Sun. Dec 3rd, 2023

சுமந்த் ராமன்..

ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர், தொலைக்காட்சி விவாதங்களிலும் பெரும்பாலும் பங்கேற்கும் போது நடுநிலையோடு பேசிவருவதாக அவரது நலம் விரும்பிகள் கூறுவது உண்டு. இருப்பினும் திராவிட சித்தாந்தவாதிகள் சுமந்த் ராமனை பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் என்றே விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சுமந்த் ராமனின் பின்னணியை குறிப்பிட்டும் அவரை வலதுசாரி என்றும் கடுமையாக விமர்சனம் செய்பவர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் அதிகமாகவே பார்க்க முடிகிறது.

சுமந்த்  ராமனை அவமானப்படுத்துவதிலும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதிலும் முன்னணியில் இருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி வன்னி அரசு.

சுமந்த் ராமன் பங்கேற்கும் விவாதங்களில் வன்னி அரசும் கலந்து கொண்டால், இருவரும் நேருக்கு நேராக அடித்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருவருமே சூடாக கருத்துகளை முன் வைப்பார்கள். ஆனால், கடந்த சில தொலைக்காட்சி விவாதங்களின் போது, சுமந்த் ராமனையே கடுமையாக கோபம் செய்து கொள்ளும் வகையில் வன்னி அரசு படுகேவலமாக சுமந்த ராமனை பேசி வருகிறார். தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க கூடாது என்று நெறியாளர்கள் அறிவுறுத்தினாலும் கூட ஆவேசமாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் வன்னி அரசு, தன் இயல்பில் இருந்து விடுபட முடியாமல் சுமந்த் ராமனை மரியாதைக்குறைவாக  பேசுவதுடன் நீ ஒரு சங்கி என்று சுமந்த்  ராமனை ஒருமையிலும் வசை பாடுகிறார் என்றும் பிஜேபியை ஆதரிப்பவர்கள் அனைவரையும் பிராமனர்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே அந்த சமூகத்தையும் தரக்குறைவாக பேசுகிறார் என்கிறார்கள்.

வன்னி அரசு பங்கேற்கும் தொலைக்காட்சி விவாதங்களில் தயவு செய்து தன்னை அழைக்காதீர்கள் என்று கெஞ்சாத குறையாக சுமந்த் ராமன் கூறுவதையும் கூட விவாத நேரங்களில் பார்க்க முடிகிறது. தன்னுடைய பாதுகாப்பின் காரணமோ அல்லது நேரமின்மையின் காரணமாகவோ சுமந்த்  ராமன் பெரும்பாலான நேரங்களில் தமது இல்லத்தில் இருந்தே காணொளி வாயிலாகவே  தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பார்வையாளர்களின் மனதில், சுமந்த் ராமன் தீவிர பிஜேபி ஆதரவாளர் என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த பின்னணியோடு சுமந்த்  ராமனை அணுகுபவர்கள் அவர் நடுநிலையோடு பாரதிய ஜனதாவையும் அதன் தவறுகளையும் கூட பல நேரங்களில் துணிந்தே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்ற சுமந்த்  ராமனின் மறுபக்கத்தை இருட்டுக்குள் வைத்து விடுகிறார்கள் என்பது அவரது நலம் விரும்பிகளின் வருத்தமாக இருந்து கொண்டிருக்கிறது.

டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்ளில் சுமந்த்  ராமன் இடைவிடாது செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் குறித்து கடந்த சில நாட்களாக சுமந்த் ராமன் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ளாமல் கடந்த காலங்களில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் வரலாற்று பின்னணி போன்றவற்றையும் கூட சுமந்த்  ராமன் பகிர்ந்து கொண்டே வருகிறார். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை காலை சுமந்த்  ராமன், எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இஸ்ரேல் அரசு மீது குற்றம் சாட்டும் வகையில் தகவல்களை பகிர்ந்துள்ள சுமந்த் சி ராமன், இந்திய ஊடகங்கள் இஸ்ரேலில், ராணுவ பாதுகாப்புடன்  அமர்ந்து கொண்டு ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் சுமந்த் ராமன். நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஊடகங்கள், இஸ்ரேலிய அரசு வாரி இறைக்கும் பணத்திற்கு அடிமையாகிவிட்டது என்பதும் அவரது குற்றச்சாட்டாக இருக்கிறது. ஊடக தர்மத்திற்கு எதிராக இந்திய ஊடகங்கள், இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவாக நின்று கொண்டிருக்கும் நேரத்தில், இஸ்ரேலிலில் உள்ள ஊடகங்கள், காஸா  மீதான ஏவுகனை தாக்குதல்களை கடுமையாக கண்டித்து கொண்டிருக்கின்றன என்றும் சுமந்த் ராமன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹமாஸ் படையே இஸ்ரோல் ராணுவமே அப்பாவி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் என்றும் போர்க்குற்றம் என்றும் கடுமையாக இஸ்ரேலிய ஊடகங்கள் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் சுமந்த்  ராமன்.

இந்திய அரசும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன. ஹமாஸ் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றும் பங்கரவாத இயக்கத்தை முழுமையாக அழிப்பதற்கு ஜனநாயகத்தை போற்றும் உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று மத்திய பாஜக அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்திருக்கிறார். பிரதமர் மோடியின் நிலைப்பாட்டையும் இந்திய அரசின் ஆதரவையும் உலகெங்கும் வாழும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் முழுமனதோடு ஆதரிக்கிறார்கள். அதுபோலவே, இஸ்ரேலும் யூதர்களும் இந்தியாவை போல பழங்கால பாரம்பரியவர்கள் கொண்டவர்கள் என்றும் பிரதமர் மோடியின் ஆன்ம சக்தி தான் இஸ்ரேலிய மக்களுக்கு வலிமையை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் ஆதரவுக்கான காரணங்களை பட்டியலிட்டு, உலகளவில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவில் பாரதிய ஜனதா ஆதரவு நிலையை கொண்டிருப்பவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கும் போது, முழு சங்கியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சுந்தர் சி ராமன், போர்க்குற்றத்தில் இஸ்ரேல் ஈடுபடுகிறது என்றும் அதை விட கடுமையாக இஸ்லாமிய மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் வகையில் காஸா நகரை தரைமட்டும் வகையில் இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டது என்றும் கடுமையாக குற்றம் சாட்டியிருகிக்கிறார் சுமந்த் சி ராமன்.

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சுமந்த் சி ராமனே பொங்கியெழுந்துள்ள நேரத்தில், அவரின் மனவுணர்வுகளை வழக்கம் போல கிண்டலும் கேலியும் செய்து, அவரது எக்ஸ் தள பதிவுக்கு ஏராளமானோர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சுமந்த் சி ராமனின் சூடான கருத்துக்கு சரி பாதியாக ஆதரவும் எதிரான கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகிறது.

உலகம், செல்போனுக்குள் அடக்கி விட்ட நேரத்தில், கருத்து கந்தசாமிகள் அதிகமாகிவிட்டார்கள் என்பதுதான் துயரம் தரக் கூடிய ஒன்றாகும். கடந்த கால வரலாற்றுகளை தெரிந்து கொள்ளாமல், சொந்த மண்ணின் மீது உள்ள உரிமைகளை பற்றிய தன்மான உணர்வும் இல்லாதவர்கள் நிறைந்துவிட்ட இன்றைய தேதியில், உண்மை யார் பக்கம் இருக்கிறது என்பதை கூட அறிந்து கொள்வதற்கு எளியவர்களுக்கு சிரமமான ஒன்றாக மாறிவிட்டது.

ஒருவகையில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்று உண்டு என்றால், இலங்கை மண்ணில் சிங்கள ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்தொழித்த போது சிங்கள ராணுவத்திற்கு எதிராக உலகளவில் பரவலாக கண்டனங்கள் எழவில்லை. ஆனால், ஹமாஸ் படையை பயங்கரவாத அமைப்பு என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முத்திரை குத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் குரல்கள் எழுந்து கொண்டிருப்பது நிம்மதி தரக் கூடிய ஒன்றுதான்.

இந்திய திருநாட்டை பொறுத்தவரை

ஆட்சியாளர்களுக்கு அணுசரணையாக எப்போதுமே இருப்பவர்கள் கூட மனித குலத்தின் மீதான மோசமான தாக்குதல்கள் நடத்தும் போது நாடு, மதம், தனிப்பட்ட விரோதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தராமல்,  ஜனநாயகத்தை காப்பதற்காக குரல் கொடுக்கும் போது, முன்வரிசைக்கு வரும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் தமிழர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் மாண்பு என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் சுமந்த் சி ராமனின் கருத்தும்,அவருக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதே வரவேற்புக்குரிய ஒன்றுதான்.

இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்கள் உள்நாட்டில் தான் சார்பு நிலைகளால் அவமானப்பட்டு கொண்டிருந்தன. இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் பன்னாட்டு சமூகத்தினரிடமும் அவமானப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலையளிக்க கூடிய ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *