Fri. Apr 26th, 2024

 திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, குறுகிய காலத்திலேயே மரணத்தை தழுவியதை அடுத்து, அண்ணாவின் தம்பிகளுக்கு இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியபோது, தனது போட்டியாளர்களையே ஆதரவாளர்களாக மாற்றி, திமுகவுக்கு 1969 ஆம் ஆண்டில் தலைமை ஏற்கும் வகையில் ஆகச் சிறந்த சாணக்கியராக திகழ்ந்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி.

திமுகவுக்கும் தமிழக அரசுக்கும் ஒருசேர தலைமை ஏற்ற போது கலைஞர் மு.கருணாநிதியின் வயது 45 தான். அந்த வயதிலேயே இலக்கியத் துறையில் மிகப் பெரிய சாதனைக்குரியவராக உயர்ந்து நின்ற அதே நேரத்தில் அரசியலிலும் ஆளுமை மிகுந்த தலைவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். கிட்டதட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அற்புத நிகழ்வு இது.

2018 ஆம் ஆண்டில் மண்ணுலகில் இருந்து விடை பெறும் வரை, தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் ஆகச் சிறந்த சாணக்கியராகவே திகழ்ந்தவர். இளமைக் காலம் முதல் தனது இறுதி காலம் வரை வாழ்ந்த சென்னை கோபாலபுரம் இல்லத்தில், பாதம் பதிக்காத அகில இந்திய அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லி விட முடியும். அதைவிட கூடுதல் சிறப்பாக, ஆன்மிக தலைவர்கள், உலகம் போற்றும் ஆளுமைகள், அறிவியலாளர்கள், பல்துறை வித்தகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதும் ஆசி வழங்கியதும், இன்றைக்கும் கோபாலபுரம் சுமந்திருக்கும் அழிக்க முடியாத வரலாறாகும்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு கிடைக்காத சிறப்பு, கலைஞர் மு.கருணாநிதிக்கு காலம் வழங்கிய நற்கொடை தான், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்பது. தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவாகவே போற்றப்படும் தமிழ் ஈழ விவகாரத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதைப் போல, தமிழ்நாட்டின் உரிமைகளை, தமிழ் தேசியத்திற்கு அடித்தளம் அமைக்காமல், திராவிட சித்தாந்தத்தை நீடித்து நிலைக்க வைத்துவிட்டார் என்ற கோபம் இருந்தாலும் கூட, தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டிற்காக எல்லா வகையிலான விமர்சனங்களையும் தள்ளி வைத்துவிட்டு, உலக தமிழர்களின் தலைவர் கலைஞர் என்று வரலாற்று பதிவுகளில் உள்ள முழக்கம், இன்றைக்கும் கூட கண்ணியம் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  

திரைப்படத்துறையில் கோலோச்சியதை விட, இலக்கியத்துறையில் கோலோச்சியதை விட, தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய அரசியலில் கொடி கட்டி பறந்த தலைவர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத தலைவராக கலைஞர் மு.கருணாநிதியை, பூமி பந்து சிதையாத காலம் வரை வரலாறு சுமந்து கொண்டே இருக்கும்.

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஐந்து முறை அரியாசணத்தில் அமர்ந்தவர் என்ற வரலாற்றையும், 6 ஆயிரத்து 863 நாட்கள் ஆட்சிப் புரிந்தவர் என்பதும் காலத்தால் அழிக்க முடியாத வரலாறாகும். கழகத்திற்கும் சேர்த்து வைத்திருக்கும் மாபெரும் சொத்தாகும்.   

அரசியலையே வாழ்நாள் தவமாக கொண்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி, இளமைக் காலம் முதல் இறுதிக்காலம் வரை இயல், இசை, நாடகம் என பழங்கால தமிழ் விற்பனர்களைப் போல, பல்துறை வித்தகராகவே வாழ்ந்தார்.

அதனாலேயே, அரசியலை தூற்றியவர்கள் கூட கலைஞர் மு.கருணாநிதியின் நட்பிற்காக, அன்பிற்குரியவராக வாழ்வதற்கு ஆசைப்பட்ட எதிரணி தலைவர்கள் ஏராளம், ஏராளம்.

வசைப்பாடியவர்களை எல்லாம் தமது வாழ்நாளிலேயே வாழ்த்துப்பா பாட வைத்த ஆற்றலாளர் கலைஞர் மு.கருணாநிதியின் 100 வது பிறந்தநாள், தரணியெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களால், இன்றைய தேதியில் வரலாற்று நிகழ்வாகவே மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.   

நூற்றாண்டு பிறந்தநாள் விழா காலத்தில் திமுக ஆட்சியில் இருப்பதும், அதுவும் கலைஞரின் புதல்வரே தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்து வரும் சூழலில், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில், திமுக தலைமை விழா கொண்டாட்டங்களை முன்னெடுத்து இருக்கும்.

அதைவிடுத்து, கலைஞர் மு.கருணாநிதியின் ஒட்டுமொத்த வரலாற்றில் சிறுதுளியளவு கூட உணர்ந்து கொண்டிராத, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் முதல் நிகழ்வுக்கு தேர்வு செய்ததே, திமுக தலைமையில் சாணக்கியதனத்திற்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பதைதான் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

இந்தியாவைக் கடந்து, தமிழர்களின் பண்பாடுகள் உச்சத்தில் இருக்கும் அயல்தேசங்களில் இருந்து புகழ் பெற்ற தலைவர் ஒருவரை தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திமுக தலைமை யோசித்திருக்க வேண்டும். சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்ப்பதில் திமுகவின் பங்கு முக்கியமானது என்ற கருத்தியலை இந்தியாவை கடந்து உலகளவில் மாபெரும் பரப்புரையாக்கி வரும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ் உணர்வுகளிடம், கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வுகளை ஒப்படைத்திருக்க வேண்டும்.

தமிழ் இனத்தின் பெருமைகளை முழுமையாக உள்வாங்கி கொண்டிருப்பவர்களில், தாமாக முன்வந்து அடையாளப்படுத்திக் கொள்கிற உலக தலைவர்களில் முதன்மையானவராக இருந்து வருகிறார் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா நாட்டில் கொண்டாடப்படும் தமிழர் பாரம்பரிய விழாக்களில், வேட்டி சட்டை அணிந்து தமிழராகவே கலந்து கொள்வதற்கு எப்போதுமே ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழர் பண்பாட்டை மதிப்பவர் என்ற பெருமையை விட, சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதற்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தற்புகழ்ச்சி சிந்தனைக்கு எதிரானவராகவும் இருப்பவர் என்பதும் கூட  கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைப்பவருக்கு இருக்க வேண்டிய ஆகச் சிறந்த தகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கனடா பிரதமருக்கு அடுத்து, கணினி உலகில் ஆகச் சிறந்த தலைமையகத்தில் அமர்ந்திருக்கும் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையைக் கூட யோசித்து இருக்கலாம்.

கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்வுப் பற்றி, தமிழ் இனத்திற்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றி சுந்தர் பிச்சைக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற போதும்கூட, சுந்தரி பிச்சையின் ஒவ்வொரு செயலும் உலகச் செய்தியாக மாறிக் கொண்டிருப்பது என்பதும், அதை விட முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் கூட அவரை அழைப்பதற்கான காரணிகளில் முக்கியமானதாக கருதப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

பிறப்பால் ஆரியராக இருந்தாலும் கூட, பிரதமர் மோடியை விட, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விட ஒரு கணமாவது ஆத்மார்த்தமான மரியாதையை கலைஞர் மு.கருணாநிதிக்கு செலுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வாவது சுந்தர் பிச்சைக்கு கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு தூண்டிவிட்டிருக்கும்.

வட அமெரிக்க நாடுகளில் இருந்து தலைவர்களை அழைத்து வருவதில் தவிர்க்க முடியாத சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும் கூட இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திற்கும் முக்கியத்துவம் தருவதை விட தமிழ்நாட்டிற்கு அதீத முக்கியத்துவம் தரும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் உள்ள சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கூட தலைவர்களை அழைப்பதற்கு யோசித்திருக்கலாம்.

இந்தியாவை கடந்து உலக அளவிலான பார்வையை, அதிர்வுகளை உருவாக்கும் வகையில் தான் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வை நிகழ்த்துவதற்கு திமுக தலைமை சிந்தித்து இருக்க வேண்டும். அதைவிடுத்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போல, திரும்ப திரும்ப, தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்வாக மாறும் மாபெரும் விழாக்களுக்கு இந்தியாவிற்குள்ளேயே ஆளுமைகளை தேடுவது என்பது திமுக தலைமையிடம் சாணக்கியதனத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தைதான் கலைஞர் மு.கருணாநிதியை வாழ்நாள் முழுவதும் நேசித்துக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களின் விரக்தி கலந்த குரலாக எழுந்து நிற்கிறது.