Sat. Nov 23rd, 2024

ஆளும்கட்சியான திமுகவுக்கு தலைமை வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நாடாளுமன்றத் தேர்தலை ஆர்வமுடன் எதிர்நோக்கி, அடிமட்ட தொண்டர்களையும் அனைத்து நிலை நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக்கிட முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அகில இந்திய அளவில் செல்வாக்கு மிகுந்த கட்சியாகவும், மத்தியில் ஆட்சி பொறுப்பிலும் இருக்கும் பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு, தென்னிந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

தந்தைக்கு இணையாகவே, அவரது புதல்வரும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், மாவட்டந்தோறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திமுக கூட்டணி வெற்றிக்காக இளைஞரணி நிர்வாகிகள் கடுமையாக களப் பணியாற்றிட உத்வேகம் தரும் திட்டத்தில் முழு ஆற்றலையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆளும்கட்சியான திமுகவின் வேகத்தை முறியடிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை அடிக்கடி முன்னெடுத்து வருகிறார்.

அதுபோலவே, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையும், திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் நடைப்பயணம், ஊழல் குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்கிறார். இப்படி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கம் போராட்டங்களை சமாளித்து, ஆளும்கட்சியான திமுகவின் சாதனைகளை மக்கள் முன் வைப்பதற்கு திமுக முன்னணி தலைவர்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்ட நேரத்தில், திமுகவின் நிர்வாகிகளே, திமுக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், தரம் தாழ்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று வேதனைக்குரல் எழுப்புகிறார்கள் பழுத்த திமுக நிர்வாகிகள். ஆளும்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நிர்வாகிகளை  அடையாளம் கண்டு களையெடுப்பதில் திமுக தலைமை தீவிரம் காட்ட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.  

திமுக முன்னோடிகளின் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சாட்டையை சுழற்ற ஆரம்பித்து இருப்பது, பழுத்த திமுக நிர்வாகிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின்..

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அவரது புதல்வர் இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியுள்ளது தொடர்பாக வெளியான செய்தி, ஆளும் திமுகவிற்குள்ளேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலத்திலேயே மு.க ஸ்டாலின் பெயரில் தனியாக பேரவை அல்லது பாசறை தொடங்கப்பட்ட போது, திமுகவின் கொள்கைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்து, மு.கஸ்டாலின் பெயரிலான பாசறைகளுக்கே தடை போட்டவர் கலைஞர் மு.கருணாநிதி

அவரது வழியில் நடைபோடும் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது புதல்வரும்  அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆளும்கட்சியான திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இன்பநிதி பெயரில் தொடங்கப்பட்ட பாசறையை முளையிலேயே கிள்ளி எறியும் செயலை, துணிந்து மேற்கொண்டுள்ளது, திமுகவின் மூத்த தலைவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக இன்பநிதி பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் கடந்த 2 நாட்களாக  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கட்டுக்கோப்பான கட்சியான திமுகவில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாக மாறி வருகிறார்கள் என்ற விமர்சனத்தை மூத்த திமுக நிர்வாகிகளே பகிரங்கமாக வைத்த நேரத்தில், இன்பநிதி பாசறை போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு, கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது.

இன்பநிதி பாசறை போஸ்டர் தொடர்பான தகவல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்தில், முன் எப்பாதும் இல்லாத வகையில் கடுமையாக கொந்தளித்துவிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான இளைஞரணி நிர்வாகிகள்.

இன்பநிதி பாசறை விவகாரத்தை உடனடியாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி பெயரில் பாசறையை தொடங்கிய புதுக்கோட்டை திமுக நிர்வாகிகளை உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நேரத்தில், இன்பநிதி பாசறை பெயரில் எழுந்துள்ள சிக்கலால், ஆளும்கட்சியான திமுகவுக்கு எழும் நெருக்கடியை உள்வாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை தொடர்பு கொண்டு இன்பநிதி பெயரில் போஸ்டர் ஒட்டிய புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி அறிவிப்பு வெளியிடுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, டாக்டர் முக.திருமுருகன், க,செ,மணிமாறன் ஆகியோரை திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்றைய முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம் இதோ…

ஒழுங்கு நடவடிக்கை…!

திமுகவின் புதுக்­கோட்டை வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்­கி­யப் பகுத்­த­றிவு பேரவை துணை அமைப்­பா­ளர் வட­வா­ளம் க.செ.மணி­மா­றன், மாவட்ட மீன­வர் அணி துணை அமைப்­பா­ளர் மு.க.திரு­மு­ரு­கன் ஆகி­யோர் கட்சிக் கட்­டுப்­பாட்டை மீறி­யும், ­அவப்­பெ­யர் ஏற்­ப­டும் வகை­யி­லும் செயல்­பட்­ட­தால், அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்­துப் பொறுப்­பி­லி­ருந்­தும் தற்­கா­லி­க­மாக நீக்கி (Suspension) வைக்­கப்­ப­டு­கிறார்கள்…

உதயநிதி பாசறையை தொடங்கியவர்களை உடனடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டதை பார்த்து, புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மட்டுல்ல, மாநிலம் முழுவதும் உள்ள திமுக மூத்த முன்னோடிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்குகிறது என்ற விமர்சனத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி, வரும் காலத்தில் திமுகவுக்கு மிகுந்த உத்வேகமாக அமையும் என்று புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் உற்சாகமாக பேசி வருகிறார்கள்.

தனது மகன் பெயரில் பாசறை தொடங்கியதை கண்டு பூரிப்படையாமல், கட்சி கட்டுப்பாடுதான் முக்கியம் என அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கையை கண்டு புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆடிப்போய்விட்டார்கள் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.