Sun. Apr 20th, 2025

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக் கொண்டது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டது.  ஜுன் மாதம் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் செலவாக்கு மிகுந்த துறைகளில் பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டு, திமுக சார்பு அல்லது ஆதரவு மனநிலையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு செல்வாக்கு மிகுந்த இடங்கள் ஒதுக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் சென்னை ஆட்சியர் பணியிடத்தில் விஜயராணி நியமனம் செய்யப்பட்டார். இலக்கிய வாதி என்ற புகழுக்கு உரிய அவர், நேர்மையான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். சென்னை மாவட்ட நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதிலும், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதில் மிகுந்த முனைப்பு காட்டி வந்திருக்கிறார்.  

ஆட்சியர் விஜயராணியின் உண்மையான அக்கறையை பார்த்து பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். குறிப்பாக பெண்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்ததுடன், மகளிர் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் முழுமையாக, உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் கண்டிப்புடன் நடந்து கொண்டிருக்கிறார் ஆட்சியர் விஜயராணி.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றாலும் கூட இந்த மாவட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஆட்சியருக்கு, பிற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, சிறப்பு மரியாதையே கிடைப்பதில்லை. சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்திருப்பதாலும், சென்னை மாநகராட்சி தனித்த அதிகாரமிக்கதாக இருப்பதாலும் ஆட்சியர் என்பவர், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிபணிந்துதான் நடந்து கொள்ள வேண்டும். இப்படிபட்ட நிலையில் பெரும்பாலும் சென்னை மாவட்ட ஆட்சியராக பதவி வகிப்பவர்கள், தனிப்பட்ட தங்களின் சக்தியை கூட குறைத்து கொண்டு, அலுவலகம் வந்தோம்… சென்றோம் என்று தான் இருப்பார்கள். அப்படிதான் கடந்த பல ஆண்டுகளில் பலர் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு முன்பு இருந்த ஆட்சியர்களைப் போல் இல்லாமல், பொதுமக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயலாற்றினார் விஜயராணி. நல்லவர்களுக்கு எப்போதும் மரியாதையும் செல்வாக்கும் இருக்காது என்று கூறுவதற்கு ஏற்ப, சென்னை மாவட்ட ஆட்சியராக ஒரு வருடம் கூட பணியை நிறைவு செய்யாத நேரத்தில் விஜயராணி, அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவரது பணியிட மாற்றத்திற்கான காரணம் குறித்து வெளியான தகவல்தான் அதிர்ச்சிக்குரியது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து தமது இல்லத்திற்கு திரும்பி சென்ற நேரத்தில், திடீரென்று கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த போது, அங்கு ஆட்சியர் விஜயராணி இல்லை என்ற காரணம் தான் கூறப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வு நிறைவடைந்த ஒருசில மணிநேரத்திற்குள்ளாகவே விஜயராணிக்கு வேறு மாற்று பணியிடம் வழங்காமல் தூக்கியடிக்கப்பட்டார்.

பொதுமக்களின் கோரிக்கை மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தற்கும், சென்னை மாவட்ட அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடிய லஞ்சத்தை கட்டுப்படுத்தி ஒழிக்க முயன்றதற்காகவும், நேர்மையாக பணியாற்றதற்கும் விஜயராணி ஐஏஎஸ்க்கு திமுக அரசு  மிகச் சிறந்த வெகுமதியை வழங்கிவிட்டது என்று கடந்த ஆண்டே சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

2022 ம் ஆண்டு மே 25 ஆம் விஜயராணிக்கு பதிலாக சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் அமிர்தஜோதி ஐஏஎஸ். இவரும் கூட பொதுமக்களின் கோரிக்கைகள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு விரைந்து தீர்வு கண்டார் என்றும்  சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

ஆனால், அமிர்த ஜோதியும் ஓராண்டு கூட பணியாற்றவில்லை. கடந்த 17 ஆம் தேதி அமிர்த ஜோதி ஐஏஎஸ் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப்பதிலாக அருணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

விஜயராணி, அமிர்த ஜோதி, அருணா  என மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகளும் சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வருவாய் துறை தொடர்பான இயக்குனர் அல்லது செயலாளர்கள் அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் இல்லை. இருப்பினும் மூன்று பேருமே சென்னை மாவட்டத்தில் வருவாய் துறை தொடர்பான பணிகளை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளாகவே சென்னை மாவட்ட மக்கள் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பார்த்துவிட்டார்கள். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திமுக அரசு, சென்னை மாவட்ட மக்களுக்கு பரிசு வழங்கும் வகையில், நான்காவதாக புதிய ஆட்சியரை நியமனம் செய்துள்ளது.

