இந்தியாவின் பன்முகத் தன்மையை திமுக போற்றுவதை போல, நாடு தழுவிய தேசிய கட்சிகளிடம் கூட பரந்த மனப்பான்மை கிடையாது.
திமுக அரசியல் வரலாற்றில், சமூக அக்கறையோடு முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடுகள், சமூக நீதியை, சுயமரியாதையை, மாநில சுயாட்சியை உரத்த குரலோடு முன்வைப்பதன் காரணமாக, இந்தியாவின் முழு பார்வையும் எப்போதுமே தமிழ்நாட்டின் மீது படர செய்து விடுகிறது.
1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியவரும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேலைநாடுகளின் அறிஞர்களுக்கு இணையான அறிவாற்றலை வெளிப்படுத்தியவருமான பேரறிஞர் அண்ணாவின் தலைமையின் தளபதிகளாக வீறுநடை போட்டஅத்தனை பிரபலங்களுமே சுயமரியாதை, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் திமுக வலுவாக காலுன்றிய பிறகுதான், தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
திமுகவின் முன்னணி தலைவர்கள் மட்டுமல்ல, அடிமட்ட தொண்டர்களும் கூட பகுத்தறிந்து பேசுவதற்கும், தன்மான உணர்வை வெளிப்படுத்துவதற்கும் சமூக நீதியை ஆராதிப்பதற்கும் விசாலமான சிந்தனைப் போக்கும், மானுடத்தை போற்றும் மனிதநேயத்தையும் பெற்றார்கள் என்பது தான் வரலாறு காட்டும் கல்வெட்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தினரை உள்ளடக்கி அனைத்து மதத்தினருக்கும் அவரவரை உற்சாகம் கொள்ள செய்ய விழாக்கள், ஆண்டுதோறும் கொண்டாட்டப்பட்டு வருகின்றன. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அக்கட்சி முன்னெடுக்கும் மாநில மாநாடுகள் தான் மகத்தான, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மகிழ்ச்சியை தரும் விழாவாக அமைந்திருக்கின்றன.
பேரறிஞர் அண்ணா தலைமையிலும் சரி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலும் சரி, திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலும் சரி 75 ஆண்டு கால திமுக வரலாற்றில், உலகமே வியந்து போகும் அளவுக்கு திமுக மாநாடுகள் அமைந்திருப்பதுதான், திராவிட சித்தாந்தவாதிகளுக்கு மட்டுமல்ல, திமுக நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள், பற்றாளர்கள், ஆதரவாளர்கள் என தமிழர் என்ற உணர்வோடு வாழ்நது கொண்டிருக்கும் சாதியை கடந்த, மதத்தை கடந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் பேரின்பம் தரும் விழா கொண்டாட்டமாகும்.
அந்த வரிசையில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வி கனிமொழி கருணாநிதி எம்பியின் சீரிய முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் உரிமை மாநாடு, இதுகாறும் இல்லாத வரலாற்று சிறப்பை பெற்றிருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது புதல்வியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு தமிழ் மக்களுக்கு நன்கு அறிந்தவர்கள். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவரும் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதுமே அளவு கடந்த அன்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சோனியாவின் மறுபாதியும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியை தமிழ் மண்ணில் ரத்தமும் கிழித்தெறிய உடலுமாக பார்த்தவர்கள் சோனியா காந்தியும், அவர்களது மகளுமான பிரியங்கா. காந்தியும் தான். இளம் வயதில், அழகான அன்பான கணவரை பறிகொடுத்த சோனியா காந்தி, தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை அந்த துயரமான நிகழ்வில் இருந்து மீளவே முடியாது. அவரை விட மிகவும் பரிதாபத்திற்குரியவர் பிரியங்கா காந்திதான். பெண் குழந்தைகளுக்கு தந்தை தான் சொர்க்கலோகம். குழந்தை பருவம் முடிந்து ஒரு குடும்பத்தின் தலைவியாக, தாயாக மாறிய பின்பும் கூட தந்தை இல்லை என்பதை ஜீரணிககவே முடியாது.
தமிழ் மண்ணில் ரத்த சகதியாய் கிடைத்த ராஜிவ் காந்தியை சோனியாவும் பிரியங்கா காந்தியும் பார்த்த நொடியாகட்டும், அதன் பிறகு 33 ஆண்டுகள் தமிழகத்திற்கு பலமுறை பயணம் மேற்கொண்ட காலமாக இருந்தாலும் கூட, சோனியாவிற்கும் பிரியங்கா காந்திக்கும் ராஜிவ் காந்தியின் சின்னபின்னமான உடல், எப்போதும் கண்களை விட்டும் அகலாது. மனதை அழுத்திக் கொண்டிருக்கும் சோகமும் தீராது.
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் ராஜிவ் காந்தி என்ற குற்றச்சாட்டை போல, புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர் ராஜிவ் காந்தி என்ற குமறலும் சோனியா, பிரியங்காவிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட மனநிலையிலும் கூட தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் சோனியாவும், பிரியங்காவும் தமிழ் மக்களின்பண்பாட்டை வியத்து பாராட்டாமல் டெல்லிக்கு திரும்பியதே இல்லை.
திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சோனியாவும், பிரியங்காவும், கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்களை நினைவுக்கூர்ந்ததுடன், ஏழை எளிய, நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம், இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பதை பெருமிதத்துடன் கூறினார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரவியிருக்கும் உயர்சாதியினர் ஒரே ஒருமுறை உச்சரிப்பதற்கு கூட கூச்சப்படும் வார்த்தையை, பிரியங்கா காந்தி உரக்க கூறியதுடன் தனிமனிதராக தன் ஆயுட்காலம் முழுவதும் பெண் விடுதலைக்காக உழைத்து வந்ததை விரிவாக எடுத்துரைத்து தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய மரியாதையை செலுத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் சரத்பவாரின் புதல்வியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, மாநில சுயாட்சி கொள்கையை உயிர்மூச்சாக கொண்டிருக்கும் திமுகவின் வழியில் இன்றைக்கு வடமாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளும் முழக்கங்களை எழுப்பி வருவதை சுட்டிகாட்டினார். ஜனநாயகத்தை காப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்று அறைகூவல் விடுத்தார் சுப்ரியா சுலே. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, தற்போதைய மத்திய பாஜக அரசால் சிறை வைக்கப்பட்டவர். மாநிலத்தின் உரிமைகளை பறிக்கப்படுவதற்கு எதிராக ஆவேசக் குரல் எழுப்பிய முஃப்தி, அரசியலில் ஆர்வம் காட்டும் அனைத்துப் பெண்களுக்கும் வழிகாட்டியாக இருப்பவர்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய பலம் பொருந்திய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் முன்னாள் எம்பி சுஷ்மிதா தேவும், தமிழகத்தைப் போலவே, மாநில உரிமைகளுக்கு மேற்கு வங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக ஆட்சியை எந்நேரமும் வீழ்த்துவதற்காக பொதுமக்களை அணி திரட்டிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்பியுமான டிம்பிள் யாதவ், பீகார் உணவுத்துறை அமைச்சர் லேஷி சிங், டெல்லி சட்டப்பேரவை துணைத்தலைவர் ராக்கி பிர்லா, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளர் ஆனி ராஜா என வடமாநிலங்களில் மிகுந்த செல்வாக்கு படைத்த பெண் தலைவர்கள் கலந்து கொண்டு, திமுகவின் கொள்கைகளை இன்றைக்கு இந்தியாவே பின்பற்ற தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை இப்போதுதான் வடமாநிலங்கள் கவனிக்கவே தொடங்கியிருக்கின்றன என்று உண்மையை போட்டு உடைத்தார்கள்.
பண்பாட்டில் மட்டுமல்ல, கல்வி, வேலைவாய்ப்பு, ஆட்சி நிர்வாகம் பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தமிழ்நாட்டில் போட்டி போட்டுகொண்டு வெற்றி முகட்டில் ஏறுவதற்கான வாய்ப்பை தமிழகத்தில் திராவிட ஆட்சிகள் உருவாக்கி தந்திருப்பதை வட இந்திய பெண் தலைவர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள்.
திமுக மகளிர் மாநாடாக இருந்தாலும் கூட, டெல்லி, மகாராஷ்டிரம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் என அரசியல் விழிப்புணர்பு பெற்ற மாநிலங்களில் இருந்து செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள், தமிழ்நாட்டிற்கு வந்து, ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக திமுகவோடு இணைந்து ஓங்கி குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதை அழுத்தம் திருத்தமாக முன் வைத்தார்கள்.
இப்படி வட மாநிலங்களிலும் திமுகவின் சிந்தனைப்போக்கிற்கு ஏற்ப தலைவர்கள் பயணப்பட தொடங்கி விட்டார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது திமுக மகளிர் மாநில மாநாடு.
இதுபோன்ற ஒரு மாநாட்டை இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவோ அல்லது, மத்திய பாஜக அரசால் ஏற்பாடு செய்திட முடியுமா..
திமுகவிற்கு இணையாக மாநாடு நடத்தும் சக்தி அதிமுகவிற்கு இருந்தாலும் கூட, மாநில சுயாட்சியிலும், தன் மான உணர்விலும் வேட்கை கொண்ட வடஇந்திய அரசியல் கட்சித் தலைவர்களை மேடையேற்றி முழங்க வைத்துவிடும் ஆளுமை அதிமுக தலைவர்களுக்கு இருக்கிறதா.. என்றால், சின்ன குழந்தை கூட சொல்லி விடும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்த பிறகும் கூட மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்ய ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என்று கூறிவிடும்.
திமுகவுக்கு போட்டியாக, அகில இந்திய பாரதிய ஜனதா கடசியின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை மாநாட்டை கூட்டினால், மதவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தான் அதிகமாக பங்கேற்பார்கள். அவர்களுக்கு பெரியாரையும் தெரியாது. பெண்கள் விடுதலைக்காக மட்டுமல்ல,இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்த தமிழக பெண் தலைவர்களின் வரலாறும் சுத்தமாக தெரியாது.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இல்லாத துணிச்சல் எப்போதுமே திமுகவிற்கு உண்டு. மாநில சுயாட்சி, சுயமரியாதை சமூக நீதி போன்றவற்றை திமுக மேடைகளில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும். வடமாநிலங்களில் பிற்போக்குவாதிகளாக இருக்கும் தலைவர்களை கூட, திராவிட சித்தாந்தங்களுக்கு இழுக்கும் ஆற்றல் திமுகவிற்கு இருந்து கொண்டிருப்பதால்தான், திமுகவிற்கு எதிராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் கூட பொருட்படுத்தாமல், திமுகவை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து கொள்வதற்கு, அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழக மக்கள் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.