Sun. Dec 3rd, 2023

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் உறுதி காட்டி வரும்  திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களை விரட்டி கொண்டிருக்கிறார். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பலத்த சரிவை கொடுத்ததைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மிகுந்த கவலையோடு கூறுகிறார்கள் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த திமுக முன்னணி தலைவர்கள்.

எதிர்க்கட்சியாக திமுக இருந்தவரை அடக்கி வாசித்த மாவட்ட நிர்வாகிகள், திராவிட மாடல் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக சொத்துகளை குவிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்று குமறுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், மக்கள் சேவையை நேர்மையாக ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பதவியே வகிக்காத அடிமட்ட தொண்டர்களுக்கு கூட உயர்ந்த பதவிகளை வாரி வழங்கினார்.

தொண்டர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த திமுக தலைமைக்கு துளியும் விசுவாசம் இன்றி, ஆட்சியைப் பயன்படுத்தி ஊழலிலும் முறைகேடுகளிலும் துளியளவு அச்சமும் இன்றி துணிந்தே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக முன்னோடிகளின் புலம்பல்களாக உள்ளன.

அதுவும் கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி, திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான திமுகவினரின் ஆவேசமாக இருக்கிறது. கோவை நகரத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளின் கோபமும் மேயர் கல்பனாவிற்கு எதிராக இருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். 

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் கல்பனாவை, கோவை மாநகராட்சி மேயராக்கியது திமுக தலைமை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுபாட்டின் கீழ் இருந்த வரை அடக்க ஒடுக்கமாகவே இருந்து வந்தார் கல்பனா. பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு, கல்பனாவும் அவரது கணவர்  ஆனந்தகுமாரும் யாருக்கும் கட்டுப்படாமல் மேயர் பதவியை பயன்படுத்தி சட்டத்திற்கு விரோதமாக சொத்துகளை குவிப்பதில் குறியாக இருந்து வருவதாக கோவை மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகளே மனம் வெதும்பி கூறுகிறார்கள். 

மக்கள் சேவையில் துளியும் அக்கறையின்றி ஒவ்வொரு வார்டிலும் மாநகராட்சி நிதியின் மூலம் நிறைவேற்றப்படுகிற திட்டங்களுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷனை கறாராக வசூலித்து கொண்டிருக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாக குறறம் சாட்டுகிறார்கள் ஒப்பந்ததாரர்கள். கமிஷன் பணத்தை கொடுத்தால்தான் ஒப்பந்தமே கிடைக்கிறது. கமிஷன் பணத்தை கொடுப்பதற்கு தாமதம் செய்தால், ஒப்பந்தத்தையே ரத்து செய்து விடுகிறார் மேயர் கல்பனா என்பதும் ஒப்பந்ததாரர்களின் மனக்குமறலாக இருக்கிறது. தீபாவளி நிதி வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மாநகராட்சி கான்ட்டிராக்டர்களை மிரட்டி கமிஷன் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் மேயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கோவை மாநகர் முழுவதும் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.

திமுக மேயர் கல்பனாவின் சட்டவிரோத செயல்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதீப் ஐஏஎஸ் துணை போகாததால், இளம் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களை தூண்டி விட்டு உள்குத்து அரசியலையும் செய்து கொண்டிருக்கிறார் மேயர் கல்பனா என்று ஆவேசம் காட்டுகிறார்கள் திமுக பெண் கவுன்சிலர்கள். மேயருக்கும் மாநகராட்சி ஆணைருக்கும் இடையே எழுந்துள்ள முட்டல் மோதல்களால் மாநகராட்சி முழுவதும் மக்கள் நலப் பணிகள் முடங்கி போய்வுள்ளன என்றும் கவலையோடு கூறுகிறார்கள்.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை நிர்வகிக்கும் அமைச்சரான  கே.என்.நேருவின் அறிவுரைகளை கூட மேயர் கல்பனா உதாசீனப்படுத்தி வருவதால், கோவை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக முடங்கி போய்விட்டது என்று வருத்தப்படுகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.  மாதந்தோறும் நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக மேயர் கல்பனாவுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட திமுக கவுன்சிலர்கள்தான் அதிகமாக அடுக்கடுக்கான புகார்களை கூறுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் அவரது ஆதரவாளர்களும் நாள்தோறும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நேரத்தில் மேயர் கல்பனாவின் அதிகார வெறியால், மாநகராட்சி நிர்வாகம் சீரழித்து கொண்டிருப்பதால் மாநகர மக்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.  

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை பிரதான நோக்கமாக கொண்டு திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்தான், தெருவோர வணிகர்கள் முதல் மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் கமிஷனை கறாராக வசூலித்துக் கொண்டிருப்பதையே மேயர் கல்பனா முழுநேர பணியாக கொண்டிருப்பதால் கோவை மாநகரில் ஆளும்கட்சியான திமுகவின் செல்வாக்கு படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திமுக மேயர் கல்பனாவின் அதிகார வெறி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதால் , மாதந்தோறும் நடைபெறும் மாநகராட்சி கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே மேயரின் நிர்வாகத்தில் ஊழலும் முறைகேடும் தலைவிரித்தாடுகிறது என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை துணிந்தே முன்வைக்கிறார்கள். கல்பனாவை மேயர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு என்றும் திமுக கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் உண்மையை போட்டு உடைக்கிறார்கள்.

 மேயர் கல்பனாவிற்கு எதிராக நாள்தோறும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருபவர் மீனா லோகு. திமுக தலைமைக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மீனா லோகு, விளம்பர பிரியர் என்பதால், ஊடகங்களின் வெளிச்சம் தம் மீது எப்போதும் பட வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை என்று கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கோவை மாநகர திமுக மூத்த நிர்வாகிகள் வேதனையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

கல்பனாவிடம் இருந்து மேயர் பதவியை திமுக தலைமை பறித்தால், அந்த பதவியை கைப்பற்றும் நோக்கத்துடனேயே மீனா லோகுவும் ஒருபக்கம் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயைரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறுகிறார்கள் மீனா லோகுவின் ஆதரவாளர்கள்.

கல்பனாவும் மீனா லோகும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தான் கோவை மாநகர மக்களின் கணிப்பாக உள்ளது என்று கூறும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள், மீனா லோகுவின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளை ஆராய்ந்தால், திமுக உறுப்பினராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் மீனா லோகு என்பது உண்மையான திமுக தொண்டர்களின் ஆவேச குரல்களாக இருக்கும் என்று சுட்டி காட்டுகிறார்கள்.

மீனா லோகு, மாநகராட்சி கவுன்சிலரான இந்த இரண்டரை ஆண்டுகளில் 50 லட்சத்திற்கு மேல் முறைகேடாக சம்பாதித்து இருக்கிறார் என்று அவரது விசுவாசிகளே வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட கேவலமாக, மத்திய மண்டல தலைவர் பதவி வகித்து வரும் மீனா லோகு,  அவருக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தையே தனிப்பட்ட விருப்பத்திற்கும் பயன்படுத்தி  வருகிறார் என்று கண்கள் சிவக்க கூறுகிறார்கள்  திமுக இளைஞரணி நிர்வாகிகள்.  

கல்பனா மற்றும் மீனா லோகு ஆகியோரின் அன்றாட செயல்பாடுகள் மிகவும் கேவலமாக இருந்து வந்தாலும் கூட, இன்றைய தேதியில் மேயர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்ட கல்பனா மீதுதான் மூத்த திமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

கோவை மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகளும் கூட மேயர் கல்பனாவின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாகவே அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். மேயர் கல்பனாவும்  அவரது குடும்பத்தினரும் திமுகவின் வளர்ச்சிகாக ஒரு பைசா கூட செலவழித்தது கிடையாது. எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகள் திமுக இருந்த போது கட்சி தலைமை அறிவித்த போராட்டங்களில் முன்னெடுத்த திமுக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டால் கூட அவர்களையும் அவமரியாதை செய்கிறார் மேயர் கல்பனா.

