Tue. Sep 26th, 2023

தாரை இளமதி.,சிறப்புச் செய்தியாளர்

தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை விட விருப்ப ஓய்வுப் பெற்ற சகாயம் ஐஏஎஸ் நேர்மையாளர் என்று  யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பழுத்த  அரசியல் தலைவர் பழ.கருப்பையா பூரிப்போடு கூறியிருக்கிறார்.

சகாயம் ஐஏஎஸ்ஸின் நேர்மை பற்றி பாராட்டு மழை பொழிவதில் நல்லரசுக்கும் உடன்பாடே. ஆனால், முனைவர் வெ.இறை அன்பு ஐஏ எஸ்ஸோடு ஒப்பிட வேண்டிய அவசியம் ஏன்? வந்தது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இரண்டு அதிகாரிகளுடனும் குறிப்பாக, சகாயம் ஐஏஎஸ்ஸோடு எந்தளவுக்கு பழ.கருப்பையாவுக்கு நேரடி தொடர்பு இருந்திருக்கும் என்பது பற்றி நல்லரசுக்கு தெரியாது.

சகாயம் ஐஏஎஸ்ஸை பாராட்டுவதற்காக, வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் நேர்மையை களங்கப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் நல்லரசுவின் அனல் கக்கும் கேள்வி.

வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸிற்கு எதிராக பழ.கருப்பையா முன்வைக்கும் விமர்சனத்திற்கு பதிலோ, விளக்கமோ அளிக்க வேண்டிய கட்டாயம் நல்லரசுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கமே இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இரண்டு அதிகாரிகளுடனும் நெருங்கி பழகியவன் என்பதால், இருவரின் குணநலன்களை அதே காலங்களில் மதிப்பிடு செய்து விலகி நின்று பார்த்தவன் நான்.  

ஊடகவியலாளர் என்ற முறையில் கூட வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு முதன் முதலாக கிட்டவில்லை. 1997 ஆம் ஆண்டில் அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில், அவரைப் பற்றியும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தை பற்றியும் ஆனந்த விகடனில் முழுமையாக கட்டுரை வெளியாகி இருந்தது. அப்போது சென்னையில் தராசு அலுவலகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த நான், கட்டுரையில் சேலத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்ததை அறிந்து அவரது மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற மகிழ்ச்சியில் நீல வண்ணம் கொண்ட உள்நாட்டு அஞ்சலில், அவரது பெயரை குறிப்பிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மடலை அனுப்பி வைத்தேன்.

இரண்டொரு நாள் கடந்த பிறகு தராசு அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெ.இறை அன்பு ஐஏஎஸ்,  அன்பை பகிர்ந்து கொண்டு, எனது ஊடகப் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து, இணைப்பை துண்டித்துக் கொண்டார்.

அடுத்த ஓராண்டிற்குள் தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் திறப்பு விழா நடைபெற்றது. அதே காலத்தில் தராசு நாளிதழும் தொடங்கப்பட்டிருந்ததால், சமத்துவபுர திறப்பு விழா விளம்பரம் மற்றும் விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தராசு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.

அப்போதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் போராளியாகவே வாழ்ந்து கொண்டிருந்த தராசு மாவட்ட செய்தியாளர் ஜேம்ஸ் பணியாற்றி வந்தபோதும், சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர் குழுவில் நானும் பயணித்தேன்.

ஜேம்ஸ், மூத்த செய்தியாளர்- களப் போராளி…

விழா மேடையில்தான் முதன்முதலாக வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை நேரில் பார்த்தேன். மேடையில், வரவேற்புரையோ, நன்றியுரையோ ஆற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் சகாயத்தின் உரை வீச்சு கலைஞர் உள்ளிட்ட பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதே விழா மேடையில், வெ. இறை அன்பு ஐஏஎஸ், சென்னைக்கு மாற்றப்படவுள்ளார் என்ற தகவலை முதல்வர் கூறியபோது, ​​பங்கேற்பாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் சென்னைக்கு மாற்றப்பட்டார் வெ.இறை அன்பு ஐஏஎஸ். 2000 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து திருச்சிக்கு தினமலரின் சகோதர நிறுவனமான காலைக்கதிர் நாளிதழில் அரசியல் நிருபராக பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்று விட்டேன். அப்போது அங்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ். செய்தியாளர் சந்திப்புகளின் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அங்கீகாரம் கிடைத்தது.

 

6 மாத காலத்திற்குப் பிறகு , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் எஸ்ஆர்எம் ஆக சகாயம், திருச்சிக்கு மாற்றப்பட்டிருந்தார். அப்போது அவர் ஐஏஎஸ் அதிகாரியாக அந்தஸ்து பெற்றிருக்கவில்லை. பள்ளி நிகழ்வு ஒன்றில் ஆற்றிய உரை பற்றி தினமணி நாளிதழிலில் செய்து வெளியாகியிருந்ததை அடுத்து சகாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேன். ஒருமணி நேரத்திற்கு மேலாக பல அம்சங்களை பகிர்ந்து கொண்டார். அப்போதே தமிழ்நாடு அரசின் தலைமையை ஏற்றிருந்தவர்கள் மீது அவருக்கு வருத்தம் இருந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அதன் பிறகு 2003 ஆம் ஆண்டில் சேலம் காலைகதிர் பதிப்பிற்கு பணிமாறுதல் பெற்று சென்ற பிறகு சிறிது காலத்திலேயே நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் சகாயம். அப்போதும் அவருடன் தொடர்பில் இருந்துவந்த நான், ஒருமுறை எனது மகனை ஐஏஎஸ் அதிகாரியாக்கும் கனவில், நாமக்கல்லில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கே எனது மகனை அழைத்துச் சென்றேன். ஒரு மணி நேரத்தை ஒதுக்கி மிகுந்த அன்பு காட்டி அறிவுரைகளை வழங்கினார், சகாயம்.

2006 ஆம் ஆண்டில் சென்னையில் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாளராக நான் பணி புரிந்த போது, தொழில் வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றினார் சகாயம். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அவரது அலுவலகம் அமைந்திருந்தது. அப்போதுதான் ஐஏஎஸ்ஸுக்கு உரிய பதவி உயர்வு தனக்கு  வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சகாயம்.

அந்த நேரத்தில் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். எரிமலை போல வெடித்தார் சகாயம். அப்போது அவரது கோபம் முழுக்க, முழுக்க வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீதே இருந்தது. அன்று வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது அவர் வெளிப்படுத்திய அவதூறுகளுக்கு, காழ்ப்புணர்ச்சிகளுக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2021 ஆம் ஆண்டில்தான் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பே எனக்கு கிட்டியது.

அன்றைய தேதியில் சகாயம் கூறிய வார்த்தைகளை நம்பி, வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு எதிராக குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரே ஒரு வரிச் செய்தி வெளியிட்டிருந்தால் கூட, வாழ்நாள் முழுவதும் குற்றம் இழைத்தவன் என்ற உணர்விலேயே ஆயுளை முடிக்க வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்திருக்கும்.

சகாயம் ஐஏஎஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவன் நான். 2021ல் ஐஏஎஸ் பதவிக்குரிய கடமைகளை உணர்ந்து கொள்ளாமலும் பொறுமையின்றியும், அவசரப்பட்டு விருப்ப ஓய்வில் சகாயம் அரசுப் பணியை உதறியபோது, உண்மையான அக்கறையோடு அவர் மீது பரிதாபம் ஏற்பட்ட காலம் அது. அவரது குடும்ப பொருளாதார நிலை பற்றியும் உள்வாங்கியிருந்ததும் மற்றொரு காரணமாகும்.

வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது சகாயம் காழ்ப்புணர்ச்சி காட்டியதற்கு என்ன காரணம் ?

வெ,இறை அன்பு ஐஏஎஸ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1997 காலகட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது, அவரது தலைமையின் கீழ் வருவாய் அலுவலராக பணியாற்றியவர் சகாயம். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடுகளை குறிப்பிடும் பணி பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர் –SR Book ) சகாயத்தின் அன்றாட செயல்பாடுகளை பாராட்டி குறிப்புகளை வெ.இறையன்பு ஐஏஎஸ் எழுதாமல் தவிர்த்ததாலேயே தனக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய ஐஏஎஸ் அந்தஸ்தை, போராடி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக 2008 ஆம் ஆண்டில் என்னிடம் கூறியிருந்தார் சகாயம்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக, வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே 2009 ஆம் ஆண்டு முதலாகவே அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தேன், 2021ல் வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பிறகும் கூட, இன்றைய தேதி வரை வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸை நேரில் சந்திக்க முயற்சித்தது இல்லை.

வெ.இறை அன்பு மீது சகாயம் ஐஏஎஸ் வெளிப்படுத்திய அவதூறில் ஒரு துளியளவு கூட உண்மையில்லை என்பதை 2021ம் ஆண்டில் நான் எப்படி அறிந்து கொண்டேன் என்பதே விசித்திரமான ஒன்று.

2001 ஆம் ஆண்டில் திருச்சியில் ஆட்சியராக பணியாற்றி மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ் சென்னைக்கு பணிமாறுதலாகி, தொடர்ந்து சென்னையிலேயே பல்வேறு அரசு துறைகளில் பல்வேறு அந்தஸ்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறையோ, பல வருடங்களுக்கு ஓரிரு முறையோ அவரை நேரில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருப்பவன்.  

அப்படி, சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ்ஸை சந்தித்த நேரத்தில், சகாயம் ஐஏஎஸ் ஓய்வுப் பற்றி கருத்துகள் பகிர்ந்து கொண்ட போது, அவசரப்பட்டுவிட்டார் என்று உண்மையிலேயே வருத்தத்தை வெளிப்படுத்தினார் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ்.

முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது சகாயம் ஐஏஎஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு (2008) வீசிய வெறுப்பைப் பற்றி நான் பகிர்ந்து கொண்டபோது, ​​அதிர்ச்சியடைந்துவிட்டார் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ். வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு எதிரான சகாயம் ஐஏஎஸ்ஸின் குற்றச்சாட்டுகளில் நெல்முனையளவு கூட உண்மையில்லை என்று உறுதிபட கூறி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ்.

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் வெ.இறையன்பு ஐஏஎஸ். மாவட்ட வருவாய் அலுவலர் சகாயம். அதே காலத்தில் திட்ட அலுவலராக பணியாற்றியிருக்கிறார் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ்.

தனது தலைமையின் கீழ் பணியாற்றிய சகாயம் மற்றும் மணிவாசன் ஐஏஎஸ் இருவர் மீதும் தாய் நிலையில்தான் அரவணைத்து வழிநடத்தியிருக்கிறார் வெ.இறை அன்பு ஐஏஎஸ். விருப்பு, வெறுப்புகளை ஒருபோதும் வெ.இறை அன்பு ஐஏஎஸ் காட்டியதில்லை என்றும் பழிவாங்கும் குணமே அவருக்கு எப்போதும் இருந்ததில்லை என்றும் சகாயத்திற்கு எதிராக பணி பதிவேட்டில் வெ.இறை அன்பு ஐஏஎஸ் குறிப்புகளை பதிவு செய்திருப்பார் என்பதையெல்லாம் அன்றைய காலத்திலேயே (1998) தான் கேள்விப்பட்டதில்லை என்றும் மனம் திறந்து கூறினார் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ்.

அன்றைய தேதியில்தான் என் மனதில் படிந்திருந்த சகாயம் ஐஏஎஸ் பற்றிய எல்லா மதிப்பீடுகளும் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தை கொண்டிருந்தார் சகாயம் ஐஏஎஸ் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்ல முடியவில்லை. இதுவரை இந்த தகவலை எங்குமே பகிர்ந்து கொண்டதில்லை.

2008 ல் பணி பதிவேடு பற்றி கருத்துகளை பகிர்ந்து கொண்ட சகாயத்திடம், கொஞ்சம் கோபத்துடனேயே மறுமொழி கூறினேன். வெ.இறை அன்பு ஐஏஎஸ் மிகவும் நேர்மையானர் என்று எல்லோரும் கூறுவதை வைத்து நான் பரிந்து பேசவில்லை. 2004 ஆம் ஆண்டில் சேலத்தில் காலைக்கதிர் செய்தியாளராக நான் பணிபுரிந்த போது, வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் ஒட்டுமொத்த குடும்பத்தை பற்றி சிறப்பு கட்டுரை வெளியிடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்று பலமணிநேரம் செலவிட்டிருக்கிறேன்.

பழுப்பு நிறம் படர்ந்திருந்த ஒரு வேட்டியையும் கசங்கிய சட்டையும் அணிந்து கொண்டிருந்தார் வெ.இறை அன்பு ஐஏஎஸ். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், கல்லூரி பேராசிரியையான சகோதரி என நடமாடிய அந்த வீட்டில், அவர்களின் தந்தை, தாய் ஆகியோர் மிகவும் எளிமையாக காட்சியளித்தனர்.

சேலம் மாநகரின் இதயப் பகுதியில் சொந்த வீடு இருந்தால், அவர்களின் குடும்ப பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவே உணர முடியும். வெ.இறை அன்பு ஐஏஎஸ், திருப்புகழ் ஐஏஎஸ் ஆகியோர் ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே சொந்த வீட்டின் உரிமையாளராக இருந்தார் அவர்களின் தந்தையார்.

இப்படிபட்ட குடும்ப பின்னணியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக, அறவழியில் இருந்து எள் முனையளவும் தடம் மாறாமல் அரசு பணியை தொடருபவரை, மனதின் அடித்தளத்தில் காழ்ப்புணர்ச்சி அதிகளவு மண்டி கிடப்பவரால் மட்டுமே தரக்குறைவான விமர்சனத்தை வைக்க முடியும். அப்படிபட்டவராகதான் சகாயம் இருந்தார்.

உலகத்திலேயே வேறு எந்த மனிதருக்கும் இல்லாத சிறப்பை போல, வெ.இறை அன்பு ஐஏஎஸ் மட்டுமே நேர்மையானவர் என்று கூறுகிறீர்களே.. அவர் அணிந்து கொள்ளும் சட்டை மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா.. ஆயிரத்து 500 ரூபாய்க்கு சட்டை அணிந்து கொண்டிருக்கிறார். அரசு சம்பளம் மட்டுமே வாங்குகிற வெ.இறை அன்புவால் இவ்வளவு விலை உயர்ந்த சட்டைகளை எப்படி அணிய முடிகிறது என்று சகாயம் கேட்ட போது, ​​அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைத்து வெளியேறிவிட்டேன்.

2008 ஆம் ஆண்டு சந்திப்புக்குப் பிறகு சகாயம் ஐஏஎஸ்ஸை நேரிடையாக சந்திக்கவே இல்லை.

ஐஏஎஸ் அதிகாரிகளை பற்றி செவி வழியாக கிடைக்கிற செய்திகளை வைத்து,, ஒருவரை புகழ்வது மற்றொருவரை தரம் தாழ்த்துவம் தமிழ் மண்ணில் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. அதுவும் யூ டியூப் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் தனிமனித வாழ்வில் சுய ஒழுக்கம் இல்லாதவர்கள், அநாகரிகமான நடத்தை கொண்டவர்கள் எல்லாம், ஊடகவியலாளர்களாகவே மாறி விருப்பம், வெறுப்புடன் தூற்றுவதும் பாராட்டுவதும் அதிகமாகிவிட்டது.

பழ.கருப்பையா போன்ற அனுபவம் மிகுந்த அரசியல்வாதியும், நேர்மையையும் அறவாழ்க்கை கொண்டாடுபவர்கள், அத்திபூத்தாற் போல நேர்மையுடனும், மிகுந்த அறத்துடனும் வாழும் வெ.இறை அன்பு ஐ.ஏ.எஸ் போன்ற ஒன்றிரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது பழிச்சொற்களை வீசினால், நிகழாண்டில் மட்டுமின்றி எதிர் காலத்திலும் நேர்மையுடன் அரசு பணியாற்ற வேண்டும் என்ற தாகம். கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருவரை கூட பார்க்க முடியாத அவலம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற விரும்பியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்ததாக அவரது நட்பு வட்டத்தில் நீடித்து வந்த மூத்த ஊடகவியலாளர் கூறியதை கேட்டு அழுவதா.. பிரார்த்தனை செய்யலாமா என்று தான் தோன்றியது..

முதல் காரணம் – சகாயம் ஐஏஎஸ்ஸுக்கு அழுத்தமான நம்பிக்கை கொடுத்தது, அரசியல்வாதியாகி முதல் அமைச்சர் அரியாசனத்தில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற பேராசைதான்..

இரண்டாவது காரணம் தான் கொடூரமானது..

சிஷ்டம் சரியில்லை என ஆவேசம் காட்டிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து விடுவார்.. தன்னை முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர வைத்து விடுவார் என்ற பேராசை…இவை தான் ஐஏஎஸ் பதவியை உதறி றிய சகாயத்திற்கு தூண்டுகோலாக இருந்தது என்கிறார்கள்…

இந்தக் கட்டுரைக்காக, மூத்த ஊடகவியலாளரும், வெ.இறை அன்பு ஐஏஎஸ், மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ், சகாயம் ஆகிய மூவரும் பணியாற்றிய அதே காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றி ஜேம்ஸிடம் பேசிய போது, 30 நிமிடத்திற்கு மேலாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டர். ரத்தின சுருக்கமாக அவரது கருத்தை கீழே பதிவு செய்கிறேன்.

ஜனநாயக அமைப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மற்றும் அரசு அலுவலர்களுக்கு உள்ள அதிகார வரம்பிற்குள் நின்றுதான் மக்கள் பணியை ஆற்ற முடியும். ஆனால், ஐஏஎஸ் அந்தஸ்தை பெறுவதற்கு முன்பாகவே, அதிகார வரம்புகளை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவர் சகாயம். அதைவிட நெருக்கடி என்னவென்றால், ஆட்சியருக்கு உரிய அதிகாரங்கள் எல்லாம் தனக்கும் உண்டு என்று நினைத்துக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பணியில் செயல்பட்ட போதுதான் சகாயத்திற்கு, அன்றைய காலத்திலேயே  (1998 ஆம் ஆண்டில்) சிக்கல்கள் அதிகம் உருவாகின.  உள்துறை செயலாளர், தொழில்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் என உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகியதால்தான், சகாயம் அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதுதான் ஜேம்ஸின் வாக்குமூலம்.

நிறைவாக, பழ கருப்பையாவுக்கு பகிரங்க சவால். அவர் தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இருந்தோ.. அல்லது அவரது ரத்த சம்பந்தமான உறவுகளில் பத்தாயிரம் பேரையோ அழைத்து, அறத்திற்கு அப்பாற்பட்டு ஒரு பைசா கூட ஈட்டக் கூடாது. அறத்திற்கு அப்பாற்பட்டு ஒருவரிடமும் உதவி கேட்க கூடாது என்று சத்தியம் வாங்கி, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வாழும் மனஉறுதியோடு வாழும் ஒருவரை, இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த முடிந்தால், சகாயத்தை விட நேர்மையானவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் இல்லை என்பதை நல்லரசுவும் ஒப்புக் கொள்ள தயாராகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கெட்டு கிடக்கும் நேரத்தில், ஒட்டுமொத்த வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டு வாழும் வெ.இறை அன்பு ஐஏஎஸ் போன்ற ஒரு சில அரசு அதிகாரிகள் மனம் நொந்து போகும் வகையில், பொறுப்பற்று வார்த்தைகளை கொட்டக் கூடாது என்பதுதான் நல்லரசுவின் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்த விவகாரத்தை கடந்து பழ கருப்பையா மீது நல்லரசுக்கு உள்ள பரிதாபம் என்னவென்றால், , அரசியல் கட்சி மாறுவதையே இன்பச் சுற்றுலா போல மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கும் சஞ்சல மனிதரான பழ.கருப்பையா, இன்னொரு தமிழருவி மணியனாக மாறி விடுவாரோ என்பதுதான் அச்சமாக இருக்கிறது.

வெ.இறை அன்பு ஐஏஎஸ் ஓய்வு பெறும் தேதி குறித்த செய்தியை நல்லரசு, முழுமனதோடு வெளியிடவில்லை. ஆனால், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது என்பதும் நூற்றுக்கணக்கானோர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் மீது காட்டும் அன்பு வெள்ளத்திற்கு இடையே கூவம் போல, பழ கருப்பையா காட்டும் வெறுப்பு அரசியல், அர்த்தமில்லாத, அடையாளமில்லாத வகையில் அடித்து செல்லப்பட்டு உள்ளது என்பதுதான் நல்லரசுக்கு கிடைத்திருக்கும் ஒட்டுமொத்த பூரிப்பாகும்…

மூத்த ஊடகவியலாளர் ஜேம்ஸுடன் சிறப்பு செய்தியாளர் தாரை இளமதி..

2 thoughts on “வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் நேர்மை மீது சந்தேகமா? அரசியல் சுற்றுலா விரும்பி பழ.கருப்பையாவுக்கு பகிரங்க சவால்….”
  1. சார் வணக்கம். அருமையான கட்டுரையை எழுதிவிட்டு கடைசியில் வீழ்ந்துவிட்டீர்களே. பழ.கருப்பையாவை எப்படி நீங்கள் தமிழருவியாருடன் ஒப்பிட முடியும். சகாயத்தை எப்படி இறையன்பு சாருடன் ஒப்பிட முடியாதோ அப்படித் தான் இதுவும். தமிழருவியார் போல் பழ.கருப்பையா ஆவது எங்ஙனம்? மலைக்கும் மடுவுக்கான வித்தியாசம் அல்லவா?

    தமிழருவியா் பதவிக்காக கட்சி மாறியதுண்டா? பழ.கருப்பையாவின் நிலை என்ன? யோசியுங்கள்.

  2. எல்லாம் சரியாக எழுதிவிட்டு பதவிக்காக கட்சி மாறும் பழ. கருப்பையாவை பதவியை நோக்கி செல்லாத தமிழருவியாரூடன் ஒப்பிடுவது சரியா?

Comments are closed.