நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பாலியல் வன்முறை, திருமணம் செய்து கொள்வதை ஆசை காட்டி மோசடி, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி நடிகை விஜயலட்சுமி, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ள புகார் மனு மீது விசாரணை சூடுபிடித்துள்ளது.
சீமானுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக தீவிர போராட்டம் நடத்தி வரும் நடிகை விஜயலட்சுமிக்கு, வெளிப்படையாக எந்தவொரு அரசியல் கட்சியும் ஆதரவு கரம் நீட்டாத போது, முதல்முறையாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, சீமானை துணிந்து எதிர்க்கும் வகையில் நடிவை விஜயலட்சுமியுடன் கரம் கோர்த்தார்.
இருவருமே சீமான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி நெறியாளர் முக்தர் தலையீட்டால், விஜயலட்சுமியும் வீரலட்சுமியும் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி நிர்வாகி சங்கதமிழன், சீமானின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் சீமானை ஆளும்கட்சியான திமுக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சங்கதமிழன் வலியுறுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் அனுமதியில்லாமல் சீமானுக்கு எதிராக சங்கத்தமிழன் பேட்டி கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று குமறும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமான் விவகாரத்தில் தொல் திருமாவளவனின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
தமிழ் தேசியம் அமைப்பதில் உறுதியாக சீமான் இருப்பதை போலவே, திராவிட சித்தாந்தத்தில் சமரசம் இல்லாத நிலைப்பாட்டை கொண்டுள்ள தொல் திருமாவளவன், தமிழ் தேசியத்தில் பிராமணர்களுக்கும் பங்களிப்பு இருக்கிறது என்பதால், திராவிடத்தை வீழ்த்தினால், பிராமணர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கும் என விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த ஒற்றைப்புள்ளியில் தான் சீமானும் தொல் திருமாவளவனும் முரண்டுபட்டு எதிரெதிர் தளத்தில் நிற்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் இடையே நீண்ட கால ஆழமான நட்பு இருந்து வருகிறது. இப்படிபட்ட நேரத்தில் சீமானுக்கு எதிராக ஆவேசமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் சங்கத்தமிழனால், இரண்டு தலைவர்களிடையேயான நட்பில் பாதிப்பு ஏற்பட்டு, விளிம்பு நிலை மக்களுக்காக போராடி வரும் இரண்டு தலைவர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டால், தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமல்ல, ஏழை, எளிய மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் கொள்கிறார்கள்.