Sun. Dec 3rd, 2023

மேல்மருத்துவர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகாளர் உயிரோடு இருந்த காலத்தில் எழுந்த எண்ணற்ற சர்ச்சைகளை போலவே,  சமாதிக்குள் சரணாகதியான பிறகும் கூட சர்ச்சைகள் நாள்தோறும்  எழுந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் சித்தர் பீட பக்தர்களின் வேதனையாக இருக்கிறது.  ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின்  இறுதிகட்ட அஞ்சலியால், மகத்தான குருவிற்கு கிடைக்க வேண்டிய புகழ் கூட அடிகாளருக்கு கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள் பெண் பக்தர்கள். கருவறை வழிபாட்டில் மாபெரும் புரட்சியை நிகழ்த்திய அடிகாளருக்கு சைவம், வைணவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள் அஞ்சலி செலுத்தவில்லையே என்ற வேதனை, ஒட்டுமொத்த சித்தர் பீட பக்தர்களிடமும் நிறைந்திருக்கிறது.

பெண் பக்தர்கள் உள்பட சித்தர் பீட அடியவர்களிடம் ஏற்பட்டுள்ள வேதனையை பற்றி விரிவாக பார்ப்போம்.

மேல்மருவத்தூரில் 82  ஆண்டுகளுக்கு முன்பு  எளிய குடும்பத்தில் பிறந்து, சுப்பிரமணி என்ற பெயரோடு பள்ளி ஆசிரியர் வலம் வந்தவர், பங்காரு அடிகளாராக  தமிழ்நாடுமுழுவதும் பிரபலமானதற்கு முக்கிய காரணம், அவர் தொடங்கி வைத்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள்தான்.  

1975 வாக்கில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை உருவாக்கி, ஆன்மிக குருவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார், பங்காரு அடிகாளர்.

பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் பயணத்தில் மிகவும் சாதனையாக பார்க்கப்பட்டது, பக்தி மார்க்கத்தில் அதிக நாட்டம் கொண்ட பெண்கள், அனைத்து நாட்களும் கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு நேரிடையாகவே அபிஷேகம், ஆராதனை செய்ய உரிமை வழங்கியதும், மாநிலம் முழுவதும் குக்கிராமங்கள், நகரங்கள் என வேறுபாடு இல்லாமல் வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி, பெண்களை பக்தியில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர ஒழுங்குடன் வழிநடத்தியும் ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் வழிகாட்டியதும்தான் தனித்துவமான சேவையாக புகழப்பட்டுக் கொண்டிருக்கிறது.     

அனைத்து சமுதாய மக்களையும் சித்தர் பீடம் என்ற ஒற்றை நிலையில் ஒருமித்து இணைக்க வைத்தது மாபெரும் அன்மீக  புரட்சியாக, தொண்டாக புகழப்பட்டது.

சாதி, மதம், மொழி, மாநிலம் கடந்து இந்தியா முழுவதும் பல லட்சம் பக்தர்களை உ ருவாக்கியவர் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளாரின் புகழும், மேல்மருத்துவரின் பெருமைகளும் றெக்கை கட்டி பறந்த காலம் என்றால், 1980 க்கு பிறகு தான் என்று கூறிவிடலாம். இன்றைக்கு பிரமாண்டமாக காட்சியளிப்பதைப்போல, 40 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூரும் இல்லை. ஆதிபராசக்தி கோயிலும் இருந்திருக்கவில்லை.

ஆதிபராசக்தி கருவறை, புற்று மண்டபம், சப்த கன்னியர் கோயில்,  நாக பீடம், தல விருட்சமாக வேப்ப மரம் என சில நூறு அடி பரப்பளவுக்குள் தான் கோயில் அமைந்திருந்தது. சென்னையில் இருந்து திருச்சி, சேலம் செல்லும் லாரி ஓட்டுநர்கள், பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ மேல்மருவத்தூர் கோயில் முன்பு லாரியை நிறுத்தி கற்பூரம் ஏற்றி வணங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பத்து, இருபது ரூபாய்களை காணிக்கையாக செலுத்திய லாரி ஓட்டுனர்கள் மூலம் பிரபலமடைந்த மேல்மருவத்தூர் கோயில் முன்பு இன்றைய தேதியில் லாரி ஓட்டுனர்கள, தங்கள் வாகனங்களை நிறுத்தி கண்ணீர் மல்க ஆதிபராசக்தியை வணங்க முடியாத அளவிற்கு, மேல்மருத்துவத்தூர் கோயில் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. கோயில் நிர்வாகத்தின் கெடுபிடிகளாலும் கூட வாகன ஓட்டுநர்கள், மேல்மருவத்தூரில் சாமி கும்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பங்காரு அடிகாளரை அன்மீக குருவாக கோடி கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட, மேல்மருவத்தூர் கோயில் மட்டுமல்ல, அதனை சுற்றி பல  ஏக்கர் பரப்பளவுக்கு மேலான இடங்கள் எல்லாமே நாள்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை ஈட்டி தரும் வியாபார இடங்களாகவே இருக்கும் வகையில் பங்காரு அடிகளாரின் வாரிசுகள் மாற்றிவிட்டார்கள்.

ஆதிபராசக்தி கோயிலுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான புகழும் கோடிக்கணக்கில் பணமும் கிடைக்க தொடங்கியவுடன், பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியம்மாளும், அவர்களது வாரிசுகளான செந்தில்குமாரும்,அன்பழகனும் தலையெடுக்க ஆரம்பித்தவுடன், மேல்மருத்துவத்தூரில் சட்டவிரோத செயல்கள் தலை காட்ட தொடங்கின. 1990 காலகட்டத்தில் ஆதிபராசக்தி பீடத்தை தொடர்புபடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாளிதழ்களிலும், புலனாய்வு இதழ்களிலும் அதிகமாக வெளிவந்து, மேல்மருவத்தூர் பெயரை கேட்டாலே அதிர்ச்சியும் இனம் புரியாத பயவுணர்வும் ஏற்படுத்தியிருந்தது.

சொந்த சாதியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் அரவணைப்பில் நின்று கொண்டு, ஆட்சியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் பக்தர்களாக்கியது, அடிகளாரின் நம்பிக்கைக்குரிய உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மற்றும் தனியார்நிறுவன அதிகாரிகள்.

திராவிட ஆட்சிகள் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலங்களில், தமிழ்நாடு அரசின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கிறது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டபோது, மத்திய அரசில் அங்கம் வகித்தவர்கள், தலைமைப் பொறுப்பில் இருந்த செல்வாக்குமிகுந்த பிரபலங்களும் கூட ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்கள் ஆனார்கள்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஜெயில் சிங், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் என பொதுமக்களின் மனங்களில் இருந்து என்றும் நீங்காத தலைவர்களின் ஆலய தரிசனங்களை புகைப்படங்களாக எடுத்து, ஆதிபராசக்தி கருவறையை சுற்றி கண்காட்சி அமைத்து, கிராமபுற பக்தர்களை கவர்ந்து இழுத்தது ஆதிபராசக்தி பீடம்.

1998 வாக்கில் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பாலயோகி, பங்காரு அடிகளாரின் தீவிர பத்ராக இருந்தார்.

முக்கியமான விழா காலங்களில் பாலயோகி, மேல்மருவத்தூருக்கு வந்ததால், அவர் மூலம் வடமாநில அரசியல்வாதிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் மேல்மருவத்தூர் மகிமை பரவியது. 

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், தொழில் அதிபர்கள் என சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களின் நம்பிக்கைக்குரிய ஆலயம் என்ற அந்தஸ்து மேல்மருத்துவர் கோயிலுக்கு கிடைத்தவுடனேயே, அறக்கட்டளைகளை துவக்கி, குடும்ப வாரிசுகளை இயக்குனராக்கி, கல்வி துறையில் கால்பதித்தது ஆதிபராசக்தி சித்தர் பீடம். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை என பல்துறைகளில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாகவும் உயர்ந்தன ஆதிபராசக்தி கல்வி நிலையங்கள்.

இந்தியாவை கடந்து, உலகின் பல நாடுகளில் பக்தர்கள் உணர்ச்சி மிகுந்த பக்தியால், பங்காரு அடிகளாரின் தெய்வீகத்தை பரப்ப தொடங்கினார்கள்.

நன்கொடைகள் மூலமும் பாத பூஜை உள்ளிட்ட பலவகையாக வழிபாடுகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மேல்மருவத்தூரின் சொத்து பெருகிறது.

பங்காரு அடிகளாரின் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் மூலம் வாரிசுகள் பெருகிய நேரத்தில், சொந்த சாதி பாசத்தை விட்டுவிடாமல், சாதிக்குள்ளேயே திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும் உறுதியாக இருந்தார்கள் பங்காரு அடிகளாரும் அவரது மனைவியுமான லட்சுமி அம்மாளும்.

பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கப்பட்டநேரத்தில், சாதாரண மனிதரின் குடும்பத்தில் ஏற்படும் பங்காளிச் சண்டை போலவே, அடிகாளர் குடும்பத்திலும் சொத்து தொடர்பாக மட்டுமல்ல, அடிகாளரின் உண்மையான ஆன்மிக வாரிசு என்ற போட்டியும உச்சத்தை எட்டியது.

இளைய மகனான செந்தில்குமாரின் அராஜகத்தை விட அடாவடியை விட மூத்த மகனான அன்பழகனின் அடாவடியும் அத்துமீறல்களும் அதிகமாக இருந்ததால், குடும்ப உறவுகளிடையே செந்தில்குமாருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது.

அமைதியான மனநிலையோ, ஆர்ப்பாட்டம் இல்லாத குணமோ இல்லாத செந்தில்குமாரை, அடிகாளரின் வாரிசாக அறிவிக்கப்பட்ட போது, அன்பழகனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

பங்காரு அடிகளார் குடும்பத்திற்குள் இருந்த பங்காளிச் சண்டை, வெளியுலகத்திற்கும் தெரியும் வகையில் அமைந்தது, சொந்த தம்பியான செந்தில்குமாருக்கு மீதான வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் பல காரியங்களை செய்தார் அன்பழகன்.

13 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2010 ஆம் ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை வருமான வரித்துறைக்கு லீக் செய்ததாக அன்பழகன் மீது அவரது குடும்பத்தினரே அனல் கக்கினார்கள்.

2010 ஆம் ஆண்டில் வருமான வரித்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் அதிரடியாக சோதனை நடத்தியது.

பங்காரு அடிகளாரின் படுக்கை அறையில் இருந்து மட்டும் கட்டு கட்டாக 9 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பல் மருத்துவக் கல்லூரிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததும் அம்பலத்திற்கு வந்தது.

13 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாரும், அன்பழகனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருந்து இன்று வரை இருவருக்கும் இடையேயான உறவு ஆரோக்கியமாக இல்லை.

பங்காரு அடிகளாரும் லட்சுமி அம்மாளும் செந்தில்குமாருக்கு ஆதரவாக நிற்க, குடும்ப உறவுகளால் தனித்து விடப்பட்ட அன்பழகன், தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்க, சித்தர் பீட ஆன்மிக பேரவை என்ற பெயரில், அடிகாளரின் பக்தர்களை வளைக்க முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில் ஆட்சியாளர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ள அரசியல் ரீதியாகவும் காயை நகர்த்தி வந்தார்.

மேல்மருவத்தூர் கோயிலுக்குள் செந்தில்குமாருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருவதை பொறுத்துக் கொள்ளாமல் குமறிக் கொண்டே இருக்கிறார் அன்பழகன்.

அடிகளாரின் மறைவு செய்தி கேட்டு அஞ்சலி செலுத்த வந்த மருத்துவர் ராமதாஸ் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரை எண்ணற்ற பிரபல தலைவர்களிடம் அன்பழகனே முன்நின்று அடிகளாரின் உடல்நிலை பாதிப்புகளை கூறிக் கொண்டிருந்ததை உலகெங்கும் பரவியிருக்கும் ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்கள் பார்த்து மனதுக்குள் வருந்தினர். அடிகாளரின் அடுத்த வாரிசு என்று அங்கீகரிக்கப்பட்ட செந்தில்குமார் ஓரம்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆன்மிகப் பணியில் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ருபாய்க்கு மேல் அசுர வேகத்தில் சொத்து குவித்ததைப் பார்த்து மனம் வேதனைப்பட்டார்கள்  சைவம் மற்றும் வைணவ மடங்களை சேர்ந்த பீடாதிபதிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பக்தியின் பெயரால் அப்பாவி மக்களை ஏமாற்றி, தன்னுடைய குடும்பத்தினருக்காக மட்டுமே வாழ்ந்த அடிகளாரை, துறவி என்ற நிலைக்கு உயர்த்தவும் பீடாதிபதிகள் மிகவும் தயங்கினாகள்.

அதன் காரணமாகவே,செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதற்காக டெல்லிக்கு பறந்த 50க்கும் மேற்பட்ட துறவிகளில் ஒருவர் கூட அடிகளாரின் சமாதி நிகழ்வில் பங்கேற்க வரவில்லை.

பெண்களிடம் ஆன்மிக உணர்வை மேம்படுத்திய பங்காரு அடிகளார், சமய வளர்ச்சிக்காக, சமத்துவ சமதாயத்தை நிறுவதற்காகவோ எந்த முயற்சியும் செய்யவில்லை என்ற வருத்தம் சைவம் மற்றும் வைண மதத்தை சேர்ந்த துறவிகளுக்கு இன்றைக்கும் கூட இருந்து கொண்டிருக்கிறது.

அடிகாளர் உயிரோடு இருந்த காலத்தில், இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கும் துறவிகள் பங்காரு அடிகளாரை கொண்டாவில்லை. அதுபோலவே அவர் காலமான பிறகும் கூட அவருக்கு உரிய மரியாதையை செலுத்தவில்லை என்று வேதனையோடு கூறுகிறார்கள் சித்தர் பீட சிஷ்யர்கள்.

சமயத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட வேதனையை விட, அடிகளார் மறைந்த பிறகும் கூட அவரது வாரிசுகள், ஒன்றாக இணைந்து அடிகாளருக்கு பூஜை வழிபாடுகளை செய்யவில்லை என்பது மிகுந்த துயரம் அளிப்பதாக கூறுகிறார்கள்.

அடிகளாரை ஒரு குருவாகவே அவர்களது குடும்பத்தினர் பார்க்கவில்லை என்பதுதான் வேதனையை அதிகப்படுத்திவிட்டது என்கிறார்கள் அடிகளாரோடு ஆன்மிக பயணத்தில் ஒன்றாக பயனித்த சித்தர் பீடநிர்வாகிகள்.

ஆன்மிக குருவுக்கு நடப்பது போல எந்தவொரு சடங்கும் நடைபெறவில்லை. சாதிய கட்டமைப்பிற்குள் இருக்கும் சடங்கள்தான் அடிகாளருக்கு நடைபெற்றது. பேரன், பேத்திகளை உடன் வைத்து கொண்டு நடத்தப்பட்ட சடங்குகளால், 50 ஆண்களுக்கு மேலாக அடிகாளருடன் பயணித்த சித்தர் பீட நிர்வாகிகளை புறம் தள்ளியது வேதனைப்பட கூடிய ஒன்று என்கிறார்கள்.

சமாதி பூஜையிலும் கூட குடும்ப உறவுகளின் ஆதிக்கம் தான் இருந்தது. மறைந்த மூன்றாவது நாள் கூட ஆன்மிக குருவுக்கு நடைபெறும் பூஜைகள் நடைபெறாமல் பால் தெளிக்கும் வகையிலான சாதி சடங்குகள் தான் நடைபெற்றன.

அடிகளாரின் உயிர் பிரிந்த மூன்றாவது நாள் அன்றே, யார் பெரியவர் என்ற போட்டி, அடிகளாரின் பிள்ளைகளிடம் தலை தூக்கியது மிகுந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்று வேதனைப்படுகிறார்கள் சித்தர் பீடத்தின் மூதத நிர்வாகிகள்.

3 ஆம் நாள் செந்தில்குமார் தனியாக பூஜை செய்ய, அன்பழகன் தனது குடும்பத்தினருடன் வந்து பூஜை செய்வதை பார்த்து ஒட்டுமொத்த பக்தர்களும் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள் என்கிறார்கள்.

3 ஆம் நாள் பூஜையை லட்சுமி அம்மாள் தலைமையில் ஒட்டுமொத்த குடும்பமும் முன்நின்று, செவ்வாடை பக்தர்களை ஒருங்கிணைந்து, ஒரு மணிநேரத்திற்கு மேற்பட்ட வழிபாடாக மாற்றியிருக்க வேண்டும் என்பதே சித்தர் பீடத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் வேண்டுதலாக  இருந்தது என்கிறார்கள். 

அடிகளாரின் சமாதிக்கு நடைபெற்ற முதல் நாள் பூஜையிலேயே செந்தில்குமாருக்கும் அன்பழகனுக்கும் இடையே இருக்கும் பங்காளிச் சண்டை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இனி வரும் நாட்களில் மேல்மருவத்தூர் கோயிலை நிர்வகிப்பதில் யாருக்கு உரிமை இருக்கிறது என்பதில் செந்தில்குமாரும், அன்பழகனும் நேருக்கு நேர் மோதிக் கொள்வார்களோ என்ற அச்சம் எழுந்திருப்பதாக கவலையோடு கூறுகிறார்கள் அடிகளாரின் உண்மையான சீடர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *