Sun. Dec 3rd, 2023

அடிகளாரின் ஆன்மிக வாரிசு மூலம் பாமகவை அதிமுக கூட்டணியில் முயற்சிக்கிறாரா இபிஎஸ்.. பாஜக கூட்டணியை வலுவாக்குகிறதா.?மேல்மருவத்தூர் கோயில்

சிறப்புச் செய்தி..

தாரை.வே,இளமதி., முதன்மை ஊடகவியலாளர்..

பங்காரு அடிகளார் மண்ணுலகை விட்டு விண்ணுலகில் அடைக்கலம் ஆகி செப்டம்பர் 31 ஆம் தேதியுடன் 13 நாட்கள் கடந்துவிட்டபோதும், செவ்வாடை பக்தர்கள் சோகத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அடிகளார் உயிரோடு வலம் வந்து கொண்டிருந்த நாட்களில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை விட அவர் சமாதி நிலையை அடைந்த பிறகு பக்தர்களின் கூட்டம் மேல்மருவத்தூரில் அதிகமாகவே இருப்பதாக சித்தர் பீட நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

விடியற்காலை முதல் நடை அடைப்பு வரை உடல் முழுவதும் உணர்ச்சியை தூண்டி விடும் வகையில் ஒலித்துக் கொண்டிருந்த ஓம் சக்தி மந்திரங்கள், அடிகளாரின் சமாதி நிலைக்குப் பிறகு சோகம் இழையோடி கொண்டிருப்பதை முழுமையாக உணர முடிகிறது என்கிறார்கள் ஆன்மிக தொண்டில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் செவ்வாடை பக்தர்கள்.

ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடமும் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளிடமும் அடிகளாரின் மறைவால் காணப்படும் சோகம், பங்காரு அடிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் ஒருவரிடம் கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையோடு கூறுகிறார்கள் வார வழிபாட்டு மன்ற நிர்வாகிகள்.

அடிகளார் ஆன்ம பலத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, சமாதி ஆன பிறகும் சரி.. அவரின் ஆசியால்தான் மேல்மருவத்தூர் கோயில் பல கோடி பக்தர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஆதிபராசக்தியிடமும் அம்மாவிடமும்  சரணாகதி அடைந்த பக்தரிகளின் அறியாமையை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பலதலைமுறைக்கு உயர்ந்துவிட்ட அடிகளாரின் குடும்பத்து உறவுகள், மேல்மருவத்தூர் ஆலயத்தின் மகிமையை ஆதாயமாக்கி, அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள துடியாய் துடிப்பதை பார்ப்பதற்கே படுகேவலமாக இருக்கிறது என்று மனம் வெதும்பி கூறுகிறார்கள் அடிகளாரின் ஆத்மார்த்தமான சீடர்கள்.

அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடிய அரசியல் தலைவர்களால், பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆன்மிக பெரியவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை என்று கூறும் சித்தர் பீட நிர்வாகிகள், அடிகளார் சமாதியான பிறகும் கூட அஞ்சலி செலுத்த வரும் அரசியல்வாதிகளின் மூலம் அடிகளாரின் வாரிசுகள் வெளிச்சத்தை அனுபவிக்கவே ஆசைப்படுகிறார்களே தவிர, அடிகளாரின் மீது உண்மையான பக்தியோ, மரியாதையோ இல்லாமல்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் மிகுந்த வருத்தத்தோடு செவ்வாடை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர்.  

அக்டோபர் 19 ஆம் தேதியன்று கோடிக்கணக்கான செவ்வாடை பக்தர்களை கண்ணீரில் மிதக்க விட்டார் அடிகளார். சமாதியில் அடைக்கலம் ஆவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அகில இந்திய கட்சித் தலைவர்களும் அடிகளாரின் ஆன்மிகத் தொண்டை அங்கீகாரம் செய்தார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி., மத்திய பாஜக அமைச்சர் எல்.முருகன், பாஜகவைச் சேர்ந்த ஆளுநர்கள் தமிழிசை சவுந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக அமைச்சர்கள் பொன்முடி, காந்தி, எம்பி ஜெகத்ரட்சகன் என அரசியல் பிரபலங்களால் மேல்மருவத்தூர் கோயிலே திணறி போனது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து தீராத துயரத்தோடு மேல்மருவத்தூருக்கு கதறலோடு வந்த செவ்வாடை பக்தர்கள்  பல அடி தூரத்தில் நின்று அடிகளாருக்கு கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கினார்கள்.

அடிகளார் சமாதி நிலையை எட்டிய நாள் முதலாக கடந்த 13 நாட்களாக அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரமுகர்கள் என ஒவ்வொரு நாளும் மேல்மருவத்தூர் கோயில் பரபரப்பாகவே காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார், 10 நாட்கள் கடந்த பிறகுதான் மேல்மருவத்தூருக்கு வருகை தந்து அடிகளார் சமாதியில் மலர் தூவி வணங்கினார்.

எடப்பாடியாரின் வருகையால் அடிகளாரின் ஆன்மிக வாரிசான செந்தில்குமார் மிகுந்த உற்சாகமடைந்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அவரது நண்பர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி., தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்த போது இல்லாத உற்சாகம், எடப்பாடியாரின் வருகையின் போது செந்தில்குமாரிடம் காணப்பட்டதை பார்த்து சித்தர் பீட நிர்வாகிகள் ஆதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

அடிகளாரின் சொத்துகளில் மட்டுமல்ல, அவரின் ஆன்மிக தொண்டிலும் சம பங்குக்கு உரியவராக இருந்து கொண்டிருக்கும் அன்பழகனை கண்டு ஒவ்வொரு நாளும் செந்தில்குமார் பயந்து கொண்டே இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருக்கமான செவ்வாடை பக்தர்கள்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆளும்கட்சியினருடன் மிகுந்த நட்பு பாராட்டி வரும் அடிகளாரின் மூத்த புதல்வர் அன்பழகன், திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, ஆளுமை மிகுந்த தலைவர்களுடனும், இரண்டாம் கட்ட தலைவர்களுடனும் நெருக்கமான நட்பை வைத்திருக்கும் அன்பழகன், எப்போது வேண்டுமானாலும் அடிகளாரின் சொத்துகளுக்கும் ஆன்மிக வாரிசு பதவிக்கும் சொந்தம் கொண்டாலும் என்ற அச்சம் செந்தில்குமாரை நிம்மதியிழக்க செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் செந்தில்குமாரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து கொண்டிருக்கும் சித்தர் பீட நிர்வாகிகள்.

அடிகளார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே தமது ஆன்மிக வாரிசாக செந்தில்குமாரை அடையாளம் காட்டிவிட்டார் என்றாலும் கூட, மேல்மருவத்தூர் கோயில் நிர்வாகத்தில் அன்பழகனை மட்டுமல்ல, அவரது மகனான அகத்தியனும் செல்வாக்கு செலுத்தியதை அடிகளாரோ, லட்சுமி அம்மாளோ கண்டு கொள்ளாமல் அமைதி காத்ததும் செந்தில்குமாரை அச்சம் மூட்டிக் கொண்டிருக்கிறது.

மருவத்தூர் தளபதி என்ற பட்டத்தோடு அன்பழகனின் மகன் அகத்தியன், செவ்வாடை பக்தர்களிடம் செல்வாக்கு செலுத்தியதையும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மீது அதிகாரம் செலுத்தியதையும் இப்போது நினைத்தால் கூட செந்தில்குமார் அலறி துடிப்பதை நேரில் பார்ப்பதற்கே கவலையாக இருக்கிறது என்கிறார்கள் சித்தர் பீட நிர்வாகிகள்.

அடிகளார் சமாதியான பிறகு கோயில் நிர்வாகத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் கூட செந்தில்குமார் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார்கள்.

அன்பழகன் மற்றும் அவரது புதல்வர் அகத்தியனால் எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரலாம் என்ற கவலையோடு நடமாடிக் கொண்டிருக்கிறார் செந்தில்குமார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சித்தர் பீட நிர்வாகிகள்.

அடிகளார் சமாதி நிலையால் மேல்மருவத்தூர் கோயிலில் உருவாகிவிட்ட வெற்றிடத்தை முழுமையாக நிரப்ப துடிக்கும் செந்தில்குமார், ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை, திரையுலக பிரமுகர்களை தனக்கு ஆதரவாக திரட்டுவதற்கு ஒவ்வொரு நாளையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் ஈடுபாடு கொண்ட செவ்வாடை பக்தர்கள்.

