தாரை வே இளமதி..சிறப்புச் செய்தியாளர்..
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் முனைவர்.வெ.இறை அன்பு ஐஏஎஸ், இம்மாத நிறைவில் (ஜுன் 30) ஓய்வுப் பெறுகிறார்.
ஓய்விற்குப் பின்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பரிந்துரையின் பேரில் எந்தவொரு அரசு பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்துவிட்டார் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்ற தகவல், தமிழ்நாடு முழுவதும் பரவலாக பரவியிருக்கிறது. பிரபல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன.
முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை பொறுத்தவரை, அவருக்கு ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்களை விட, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பொது சேவையில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்கள்தான் ஆத்மார்த்தமான நண்பர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படிபட்ட தோழமைகள் தமிழகம் முழுவதும் வெட்டி விளம்பரம் செய்து கொள்ளாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதால், வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் எண்ணவோட்டத்தைப் பற்றி மூலை முடுக்கில் இருந்து எல்லாம் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. நல்லரசுக்கும் தகவல் பகிரப்படுகின்றன.
முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் புகழ் பாடும் தகவல்கள் நாள்தோறும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகள், இளம்தலைமுறையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தனிமனித ஒழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகளை போதிக்கும் வகையில் அவர் உரையாற்றிய 2500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இன்றைக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர் என்று சொல்வதை விட சேவையாற்றியவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்று கூறுவதுதான் மிகவும் பொருத்தமானதாகவும், மதிப்பிற்குரிய பாராட்டுகளாகவும் இருக்கும். இதுவரை ஐஏஎஸ் பதவியில் நேர்மையாக பணியாற்றியவர்கள் என்று பட்டியலை தொகுத்தால், பலர் இடம் பெற்றாலும் கூட மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், துயில் கொள்ளும் நேரத்தை தவிர்த்து எஞ்சிய நேரம் முழுவதும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான பணிகளிலேயே முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்று உறுதிபட கூறி விடலாம்.
தனக்கு என்று தனித்த பொழுதுபோக்கோ, குடும்பத்தின் பொழுதுபோக்கிற்கு தனியாக நேரம் ஒதுக்கியதோ பெரும்பாலும் இல்லை என்று சொல்லும் அளவுக்குதான் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் வாழ்க்கை திறந்த புத்தகமாகவே இருந்து வந்திருக்கிறது. அதுவும் மாலை நேர கேளிக்கை, விடுமுறை நாட்களில் களிப்பு என்று எந்தவொரு நிகழ்வுகளிலும் வெ.இறை அன்பு ஐஏஎஸ் நேரத்தை செலவிட்டதாக கிசுகிசு போல கூட செய்திகள் வெளியாகவில்லை.
இப்படி, உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக 38 ஆண்டுகளை செலவிட்டவர், தான் ஓய்வு பெறும் நேரத்தில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, பணியை நிறைவு செய்கிறாரா என்று கேட்டால், அவருக்கு மிகமிக நெருக்கமான தோழமைகள், மிகுந்த காயப்பட்டவராகவே தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்று மிகுந்த மனவருத்தத்துடனேயே தகவல் தெரிவிக்கிறார்கள்.
வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸை காயப்படுத்தியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினால், விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு அடையாளப்படுத்துகிறார்கள்.
முதல் பெயராக இருப்பது.. அறப்போர் இயக்கம்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு என்று குற்றம் சாட்டியது அறப்போர் இயக்கம்தான்.
அரசுப் பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஆதாயமும் பெறுவதற்கு துளியளவும் முயற்சி செய்யாதவரை, விருப்பமே இல்லாதவரை பற்றி நன்கு அறிந்திருந்த போதும், அறப்போர் இயக்கத்தின் விமர்சனம், வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை மிகவும் காயப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள்.
இரண்டாவதாக சவுக்கு சங்கரும் இதுபோன்ற விமர்சனத்தை இரண்டொரு முறை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
இதையெல்லாம் புறம் தள்ளிவிடலாம் என்றாலும் கூட தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் உயர் அதிகாரிகளிடையே காலம் காலமாக இருந்து வரும் போட்டி மனப்பான்மையும் வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸை மிகவும் காயப்படுத்திவிட்டதாகவே கூறுகிறார்கள் அவருக்கு மிகவும் விசுவாசமான அரசு அதிகாரிகள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறந்த நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வெ.இறை அன்பு ஐஏஎஸ் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், அவர் யாரை யாரையெல்லாம் முழுமையாக நம்பினாரோ, அந்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான் தலைமைச் செயலாளருக்கு மிகவும் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
அரசு அதிகாரத்தை விட அரசியல் அதிகாரத்திற்கு மிகவும் அடிமையாகி போன உயர் ஐஏஎஸ் அதிகாரிகளை நட்பு பாராட்டி கட்டுப்படுத்துவதற்கும், அதிகாரத்தின் அடிப்படையில் நேர்வழியில் நடத்துவதற்கும் கடுமையாக போராட வேண்டியிருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் அயர்ச்சி அடைந்தவிட்டார் வெ. இறை அன்பு ஐஏஎஸ்.
38 ஆண்டு கால அரசுப் பணிக்குப் பிறகு மனநிறைவோடும், நிம்மதியாகவும் ஓய்வுப்பெறுவதும்தான் அரசு பணியாளருக்கு ஆகச் சிறந்த கொடையாகும். ஆனால், அந்த பாக்கியம், வரம் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லை என்பதை அழுத்தமாகவே பதிவு செய்துவிடலாம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள்.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை சீர்ப்படுத்துவதற்கும் முழுமையாக மாற்றியமைப்பதற்கும் வெ.இறை அன்பு ஐஏஎஸ் முன்வைத்த யோசனைகளுக்கும் புதிய முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பே கிடைக்கவில்லை.
தலைமைச் செயலாளர் பணியில் மிகுந்த வேதனைகளை எதிர்கொண்ட போதும், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அரசு பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்பதில் உறுதி காட்டி வரும்போதும், வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸின் ஆற்றலை, பொதுமக்கள் மீது காட்டும் பேரன்பை வீணாக்கிவிடக் கூடாது என்றுதான் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தேதி வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
முதல்வரின் விருப்பத்தை ஏற்கும் மனநிலையிலேயே வெ.இறை அன்பு ஐஏஎஸ் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம், அவரின் நற்குணங்களை நன்கு அறிந்திருந்தவர்களே அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பியதையும், தலைமைச் செயலகத்தில் கோஷ்டி மனப்பான்மையோடு செயல்பட்டு வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவை தான் வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸை மிகவும் காயப்படுத்திவிட்டது என்கிறார்கள்.
எந்தவொரு பொறுப்பை ஏற்றாலும், மேல் மட்டத்தில் மட்டுமின்றி கீழ்மட்டம் வரை அரசு நிர்வாகத்தை தூய்மைபடுத்தும் ஆற்றல் கொண்டவர். அரசுப் பணத்தை தனிப்பட்ட ஆதாயத்திற்காக மடைமாற்றாதவர், அவரின் ஒவ்வொரு கையெழுத்தும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை அமைப்பதாகவும்தான் இருக்கும் என்பதை தமிழ்நாடே அறிந்து வைத்திருக்கிறது.
நேர்மை, எளிமை, தூய்மை போன்ற நற்குணங்கள் மட்டுமின்றி கடின உழைப்பிற்கும் அஞ்சாதவர் என 95 சதவீத தமிழ்நாட்டு மக்களால் பாராட்டப்படுகிறவர்,
60 வயதை நிறைவு செய்யும் நேரத்திலும் உடலிலும் மனதிலும் மிகுந்த புத்துணர்ச்சியோடு வலம் வந்து கொண்டிருப்பவரை, எஞ்சிய காலத்திலும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்காமல், வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள் என்று அனுமதிப்பதுதான், வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு தமிழ் மக்கள் தரும் ஓய்வு கால வெகுமதியா என்ற கேள்வியை மனசாட்சியுள்ள ஒவ்வொரு தமிழரும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று மிகுந்த பணிவோடு ஆதங்கத்தை முன்வைக்கிறார்கள் வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது அளவுகடந்த பாசத்தை காட்டும் அரசுப் பணியில் மாசற்ற நேர்மையுடனும் ஆர்வமுடனும் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தலைமை பதவியை விரும்புகிறார் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்றுதான் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு பெறும் நேரத்திலும் கூட, இவ்விரண்டு அமைப்புகளின் தலைமைப் பதவி காலியாகதான் இருக்கிறது என்பதையும் சுட்டிகாட்டுகிறார்கள்.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே பாதம் பதிக்காத வகையில் செல்வாக்கு இல்லாத துறையில் பணியமர்த்தப்பட்ட போதுகூட அனுபவிக்காத வேதனையும் துயரத்தையும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இரண்டு ஆண்டு காலத்தில் அனுபவித்துவிட்டார் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்று வேதனையை பகிருகிறார்கள் அவரது அடியொற்றி நடைபோடும் அரசு அலுவலர்கள்.
தனி மனித வாழ்விலும், அரசுத்துறை நிர்வாக பயணத்திலும் எதிரிகளையும் துரோகிகளையும் மனதார மன்னித்து, அரவணைத்து நல்வழிப்படுத்திய மாண்பை உடையவர், இன்றைய தேதியில் உடல் முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்டதை போன்ற வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு, அவர் ஓய்வு பெறும் நாளான ஜுன் 30 அன்று தமிழ் கூறும் நல்லுலகம் என்ன வெகுமதியை வழங்கப்போகிறது?
தற்போது அமைந்திருக்கும் திமுக ஆட்சியின் கீழ் பணியாற்ற நேர்மையான அரசு அதிகாரிகளால் முடியவில்லை ஒவ்வொரு ஊர்களிலும் நேர்மையான அரசியல் அதிகாரிகள் கட்சி மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் சொல் கேட்டு தான் நடக்க வேண்டும் என்ற நிலை உள்ளது
உயர்ந்த பண்பாளர்.