Sun. Dec 3rd, 2023

அண்ணாமலை வாயை திறந்தாலே கூவம் போல நாறிப் போகிறது அதிமுக கூட்டணி.

அதிமுக தொண்டர்களின் இதயத்தெய்வமான மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலதாவை ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் என்று அரசியல் பண்பாட்டை பற்றி துளியும் கவலைப்படாமல் வசைப்பாடியவர் கே. அண்ணாமலை. அதிமுக கொடியில், கட்சி பெயரில் வீற்றிருக்கும் மறைந்த முதல்வர், திராவிட இயக்கத்தை அரசியல் பாதைக்கு கட்டமைத்த பேரறிஞர் அண்ணாவை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தவர் கே.அண்ணாமலை. அவர் தனி நபர் அல்ல. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுகவின் ஆதரவோடு எம்.பி., ஆகி, 2024 க்குப் பிறகு மத்தியில் அமையவுள்ள பாஜக அரசில் அமைச்சராகிவிடலாம் என்ற கனவோடு நடமாடிக் கொண்டிருக்கும் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு போன்ற பிரபலஙகளின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார் கே அண்ணாமலை. இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் தலைவராக நீடித்துக் கொண்டிருக்கும் கே. அண்ணாமலையைப் போல,  மிகவும் மோசமான ஒரு தலைவரை, தரம் கெட்ட அரசியல்வாதியை, முதிர்ச்சியற்ற ஒரு மனிதரை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இதுவரை பார்த்ததே இல்லை என்று பொங்குகிறார்கள் நீண்ட கால பாஜக நிர்வாகிகள்.

கே. அண்ணாமலைக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியில் பிராமணர்கள் ஓர் அணியாக திரண்டு நின்று, அவரை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபல நடிகர் எஸ்.வி. சேகர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையை காறி துப்புகிறார். அண்ணாமலையின் அறமற்ற அரசியலால் மனம் வெதும்பி போயிருக்கும் எஸ்.வி.சேகரைப் போல திரையுலகத்தைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமும் ஜென்ம எதிரி போல கே. அண்ணாமலையை ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வசை பாடி கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதாவிற்குள்ளாகவே அண்ணாமலைக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். அண்ணன் எப்போது மறைவார். திண்ணை எப்போது காலியாகும் என்பதை போல, தலைவர் பதவியில் இருந்து கே. அண்ணாமலையை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எப்போது தூக்கி எறிவார்கள் என்று பிரார்த்தனையில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்த்தெடுத்து, 2026 ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர வைப்பதுதான் தனது லடசியம் என்கிறார் கே. அண்ணாமலை.

கிளைக் கழகம், ஒன்றிய கழகம், மாவட்ட கழகம் என்ற கட்டமைப்பை பற்றி முழுமையாக தெரியாதவர்தான் கே. அண்ணாமலை. ஊருக்கு ஊர் அவரால் செட் அப் செய்யப்படும் மீடியா டீம் மற்றும் அடிவருடிகள், காசு செலவழித்து ஆயிரம் பேரை திரட்டி வந்து கூட்டத்தை காட்டுகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவைப் போல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைப் போல வலுவான கட்சி கட்டமைப்பை கட்டி எழுப்ப வக்கற்ற கே. அண்ணாமலை, திராவிட இயக்கங்களை வீழ்த்திவிட்டு, சனாதனத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வைப்பேன் என்று வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவை திட்டுகிறார். சனாதனத்தை உயிர் மூச்சு என்கிறார் அண்ணாமலை. இப்படியே பேசிக் கொண்டிருந்தால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட மிக, மிக குறைவான வாக்குகளை தான் தமிழ்நாடு பாஜகவுக்கு கிடைக்கும் என்ற உண்மை, ஐபிஎஸ் ஆபிசரான கே. அண்ணாமலையின் மண்டையில் உரைக்காமல் போனது எப்படி என்பதுதான் அவரை சுற்றியுள்ள பாஜக முன்னணி நிர்வாகிகளின் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

ஊழல் கட்சியான அதிமுகவுடன் தான் கூட்டணி என்று பாஜக மேலிடம் அறிவித்தால், ஒரு நிமிடம் கூட தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று முழங்கினார் அண்ணாமலை. ஆனால், இன்றைய தேதியில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று ஊடகங்கள் முன்பு கூறுகிறார். பைத்தியக்காரன் கூட இப்படியெல்லாம் பேச மாட்டான்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகிகளுமே அண்ணாமலைக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழக அரசியலில் பிரபலமான பெண் தலைவர் வானதி சீனிவாசனிடம் கூட அண்ணாமலைக்கு நல்ல நட்பு இல்லை. இத்தனைக்கும் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினர். பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியின் தேசிய தலைவர். பாஜக மேலிட தலைவர்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்றிருப்பவர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டமோ, மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டமோ,  எந்தவொரு ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும், அந்தக் கூட்டத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிவுரை கூறி வருபவர் வானதி சீனிவாசன். ஆனால், அவரை சிறுமைப்படுத்தும் விதமாகதான் பேசுகிறார். நடந்து கொள்கிறார் அண்ணாமலை என்று ஆவேசம் காட்டுகிறார்கள் பாஜக முன்னணி தலைவர்கள். வானதி சீனிவாசனைப் போலவே, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, கேசவ விநாயகம், கறுப்பு முருகானந்தம் உள்ளிட்ட எண்ணற்ற மூத்த பாஜக தலைவர்கள், அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகளை கண்டு மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் பரபரப்புக்காகவே அண்ணாமலை அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்படி.. மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு சுத்தமாக எதுவுமே தெரியாது. அரசியலில் கத்துக்குட்டியான கே. அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதை, அவருடன் நெருக்கமாக இருக்கும் பாஜக நிர்வாகிகளே ரசிக்கவில்லை.  தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவை காப்பற்ற வந்த ரட்சகன் மாதிரி அண்ணாமலையை சில யூ டியூப் சேனல்கள் பிரம்மாண்டப்படுத்துகின்றனவே தவிர, உண்மையிலேயே அண்ணாமலை தலைமை ஏற்ற பிறகு, மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சரிவு தான் ஏற்பட்டு இருக்கிறது என்று மனம் வெம்புகிறார்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் நிர்வாகியாக நீடித்துக் கொண்டிருக்கும் பழுத்த அரசியல்வாதிகள்.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா எனும் பெயரில் வலுவான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த கூட்டணியில், தமிழ்நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாநில முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் புகழ் பாடி கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் அறிவுரைகள் எல்லாம், மத்திய பாஜக அரசுக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்து வருகிறது என்று தேசிய ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் ஜென்ம எதிரியான திமுகவை, சித்தாந்த ரீதியாக எதிர்ப்பதற்கு பதிலாக, வெறும் பரபரப்பாகவே ஊழல் புகார் பட்டியல்களை வாசித்து சிறுபிள்ளைத்தனமான அரசியலை முன்னெடுக்கிறார் கே. அண்ணாமலை. ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக அண்ணாமலை முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாமே ஒரு சில நாட்களுக்கு உள்ளாகவே நீர்ந்து போய்விடுகிறது.

ஆனால், திமுக தலைவர், முதல்வரின் புதல்வருமான உதயநிதி ஸ்டாலின், ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டினாலோ, சனாதனத்தை ஒழிப்போம் என்று முழங்கினாலோ இந்திய தேசமே கிடுகிடுக்கிறது. உதயநிதி ஸ்டாலினைப் போல, அரசியலை கையாள வேண்டும். அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ளும் அளவுக்கு கூட அண்ணாமலையிடம் துப்பு இல்லையா என்று கிண்டலடிக்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.  அதிமுக முன்னணி தலைவர்கள் மேடையில் பேசும் பேச்சுகளை பூமராங் மாதிரி அவர்களையே திருப்பி தாக்கும் கலையை அழகாக கற்றிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள், எடப்பாடியார் சொன்னால் கிணற்றில் கூட குதிக்க தயங்கமாட்டோம் என்று எஸ்.பி. வேலுமணி பேசிய பேச்சை பற்றி திமுக மேடையில் கிண்டலாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை கேட்டு திமுகவினர் மட்டுமல்ல  அதிமுக தொண்டர்கள் கூட வாய் விட்டு சிரித்தார்கள். பாவம் வேலுமணி.. ஏற்கெனவே அதிமுக கிணற்றுக்குள் தான் கிடக்கிறது என்பதை தெரியாமல் பேசுகிறார் என்று பேசி, பொதுமக்களிடம் கூட பாரட்டுகளை பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

அதுபோலவே, மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசிய பேச்சில் இருந்து பல சொற்டொர்களை மேற்கோள் காட்டி, செல்லூர் ராஜுக்கே உதயநிதி வைத்த செக்கை பார்த்து, அதிமுக நிர்வாகிகளே வெகுவாக ரசித்தார்கள். சனாதனத்தை எல்லாம் அதிமுக ஒழித்து பல காலம் ஆகிவிட்டது என்று செல்லூர் ராஜு கூறியதை மேற்கோள் காட்டிய உதயநிதி ஸ்டாலின், அதிமுக முதலாளிகளான மோடியிடம், அமித்ஷாவிடம் நேரடியாக சொல்கிற தைரியும் செல்லூர் ராஜுக்கு படு சூடாகவே கேள்வி எழுப்பினார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினின் மேடை அரசியலும், அன்றாடும் செயல்பாடுகளும் திமுகவினரை எந்தளவுக்கு உற்சாகம் கொள்ள செய்கிறதோ அதே போல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களிடம், நிர்வாகிகளிடம் மிகவும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதை விட சிறப்பாக செய்தியாளர்களை சந்திக்கிற போது, எவ்வளவு கிடுக்குப்பிடியான கேள்வியாக இருந்தாலும் கூட ஒரு சில வார்த்தைகளில் பதிலளித்து, செய்தியாளர்களையே கலகலப்பாக்கி விடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

வெட்கத்தை விட்டு சொல்கிறோம்.. அண்ணாமலை திருந்த வேண்டும் என்றால் உதயநிதி ஸ்டாலினிடம் தான் அரசியல் கற்று கொள்ள வேண்டும். அவரிடம் காணப்படும் பக்குவம், சாமர்த்தியம், முதிர்ச்சி போன்ற எந்தவொரு நற்குணமும் அண்ணாமலையிடம் இல்லை என்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள் அண்ணாமலைக்காக விழுந்து விழுந்து விளம்பரங்களை செய்து கொண்டிருக்கும் பாஜக ஆதரவு ஊடகவியலாளர்கள். .

சபல புத்தி கொண்டவரைப் போல அண்ணாமலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசி, தமிழக பாஜகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் இழுக்கை தேடி தந்து கொண்டிருக்கிறார்.

பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் ஆளும்கட்சியான திமுக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சி அரசியலை கூட முழுமையாக செய்ய முடியாமல் அதிமுகவுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவலம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் வந்தது என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் அவருக்கு மிக மிக நெருக்கமான தலைமைக் கழக நிர்வாகிகள்.

2026 ல் பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறி வம்பு செய்யும் அண்ணாமலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதற்கு கூசும் அண்ணாமலையுடன் கை கோர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வாழ்வா சாவா என்ற போராட்டம் போல, அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜக கூட்டணியில் நீடிப்போம் என்று சுயமரியாதையோடு எடப்பாடி பழனிசாமி என்றைக்கு கூறுவாரோ என்று காத்திருக்கிறோம். மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை சிறுப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் அண்ணாமலை, தொடர்ந்து விமர்சனம் செய்ய அனுமதிப்பது  இருபெரும் தலைவர்களுக்கு செய்யும் துரோகம் என்று தெரியவில்லையா என்று எடப்பாடியாரை நோக்கி ஆவேசமாக கேள்விகளை வீசுகிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

பாஜக மேலிட தலைவர்களின் கண்டிப்பாமல் அண்ணாமலை திருந்தினாலும் கூட, அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *