Sun. Dec 3rd, 2023

தொண்டர்களிடம் எழுச்சி இல்லாததால் உற்சாகமிழக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்…

மதுரை அதிமுக மாநாட்டிற்குப் பின்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் காணப்படும் உற்சாகம் அபரிதமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

நிர்வாகிகளை சந்திப்பதை காட்டிலும் அடிமட்ட தொண்டர்களை நாள்தோறும் சந்திப்பதற்கு எடப்பாடியார் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது என்று மெய் சிலிர்க்கிறார்கள் இபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான வடமாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்த கதாநாயகர் ஓபிஎஸ் கொடுத்த டார்ச்சர்களையும் அதை விட பலமடங்கு அதிகமான டார்ச்சர்களை கொடுத்த டிடிவி தினகரனையும் சமாளித்து 4 ஆண்டுகள் முதல்வர் பதவியில் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்த எடப்பாடியாரை மிகமிக நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன் என்று கூறும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர், அப்போது அவரிடம் காணப்பட்ட சந்தோஷத்தை விட, உற்சாகத்தை விட தற்போது ஆயிரம் மடங்கு உற்சாகம் எடப்பாடியாரிடம் பார்க்க முடிகிறது என்று வான் அளவிற்கு புகழ்கிறார்.

அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், மூத்த தலைவர்கள், இயக்க முன்னோடிகள் என ஆயிரக்கணக்கானோர் எந்தநேரத்திலும் இபிஎஸ்ஸை சந்தித்து உரையாடலாம் என்ற நிலை இருந்த போதும், மக்கள் செல்வாக்கு இல்லாத எம்எல்ஏக்களை கூட இபிஎஸ் ஒருநாளும் காக்க வைதது அவமானப்படுத்தியது இல்லை. ஒன்றியம் அல்லது நகர அளவிலான அதிமுக நிர்வாகிகள் கூட கட்சிப் பிரச்னை அல்லது மக்கள் பிரச்னை அல்லது சொந்த பிரச்னையாக இருந்தாலும் கூட இபிஎஸ்ஸை சந்தித்து சில நிமிடங்கள் உரையாட முடியும் என்பதுதான் அதிசயமான ஒன்று.

இபிஎஸ்ஸை சந்திக்க வேண்டும என்றால் அவரது உதவியாளரிடம் கூறினால் போதும். யார் யாரெல்லாம் சந்திக்க விரும்புகிறார்கள் என்ற பட்டியலை பார்த்து, உடனடியாக நேரம் ஒதுக்குவதில் இபிஎஸ்ஸே முடிவு எடுக்கிறார். அவரை சுற்றி வெற்று பந்தா காட்டும் கூட்டமும் கிடையாது. நலம் விரும்பிகள், பாதுகாவலர்கள் என்ற போர்வையில் பந்தா காட்டும் கெடுபிடியும் கிடையாது.

அதிமுக தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் எப்போதுமே எளிமையாக இருப்பதையே விரும்புகிறார் எடப்பாடியார் என்பதை, விரும்பிய நேரங்களில் எல்லாம் அவரை சந்தித்து பேசி வரும் அதிமுக பிரமுகர்களை கேட்டால், வியப்பிற்குரிய பல தகவலகள் கிடைக்கும் என்கிறார்கள்.

கொங்கு மண்டலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார் என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் விமர்சனத்தை எல்லாம் மதுரை வெற்றி மாநாடு மூலம் முறியடித்து விட்டார் எடப்பாடியார் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் மதுரையைச் சேர்ந்த அதிமுக முன்னோடிகள்.

நான்காண்டு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை விட அதிமுக பொதுச் செயலாளர் என்ற அதிகாரமிக்க பதவி தான் எடப்பாடியாரை மிகவும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

பொதுச் செயலாளர் பதவிக்கு சிக்கல் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் என அனைத்துமே உறுதி செய்த பிறகு, எடப்பாடியாரிடம் ஏற்பட்ட மாற்றத்தை இதற்கு முன்பு இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

பொதுச் செயலாளர் என்ற அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி அதிமுக கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு பக்கம் படுவேகமாக காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடியார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே அதிர்ச்சியுடன் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே சமயம், ஆளும்கட்சியான திமுகவை எதிர்ப்பதற்கு முழு வீச்சில் களத்திற்கு வந்திருக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

சேலத்தில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி அல்லது வெளி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நேரமாக இருந்தாலும் கூட, அடிமட்ட தொண்டர்களை சந்திப்பதற்கு எடப்பாடியார் அதீத ஆர்வம் காட்டுகிறார். கிராம அளவிலான நிர்வாகிகள் கூட எந்தவித சிரமமும் இன்றி கெடுபிடியும் இன்றி எடப்பாடியாரை எளிதாக சந்தித்து விட முடியும் என்பதே அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை எளிதாக சந்தித்து விட முடியாது. பல தடைகளை தாண்டி தான் அவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவரை சுற்றி எப்போதுமே பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அல்லது ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் அவரை சுற்றி எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல தான் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா ஆகியோருடன் எப்போதுமே அடாவடி செய்யும் சிறு குழுவினர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதுபோன்ற கூட்டத்தை எடப்பாடியார் அருகில் பார்க்கவே முடியாது. அவருக்கு அரசு வழங்கியுள்ள காவல்துறையினர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஒரு போதும் அதிமுக தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ விரட்டியதே இல்லை. மரியாதை குறைவாக நடத்தியதே இல்லை.

எடப்பாடியாரிடம் காணப்படும் சிறப்பு குணங்களில் ஒன்றாக பார்ப்பது, தன்னை சுற்றி ஜால்ராக்களையோ, நந்திகளையோ ஒருபோதும் அண்ட விடுவதில்லை.

பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரம் உறுதிபடுத்தப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக காலம் நேரம் பார்க்காமல் தொண்டர்களை சந்தித்து வருகிறார் எடப்பாடியார். அதுபோலவே, முகூர்த்த நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வீடுகளில் நடக்கும் சுப காரியங்களுக்கும் சென்று வருகிறார்.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்வதற்கும் தயங்காத எடப்பாடியார், அதிமுக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், கொடியேற்று விழா என பம்பரமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஓய்வு இல்லாமல் இயங்கி கொண்டிருப்பதாலும், பல மணிநேரம் நின்று கொண்டே தொண்டர்களை, நிர்வாகிகளை சந்திப்பதால், கடந்த பல நாட்களாக மூட்டு வலியால் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார். சிறப்பு மருத்துவர்கள் முதல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரை, தொடர்ச்சியாக நிற்காதீர்கள் என்று அறிவுரை கூறினாலும் அதனை ஏற்று, ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு சேலத்திற்கும் சென்னைக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

மூட்டு வலியை காரணமாக கூறி தொண்டர்களை தவிர்க்க மனமில்லாமல், மருத்துவர்களின் அறிவுரையை மீறி, முழு உற்சாகமாக இடைவெளி இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

தமிழ்நாட்டில் இருந்தால் ஓய்வு கிடைக்காது என்பது ஒரு பக்கம் என்றால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பிரச்சாரத்திற்காக மாத கணக்கில் பயணிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் எடப்பாடியாரை வாட்டி கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான திமுகவின் செல்வாக்கை முழுமையாக தடுத்து நிறுத்த சூறாவளி பிரச்சாரத்திற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்கு முன்பாக அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத துவக்கத்தில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பயணத்திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம ஆகியவற்றுக்கு புதிய எழுச்சியுடன் களம் இறக்க வேண்டியிருப்பதால், அதற்கு முன்பாக தீராத வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்கா அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு செல்வது தொடர்பாக ஆலேசனையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

ஆனால், இன்றைய தேதியில் மூட்டு வலியை விட அதிகமான மனவலியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது, அதிமுக நிர்வாகிகளிடம் காணப்படும் உற்சாகம், அடிமட்ட தொண்டர்களிடம் காணப்படவில்லை என்பதுதான்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரை கண்டாலே காட்டு கூச்சல் போடும் தொண்டர்களைப் போல, உணர்ச்சிமிகுந்த, வெறிப்பிடித்த தொண்டர்களை பார்க்க முடியவே இல்லை என்பதுதான் எடப்பாடியாரின் மனதை வாட்டி வதைத்து வருகிறது.

மதுரை அதிமுக மாநாட்டில் ஆர்ப்பரித்து தொண்டர்கள் வந்த போதும் கூட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யும் போதோ, அதிமுக நிர்வாகிகளின் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கும் போதோ, வெறிப்பிடித்த அதிமுக தொண்டர்களை காண முடியாததால், பல நேரங்களில் சோகமாகிவிடுகிறார் எடப்பாடியார்.

ஆர்ப்பரிக்கும் தொண்டர்களாலும் வெறிப்பிடித்த அதிமுகவினரால் மட்டும்தான் அதிமுக எப்போதுமே உயிரோட்டமாக இருக்கும். எம்ஜிஆரை போல செல்வி ஜெயலலிதா போல கவர்ச்சிகரமான தலைவராக தானும் உயர வேண்டும் என்பதே எடப்பாடியாரின் தீராத தாகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈர்ப்பு சக்தியுள்ள தலைவராக தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார். அதற்கான முன்னோட்டமாகதான் ஆளும்கட்சியான திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் போர் பரணி பாடிக் கொண்டிருக்கிறார்.

இனி வரும் நாட்களில் ஆக்ரோஷம் மிகுந்த அதிமுக பொதுச் செயலாளரை ஆளும்கட்சியான திமுக எதிர்கொள்ளப் போகிறது என்று வீறாப்பு காட்டுகிறார்கள் எடப்பாடியாரின் தீவிர விசுவாசிகள்.

எடப்பாடியாரின் புதிய பாய்ச்சலை ஆளும்கட்சியான திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *