவையும் தரும் அளவுக்கு இயற்கை கொடுத்திருக்கும் அபூர்வ கொடைக்கு சொந்தகாரரான மணியன், தன் வாழ்நாளில் ஒரு கோடி ரூபாயை ஒட்டுமொத்தமாக அவரது இரண்டு கண்களால் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எட்டு லட்ச ரூபாயை கூட மணியன் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட பார்த்திருப்பாரா என்பதுதான் சந்தேகம்.

இப்படி தன்னை சுற்றி எழும் விமர்சனங்களுக்கே  பொய்களை அவிழ்த்து விடும் அண்ணாமலை, வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பொதுமேடைகளில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் தகவல்களும் கூட சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

தனி மனித வாழ்வில் நேர்மை இல்லை.

அரசியல் செயல்பாடுகளில் உண்மை இல்லை.

விவசாயி என்று கூறிக் கொள்வதும் கூட கபட நாடகம்.

முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே, பொய், பித்தலாட்டம், ஆணவம், அதிகபிரசங்கிதனம், மூத்த தலைவர்களை உதாசீனப்படுத்துவது என அனைத்து கெட்ட குணங்களின் மொத்த உருவமாகதான் அண்ணாமலை இன்றைய தேதியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

மணியன் தன் வாழ்நாளில், ஒரே ஒரு நல்ல காரியத்தையாவது செய்திருக்கிறாரா…

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை ஒழிப்பதற்காக, நடிகர் விஜயகாந்த்தை ஆதரித்தார் மணியன்.

விஜயகாந்த்தின் மனிதநேயம், விளிம்பு நிலை மக்களிடம் அமோக ஆதரவை பெற்று தந்தது. ஆனால், விஜயகாந்த் தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து, நாடாளுமன்ற தேர்தலில் களம் காண வியூகம் வகுத்தார் மணியன்.

பாழாய் போன பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைத்த கொடுமைக்காக விஜயகாந்த்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் வீணாகி போனது.

விஜயகாந்த்தை கை கழுவிவிட்டு ரஜினிகாந்த்தை அரசியல் சந்தைக்கு இழுத்து வந்தார் மணியன்.

விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலையை பார்த்து உஷாரான ரஜினிகாந்த், துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிவிட்டார்.

விஜயகாந்த் மற்றும் ரஜீனிகாந்த்தை நம்பி மோசம் போன மணியன், வாழ்வின் இறதிகட்டத்தில் உள்ள நேரத்தில், அண்ணாமலையை தூக்கி பிடித்து கொண்டு தொங்குகிறார்.

தமிழக பாரதிய ஜனதாவுக்கு தலைமை வகித்த இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் போன்ற தலைவர்களால் திரட்ட முடியாத ஆதரவை அண்ணாமலை திரட்டி விட்டார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 10 சதவீத வாக்குகளை அண்ணாமலை பெற்று தருவார்.

யாருடனும் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து போட்டியிட்டாலே பத்து சதவீதம் முதல் 15 சதவீரம் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்று கூசாமல் பொய் பேசுகிறார் மணியன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் பாஜக தலைமையில் தனி அணி போட்டியிட்டாலும் கூட, தோல்வியை தழுவும் தொகுதிகளில் எல்லாம் பாஜக டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்ளும் என்று நரம்பு புடைக்க மணியன் பேசுவதை கேட்டு, கூனி குறுகி போகிறார்கள் மணியனை நேசித்துக் கொண்டிருக்கும் காந்தியவாதிகள்.

 அண்ணாமலை தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் தொல்லை அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் மணியன் காது கொடுத்து கேட்டதுண்டா.

6 மாதத்திற்கு முன்பு பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில் திருச்சி சூர்யா, பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர்தான் திருச்சி சூர்யா.

ஆபாச பேச்சு குறித்து ஒருபோதும் வருத்தம் தெரிவித்தவர் இல்லை திருச்சி சூர்யா.

கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் திமிராகவே பேசி வந்த சூர்யாவை நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொண்டார் அண்ணாமலை.

அதுதொடர்பான அறிவிப்பில் கூட திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்டாரா.. வருத்தம் தெரிவித்தாரா என்ற எந்தவொரு தகவலும் இல்லை.

பெண் நிர்வாகிகளை காம பிண்டமாகவே பார்க்கும் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் அதிகம் நிறைந்திருக்கும் கட்சிதான், 2026 ல் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என்று மணியன் பேசுவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என்று நெற்றிக் கண்களை திறக்கிறார்கள் காந்தியவாதிகள்.

 ஊர் உலகமே காறி துப்பிக் கொண்டிருக்கும் அண்ணாமலையை, எந்தொரு ஆதாயத்திற்காக மணியன் ஆதரிக்கிறார் என்பதும் காந்தியவாதிகளின் ஆவேச கேள்விகளாகும்.

வாழ்வின் கடைசி காலத்தை நெருங்கிவிட்ட மணியனுக்கு சோறு கிடைக்குமா என்று சாபம் விடுகிறார்கள் அவரோடு இணைந்து தூய்மையான அரசியலை முன்னெடுத்த ஆன்றோர்கள்.

தமிழ் இலக்கியம் தந்த வாழ்நாள் பெருமைகளை எல்லாம் அண்ணாமலை என்ற தற்குறியை ஆதரித்து பேசுவதன் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அவமானத்தை தேடிக் கொண்டிருக்கிறார் மணியன் என்பதுதான் அவரது நலம் விரும்பிகளின் வருத்தமாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *