Sat. Nov 23rd, 2024

டெல்லி பாஜக மேலிட தலைவர்களுக்கு எச்சரிக்கை..

நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்…

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்கி எறியுங்கள் என்று போர்க்குரல் எழுப்ப பாஜக நிர்வாகிகள் தயாராகி வருவதாக சூடான தகவல் ஒன்று நல்லரசுவுக்கு கிடைத்தது.

இதென்ன கலாட்டா என்ற வியப்பில் விசாரணைக்காக களத்தில் குதித்த போது அண்ணாமலைக்கு எதிரான ஆவேசக் குரல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் எதிரொலிக்க தொடங்கியிருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பது மாநிலம் முழுவதும் உள்ள இரண்டு கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ஆளும்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்து, ஓராண்டுக்கு மேல் அரசியல் நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர்களைப் போல  அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

நீதிமன்றங்களில் வழக்கு, சட்டப்போராட்டம், தேர்தல் ஆணையம் என பல அமைப்புகளுடன் முட்டி மோதி, அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் என்பதை நிரூபித்து பொதுச் செயலாளர் இடத்தை கெட்டியாக பற்றிக் கொண்டார் எடப்பாடியார்.

அதிமுகவுக்கு யார் தலைமை என்பதில் நீடித்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நேரத்தில், தோழமை கட்சியான அதிமுகவிற்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியாரையும், அக்கட்சியின் இதய தெய்வமான மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் கடுமையான விமர்சனம் செய்தார்.

அண்ணாமலையின் மாறுபட்ட அரசியலில், அதிமுக கட்சிக்குள் பூகம்பம் எழுந்தது. தலை முதல் பாதம் வரை அதிமுகவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக விமர்சனங்களை முன்வைத்து, அதிமுக தலைவர்களை கொந்தளிக்க வைத்தார்.

ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அதிமுகவும், பாரதிய ஜனதாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதைப் பார்த்து தேசிய சிந்தனையோட்டம் உள்ள அரசியலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு கட்சியின் தலைவர்களும் அக்னி வார்த்தைகளை உதிர்தது வந்த நேரத்தில், அதிமுக மற்றும் பாஜகவின் அடிமட்ட தொண்டர்கள், யாருக்கு எதிராக அரசியல் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது என்று தெரியாமல் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி போனார்கள்.

அதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்வதற்கு தயாரான அதிமுகவுக்கு, அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதற்கு பிறகான காலத்திலும் அண்ணாமலையின் புத்தியில் ஏற்பட்ட மாற்றத்தால், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைத்து தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். அதன் தலைவர்களையும் அச்சுறுவத்தவும் செய்தார் அண்ணாமலை.

ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல், தோழமை கட்சியான அதிமுகவை சிதைக்கும் வகையில் அண்ணாமலை முன்னெடுத்த அநாகிரிக அரசியலை, பாரதிய ஜனதாவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், குறிப்பாக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, கே.டி.ராகவன், கராத்தே தியாகராஜன், துரைசாமி உள்ளிட்டவர்கள் மனம் வெறுத்துப் போனார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலையை தவிர, அனைத்து தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே விரும்பினார்கள்.

தமிழ்நாடு பாரதி ய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர்கள் கூட்டம் என உட்கட்சிக்குள் எந்தவொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும், அண்ணாமலை முன்வைத்த கூட்டணி வியூகத்திற்கு எதிராகவே இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆலோசனைகளை கூறி வந்தார்கள்.

தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி.. தேர்தல் கால கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்ற விவகாரங்களில் எல்லாம் டெல்லி பாஜகு மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ  பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆணித்தரமாக வாதங்களை முன் வைத்தனர்.    

அரசியலிலும் தேர்தலிலும் மிகுந்த அனுபவம் கொண்ட பாஜக முன்னணி தலைவர்கள் கூறிய அறிவுரைகளை எல்லாம் உதாசீனப்படுத்தும் வகையில் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்ததால், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாமலையின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் அதிமுகவுக்கு தான் தேர்தல் நேரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உதயக்குமார் உள்ளிட்டவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.

அதிமுக மீதும் எடப்பாடியார் உள்ளிட்ட முன்னாள் அமைசசர்கள் மீதும் தீராத கோபத்தை கொண்டிருந்த அண்ணாமலை, எடப்பாடியார் உள்ளிட்ட அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.

அண்ணாமலையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், பாரதிய ஜனதாவுடனான தோழமையில் நீடித்திருப்பது அதிமுகவுக்கு தான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் டெல்லி பாஜக மேலிட தலைவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரிலேயே வலியுறுத்தினர்.

அதன் பிறகும் கூட, தமிழ்நாட்டில் அண்ணாமலையின் செயல்பாடுகளில் துளியும் மாற்றம் ஏற்படாததால், பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் அதிமுகவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் பலமாக எழுந்து கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட பின்னணியில், அக்டோபர் முதல் வாரத்தில் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழகம் திரும்பியுவுடன் கூட்டணி விவகாரம் குறித்து தெளிவான பதிலை கூறாததால், பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் விரக்தியடைந்துவிட்டனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியுடன் எதிர்கொண்டால்  5, 6 எம்பி தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு களமாடி வந்த பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அனைவரும் சோர்ந்து போனார்கள்.

அதிமுகவை விலக்கி வைத்துவிட்டு, பாரதிய ஜனதா தலைமையில் மக்கள் செல்வாக்கு இல்லாத சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ளவே மறுக்கிறார்.

அண்ணாமலையின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்றிருக்கிறது என்பது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் மூத்த தலைவர்கள், நாடாளுமன்றத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் அளவுக்கு எல்லாம் பாரதிய ஜனதாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துவிட வில்லை என்று விரக்தியோடு கூறுகிறார்கள்.

மாவட்ட தலைவர்களின் ஆலோசனைகளை அண்ணாமலை கேட்பதில்லை. மாநில நிர்வாகிகளின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துவதில்தான் அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார். பாரதிய ஜனதாவில் 20 ஆண்டுகளுக்குமேலான அனுபவம் உள்ள மூத்த தலைவர்களின் பேச்சையும் அண்ணாமலை காது கொடுத்து கேட்பதில்லை என்ற குமறல், மாநிலம் முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அதிகமாகி கொண்டே வருகிறது.

தனி மனிதரான அண்ணாமலையை நம்பிய பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. அக்னி பரிட்சை போல அண்ணாமலையின் பேச்சை கேட்டுக் கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமா என்று ஆவேசத்தை வெளிப்படுத்தும் தமிழக பாஜக முன்னணி தலைவர்கள், அரசியலில் சாதூர்யமாக செயல்படும் குணம் இல்லாத அண்ணாமலை என்ற ஒற்றை ஆளுக்காக, ஆயிரக்கணக்கான மூத்த நிர்வாகிகளின் வெறுப்பை டெல்லி பாஜக மேலிடம் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்ற அனல் கக்கும் கேள்வி கடந்த பல நாட்களாக தமிழக பாஜக தொண்டர்களிடம் இருந்து எழுந்து கொண்டிருக்கிறது.

மாவட்டந்தோறும் அண்ணாமலைக்கு எதிராக சூடாக கருத்துகளை பரிமாறிக் கொள்ள தொடங்கியிருக்கும் பாஜக நிர்வாகிகள், ஒட்டுமொத்தமாக அணி திரண்டு, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவும் தயாராகி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள்.

அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கியெறி வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றவும் ஆலோசித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆளும்கட்சியான திமுக பலமான கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வரும் நேரத்தில், திமுகவுக்கு எதிராக பலம் பொருந்திய அதிமுகவுடன் இணைந்து மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டதால்தான், தமிழக பாரதிய ஜனதாவுக்கு அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற வாதத்தை அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறார்கள் தேர்தல் கள அனுபவம் கொண்ட பாஜக முன்னணி நிர்வாகிகள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்திக்க நேரிட்டால்,  மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தாலும் கூட தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்காது என்கிறார்கள் பழுத்த பாஜக தலைவர்கள்.

கேவலமான தோல்வியை எதிர்கொண்ட பிறகு மேலும இரண்டு ஆண்டுகளுக்கு ஆளும்கட்சியான திமுகவை எதிர்தது அரசியல் செய்வதம், மிகவும் பலவீனமான நிலைமையில் 2026ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதும் தமிழ்நாடு பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அரசியல் தற்கொலைக்கு சமமானது என்று வேதனையோடு கூறுகிறார்கள் தமிழக பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகளிடம், தொண்டர்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபத்தை மேலும் மேலும் அதிகரிக்க செய்யாமல், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை உடனடியாக நீக்குவதற்கு அகில இந்திய பாஜக தலைவர்கள் முன்வர வேண்டும். அண்ணாமலையை இன்னும் சில மாதங்கள் அரசியல் செய்ய அனுமதித்தால், அடிமட்ட பாஜக தொண்டர்கள் முதல் பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் மிகவும் மனச்சோர்வுக்கு உள்ளாகிவிடுவார்கள். அரசியல் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும் என்ற விரக்தியில் வீதியில் இறங்கி பாஜக தொண்டர்கள், அண்ணாமலைக்கு எதிராக எதிர்ப்புக் குரலை எழுப்பினால், ஆளும்கட்சியான திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய பாஜக அரசின் மீதான அச்சம், முழுமையாக நீங்கி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரிகையாக கூறுகிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.

அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் எழுந்து கொண்டிருக்கும் கலகக் குரல், ஒட்டுமொத்தமாக ஒரே குரலாக ஒலிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஒற்றை மனிதராக நிற்கும் அண்ணாமலையின் அரசியல் அட்ராசிட்டி மேலும் மேலும் தொடருமா.. இல்லை. தமிழ்நாடு பாஜகவின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரை அண்ணாமலையை நீக்க கோரி எழுப் போகும் அதிருப்தி குரல்களுக்கு வெற்றி கிடைக்குமா..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.