Sun. Dec 3rd, 2023

உயிர்கொல்லியாக மாறும் மன உளைச்சல் – மன அழுத்தம் மிகவும் கொடூரமானது…

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்.

கோவை டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ்ஸின் தற்கொலை, தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டத்தின் எல்லையாகவும், அண்டை மாநிலமான கர்நாடகத்தின் நுழைவு வாயிலையும் ஒட்டியுள்ள கொளத்தூரில் நேற்று காலை திருமண விழாவில் கலந்து கொண்டேன். அங்கும் டிஜி மீது பரிதாபப்பட்டவர்களை பார்க்க முடிந்தது. தொழில் முனைவோராக உள்ள நண்பர்கள் இருவருடைய பேச்சிலும் டிஐஜி தற்கொலை ஆழமான உரையாடலை ஏற்படுத்தியிருந்தது. இருவரில் ஒருவர், மனஅழுத்தத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்தவற்றை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.

கடந்து செல்லும் நேரத்தில் காதில் விழுந்த தகவலை கேட்டதில், அவரவருக்கு தெரிந்தவாறு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 4 ஆண்டுகள் முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் கூட மன அழுத்தத்தில் உள்ள பல்வேறு துயர நிலைகள் குறித்து முழுமையான புரிதல் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான், அவரது கருத்துகளும் அமைந்திருக்கின்றன.

கொஞ்சம் விரிவான கட்டுரைதான் இது. மன உளைச்சல் எவ்வளவு கொடூரமானது என்பதை எனது சொந்த அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஊடகவியலாளர்களையும் எந்தளவுக்கு பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதில் இருந்தே தொடங்குகிறேன்.

மூத்த பத்திரிகையாளர், எல்லோரிடமும் பாசம் காட்டக் கூடியவர், உதவி கேட்பவர்களுக்கு அவரது சக்திக்கு மேல் உதவக் கூடியவர் துரை கருணா அவர்கள். கடந்த 3, 4 ஆண்டுகளில் அவரது முகநூலில் இரண்டு முறை, ஊடக வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுவும் ஒருவகையிலான மன அழுத்தம் தான். அவரை போல எனக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் முகநூலில் பகிர்ந்து கொள்ளலாமா என்ற சிந்தனை 5 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. ஆழ்ந்து யோசித்த நேரத்தில், எனது பெயரைக் கொண்ட, பெண் ஊடகவியலாளர், புதிய தொலைக்காட்சியில் சாமான்யர்களின் வாழ்க்கை பற்றி, களத்திற்கே குழுவாக சென்று பேட்டி கண்டு, தொடராக வெளியிட்ட இளமதி சாய்ராம், முகநூலில் நிறைய எழுதி வந்தார். அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவர்களிடம் காணப்படும் அரிய குணங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார். வியக்கத்தக்க எழுத்தாற்றல் கொண்டவர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து விலகிய பிறகு முகநூலில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார். அவரின் எண்ணவோட்டமும், அண்ணர் துரை கருணா எண்ணவோட்டமும் சரியாக ஒத்து போயிருந்தது. கிட்டதட்ட அதே சிந்தனைப்போக்குதான் எனக்கும் இருந்தது. இருவரும் முகநூலில் பதிவு செய்துவிட்டார்கள். நான் தவிர்த்துவிட்டேன். இளமதி சாய்ராம் ஊடக வாழ்க்கையை தொடருகிறாரா என்றே தெரியவில்லை. முகநூலிலும் பதிவு எதுவும் இல்லை.

ஆனால், இருவரிடம் காணப்பட்ட எண்ணவோட்டம் போலவே நானும் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு நன்கு அறிமுகமான ஐஏஎஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி வைத்தேன். சில மணிநேரம் கழித்து வாசித்த அவர், உடனடியாக என்னை தொடர்புகொண்டு பேசி, மாலையில் தலைமைச் செயலகம் வருமாறு அழைத்தார். அந்த இடைபட்ட நேரத்தில், நெருக்கடியான மனநிலையில் இருந்து விலகிவிட்டதால், இல்லை சார்.. அடுத்த நாள் வருகிறேன் என்று கூறினேன்.