மேயர் பதவிக்கான அதிகாரத்தால் தலை, கால் தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும் மேயர் கல்பனாவின் அடாவடிகளால் கோவை மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த திமுகவும் துவண்டு கிடக்கிறது.. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வரவில்லை என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை எம்பி தொகுதியை திமுக கைப்பற்றுவது கேள்விக்குறியாகிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த திமுகவின் அதிருப்தி குரல்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. அனைத்து மட்டத்திலும் இருந்து புகார்கள் குவிந்து வரும் நேரத்தில் உளவுத்துறையும் மேயர் கல்பனாவின் பகல் கொள்ளை குறித்து விரிவான அறிக்கையை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

மேயர் கல்பனாவின் ஒட்டுமொத்த வசூல் வேட்டையையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுள்ள உளவுத்துறை, கல்பனாவின் அடாவடி வசூல் வேட்டையால், திமுக கவுன்சிலர்களுக்குள் எழுந்த கொந்தளிப்பை அடக்குவதற்கு கோவைக்கே நேரில் சென்று பஞ்சாயத்து செய்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, திமுகவைச் சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா ஒரு லட்சமும் மண்டல தலைவர்களுக்கு சில லட்சங்களும் கொடுத்து மேயர் கல்பனாவுக்கு எதிரான உட்கட்சி கொந்தளிப்பை தற்காலிகமாக அடக்கி வைத்துள்ளார் என்பதும உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட் ஆகும். அதே ரிப்போர்ட்டில், அமைச்சர் முத்துசாமி வழங்கிய 5 லட்சம் ரூபாயை வெட்கம் கெட்டு மேயர் கல்பனாவும் கை நீட்டி பெற்றுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியிருப்பதுதான் படு கேவலமான ஒன்று என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.

கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து கல்பனாவை தூக்கி எறிந்துவிட்டு, புதிய மேயரை நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான முத்துசாமியும் கலந்து கொண்டு கல்பனா மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேயர் பதவியில் இருந்து கல்பனாவை மாற்றிவிட்டு புதிய மேயரை நியமிப்பது தொடர்பான ஆலோசனையில்  கோவையில் பிரபலமான மூன்று பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. திமுக பாரம்பரியத்தைச் சேர்ந்த மூவரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஒருவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவாக அறிவிப்பார் என்று அண்ணா அறிவாலய நிர்வாகிகள் உறுதிபட கூறுகிறார்கள்.

மேயர் பதவியில் இருந்து கல்பனாவை தூக்கி எறியும் முடிவுக்கு வந்துவிட்ட திமுக தலைமை, உளவுத்துறை கொடுத்த அறிக்கையின்படி, மண்டலத் தலைவர்கள் பதவியையும் பறிக்க தீர்மானித்துள்ளது. திமுக ஆட்சிக்கு அவப்பெயரை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மீனா லோகு உள்பட இரண்டு மூன்று பேரின் பதவியும் காலியாகும் என்று உறுதிபட கூறுகிறார்கள் திமுக மூத்த முன்னோடிகள்.

கோவை மேயர் பதவியில் புதியவரை அமர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்திருக்கிறார் என்ற தகவல் கசிந்தவுடன், அவரவர் சமுதாய பின்னணியோடு உள்ள கோவை திமுக பெண் கவுன்சிலர்கள், மேயர் பதவியில் அமர்ந்துவிட ரகசியமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் மேயர் ரேஸில் உள்ள செல்வாக்கு மிகுந்த பெண் கவுன்சிலர்கள் அவரவர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் ஆதரவை திரட்டுவதற்கு முழு மூச்சில் குதித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் திமுக தலைமைக்கு மிக மிக நெருக்கமான கோவை மாவட்ட தொழில் அதிபர்கள்.

தீபாவளி திருநாளில் கோவையின் புதிய மேயர் இல்லத்தில் வாண வேடிக்கைகள் தூள் கிளப்பும் என்பதுதான் கோவை மாநகர திமுக நிர்வாகிகளுக்கு உற்சாகம் தரும் செய்தியாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கையால் கோவை மாநகர மக்களுக்கு நிம்மதி பிறந்தால் மகிழ்ச்சியே என்று உற்சாகமாக கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *