Sat. Nov 23rd, 2024

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக தலைவர்கள் அனல் கக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் அதிமுக தலைவர்கள் முக்காடு போட்டுக் கொண்டு நடமாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களை அடக்கி ஒடுக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இணைந்து திமுக அமைச்சர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. திமுகவில் தைரியமான அமைச்சர் என்று கூறப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை அமலாக்கத்துறை கதறவிட்டதை பார்த்து, ஆளும்கட்சி பிரமுகர்கள் கடும் மனஉளைச்சலில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக முன்னணி நிர்வாகிகளே புலம்பி வருகிறார்கள். அடுத்த கட்டமாக திமுகவின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீதும் குறி வைத்துள்ள மத்திய பாஜக அரசு,  ஆற்று மணல் விற்பனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை ஏவி, ஒட்டுமொத்த நீர்வளத்துறையையும் தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டது.

இப்படியாக, திமுக அரசை மத்திய பாஜக அரசு தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றமும் திமுக மூத்த அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை தூசி தட்டி எடுத்திருப்பதும், திமுக தலைவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

விசாரணை, சிறை போன்றவற்றுக்கு அஞ்சாத திமுகவின் முன்னணி அமைச்சர்களே கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நேரத்தில், மத்திய பாஜக அரசோடு எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், தன்மான உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையிலும்  சுயமரியாதை கொள்கையை நீர்த்து போக விடாமல் இருக்க,  திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற கணக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசை தொடர்ந்து பந்தாடி கொண்டிருக்கிறார்.

எந்த அம்பை வீசினால் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கிளர்ந்தெழுவார்களோ..  சனாதனத்தை ஒழிப்போம் என்று அம்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆவேசம் காட்டி கொண்டிருக்கிறார்.  உதயநிதியின் ஆவேசம் குறையாத அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நேருக்கு நேராக எதிர்கொண்டு தெறிக்க விடுகிறார் திமுக மாநில மகளிரணி தலைவரும் தூத்துக்குடி எம்பியுமான திருமதி கனிமொழி கருணாநிதி.

கலைஞர் மு.கருணாநிதியின் நேரடி வாரிசு என்ற அடிப்படையில் அறச்சீற்றத்தை திருமதி கனிமொழி கருணாநிதி வெளிப்படுத்துகிறார் என்றால், அவருக்கு இணையாகவே நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும் தென் சென்னை திமுக எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியனும், நாடாளுமன்றத்தில் அனல் கக்கும் வார்த்தைகளை உதிர்த்து மத்திய பாஜக அமைச்சர்களையும் மூத்த தலைவர்களையும் வியர்வையில் குளிக்க வைத்திருக்கிறார். திருமதி கனிமொழி கருணாநிதியின் சீற்றத்தையும் தமிழச்சி தங்கபாண்டியனின் அனல் கக்கும் பேச்சையும், திமுக முன்னணி நிர்வாகிகள், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை வீண் வம்புக்கு இழுப்பதை போல, முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திமுக எம்பிக்கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆளும்கட்சியான திமுகவின் திடீர் ஆவேசம், தமிழக அரசியல் களத்தை சூடாக்கி கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையிடம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெட்டி பாம்பாக அடங்கி கிடப்பதை பார்த்து ரத்தம் கொதிக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவை நாள்தோறும் குதறி எடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை. ஒரு கோடிக்கு மேல் தொண்டர்களை கொண்டுள்ளதாக கூறும் அதிமுகவில், ஒட்டுமொத்த தொண்டர்களின் இதய தெய்வங்களாக போற்றப்படும் மறைந்த முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா ஆகியோரை படு கேவலமாக பேசியிருக்கிறார் கே.அண்ணாமலை.

அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதை அகில இந்திய பாஜக தலைவர்கள் உறுதியளித்தது மட்டுமல்ல, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனது அருகில் அமர வைத்தும் முக்கியத்தும் கொடுத்திருந்த போதும், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகளை கே. அண்ணாமலை கிள்ளுக்கீரை போலதான் பேசி வருகிறார்.

அதிமுக அமைச்சர்களுக்கு எம்பி எம்எல்ஏக்களுக்கு முன்னணி தலைவர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் அமைச்சர் என்று கடுமையாக விமர்சனம் செய்து ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களையும் வெறுப்பு ஏற்றினார் கே.அண்ணாமலை. அன்றைய தேதியில் ஒட்டுமொத்த அதிமுகவும் பொங்கி எழுந்து கே.அண்ணாமலையை வறுத்தெடுத்தார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தங்களுக்கே உரிய பாணியில், கே. அண்ணாமலையை  நார் நாராக கிழித்து தொங்கப் போட்டார்கள். ஆனால், அதன் பிறகும் கூட அதிமுகவை அதன் மாபெரும் தலைவர்களை விமர்சனம் செய்வதை அண்ணாமலை கைவிட வில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவை பற்றியும் கடுச் சொற்களால் விமர்சனத்தை முன் வைத்தார் கே.அண்ணாமலை. பேரறிஞர் அண்ணாவைப் பற்றி உண்மைக்கு மாறான விமர்சனத்தை முனவைக்கிறார் கே.அண்ணாமலை என்று கடுமையாக கண்டனம் தெரிவித்த சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்தார்கள். சென்னை, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் எழுந்த எதிர்ப்புக் குரல் போல, மாநிலம் முழுவதும் கே.அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் ஆவேசமாக பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த அதிமுகவிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக ஆவேசம் காட்டி வந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பறந்து வந்த ரகசிய உத்தரவுததான் ஆடி போக வைத்திருக்கிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியே, மற்ற பாஜக தலைவர்களைப் பற்றியோ அதிமுக முன்னணி தலைவர்கள் யாரும் எதுவும் பேசக் கூடாது என இபிஎஸ் உத்தரவிட்டிருப்பதாக, நேற்று முதலாகவே காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அகில இந்திய பாஜக தலைவர்களை பார்த்து மட்டுமல்ல, தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலையை பார்த்து எடப்பாடி .ஏன் பயப்படுகிறார். பாஜகை விமர்சனம் செய்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்ந்து விடும் என்று கே.அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டியதை அடுத்து, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதுங்கிவிட்டார்களா.. என்று ஆவேசமாக கேள்வி கேட்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், புதுச்சேரியை உள்ளடக்கி 40 எம்பி தொகுதிகளையும் அறுவடை செய்வதற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் ஆளும்கட்சியான திமுக, முழு வீச்சில் பாஜகவை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு எதிரான மனநிலையை சூடு குறையாமல் பார்த்துக் கொள்கிறது ஆளும்கட்சியான திமுக.

சுயமரியாதை, தன்மான உணர்வு ஆகியவற்றை  முதன்மை கொள்கையாக வைத்து தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்களில்,  அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமின்றி தமிழ்நாட்டின் மாண்பை காக்கும் வகையிலும் பாஜகவை எதிர்க்கும் நேரத்தில், குட்ட குட்ட .குனியும் வகையில், ஒன்றறை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமான க்குகுத்தி குதறும் வகையில் நாள்தோறும் வசவுகளை வீசிக் கொண்டிருக்கிறார். அதிமுகவைப் பற்றி அகில இந்திய பாஜக தலைவர்களே குற்றம் கண்டுபிடித்து பேசாத நிலையில், அண்ணாமலை மட்டும் அதிமுகவையும் அதன் தலைவர்களையும் கீழ்தரமாக விமர்சனம் செய்வதை தடுத்து நிறுத்த எடப்பாடியாரால் ஏன் முடியவில்லை என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள். ஊருக்கு பத்து பேர் கூட இல்லாத நிலையில் ஊரில் பாஜக நிர்வாகிகள் நெஞ்சை நிமிர்த்தி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

34 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுமகட்சியாக திகழ்ந்த அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைய தேதியில் கே.அண்ணாமலையின் அடுத்தடுத்த விமர்சனத்தை கண்டு பொங்கி எழுந்தாலும் தலைமையின் உத்தரவால், மௌனமாகி பதுக்கி கிடப்பது படுகேவலமாக இருக்கிறது என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து கே. அண்ணாமலையை நீக்கினால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்ற நிபந்தனையை  எடப்பாடியாரால் ஏன் வைக்க முடியவில்லை என்று ஆவேசம் காட்டுகிறார்கள் எம்ஜிஆர் காலத்து அதிமுக நிர்வாகிகள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஊழல் புரிநதிருக்கிறார்கள். அவர்களின் முறைகேடுகள் அனைத்தும் மத்திய பாஜக அரசு வசம் இருக்கிறரு. இப்படிபட்ட நிலையில், அண்ணாமலையை எதிர்த்தாலோ, பாஜகவை எதிர்த்தாலோ எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குதான் சிக்கல் என்பதை உணர்ந்திருக்கும் அதிமுக முன்னணி நிர்வாகிகள், ஆயிரம் பேருக்காக, ஒட்டுமொத்த அதிமுகவையும் பாஜக காலடியில் அடகு வைப்பது நியாயமாக, எம்ஜிஆர் செல்வி ஜெயலலிதா ஆன்மா மன்னிக்குமா என கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முன்பு மட்டுமல்ல, தமிழ்நாடு பாஜக தலைவரான கே.அண்ணாமலை முன்பு கூட கம்பீரமாக நிற்க முடியாத அதிமுக தலைவர்களின் இன்றைய நிலையை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறோம் என்று புலம்புகிறாகள் உண்மையான அதிமுக தொண்டர்கள்.

பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு நிலையை கைவிடுவார் ஆனால் எடப்பாடியாரின் தலைமைப் பண்பு கேலிக்குரிய ஒன்றாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

என்ன செய்யப் போகிறார் எடப்பாடியார்..

.https://youtu.be/0U-9FDaNBYM?si=xqlsMwcgAH7pHVRL