Sun. Dec 3rd, 2023

பங்காரு அடிகளாரின் அரசியல் வாரிசுகளுக்கு இடையே மோதல் எனும் தலைப்பில் நல்லரசு  யூடிப்பில் வெளியான வீடியோ தொகுப்பு, பார்வையாளர்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கிறது.

மேல்மருவத்தூரைப் பற்றி ஆதியும் அந்தமுமாக பரபரப்பு செய்திகளை தொகுத்திருந்ததை பார்த்து, அடிகளாரின் பக்தர்கள் என்று சொல்லி கொள்ளும் செவ்வாடை அணிந்த கொத்தடிமைகள், நல்லரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காகித அம்புகளை பார்த்து எல்லாம் நல்லரசு ஒரு போதும் பயப்படாது என்பதை கொத்தடிமைகளுக்கு தெரிவிப்பதற்காகவே, அடிகளாரின் ஆன்மிக வாரிசகாக வலம் வரும் செந்தில்குமாரின் அராஜகத்தை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு நல்லரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அடிகளார் மண்ணுலகை விட்டு பிரிந்து 10 நாட்கள் கூட முடிந்துவிட வில்லை. ஆனால், மேல்மருவத்தூரிலும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்திலும் அடிகளாரின் ஆன்மிக வாரிசான செந்தில்குமார், அன்றாடம் செய்யும் அராஜகத்தை பார்த்து கொந்தளித்து போய் இருக்கிறார்கள் செவ்வாடை பக்தர்கள்.

அடிகளாரின் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கத்தால் மேல்மருவத்தூர் கோயில், கடந்த பத்து நாட்களாக நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

அடிகளாரின் மூத்த வாரிசான அன்பழகன், இளைய மகன் செந்தில்குமாரின் ஆதிக்கம் மட்டுமல்ல, இருவரின் மனைவி மார்களும் கூட செவ்வாடை பக்தர்களிடம் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என்று வேதனையோடு கூறுகிறார்கள் அடிகளாரின் உண்மையான சிஷ்யர்கள்.

அன்பழகன் தொடங்கி நான்கு அதிகார மையங்கள் மேல்மருவத்தூரின் அமைதியை குலைத்துக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், அடிகளாரின் பத்தினியான லட்சுமி அம்மாளின் ஆதரவு பெற்ற சித்தர் பீட நிர்வாகிகளும், அவரவர் பங்கிற்கு மேல்மருவத்தூரில் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

அடிகளார் என்ற ஒற்றை மனிதர் மண்ணுலகில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, ஐந்து அதிகார மையங்கள் சித்தர் பீடத்தை சின்னபின்னமாக்கிக் கொண்டிருப்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் அதிகாலத்து ஆதிபராசக்தியின் ஆத்மார்த்தமான செவ்வாடை பக்தர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளாரை, ஆதிபராசக்திக்கு இணையாக அம்மாவாக அரிதாரம் பூச வைத்த பிரபலங்களில் ஒன்று இரண்டு பேரை தவிர ஒருவர் கூட இன்றைய தேதியில் மேல்மருவத்தூரில் இல்லை.

அடிகளாரையும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தெய்வீகத்தையும் மேல்மருவத்தூரின் பெருமைகளையும் தமிழகம், கர்நாடகம், ஆந்திர என பல மாநில மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அடிகளாரின் ஆதிகால பக்தர்கள்.

ஓய்வுப் பெற்ற அரசு உயர் அலுவலர்கள், தொழில் அதிபர்கள், பிரபல வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  மேல்மருவத்தூரில் தங்கியிருந்து, வடமாநிலங்களில் இருந்து மேல்மருவத்தூருக்கு வருகை தந்த செல்வாக்கு மிகுந்த ஆட்சியாளர்களை, அரசியல் தலைவர்களையும், மத்திய அரசு உயர் அதிகாரிகளை அடிகளாரின் பக்தர்களாக மாற்றுவதற்கு தங்கள் ஓய்வுக் காலத்தை முழுமையாக செலவிட்டார்கள்.

மேல்மருவத்தூரின் தெய்வீகம் மட்டுமல்ல, பொருளாதார நிலையும் பலமடங்கு உயர்ந்த போது, அறக்கட்டளைகளை நிறுவி, தன்னாட்சி பெற்ற அதிகார மையங்களாக  மாறுவதற்கு சட்ட ரீதியாக உதவி புரிந்தவர்கள் மேல்குடியைச் சேர்ந்த தணிக்கையாளர்கள்.

சங்கராச்சாரியாரின் மடத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்த பிரபல தனிக்கையாளர்கள், மேல்மருவத்தூரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

சொந்த பணத்தை செலவழித்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு உழைத்த செல்வாக்கு மிகுந்த பிரபலங்களை எல்லாம் மேல்மருவத்தூரில் இருந்தே விரட்யடித்தார்கள் அடிகளாரின் வாரிசுகளான அன்பழகனும், செந்தில்குமாரும் தான் என்கிறார்கள் மிகுந்த வேதனையுடன் சித்தர் பீட சிர்வாகிகள் பலர்.

அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன், கல்வி நிறுவனங்களில் தலைமை பொறுப்பு ஏற்றுக் கொண்ட போதும், இளைய மகன் செந்தில்குமார், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட போதும், இருவருக்கும் இடையே, செவ்வாடை பக்தரிகளிடம் செல்வாக்கு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை சோதனை செய்து பார்ப்பதற்காக அராஜக வழிகளையே தேர்ந்தெடுத்தார்கள் என்று கண்ணீர் வடிக்கிறார் அடிகாளரின் மெய் காப்பாளர்களில் ஒருவர். 

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அடிகளாரின் ஆன்மிகச் சேவையால், தமிழ்நாட்டில் பக்தி மார்க்கத்தில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு உழைத்து வந்த ஆன்றோர்களுக்கு, அடிகளாரின் குடும்ப பாசத்தை கண்டு மனம் நொந்து போனார்கள்.

அடிகளாரும் இலட்சுமி அம்மாளும், சித்தர் பீடத்தை குடும்ப சொத்தாக மாற்றுவதற்காக, தனி மனித ஒழுக்கத்தில் மட்டுமின்றி பக்தி மார்க்கத்திலும் கத்து குட்டிகளாக சுற்றி திரிந்த அன்பழகனையும் செந்தில்குமாரையும் சித்தர் பீட வழிபாட்டில் திணித்ததை கண்டு மனம் வெறுத்துப் போனார்கள் தான் ஏராளம்.

சாதாரண ஆசிரியரான சுப்பிரமணியத்தை பங்காரு அடிகளாராக புகல் பெறுவதற்கு பின்னணியில் இருந்து உழைத்த செல்வந்தர்கள் கூட, அடிகளாரின் குடும்ப பாசத்தால் மனம் வெறுத்து ஒதுங்கி கொண்டார்கள். அதேபோல, மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள், அரசியல் தலைவர்கள் என செவ்வாடை பக்தர்களின் அன்பை பெற்றவர்களும் கூட மேல்மருவத்தூர் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்கள்.

அடிகளாரையே பணைய கைதியாக்கி, அவரின் பிள்ளைகளான அன்பழகனும் செந்தில்குமாரும் பல கோடி மக்கள் காணிக்கையாக வழங்கிய நன்கொடைகளில் தில்லுமுல்லுகளை செய்த போது, மனம் வெதும்பினார்கள் சித்தர் பீட நிர்வாகிகள்.  குடும்ப வாரிசுகளின் பிடியில் பணையக் கைதியாக அடிகளார் சிக்கிக் கொண்டதை பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்த அவரின் சீடர்கள், வாரிசுகளின் அராஜகத்தை நேடியயாக எதிர்க்க முடியாமல் மேல்மருவத்தூரில் இருந்தே வெளியேறி சென்றுவிட்டார்கள்.

விசுவாசமிக்க செவ்வாடை பக்தர்கள் இருந்த இடங்களில் எல்லாம் அன்பழகனும், செந்தில்குமாரும் பவுன்சர்கள் எனும் ரவுடி பட்டாளத்தை நிறுத்தி வைத்தார்கள்.

மேல்மருவத்தூர் ஆலயம்  மட்டுமின்றி ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள் என ஒட்டுமொத்தமாக மேல்மருவத்தூரே ரவுடிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டது.

அடிகளாரைச் சுற்றியும் பவுன்சர்கள் வளைய வந்ததை பார்த்து, சித்தர் பீட மூத்த நிர்வாகிகள் வேதனைபட்டார்கள்.

அடிகளாரின் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு அன்பழகனும் செந்தில்குமாரும் நேரடி வாரிசுகளாக மாறி போன போதும் கூட, ஆன்மிக வாரிசு யார் என்பதில் மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

 அடிகளாரின் தலைமகனான அன்பழகன், திமுக ஆதரவு நிலைபாட்டை எடுத்தார். ஆனால், அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாள், அவர்களது இளைய மகன் செந்தில்குமார் ஆகியோருக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள்.

அடிகளாரின் குடும்பத்து வாரிசுகள் திமுக மற்றும் பாஜக என முட்டிக் கொண்ட போது, செந்தில்குமார் சித்துவேலைகள் பல செய்து, அடிகளாரின் வாரிசாக தன்னை அறிமுகப்படுத்த வைத்துக் கொண்டதை பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அன்பழகன்.

மறைமுகமாக இருந்த திமுக ஆதரவு மனப்போக்கை, வெளிப்படையாகவே காட்டினார் அன்பழகன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை நேரில் சந்திப்பது, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கம் பாராட்டுவது என அன்பழகன், ஆன்மீக வாரிசு பதவியை அடைவதற்காக படாதபாடு பட்டார்.

ஆனால், அவரின் ஆசைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட செந்தில்குமார், கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய பாஜக அரசுக்கு மறைமுகமாக பல நூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல்களை கசிய விடுகிறார்கள் சித்தர் பீட மூத்த நிர்வாகிகள்.

அடிகளாரின் ஆதரவோடு ஆன்மிக வாரிசு பதவியை கைப்பற்றிய செந்தில்குமார், திராவிட கட்சிகள் பக்கம் சாயாமல், மத்திய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா தலைமையிடம் சரணாகதி அடைந்தார்.

80 வயதை கடந்த நேரத்திலேயே அடிகளாருக்கு உடல்நலம் பாதிக்க தொடங்கியது. ஆன்மிக சக்தியை வளர்த்தெடுக்கும் பணியில் இருந்து பல வருடங்களுக்கு முன்பு விலகியிருந்த அடிகளாரால், தனது உடலை முழுமையாக ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியவில்லை என்பதுதான் பரிதாபத்திற்கு உரிய ஒன்று.

செந்தில்குமாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே, அடிகளார் காலமானார். ஒரு வார சோகம் கூட விலகாத போதும் கூட ஆன்மிக வாரிசு பட்டத்தை மகிழ்ச்சியோடு  ஏற்றுக் கொண்டார் செந்தில்குமார்.

பத்து ஆண்டுகளுக்கு மேலான தவ வாழ்க்கை பயிற்சியில் முனைப்பு காட்டிய பங்காரு அடிகாளர், தம்மை அம்மா என்று செவ்வாடை பக்தர்கள் அழைப்பதை 20 வருட கால ஆன்மிக பயணத்திற்கு பிறகே அனுமதித்தார்.

ஆனால், சுட்டுப் போட்டாலும் கூட ஆன்மிக நிலைக்கு உயர முடியாத செந்தில்குமார், அடிகளார் சமாதியான சில நாட்களுக்கு உள்ளாகவே தன்னை அம்மா என்ற நிலையில் செவ்வாடை பக்தர்கள் வழிபட வேண்டும் என்று சித்தர் பீட நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

சித்தர் பீடத்தின் சொத்துகளை பிரித்துக் கொள்வதில் அன்பழகனுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே பங்காளிச் சண்டை உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கும் அடிகளாரின் உறவினர்கள்,

அரசியல் ரீதியாக ஆதரவு திரட்டும வேலைகளிலும் அடிகளாரின் வாரிசுகள் தீவிரம் காட்டிவருவதாக கொந்தளிக்கிறார்கள் அடிகளாரின் சீடர்கள்.

அடிகளார் காலமான நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவைச் சேர்ந்த ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன் என அரசியல் மயமாக அஞ்சலி நடந்ததையே ரசிக்கவில்லை அடிகளாரின் பக்தர்கள்.

அடிகளாரின் இறுதி அஞ்சலியை வைத்து, அன்பழகனும், செந்தில்குமாரும் அவரவருக்குரிய அதிகாரத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வரும் அன்பழகன், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு மரியாதைக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்தி நிமிடம் வரை திராவிட மாடல் ஆட்சிக்கும் முதலவர் மு.க.ஸ்டாலினுக்கும் விசுவாசமானவராக இருந்து கொண்டிருக்கிறார்.

அன்பழகனை தன் வாழ்நாள் எதிரியாக பாவித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார், அடிகளாரின் ஆன்மிக வாரிசாக அரிதாரம் பூசிக் கொண்ட பிறகும், மேல்மருவத்தூரில் இருந்தே அன்பழகனை விரட்ட சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதனை நிறைவேற்றுவதற்காக மத்திய பாஜக அரசின் தயவையும் பிரதமர் மோடியின் ஆதரவையும் பெற தனக்கு மிக மிக நம்பிக்கைக்குரிய சித்தர் பீட மூத்த நிர்வாகிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொள்கிறார்கள் அன்பழகனின் வளர்ச்சி மீது அக்கறையுள்ள நலம் விரும்பிகள்.

அடிகளார் சமாதியான பிறகு அவரது பக்தி சேவைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி ஒருமுறை மேல்மருவத்தூருக்கு வர வேண்டும் என்பதே செந்தில்குமாரின் வேண்டுதலாக இருக்கிறது என்கிறார்கள்.

அடிகளாருக்குப் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கு பிரதமர் மோடியின் மேல்மருவத்தூர் வருகையை பயன்படுத்தி கொள்ள படாதபாடு படுகிறார் செந்தில்குமார்.

பிரதமர் மோடி மேல்மருவத்தூருக்கு வந்து அடிகளாருக்கு மரியாதை செய்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அடிகளாரின் செவ்வாடை பக்தர்கள், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற தகவலையும் செந்தில்குமாரின் அறிவுரையோடு டெல்லி சென்றிருக்கும் தூது குழுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட் என்கிறார்கள் அடிகளாரின் சிஷ்யர்கள்.

இந்து மதத்தையும் சனாதனத்தையும் தூக்கி பிடிக்கும் பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் இயல்பாகவே ஆதரித்துக் கொண்டிருக்கும் இலட்சுமி அம்மாளும், செந்தில்குமாரும் பிரதமர் மோடியின் மேல்மருவத்தூர் ஆலய தரிசனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்கிறார்கள்  சித்தர் பீட நிர்வாகிகள்.

திமுக ஆதரவு நிலையில் உள்ள அன்பழகன், மேல்மருவத்தூர் கோயில் மீது காவி கொடி பறப்பதற்கு அனுமதிப்பாரா.. திமுக அரசுக்கு ஆதரவு கரம் நீட்டிக் கொண்டிருக்கும் அன்பழகன், மேல்மருவத்தூர் கோயில் மற்றும் சித்தர் பீடத்தின் மீதான உரிமையை பறிகொடுத்துவிட்டு வெளியேறுவாரா என்பதெல்லாம் அடிகளாரின் 16 ஆம் நாள் வழிபாட்டிற்கு முன்பாக ஊர்ஜிதமாகிவிடும் என்கிறார்கள் சித்தர் பீட நிர்வாகிகள் மிகுந்த கவலையோடு.

அடிகளாரின் மீதான பக்தியாலும் ஆதிபராசக்தியின் தெய்வீகத்தின் மீதும் ஆன்மிக தொண்டில் வாழ்நாளை கரைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்களுக்கு,

அடிகளாரின் வாரிசுகளால் வரும் காலங்களில் எவ்வளவு அவமானங்கள் நேரப் போகிறதோ என்று பதைபதைப்புடன் பேசுகிறார்கள் ஆன்மிக சேவையில் இடைவிடாது ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆன்றோர்கள்..

நன்றி நண்பர்களே..

செவ்வாடை பக்தர்களாக போலி வேடதாரிகளின் மிரட்டல்களுக்கு சிறிதும் பயப்படாமல், ஆதிபராசக்தி பீடத்தின் அராஜகங்கள் பற்றிய செய்திகள் நல்லரசுவில் அடிக்கடி வெளியிடப்படும் என்று உறுதியளிக்கிறம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *