Sat. Nov 23rd, 2024

மோசடி வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை நல்லரசு எதிர்க்கவில்லை. ஆனால், சித்ரவதை செய்து பாசிசத்தை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசின் சர்வதிகாரத்தைதான் ஊடக அறத்தோடு நல்லரசு எதிர்க்கிறது.

தமிழக அரசியல் களம் அக்னி நட்சத்திரத்தைவிட கொடுமையாக கொதித்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் போது மத்திய பாஜக அரசு, தமிழகத்தை அதகளம் செய்து அரசியல் லாபம் அடைவதற்கு அறத்திற்கு அப்பாற்றப்பட்டு அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது என்கிறார்கள் அனுபவம் மிகுந்த அரசியல் திறனாய்வாளர்கள்.

1967 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திராவிட இயக்கம், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

திமுக மற்றும் அதிமுக என மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தாலும் ஆட்சிக்கு தலைமை ஏற்றவர்கள் மீதும் ஒட்டுமொத்த அமைச்சரவை மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த போதும் கூட, இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடு தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்வி, தொழில் துறை, சுகாதாரம், தனி மனிதரின் மேம்பட்ட பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் தனித்துவமாக திகழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடுதான்.

உலகளவில் தமிழ் இனத்தின் பெருமைகள் பரவிக் கிடப்பதை வடமாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக ஹிந்தி மொழி வெறியாளர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய வடமாநிலங்களில் அடிப்படை கட்டமைப்புகள் கூட மேம்படுத்தப்படவில்லை. 60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள், நாடோடி வாழ்க்கையை தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய பாஜக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 9 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், வடமாநிலங்களில் வளர்ச்சித்திட்டங்களை அதிகளவில் அமல்படுத்தி, மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு வக்கில்லாத மத்திய பாஜக ஆட்சியாளர்கள், தனித்த செல்வாக்கோடு உள்ள மாநிலங்களை குறி வைத்து அழிப்பதில் அராஜக முறையையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மேற்கு வங்கம், பீகார், டெல்லி, பஞ்சாப், கேரளம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மத்திய பாஜக அரசு, ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் குழித்தோண்டி புதைக்கும் வகையில் பல அராஜகங்களை செய்து வருவதை எல்லாம் வரலாறாக இருக்கிறது.

அமைதி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு, திராவிட ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பதையும் திராவிட மண் என்ற உணர்வில் இருந்து மக்கள் விடுபடுவது என்பதும் சாதாரண விஷயம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிற மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் ஒட்டுமொத்த திராவிட ஆட்சியாளர்களை அகற்றுவதற்கு போட்டுள்ள திட்டம், கடந்த இரணடு நாட்களில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை.

கே. அண்ணாமலையின் கடுமையான விமர்சனத்தால் அதிமுக பிளவுபட்டு கிடந்தாலும் கூட, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை சீற்றத்துடனேயே முன்வைத்து வருகிறார்கள்.

அதிமுகவை குறி வைத்திருப்பதை போலவே, ஆளும்கட்சியான திமுகவையும் குறி வைத்து மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டியிருப்பதும் ஜுன் 13 ம் தேதி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஊழலை ஒழித்து நேர்மையான ஆட்சி வழங்குவதே பாரதிய ஜனதாவின் லட்சியம் என்று பகல் வேஷம் போடும் பாரதிய ஜனதா கட்சி, கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களை, பாஜகவில் இணைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் புனிதர்களாக்கிய அற்புதத்தை நாட்டு மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அதிகாரப்பூர்வமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனை, மாநில சுயாட்சியை கேலிக்குரியதாக்கியதாக்கியதுடன், மத்திய பாஜக அரசை பகைத்துக் கொண்டால், தனித்துவமான அதிகாரம் படைத்த வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை என அனைத்து சர்வதிகாரம் படைத்த முகமைகளை ஏவிவிடுவோம் என்ற மிரட்டலை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

ஜனநாயக மரபுகளுக்கு மாறாக, சட்ட விதிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜியை நள்ளிரவில் அமலாக்கத்துறை  கைது செய்யும் போது, ஆளும்கட்சி திமுக தொண்டர்கள் ஆவேசம் அடைந்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். அதன் மூலம் திமுக ஆட்சிக்கே நெருக்கடி ஏற்படுத்தலாம் என்பதெல்லாம் மத்திய பாஜக அரசின் அராஜக திட்டமாக இருக்கலாம் என்பதுதான் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்தாக உள்ளது.

அமைச்சர் வி. செந்தில்பாலாஜிக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றவுள்ள எதிர்வினையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் வி. செந்தில்பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு என்பது சாதாரண மோசடி வழக்குதான். 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு வழக்கின் மீது இவ்வளவு கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் மத்திய பாஜக அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதுதான் கேள்வி.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறையும், துணை ராணுவ படையும்,  கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையுள்ள நாட்டில் ஒரு மாநிலத்திற்குள் முன்அனுமதியின்றி நுழைந்து, அராஜகம் செய்வதற்கு எதிராக நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் ஓரணியில் நின்று அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரள வேண்டும். அதேநேரத்தில், பங்காளி பகையை மறந்து அதிமுகவும், மாநில சுயாட்சியின் கொள்கைக்கு உயிர் கொடுக்கும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தவாதிகளின் வேண்டுகோளாக வருகிறது.

ஆளும்கட்சியான திமுகவின் குரல் வளையையே கடுமையாக நசுக்கிறது மத்திய பாஜக அரசு என்கிற போது, அதிமுகவுக்கு அண்ணாமலை மூலம் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அச்சத்துடனேயே விவரிக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.   

அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விரிவாக பார்ப்போம்.

அதிமுக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வைத்த விமர்சனம் அதிமுகவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் செல்வி ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என நேரடியாக சொல்லாத அண்ணாமலை, மறைமுகமாக செய்திருந்த விமர்சனம், அரசியல் களத்தை சூடாக்கி விட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சி என்று பெயர் எடுத்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், படு சூடாகவே காணப்பட்டார். இதற்கு முன்பு அண்ணாமலைக்கு எதிராக வைத்த விமர்சனங்களை விட கடுமையாக வசை பாடினார். தலைவர் பதவிக்கே தகுதியில்லாதவர் என்றும் அண்ணாமலையின் தரமற்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்றால், பாஜகவுடனான கூட்டணியையே மறுபரிசிலனை செய்ய வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படும் என்று காட்டமாக கூறினார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரை விட மிகவும் கோபமாக பேட்டியளித்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அவர் கோபப்பட்டு பேட்டியளிக்க துணிந்து விட்டால், எடப்பாடியாரால் கூட தடுக்க முடியாது என்று அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கூறுவார்கள்.

அதற்கு ஏற்ப தான் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. போலீஸ் ஸ்டேஷனில் மாமூல் வாங்கி கொண்டிருந்தார். 40 பர்சென்ட் கமிஷன் கட்சி பாஜக என்றெல்லாம் அவரது பாணியிலேயே சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்தார் சி.வி. சண்மும்.

வெளிப்படையாக பேட்டியளித்த ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரிடம் இருந்து வெளிப்பட்ட கொந்தளிப்பான உணர்வுதான், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடமும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் அண்ணாமலைக்கு எதிராக சுடுச் சொற்களால் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்வர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று அண்ணாமலை கூறியிருந்தாலும் கூட அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, அக்கட்சியினரால் தெய்வத்தாயாக போற்றப்படும் செல்வி ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்ததை அதிமுகவினரால் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அண்ணாமலைக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றால், தனது தலைமைக்கே ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தினால்தான், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார் எடப்பாடியார்.

அதிமுக தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை கடுமையான கொந்தளிப்பில் இருந்து வந்த நிலையில் அவர்களின் கோபத்தை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி எரிக்கும் வகையில் பாஜக மாநில துணை தலைவர்  கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட மேலும் பலர், பாஜகவின் பலம் தெரியாமல் பேசியுள்ளதற்கும் அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டும் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கையில் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறாத கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் போன்றோர், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுகவையும், அக்கட்சியின் அசைக்க முடியாத தலைவராக வாழ்ந்து மறைந்த செல்வி ஜெயலலிதாவையும் கேவலப்படுத்தியிருப்பதை ஜீரணிக்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியே இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எல்லாம் கரு நாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவையும் அதன் தலைவர்களையும் கிள்ளுக்கீரையாக நினைப்பதுடன் எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் அனைவருமே  பாஜக அரசின் அடிமைகள் என்ற நினைப்பிலேயே இருந்து வரும் கே. அண்ணாமலை, அதிமுகவை மிகவும் கேவலப்படுத்தும் வகையிலேயே கொஞ்சம் கூட பயமின்றி தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் அண்ணாமலை.

மத்திய பாஜக அரசை சமாளிப்பதா.. தமிழகத்தில் அதிமுகவை நாள்தோறும் கேவலப்படுத்தி வரும் அண்ணாமலையை சமாளிப்பதா என்று தெரியாமல் தவித்து வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வரையிலாவது அண்ணாமலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்படுத்தி வைப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துவிட்டு சென்ற பிறகு, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களையும் ஆவேசம் கொள்ளும் வகையில், செல்வி ஜெயலலிதா பற்றியே கடுமையான விமர்சனத்தை அண்ணாமலை வைப்பார் என்று எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு இதே ஜுன் மாதம்தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் தலைமையிலான ஒரு அணி, கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து, எடப்பாடியார் தலைமையில் ஒற்றுமையாக இருக்கும் அதிமுகவை செல்வாக்கு இல்லாமல் செய்வதற்கான எல்லா வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

திருச்சியில் தனித்து மாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் ஓபிஎஸ். அதற்கடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடியாருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்த அணியில் விரைவில் வி.கே.சசிகலாவும் இணையவுள்ளார்.

தென் மாவட்டங்கள் இன்றைய தேதியிலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகிய மூவர் அணியின் பிடியில் இருந்து வரும் நேரத்தில், அவர்களை செல்லாக்காசாக்கிவிட்டு, ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிமுகவின் ஒற்றை தலைவராக வலம் வரும் காய் நகர்த்தி வரும் எடப்பாடியாருக்கு, அண்ணாமலையே பெரும் தலைவலியாக மாறி நிற்கிறார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், விகே சகிகலா ஆகியோரிடம் இருந்து வரும் நெருக்கடிகளை சமாளிப்பதா.. அல்லது ஒட்டுமொத்த அதிமுகவையும் சிதைக்கும் வகையில் அண்ணாமலை மேற்கொண்டு வரும் அரசியல் சித்துவிளையாட்டுகளை தவிடி பொடியாக்குவதா என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஒரு மாதத்திற்கு முன்புதான் அண்ணாமலைக்கும் எடப்பாடியாருக்கும் இடையே உள்ள முட்டல் மோதல் தொடர்பான பஞ்சாயத்து சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அன்றைய கூட்டத்தில் அமைதியாக இருந்த கே.அண்ணாமலை, தமிழகத்தில் அரசியல் செய்யும் போது தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை பார்வையில் கூட்டணி கட்சியான அதிமுகவும், திமுகவும் ஊழல் கட்சிகள்தான் என்பது அவரது தொடர் செயல்பாடுகளின் மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது.

அதுவும் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் நோக்கத்துடன் சென்னைக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய மறுநாளே, அதிமுகவும் திமுகவும் தனித்தனியாக பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கி நிம்மதியை தொலைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் திமுகவையும் அதிமுகவையும் அழித்தொழிக்கும் நயவஞ்ச திட்டத்தை கையில் எடுத்துகிறார்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, தேர்தல் லாப, நட்டங்களை கருத்தில் கொள்ளாமல், திராவிட ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்றிவிட்டு, பாசிச ஆட்சியை உருவாக்குவதற்கு பாஜக செய்யும் சதித்திட்டங்களை முறியடிக்க, திராவிட சிந்தனையாளர்கள், அரசியல் மாச்சர்யங்களை மறந்து ஓரணியில் திரண்டு, மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதில் திமுகவும் அதிமுகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே திராவிட சித்தாந்தவாதிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.