Sun. Dec 3rd, 2023

நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் வழக்கத்தை விட அதிகமான கொந்தளிப்பால் தவித்துக் கொண்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அடுக்கியுள்ள பாலியல் சீண்டல்,, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், போலீஸ் விசாரணை, வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை என அடுத்தடுத்து கட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

சீமானின் மீது திமுக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள்.

அண்ணன் சீமானுக்காக நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் படையென புறப்பட்டு சமூக ஊடகங்களில் நடிகை விஜயலட்சுமியை தாறுமாறாக வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் சீண்டல் புகாரை வைத்து எத்தனை பிரபலங்களை நடிகை விஜயலட்சுமி ஏமாற்றியிருக்கிறார் என்ற புள்ளி விவரங்களோடு சமூக ஊடகங்களை கதற அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சீமானின் தம்பி மார்கள்.

சீமான், விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்து வசவு கச்சேரி, கடந்த இரண்டு நாட்களாக அடுத்த கட்டத்தை நோக்கி பாய்ந்துள்ளது.

தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி, சத்யம் தொலைக்காட்சி நெறியாளர் முக்தார் ஆகிய இருவரும் நடிகை விஜயலட்சுமியை பகடை காயாக்கி, அடைய துடிக்கும் ஆதாயத்தையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சீமானின் தம்பிமார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழக அரசியல் களத்தையே, தமிழர்களின் பெருமைக்குரிய  பண்பாட்டையே சீரழிக்கும் வகையில் பேட்டிகளும், பேச்சுகளும் சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கின்றன.

தனிமனித வாழ்க்கைக்கு முற்றிலும் அவமானத்தை தேடி தரும் ஒரு விஷயத்தை ஒவ்வொரு தரப்பும் ஊதி ஊதி பெரிதாக்கி கொண்டிருக்கும்  நேரத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையான ஒரு அம்சம், மாநிலத்தை கடந்து இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது.

2019 ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒற்றை செங்கலை  வைத்து இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் திரும்பினார் உதயநிதி ஸ்டாலின்.

5 ஆண்டுகள் நிறைவு செய்து அடுத்தாண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்திய அளவில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதுதான் தேசிய அளவிலான விவாதமாக மாறியிருக்கிறது.

உதயநிதியின் பேச்சை மேற்கோள் காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கொந்தளித்து இருக்கிறார் என்றால், அப்படி என்ன பேசினார் உதயநிதி ஸ்டாலின் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..

தேர்தல் யுக்தியாக பாஜக தலைவர்கள் பயன்படுத்தும்  சனாதனத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சில நிமிடங்கள் மட்டுமே உதயநிதி பேசியிருந்தாலும் கூட, அவரின் பேச்சு தமிழக பாஜக தலைவர்களை மட்டுமல்ல, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களின் கண்களையும் சிவக்க வைத்துள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைமை ஏற்று உரையாற்றினார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி.

அப்போது அவர் பேசியதை, திமுக ஊடகங்கள், நடுநிலை ஊடகங்கள் அதிகளவு பரப்பியதை விட பாஜக ஊடகங்கள், பாஜக ஆதரவு ஊடகங்கள்தான் அதிகளவு பொதுமக்களிம் கொண்டு சேர்த்துள்ளது.

சனாதனத்தை கொசுவோடு ஒப்பிட்டு ஒழித்து விடுவோம் என்று உதயநிதி பேசியதை கண்டு கொதித்து எழுந்துள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவராகவும் உள்ள அவர், உதயநிதியின் பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

உண்மையான பாஜக தலைவரான வானதி சீனிவாசனை விட அதிகமாக கொந்தளித்து இருப்பவர், திராவிட பாரம்பரியத்தில் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்த அரசியலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிராக உதயநிதி பேசியுள்ளார். அமைச்சர் பொறுப்புக்கு உரிய கண்ணியத்தோடு உதயநிதி நடந்து கொள்ளவில்லை. இந்து மதத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி பேசியிருப்பது அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உதயநிதி மீது வழக்கு தொடர்ந்தால் அவரது அமைச்சர் பதவிக்கே ஆபத்து என்று மிரட்டியிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் மட்டுமே அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்திருந்த நேரத்தில், அகில இந்திய பாஜகவில் சக்தி வாய்ந்த தலைவராக கூறப்படும் அமித்ஷாவும், உதயநிதி பேச்சை கேட்டு ஆவேசமடைந்து, உதயநிதியை வசைபாடியிருக்கிறார்.

இந்து மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் பாஜக, உதயநிதியின் பேச்சை, நாடு தழுவிய பரப்புரையாக்கி, காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைந்திருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

உதயநிதிக்கு எதிராக பொங்கியிருக்கும் அமித்ஷாவின் பேச்சை, தமிழில் மொழி பெயர்ந்து, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சனாதனத்திற்கு எதிரான அமைச்சர் உதயநிதியின் பேச்சு, சட்டச் சிக்கலை உருவாக்குமா… அல்லது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கைகோர்த்து இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்துமா..

வரும் நாட்களில் உதயநிதியின் பேச்சுக்கு தேசிய அளவில் கிடைக்கவுள்ள முக்கியத்துவம் குறித்த தகவல்கள் அதிகமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

உதயநிதியின் பேச்சு, தமிழக பாஜக தலைவர்களை மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பாஜக தலைவர்களை கோபம் கொள்ள செய்திருக்கும் வேளையில், ஒரு பேச்சுக்குதான் அடையாளப்படுத்துகிறோம். பார்ப்பனர் சாதியைச் சேர்ந்த பிரபல யூ டியூப்பர் ஸ்ரீவித்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டலின் பேச்சை ஆதரித்து பகிர்ந்துள்ள வீடியோ, வெறிப்பிடித்த திமுக நிர்வாகிகளுக்கு கூட தோன்றாத கற்பனையாகும்…

சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சு, ஆளும்கட்சியின திமுகவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துமா.. அல்லது, பத்தாண்டு காலம் மத்தியில் ஆளும்கட்சியாக உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை விரட்ட, இந்தியா என்ற பெயரில் ஒன்றிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலாக இருக்குமா..

பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே..