Sat. Nov 23rd, 2024

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்த வெங்கையா நாயுடு, தமது ஓய்வுக்காலத்தை சென்னையில் தங்கியிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்ப வாரிசுகள், பல ஆண்டு காலம் சென்னைவாசிகளாகிவிட்டதால், தமது சொந்த மாநிலமான ஆந்திராவில் நிரந்தரவாசியாகாமல், சென்னை தேர்ந்தெடுக் கொண்டிருக்கிறார் வெங்கையா நாயுடு. பாரதிய ஜனதா கட்சிக்கு தமது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் வெங்கையா நாயுடு. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரின் அடிபற்றி பாரதிய ஜனதாவில் பயணித்த வெங்கையா நாயுடு, கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் உச்சத்தை தொட்டவர். அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியாகட்டும், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவியாகட்டும், திறமையாகவே உழைத்தவர் வெங்கையா நாயுடு என்று அவரது எதிர்முகாமில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களே வெங்கையா நாயுடுவை பாராட்டுகிறார்கள்.


பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரின் அன்பை பெற்றதை போலவே, அடுத்த தலைமுறை தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பேரன்பையும் பெற்றவர்தான் வெங்கையா நாயுடு. கட்சி தலைமையோ, ஆட்சி தலைமையோ எந்தவொரு கட்டளையை பிறப்பித்தாலும் கூட, அது தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமல் மேலிட கட்டளைக்கு அடிபணிந்து பணியாற்றியவர், சேவையாற்றியவர் வெங்கையா நாயுடு என்பதுதான் அவரது நலம் விரும்பிகள் கூறும் கணிப்பாக இருந்து வருகிறது
தாய் மொழியான தெலுங்கில் ஆழமான புலமை பெற்றிருப்பதை போலவே, ஆங்கிலத்திலும் நாயுடுவுக்கு அபார ஆற்றல் உண்டு என்பதை பல மேடைகளில், பன்னாட்டு கருத்தரங்குகளில் அவர் நிரூபித்து இருக்கிறார் அவர் பேசுகிற ஒரு வார்த்தை கூட வீணானது என்று ஒதுக்கி தள்ளுகிற மாதிரி எப்போதுமே அமைந்தது இல்லை. அடுக்குமொழியில் ஆங்கிலத்தில் அவர் உரையாற்றுவதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல அறிவார்ந்த கூட்டமும் கூட எப்போதுமே ரசிப்பது உண்டு.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அரசியல் பயணமாக இருந்தாலும் சரி, ஆட்சிப் பணியாக இருந்தாலும் சரி, அவரின் உழைப்பிற்கும் திறமைக்கும் பக்குவப்பட்ட பண்பிற்கும் முழு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றே அவரது ஆத்மார்த்தமான நண்பர்கள் மகிழ்ச்சியுடனே கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிறைகுடமாக இருந்தாலும் கூட அதிலும் சில துளிகள் குறை இருக்கும் என்பதற்காக ஒப்பாக, வெங்கையா நாயுடுவுக்கு ஓய்வுக் காலத்திற்கு முன்பாக சிறு வருத்தம் இருந்ததைப் போல, ஓய்வுக் காலத்திற்குப் பிறகும் கூட தமது அரசியல் வாழ்க்கை பயணத்தை தனக்கு அங்கீகாரத்தை கொடுத்த கட்சிக்கு பயன்படுத்த முடியாத நிலை எண்ணி வருத்தம் கொள்ளாத நாளே இல்லை என்று நாயுடுவை முழுமையாக புரிந்து கொண்டிருக்கும் அவரது நண்பர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.


இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு எந்தவொரு இழுக்கும் ஏற்படாத வகையில், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு முழுமையாக பணியாற்றிய போதும், பாரதிய ஜனதாவில் நீண்ட காலம் பயணித்த அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் ஆழ்மனது ஆசையான, குடியரசுத் தலைவர் பதவியும் தமது தியாகத்திற்கு உரிய பரிசாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு இருந்தவர் வெங்கையா நாயுடு. அவரின் துரதிர்ஷ்டம், பழங்குடியினத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பமும், 2023 ம் ஆண்டில் நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அரசியல் கணக்கும் முக்கியமானதாக இருந்ததால், வெங்கையா நாயுடுவுக்கு பதிலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை, பிரதமர் மோடி தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாகவே கூறுகிறார்கள் பாஜக மூத்த தலைவாகள்.


முர்முவின் தேர்வு, நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பிரதமர்மோடிக்கு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று தந்துவிட்டது. குடியரசு மாளிகையில் வசிக்க முடியாத ஏக்கத்துடன் சென்னை திரும்பிய வெங்கையா நாயுடு, அரசியலுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் முழு கவனத்தையும் செலுத்தி, தமது மனவருத்தத்தை போக்கி கொண்டிருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகள் குறித்து நாயுடுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பாஜக முன்னணி நிர்வாகிகள், உங்களின் அரசியல் அனுபவத்தை தமிழக பாஜக கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே என்று கூறுகிறபோது, அவரிடம் இருந்து சோகமான குரலில்தான் பதில்கள் கிடைக்கின்றன.
அகில இந்தியா பாரதிய ஜனதா கட்சிக்கு தலைமை ஏற்றிருப்பவரும், ஆட்சி பொறுப்புக்கு தலைமை வகிப்பவரும் தன்னை எந்தவிதத்திலும் பயன்படுத்திக் கொள்ள தயாராகவே இல்லை என்கிற எண்ணத்தை புரிந்து வைத்திருப்பவராக நாயுடு காட்சியளிப்பதாக கூறும் அவரது நெருங்கிய நண்பர்கள், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவை வளர்த்தெடுப்பதற்கும், தேர்தல் கால கூட்டணி சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்கும் நாயுடுவின் சாதூர்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து விடும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.


தமிழக பாரதிய ஜனதா தலைவர் கே.அண்ணாமலை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை போல, அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தைப் போல, நாயுடுவின் மீது நம்பிக்கை கொள்வதற்கோ, அதிகாரம் வழங்குவதற்கோ டெல்லி பாஜக மேலிடமும், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தயாராக இல்லை என்பது உணர்ந்து கொண்டவராக நாயுடு இருப்பதால்தான், நாளுக்கு நாள் அவரிடம் காணப்படும் உற்சாகம் குறைந்து கொண்டே வருகிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் அவரது நெருங்கிய அரசியல் நண்பர்கள்.