வெளியூர் செல்வதால் அடுத்த சில நாட்கள் சந்திக்க முடியாது. உடனே புறப்பட்டு வாருங்கள் என்று வலியுறுத்தியதால், சந்தித்து பேசினேன். அவருக்குத் தகவல் அனுப்பிய நேரத்தில் எனக்கிருந்த மனநிலைக்கும், அவரைச் சந்தித்தபோது இருந்த மனநிலைக்கும் இடையே தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருந்தால், பொருளாதார ரீதியாக அவர் உதவ முனைந்த போதும் பிடிவாதமாகத் தவிர்த்துவிட்டு, சிந்தனையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. தலைமைச் செயலகத்திற்கு வந்து சிலரை சந்தித்து பேசுவதன் காரணமாகவே அந்த மனநிலையில் இருந்து விலகி விட முடிகிறது என்று கூறிவிட்டு திரும்பினேன்.

இதுபோன்ற சிந்தனை, மன அழுத்தத்தில், மன உளைச்சலில் துவக்க நிலைதான். ஆனால், டிஐஜிக்கு ஏற்பட்டிருப்பது முத்திய நிலை. அதனை அவருடன் நெருங்கி பழகுகிறவர்களுக்கு அல்லது அவர் யாருடன் நெருக்கமான நட்பு பாராட்டுகிறாரே அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவருடனேயே தங்கியிருந்து, பேச பேச தான் குறையும். இதற்கு நீண்ட நாட்கள் ஆகும். அந்தளவுக்கு அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்பது பணி சார்ந்தோ, பணம் சார்ந்தோ, குடும்ப பிரச்னையாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒருவிதமான அம்சம், அவரை ஆழமாக பாதித்து இருக்கும். அதுபோன்ற காரணங்கள் விநோதமான ஒன்றாக கூட இருக்கலாம்.

சாதாரணமா நாம் நினைத்துக் கொள்வதைப் போல துவக்க நிலையான மனஉளைச்சல் மட்டுமே இருக்காது என்பதற்கு எனக்கு மிக மிக நெருக்கமான உறவுகள், மன உளைச்சலால் அனுபவித்த துன்பங்களை பகிர்கிறேன். கடவுள் அருளால் ஒருவர் உயிரோடு இருக்கிறார். இன்னொருவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இரண்டாவது நபர், எனது கல்லூரி கால நண்பரின் மனைவி. சென்னை மாநகருக்குள்ளேயே பிரபல நகரில் வசித்தவர். 2000 சதுர அடியில் சொந்த வீடு. கணவரின்(நண்பர்) வருமானத்திற்கும் குறைவில்லை. ஐடி நிறுவனத்தில் வேலையில் இருக்கும் புதல்விக்கும் திருமணம் ஆகிவிட்டது. இளையவரான மகனும் நல்ல வேலையில் இருப்பவர். அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. சந்தோஷமாக வாழ வேண்டியவர், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருந்திருக்கிறார். தீவிரமான மன உளைச்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

அதற்கான காரணத்தை, அவரது தற்கொலைக்கு பிறகுதான் எனக்கு தெரியவந்தது. அவரை துன்பப்படுத்திய மனநோய்க்கு தீர்வு காண்பதே கடினமான ஒன்றுதான்.

நண்பரின் அண்ணர், அரசுத்துறையில் நல்ல பதவியில் இருப்பவர். சம்பளத்தை மிஞ்சிய வருமானமும் வரக் கூடிய வேலைதான். அவரது மனைவியும், நண்பரின் மனைவியும், கடந்த பல வருடங்களுக்கு முன்பு பாசம் மிகுந்த சகோதரிகளாகவே பழகி வந்திருக்கிறார்கள். அதிகாரியின் மனைவி, கோயில், ஷாப்பிங் மால், தியேட்டர் என பல இடங்களுக்கு நண்பரின் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். கஞ்சத்தனம் இல்லாமல் செலவும் செய்து வந்திருக்கிறார். நண்பரின் மனைவி, பல ஆண்டுகளாக வாழ்க்கையை அனுபவித்து வந்திருக்கிறார். இருவருக்கும் இடையே நன்றாக இருந்த நட்பில், ஒருநாள் திடீரென விரிசல் ஏற்பட்டு, குடும்ப தகராறாகவே மாறி, அண்ணன், தம்பி இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட்டது. தம்பி வீடு கீழ்தளம். அரசு அதிகாரியான அண்ணன் வீடு முதல் மாடி.

இரண்டு பெண்மணிகளுக்கு இடையேயான ஈகோ, அடிக்கடி தலைகாட்டி கடந்த சில ஆண்டுகளில் சகோதரர்கள் இருவருக்கும் பெரிய அளவு விரோதத்தை ஏற்படுத்திவிட்டது. நண்பரின் மனைவிக்கு, அரசு அதிகாரி போல, தனது கணவருக்கு வருமானம் இல்லை. அதனால்தான் நாம் தாழ்ந்து இருக்கிறோம் என சிந்தனை எழுந்து, நாளடைவில் தீராத மனநோயாக மாறிவிட்டது. அவரது வீட்டிற்கு அவ்வப்போது செல்லும் பழக்கம் உள்ள நான், கடந்த ஜனவரியில் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் சென்றிருந்தேன். என்னுடன் மற்றொரு நண்பரும் வந்திருந்தார். ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். படுக்கை அறையில் இருந்த நண்பரின் மனைவி, எங்களை சந்திக்கவே வரவில்லை. நண்பரஅழைத்த போதும் மறுத்திருக்கிறார்.

 மனைவி வெளியே சென்றிருக்கிறார் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால், என்னுடன் வந்த நண்பருக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அடிக்கடி தலைகாட்டும் மனஉளைச்சலால், அதிகமாக சத்தம் போடுவார். வீட்டு கதவை அடித்து சாத்துவார் போன்ற அவரின் மாறுபட்ட குணநலன்களை என்னுடம் வந்திருந்த நண்பர், ஏற்கெனவே அனுபவித்திருக்கிறார்.  

மறுநாள் பிற்பகல் நண்பர் கதறியவாறே, மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றார். சராசரி எடையை விட கூடுதலான உடல்வாகு கொண்ட அவர், மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கவே முடியாது. ஆனாலும் உயிரிழந்துவிட்டார். இத்தனைக்கும் அவரது தந்தை, திருமணமான அவரது சகோதரி ஆகியோர் பொங்கல் திருவிழா விடுமுறையையொட்டி, அவரது வீட்டிலேயே பல நாட்கள் தங்கியிருந்து, அவரை எந்த வேலையும் செய்ய விடாமல், மனதின் காயத்தை ஆற்ற இடைவிடாமல் உரையாடி இருக்கின்றனர்.

ஆனால், எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு செல்லலாம் என்று கூட நண்பர் அழைத்திருக்கிறார். பிடிவாதமாக மறுத்தவர், உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார். அதற்கு முக்கிய காரணம், அரசு அதிகாரியின் மனைவியாக தன்னால் வாழ முடியவில்லையே என்ற நினைப்புதான். இந்த நோய்க்கு மருந்து மூலமோ,மனநல மருத்துவர்களின் ஆலோசனை மூலமோ தீர்வே காணவே முடியாது என்பதுதான் துயரமான ஒன்று. இதுபோன்ற மனநிலையில் உள்ள ஆயிரக்கணக்கானோர், நமது உறவுகளாகவோ, நட்பு வட்டத்திலோ, அதையும் கடந்தோ  நரக வாழ்க்கையைதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது பெண்மணி (உயிரோடு இருப்பவர்) மிகுந்த மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்தநேரத்தில், அவரது கணவர், பதல்வர் மற்றும் குடும்பத்தினரின் தீவிர பிரார்த்னைகளாலும் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் குணமாகிவிட்டார் என்பதுதான் நிம்மதியான, மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அவரின் மனஉளைச்சலுக்கு என்னையும் அறியாமல் நானும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதுதான் இன்றைய தேதியிலும் எனக்குள்ள வேதனையாகும்.

1999 ஆம் ஆண்டில் சென்னையில் ஊடகவியலாளராக அவர் பணியாற்றினார். செய்தியாளர் சந்திப்பில் நேரிட்ட அறிமுகம். இளம்வயது ஆண், பெண் இடையே ஏற்படும் சிந்தனைப்போக்குக்கு மாறுபட்டு, ஆன்மிகம், குரு ஆசிர்வாதம் போன்றவற்றில் இருந்த ஒத்த எண்ணத்தால், மனதளவில் மாசற்ற நட்பு உருவாகிவிட்டது. இரண்டு ஆண்டு பழக்கம்தான் என்றாலும் ஆழமான நட்பாக மாறியிருந்திருக்கிறது. 2001ல் திருச்சி காலைக்கதிரில் பணியாற்றுவதற்காக நான் இடமாறிவிட்டேன். 2003 ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு முகநூல் வாயிலாக மீண்டும் பேசும் நிலை உருவானபோதுதான், அவரது குடும்ப வாழ்க்கையில் எதிர்கொண்ட சில கசப்பான நிகழ்வுகள், அவரை மிகவும் பாதித்திருக்கிறது என்பதை உரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது.

1999 மற்றும் 2000 ஆண்டு என இரண்டு ஆண்டு பழக்கத்தில், விசிறி சாமியார் மற்றும் , பங்காரு அடிகளை இருவரும் சந்தித்தது, சென்னையில் கோயில்களுக்குச் சென்றது போன்ற சந்தோஷம், கடந்த 15 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனுபவிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். இத்தனைக்கும் அவரது கணவரும், அவர்களது ஒரே புதல்வரும் அவரின் எல்லா விருப்பத்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்து வருகிறார்கள். சமையல் உள்ளிட்ட எல்லா பணிகளிலும் கணவரும், புதல்வரும் பெரும் பங்கு ஆற்றும் நற்குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வியப்பிற்குரியது. பொருளாதார பிரச்சினையும் இல்லை. உறவுகளாலும் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனாலும், ஆழ்மனதில் சோகம் கூடிக் கொண்டு வந்து, தீவிரமான மனஅழுத்தமாக மாறிவிட்டது.. அதற்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

15 ஆண்டுகளில் பல படிநிலைகள் கடந்துவிட்டன. பெரும் இடைவெளிக்குப் பிறகு என்னுடன் பேச நேரிட்ட நேரத்தில் மன அழுத்தம் உச்சநிலைக்கு சென்றிருக்கிறது. அவ்வப்போது சுயநினைவையே இழக்கும் அளவுக்கு சென்று, மருந்து மற்றும் மனநல மருத்துவரின் சிகிச்சைக்கு பிறகே மீண்டும் வந்திருக்கிறார். முகநூல் வசதி மூலம் என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு அவரிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவரது கணவர் உணர்ந்து கொண்டிருக்கிறார். இது எனக்கு தெரியாது.

ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டில் எனக்கிருந்த பக்தி உணர்வும் கடந்து சென்ற ஆண்டுகளில் எனக்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. பிரார்த்னைகளாலும் வழிபாடுகளாலும் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், தோழி, பக்தி மார்க்கத்தில் மிகமிக அழுத்தமான மனநிலைக்கு சென்றுவிட்டார். 2000 ஆம் ஆண்டில் என்னிடம் இருந்த பக்தியை எதிர்பார்த்து அவர் பேசியபோது, ​​அதில் இருந்து வேறுபட்டு ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் போது, அது வாக்குவாதமாகி இணைப்பையே துண்டித்து விடுவார். அப்படிப்பட்ட நேரங்களில் ஏற்கனவே தலைகாட்டிய மனஅழுத்தம், அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மருந்து மற்றும் மனநல மருத்துவரின் சிகிச்சையைப் போல, என்னுடன் பேசுவது அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர பயன்பட்டு வருகிறது.

நான் பேசினால் சரியாகிவிடுகிறார் என்ற பேச்சு எழுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், பிடிவாதமாக அவரிடம் இருந்தோ, அவரது கணவர், புதல்வர், சென்னையில் உள்ள பெற்றோர்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் வந்தபோதும்கூட, பிடிவாதமாகவே இருந்துவிட்டேன். மனஅழுத்த நோயைப் பற்றிய சரியான புரிதல் எனக்கு இல்லாததால், மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல மருத்துவரால் மட்டுமே இயல்பு நிலைக்கு வரட்டும் என்ற எண்ணத்தில் விலகி நின்றேன். மருந்துகள் மூலம் உடனடியாக குணமாகிவிட முடியாது. நீண்ட நாட்கள், நீண்ட வருடங்கள் ஆகும். தன் மீது அதீத அக்கறை கொண்டவராக இவர்தான் இருக்கிறார் என்ற சிந்தனையுடைய நபருக்கு, அவர் எதிர்பார்க்கிற, நம்புகிற, ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிற நபரிடம் பேசினால்தான், ஆழமான மனநோயில் இருந்து விடுபட முடியும் என்பதை வெளிநாட்டில் வாழும் தோழி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எனது மூலைக்கே உரைத்தது.

மனநோய் என்பது, கடினமான வேலை, பணப் பிரச்னை போன்ற காரணங்களால் மட்டுமே ஏற்படுவதில்லை. அதையும் கடந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான காரணங்களால் ஏற்படுகிறது..சுயநினைவு இழப்பது, வாழ்ந்து ஒன்றும் சாதிக்க போவதில்லை போன்ற பல துயரமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதை சரியாக உணர்ந்து கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக மன உளைச்சல், மன அழுத்தம் என முன்முடிவுக்கு ஊடகவியலாளர்களே வருவது சரியான காரணமாக இருக்க முடியாது.

அந்தவகையில் டிஐஜி அனுபவித்த வேதனைகளை அவரது உயரதிகாரிகள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். நெருங்கிய நட்பு வட்டமும் அறிந்து வைத்திருக்கிறது. அப்படியிருந்தும் அவரை இழந்திருக்கிறோம் என்றால், மன உளைச்சலின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி தெரியாதவர்கள், ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என்றே நினைத்து அறிவுரை கூறுகிறார்கள்..உடல் காயத்தை விட மனச்சிதைவு கொடூரமானது..

காவல்துறையில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்கு கூட தெளிவான புரிதல் இருப்பது இல்லை என்பதுதான் எனது அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்திருக்கும் கருத்து.

டிஐஜி என்ற பதவியில் இருந்ததால், அவரின் அகால மரணம் அனைத்து தளங்கிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவுக்கு பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

அவரைப் போலவே, நமது நண்பர்கள், நமது உறவுகள் பல நூறு பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள், அவர்கள் உறுதியாக நம்பும் நபர்களிடம்தான், இந்த எண்ணத்தையே பகிர்ந்து கொள்வார்கள். வெளிப்பார்வைக்கு நன்றாக நடமாடுவார்கள். உரையாடுவார்கள். ஆனால், நிமிட நேரத்தில் அவர்கள் தங்கள் சுயத்தை இழந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள் மீது பாசமும் கருணையும் காட்ட வேண்டிய நிலையை ம், எல்லோரிடமும் எதிர்பார்ப்பதும், ஏற்படுத்துவதும் கடினமான பணியாகும்.

இந்த விஷயத்தில் காட்சி ஊடகங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதும், துன்பப்படுவதை காட்டிலும் சக மனிதர்கள் மேலான கருணையும், பாசமும் பெருக வேண்டும்….