நேற்றைய தினம் (செப்டம்பர் 7) வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின்  அறிவிப்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா மாற்றப்பட்டு அவருக்குப்பதிலாக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் முடிவடைவதற்கு முன்பாகவே சென்னை மாவட்டஆட்சியர்கள் மட்டுமே 3 பேர், விஜயராணி, அமிர்தஜோதி, அருணா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அபரிதமாக வளர்ச்சியடைந்து வரும் சென்னை மாவட்டத்தில், முதல்வர், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் என அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இருந்தாலும் கூட நிலம்  தொடர்பான பிரச்னைகள், வருவாய் விவகாரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முக்கியமான விவகாரங்களை கையாளும் முக்கிய பொறுப்பு சென்னை மாவட்ட ஆட்சியருக்குதான் உண்டு. இப்படிபட்ட நேரத்தில் சீட்டு கட்டை கலைத்து போடுவதைப் போல, சென்னை ஆட்சியரை நினைத்த நேரத்தில் தூக்கியடித்தால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

சென்னை மவட்ட ஆட்சியராக ஒருவர் நியமிக்கப்பட்டால், பரந்துபட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவதற்கும், வருவாய் உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை உள்வாங்கி கொள்வதற்கும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகுதான் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு  உரிய அதிகாரம், பொறுப்பு, கடமை ஆகியவற்றை உணர்ந்து வேகமாக செயல்பட முடியும். பயிற்சி முடித்து சில மாதங்களிலேயே வேலையை விட்டு அனுப்புவதால், பணி புரிந்தவருக்கும், பணியில் அமர்த்தப்படுவோருக்கும் ஒரு நன்மையும் விளைய போவதில்லை.

சென்னை மாவட்டத்திற்கு திறமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை ஆட்சியராக நியமித்தால், சென்னையில் வாழும் ஒருவர்   கூட, கோரிக்கை மனுக்களோடு தலைமைச் செயலகத்திற்கு வர மாட்டார்கள். முதல் அமைச்சர் குறை தீர் பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்க மாட்டார்கள்.

தலைமைச் செயலாளர் முதல் முதல் அமைச்சரின் செயலாளர்கள் வரை, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதற்காக நேர்மையான அதிகாரிகளை பலிவாங்க கூடாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

விஜயராணி முதல் அமிர்த ஜோதி வரை மூன்று பேருமே  தமிழ் மொழியில் தனித்த புலமை பெற்றவர்கள். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ், தமிழ் மொழியில் கற்றுக் குட்டியாக இருப்பவர். இவர் மக்களின் மொழியை கற்றுக் கொண்டு, மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உள்ளார்ந்த அன்போடு மனதை செலுத்துவதற்கு எல்லாம் பல மாதங்கள் ஆகும். அதேபோல, மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் உள்வாங்கி கொள்வதற்கும் நீண்ட நாட்கள் தேவைப்படும்.

முதல் அமைச்சர் வசிக்கும் மாவட்டத்தில் தமிழை தாய் மொழியாக கொண்டவர், அரசு நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் என தேர்வு செய்து ஆட்சியராக நியமனம் செய்தால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை விட கோரிக்கை மனுக்களோடு நாள்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

ஐஏஎஸ் பணியிட மாற்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதல் அமைச்சர் அலுவலக உயர் அதிகாரிகள் என்ன காரணத்தை முன் வைத்தாலும் கூட, ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்த்து, ஒரு இடத்திற்கு பணி மாறுதல் செய்யும் ஐஏஎஸ் அதிகாரி, குறைந்தது 2 ஆண்டுகளாவது அவரவர் துறையில் தொடர்ந்து செயலாற்றும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதே ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.