நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்…
தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் ஊடக உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் ரங்கராஜ் பாண்டே..
அவர் மீது விமர்சனங்கள் ஏராளமாகஇருந்தாலும் கூட, குறிப்பாக திராவிட சித்தாந்தத்தை அழித்தொழித்து, சனாதனத்தை ஆழமாக வேர் ஊன்ற வைப்பதற்காக, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருப்பவர் ரங்கராஜ் பாண்டே என்ற குற்றச்சாட்டுதான் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
பாண்டே என்ற தனிநபர், கடந்த பத்தாண்டு காலத்தில் வளர்ந்து நிற்கும் உயரம் சாதாரணமானது அல்ல.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாண்டேவின் ஊடக பாதை தான் இளம் ஊடகவியலாளர்களின் அடிப்படை பாடமாக அமைந்திருந்தது என்று சொன்னால் அது வியப்பிற்குரிய ஒன்றல்ல.
திராவிட மண்ணின் அடையாளம், பகுத்தறிவு பகலவன், பெண் விடுதலைக்கு வித்திட்ட சிற்பி, தீண்டாமை கொடுமைக்கு எதிராக தன் வாழ்நாள் இறுதிவரை போராடிய போராளி, சமூக நீதிதியின் பிதாமகன் என்றெல்லாம் போற்றப்பட்டு வரும் தந்தை பெரியாரை., நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டாதவர் ரங்கராஜ் பாண்டே.
பெரியாரை தனது வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவதை விட, அவரை போலவே பொதுவாழ்வில் அரை நூற்றாண்டுக்கு மேல் தொண்டு செய்து பழுத்த பழங்களை தேடி தேடி நேர்காணல் செய்வது பாண்டேவிற்கு கை வந்த கலையாக இருப்பதுதான் விசித்திரமானது.
சாணக்யா சேனலை, பாஜகவின் வளர்ச்சிக்காகவும், திராவிட இயக்கங்களின் வீழ்ச்சிகளுக்காகவும் கன கச்சிதமாக பயன்படுத்துவதில் பாண்டே வகுத்து கொண்டிருக்கும் வியூகத்திற்கு திராவிட சித்தாந்தத்தில் ஊறிப் போயிருக்கும் மூத்த அரசியல்வாகிகளும் விட்டில் பூச்சிகளாய் இரையாகி கொண்டிருப்பதுதான் பரிதாபம்.
சாணக்யா சேனலில் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் வீடியோக்கள் ஒன்று பாஜக புகழ் பாடும். அல்லது பிரதமர் மோடியின் சாதனைகளை முழங்கும். அண்ணாமலை போல ஒரு தலைவரை தமிழக பாஜக இதுவரை கண்டதே இல்லை என்று மிரட்டும்.
பாஜகவை, பிரதமர் மோடியை, அண்ணாமலையை தூக்கி பிடிக்கும் அதேநேரத்தில், திமுகவை, மு.க.ஸ்டாலினை, திராவிட இயக்க தலைவர்களை தேடி தேடி குற்றம் கண்டுபிடித்து குதறுவதற்கும் சாணக்யா சேனல் தயக்கம் காட்டியதே இல்லை..
பாஜவின் தீவிர ஆதரவாளராக அடையாளப்படுத்தப்படும் ரங்கராஜ் பாண்டேவுக்கு, திராவிட சித்தாந்தவாதிகள், திராவிட இயக்க தலைவர்கள் எதிரிகளாகதானே இருக்க வேண்டும்.
ஆனால், பாண்டே மீது அதீத பாசம் காட்டுபவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்தான். பிறர் கையாலேயே அவர்களது கண்களை குத்திக் குதறும் சாமார்த்தியம் பாண்டேவிடம் நிறைந்திருப்பதை, இன்றைய இளம் தலைமுறை ஊடகவியலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மாபெரும் பண்பாகும். .
பெரியார் மண்.. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் … பெரியார் வெறும் குப்பை.. என்று நிரூபிப்பதற்காக பாண்டே கையாளும் ராஜதந்திரத்தை பார்த்து திராவிட இயக்க செயற்பாட்டாளர்களே வியந்து போய்தான் இருக்கிறார்கள். பெரியாரை அவமானப்படுத்தும் போதெல்லாம் தமிழ் தேசியவாதிகளும் பாண்டேவுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள் என்பதுதான் அச்சம் தரும் அம்சமாகும்.
பெரியாரின் இளமைக் காலம், மணியம்மையுடனான திருமண வாழ்க்கை, பெரியாருடன் பேரறிஞர் அண்ணாவுக்கு, கலைஞர் மு.கருணாநிதிக்கு இருந்த முரண்பாடுகள், தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு பெரியார் செய்த துரோகம், ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பிய விநோதம் என பெரியாரின் அனைத்து புறங்களையும் அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவதற்கு முழு சக்தியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பாண்டே.
இன்றைக்கு தொலைக்காட்சிகளில், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாண்டேவை போலவே குதர்க்கமான கேள்விகளை எழுப்ப துடிக்கும் செய்தியாளர்கள், யூ டியூப்பர்கள், பாண்டேவின் பாணியை ஏடா கூடாமாக கையாள்வதால், பல நேரங்களில் பார்வையாளர்களிடம் சிறுமைபட்டு போகிறார்கள்.
செய்தியாளராக அரிதாரம் பூசிய நாள் முதலாகவே ரங்கராஜ் பாண்டே., தான் வகுத்து கொண்ட பாதையில் இருந்து துளியும் மாறியதே இல்லை என்பதற்கு பல உதாரணங்களை முன் வைக்கலாம். பாண்டேவை யாராலையும் மாற்றவும் முடியாது என்பது அவருடன் சம காலத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
செய்தியாளராக அறிமுகமான நாளில் இருந்து கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உழைத்த உழைப்பை விட இன்றைய நாட்களில் பலமடங்கு உழைத்துக் கொண்டிருக்கிறார் ரங்கராஜ் பாண்டே என்பதுதான் அவரது காலத்து ஊடகவியலாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
அவரோடு இணைந்து பத்திரிகை உலகில் கால் பதித்தவர்கள் பலர், இன்றைய தேதியில் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் செய்தியாளராக களத்திற்கு சென்று செய்தியை சேகரித்ததை விட, ஆசிரியர் குழுவில் அமர்ந்து, ஆலோசனைகளை வழங்கிய காலம்தான் அதிகமாக இருந்திருக்கும்.
ஆனால், இன்றைக்கு பாண்டே நேரடியாக களத்திற்கு செல்கிறார். நேர்காணல் எடுக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜனரஞ்சகமான பிரபலங்களை நேர்காணல் செய்கிறார். பிரபலங்களே வியக்கும் வகையில் அவர்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்கிறார் பாண்டே.
இப்படியாக, ஊடக உலகில் புதிதாக அறிமுகமாகும் ஊடகவியலாளர்களே தயங்கி தயங்கி மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளை, ஆழமரமாக கால் ஊன்றிய பிறகும் தயங்காமல் முன்நின்று ஊடக பணியை செம்மையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.
பாண்டே என்றாலே தனித்துவமானவர் என்பதை நிரூபித்து விட்டார். சனாதனத்தை போற்றலாம். சாதியை தூக்கிப் பிடிக்கலாம். மாநில கட்சிகளை விட தேசிய கட்சியே சிறந்தது என்ற வாதத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யலாம். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பாண்டேவுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது அதைவிட முக்கியமாக ஊடக துறையை வாழ்வியலாக கொண்டவர் என்ற அடிப்படையில், ஆக சிறந்த ஊடகவியலாளர்தான் ரங்கராஜ் பாண்டே.
சாணக்யா யூ டியூப் சேனலில் வெளியாகியிருக்கும் வீடியோக்களை மீள் பார்வை பார்த்தால், பாஜகவுக்கு அவர் கொடி பிடித்த மாதிரி, வேறு எந்தவொரு ஊடகவியலாளரும் அதிகமாக முட்டு கொடுத்திருக்க மாட்டார்கள்.
அதேநேரத்தில், பெரியாரை இழிவு படுடத்துவதற்கு பாண்டே மெனக்கெட்டதை போல, பெரியாரை உயர்த்தி பிடிப்பதற்கு திராவிட சித்தாந்தத்தில் ஊறிப் போன ஊடகவியலாளர்கள் வியர்வை சிந்தியிருப்பார்களா என்றால், சந்தேகம் தான்.
பெரியாரை இழிவுபடுத்துபவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் கூட அவர்களை தேடி பிடித்து பேட்டி காணும் சமர்த்தர் பாண்டேதான்.
அண்மையில் வரலாற்று ஆய்வாளர் பழங்காசு சீனிவாசனை நேர்காணல் செய்து, பெரியாரை இழிவுபடுத்தும் சேவையில் சாதனை படைத்திருக்கிறார் பாண்டே.
பெரியார் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை.
முழுமையான கடவுள் மறுப்பாளர் இல்லை பெரியார்.
பெண் விடுதலைக்கு ஒன்றையும் கிழித்தவர் இல்லை பெரியார்.
தீண்டாமை கொடுமைக்கு எதிராக பொங்கியவரும் இல்லை பெரியார். என பெரியாரை எந்ததெந்த பிம்பங்களில் திராவிட இயக்கங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றவோ.. அத்தனை பிம்பங்களையும் தூள் தூள் ஆக்கியிருக்கிறார் பாண்டே.
பெரியாரை கேவலப்படுத்துவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ.. அதை போலவே சமபங்கு பாஜகவின் புகழ் பாடுவதற்கும், மோடியை போல ஒரு தலைவர், அகில உலகத்திலேயே இல்லை என்று முழங்குவதற்கும் முழு ஆற்றலையும் செலவிட்டு கொண்டிருக்கிறார் பாண்டே.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டிருக்கும் நடை பயணத்தை , பாஜக முன்னணி தலைவர்களே கிண்டலடித்து கொண்டிருக்கும் நேரத்தில், அண்ணாமலையின் நடை பயணத்தை, தமிழ்நாட்டின் புரட்சி பயணமாக சித்தரிப்பதற்கு துடிக்கிறார் பாண்டே.
அண்ணாமலை யாத்திரையில் பாண்டே… வீடியோக்கள் அண்ணாமலை ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றுதான்.
அண்ணாமலையை பிரபலப்படுத்துவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்ற பரப்புரை தலை தூக்கியுள்ள இந்த நேரத்தில், அந்த பட்டியலில் பாண்டேவை சேர்த்தால் அவரது எதிரிகளால் கூட ஜீரணிக்க முடியாது.
திமுகவுக்கு மாற்றாக,.. அதிமுகவுக்கு மாற்றாக… தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே பாண்டேவின் தீராத வேட்கையாகும். தமிழ்நாட்டின் முதல்வர் அரியணையில் அண்ணாமலை அமர வேண்டும் என்பது பாண்டேவின் பிரார்த்தனையாகும்.
பாண்டேவை விமர்சனம் செய்பவர்கள்.. அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் நிறைய பாடங்கள் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பாண்டே அடிக்கடி உச்சரிப்பது.. நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு எந்த குழப்பமும் இல்லை என்பதுதான்.
பாஜகவை ஆதரிப்பது, தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவது, திராவிட இயக்கங்களை, தமிழ் தேசியத்தை தமிழ் மண்ணில் இருந்து துடைத்தெறிவதுதான் பாண்டேவின் வாழ்நாள் நோக்கமாகும். அதில் அவர் தெளிவாக இருப்பதை போல, இளம் தலைமுறை ஊடகவியலாளர்கள், தமிழ் மண்ணிற்கு உரிய சிந்தனை போக்கோடு மனவுறுதியுடன் மண்ணின் மைந்தர்களின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றினால், பாண்டேவை போலவே வெற்றி கொடிகளை உயர உயர பறக்க விடலாம்.
திராவிடத்தை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக அமர வைப்பதற்கு பாடுபட்டு கொண்டிருக்கும் பிரபல யூ டியூப்பர்கள் கோலாகலா சீனிவாசன், மாரிதாஸ் போன்று தீவிரவாத சிந்தனையில்லாமல், மிதவாதி வேடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ரங்கராஜ் பாண்டே, திராவிட சித்தாந்தத்தில் ஊறிப் போயிருக்கும் நூறு ஊடகவியலாளர்களுக்கு சமமானவர்.
கோலாகல சீனிவாசனிடம் இருந்தும் மாரிதாஸிடம் இருந்தும் எந்த இடத்தில் மாறுபட்டு நிற்கிறார் ரங்கராஜ் பாண்டே.
அவரிடம் காணப்படும் சிறப்பு குணம் அடக்கம்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஆளுமை குணம்.
சாணக்யா நிறுவனத்தின் உரிமையாளர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு சென்று பாசத்தை காட்டுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆத்மார்த்த நண்பர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பர்சனல் செல்போனில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.. இப்படியெல்லாம் பெருமைகளை அடுக்கி கொண்டே போனாலும் கூட, அரை நூற்றாண்டு வாழ்ககையில் கொண்ட கொள்கைக்காக களத்திற்கே சென்று உழைப்பதற்கு அஞ்சாத மனம் கொண்ட பாண்டேவின் உழைப்பை, இளம் ஊடகவியலாளர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், சாதிய சிந்தனை இல்லாமல், அறிவுப்பூர்வமாக, அறிவியல் ரீதியாக எந்தவொரு அம்சத்தையும் ஆராயும் ஆற்றலும், பழம் பெருமைகளை பேசி மகிழாமல், வளர்ந்த நாடுகளில் உள்ள நாகரிகமும் ஒழுக்கமும், கண்ணியமும், ஜனநாயகத்தையும் இந்திய மண்ணில் பரப்புதற்கும் பார்ப்பதற்கும் முழு சக்தியையும் இளம் ஊடகவியலாளர்கள் செலவிட்டால், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஜனநாயகம் தழைத்தோங்கும்.
நிறைவாக முண்டாசு கவிஞர் மகாகவியின் பாடல் வரிகளை நினைவு கூர்கிறோம்.
எல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்.
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லாரும் இந்நாட் டு மன்னர்
ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் வாழ்க..