எடப்பாடியாரின் வருகையையொட்டி செந்தில்குமார் போட்ட அரசியல் கணக்குகள் கூட ஓரளவுக்கு வெற்றியை தான் தேடி தந்திருக்கிறது என்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவும் பாமகவும் ஒரே அணியில் போட்டியிட்டால்தான் ஆளும்கட்சியான திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட முடியும் என்பது செந்தில்குமாரின் அரசியல் கணக்காக இருக்கிறது என்கிறார்கள் இளையவரின் நீண்ட கால நண்பர்கள். எடப்பாடியார் லட்சுமி அம்மாளையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது எல்லாம் செந்தில்குமார் வகுத்த திட்டம்தான் என்கிறார்கள்.

அதிமுகவும் பாமகவும் ஒன்று இணைந்து தேர்தல்களை சந்திப்பதற்கு மேல்மருவத்தூர் கோயில் நிர்வாகத்தின் ஆசியும் உண்டு என்பதை எடப்பாடியாரின் வருகையின் போது சில குறிப்புகளால் தெரிவித்துவிட்டார் செந்தில்குமார் என்கிறார்கள் எடப்பாடியாரோடு மேல்மருவத்தூருக்கு சென்றிருந்த அதிமுக நிர்வாகிகள்.

எடப்பாடியார் வருகையை எந்தளவுக்கு ஆவலாக எதிர்பார்த்தாரோ, அதுபோலவே சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் வருகையையும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் புதிய ஆன்மிக குருவான செந்தில்குமார். 

மத்திய பாஜக அரசோடும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மிக மிக நெருக்கம் பாராட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடிகளாரின் ஆன்மிக தொண்டிற்கு மரியாதை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவது, ஒட்டுமொத்த அடிகளார் குடும்பத்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள் சித்தர் பீட மூத்த நிர்வாகிகள்.

சாணக்யா டிவி நிறுவனரும் மூத்த ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம் சிங்காசன், கடந்த ஜனவரியில் சென்னையில் காலமானார். அன்றைய தேதியில் படப்பிடிப்பு மற்றும் பல்வேறு பணிகளில் மிகவும் பிஸியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பாண்டே உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்தார். வழக்கத்திற்கு மாறாக ரஜினிகாந்த், பாண்டே இல்லத்தில் தங்கியிருந்து மௌன அஞ்சலி செலுத்தியது, அவரது ரசிகர்களிடம் மட்டுமல்ல, பாண்டே குடும்பத்தினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாண்டேவின் தந்தைக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், அடிகளாரின மறைவு நாளிலும் அதன் பிறகு 13 நாட்கள் கடந்த பிறகும் கூட மேல்மருவத்தூருக்கு சென்று அடிகளாரின் ஆன்மிகத் தொண்டிற்கு உரிய மரியாதை செலுத்தாமல் புறக்கணித்திருப்பது, ஆன்மிகத்தை வாழ்வியலாக கொண்டிருக்கும் ரஜினிகாந்த்திற்கு அழகா என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் செவ்வாடை பக்தர்கள்.

ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான நிலையில் உள்ள அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராகவே இருக்கிறார் அடிகளாரின் இளையவர் என்ற பட்டத்தை சுமந்திருக்கும் செந்தில்குமார், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று இல்லாமல் பல மாங்காய்களை அடிக்க காய் நகர்த்தி வருகிறார். ஆன்மிக வாரிசு பதவியை கைப்பற்றியதை போல, மேல்மருவத்தூர் கோயிலுக்கு, சித்தர் பீடத்திற்கு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மன்னராக முடிசூடிக் கொள்ள செந்தில்குமார் ஆசைப்படுகிறார். அடிகளாரின் மூத்தவரான அன்பழகனையும் அவரது குடும்பத்து வாரிசுகளையும் மேல்மருவத்தூரில் இருந்து ஒட்டுமொத்த விரட்டுவதற்கான சதித்திட்டத்தில் வெற்றி பெறுவதற்காகவே  எடப்பாடியாருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார் செந்தில்குமார். அதைவிட பல மடங்கு மரியாதையை ரஜினிகாந்த் போன்ற மத்திய பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமானவர்க ளுக்கு தர தயாராக இருக்கிறார் செந்தில்குமார்.

மருவத்தூர் இளையவர் விரிக்கும் சதி வலையில் விழுந்து விடுவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதுதான் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளிடம் உள்ள மிகப்பெரிய கேள்வி என்கிறார்கள் அடிகளாரின் ஆத்மார்த்தமான பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *