Sat. Nov 23rd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதியமைச்சராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துணிச்சலான செயல்பாடுகள், தமிழ்நாட்டை கடந்து இந்தியா முழுவதும் குறுகிய காலத்திலேயே மின்னல் வேகத்தில் பரவியதுடன், அவரது பெயரும் அரசியலுக்கு அப்பாற்றபட்ட பல்துறை வல்லுநர்களிடமும் பிரபலமானது.

நிதியமைச்சர் என்று கடமையை கடந்தும் திராவிட சித்தாந்த ரீதியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன் எடுத்து வைத்த அழுத்தமான வாதங்களும் வட இந்திய அரசியல் தலைவர்களிடம் குறிப்பாக ஹிந்தி மொழி வெறியர்களிடமும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதை போல, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கேவலப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையில், அவருக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அருவருக்கத்தக்க வகையில் பேச தொடங்கினார்கள்.

தென் இந்திய மக்களை கேவலமாக பார்த்தவர்களுக்கு சரியான  பதிலடி கொடுக்கும் வகையில், திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் குறிப்பாக, பேரறிஞர் அண்ணா, மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு, சுகாதார துறையில் தன்னிறைவு, மின்உற்பத்தி, பல்துறை தொழில் வளர்ச்சி என ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெற்ற அசுர வளர்ச்சிகளை எல்லாம் விரிவான புள்ளி விவரங்களுடன் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த ஆதாரங்களை கேட்டு, ஹிந்தி வெறிப் பிடித்த வடஇந்திய அரசியல் தலைவர்கள் அனைத்து துவாரங்களையும் அடக்கி கொள்ள நேரிட்டது என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களே அதிர்ச்சியோடு கூறத் தொடங்கினார்கள்.

இப்படி வட இந்திய தலைவர்களை ஓட ஓட விரட்டியதால் ஆத்திரமடைந்த பிஜேபி தேசிய தலைவர்கள், சதித்திட்டம் தீட்டி,  திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இருந்து வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பிரிக்க பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால், பிடிஆர் குடும்பத்தினர்,  பல தலைமுறைகளாக திராவிட சித்தாந்ததத்தின் மீதான உறுதியான பற்றும்  திமுக தலைமை மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத விசுவாசத்தை எல்லாம் உணர்வுபூர்வமாக தெரிந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, திமுக அமைச்சரவையிலேயே தொடர்ந்து செயல்படுமாறு அனுமதி அளித்திருக்கிறார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பற்றி இன்றைய தலைமுறைக்கு அதிகமாக தெரிந்திருந்தாலும் கூட, அவரது தந்தையும் பழம்பெரும் அரசியல் தலைவராக திகழ்ந்த பிடிஆர் பழனிவேல் ராஜனின் மனித நேயம், ஆளுமை திறன், மக்கள் தொண்டு, கலைஞர் மு.கருணாநிதி மீதான நேசம் ஆகிய அம்சங்கள் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுத்திருந்தார். அவரின் வார்த்தைகளுக்கு எந்தளவுக்கு கட்டுப்பட்டு கலைஞர் செயல்பட்டார் என்பதற்கு  சிறந்த உதாரணமாக, 1999 ஆம் ஆண்டில், அதாவது 23 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அபூர்வ நிகழ்வின் சாட்சியாக நின்றிருந்த மூத்த ஊடகவியலாளர் தாரை இளமதி கூறும் உணர்ச்சிமிகுந்த, உன்னதமான இருதலைவர்களுக்கு இடையே நிலவிய பேரன்பை முழுமையாக தெரிந்து கொள்ள செவிமடுப்போம்.

1991 முதல் 1996 வரை ஐந்து ஆண்டுகள்  காட்டாட்சி நடத்திய அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு, கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அந்த நேரத்தில், ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை சமரசம் இன்றி வெளியிடுவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வந்த தராசு ஆசிரியர் ஷ்யாம், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக தலைமையில் அப்போதைய ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக அணி திரட்டப்பட்ட கூட்டணிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வந்தார்.

அதே காலத்தில் திமுக மூத்த தலைவர்களை மேலும் மேலும் வெறுப்பு ஏற்று வகையில், அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தலைமையில், திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகள் மாநாட்டில், தராசு ஆசிரியர் ஷ்யாம் தயாரித்த மாநாட்டு மலரை செல்வி ஜெயலலிதா வெளியிட்டார்.

ஷ்யாமின் விசுவாசத்தால் நெகிழ்ச்சியடைந்தார் செல்வி ஜெயலலிதா. அந்த மாநாட்டிற்குப் பிறகு அவரின் மீது பேரன்பை வெளிப்படுத்தினார் செல்வி ஜெயலலிதா 1999 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாகவும் ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராகவும்  கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் தராசு புத்தகத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. அதே காலத்தில் மாலை நாளிதழ் ஒன்றை தராசு ஆசிரியர் ஷ்யாம் அறிமுகப்படுத்தினார்.

தராசு வார இதழ் மற்றும் தராசு மாலை நாளிதழ் என இரண்டையும் வெளியிடுவதற்கு தேவையான பொருளாதாரம் ஷ்யாமிடம் அந்த காலத்தில் இல்லை. அதற்கு முன்பாக பண உதவி செய்து வந்த செல்வி ஜெயலலிதாவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தராசு ஷ்யாமுக்கு வழங்கி வந்த பண உதவியை நிறுத்தி விட்டார். செல்வி ஜெயலலிதா பண உதவி செய்யும் முறையே விசித்திரமாக இருந்தது.  

சென்னை ராயப்பேட்டை தராசு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் ஷ்யாம், தனது காரில் போயஸ் கார்டனில் உள்ள செல்வி ஜெயலலிதா இல்லத்திற்கு செல்வார். அவருடன் கணினி பொறியாளராக இருந்த பாலாஜி என்பவர் மட்டுமே செல்வார். செல்வி ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் தராசு ஆசிரியர் ஷ்யாம் மட்டுமே செல்வார். திரும்பி வரும் போது அவரது கைகளில் நியூஸ் பேப்பர் பண்டல் இருக்கும். ராயப்பேட்டையில் உள்ள தராசு அலுவலகத்திற்கு திரும்பி வந்து பிரித்து பார்த்தால் நேரத்திற்கு ஏற்ப 5 லட்சம் ரூபாயோ.. 3 லட்சம் ரூபாயோ கட்டு கட்டாக இருக்கும்.

இப்படி ஓராண்டிற்கு மேலாக, அதாவது 1999 ஆம் ஆண்டு முழுவதும் செல்வி ஜெயலலிதா, தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு பண உதவி செய்து வந்தார்.

1999 ஆம் ஆண்டு இறுதியில் பண உதவி செய்வதை செல்வி ஜெயலலிதா நிறுத்திக் கொண்டதால், தராசு வார இதழை அச்சடிப்பதற்கும் தராசு மாலை நாளிதழை வெளியிடுவதற்கும் போதிய பணம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார் தராசு ஆசிரியர் ஷ்யாம்.

2000 ஆம் ஆண்டில் மட்டும் தராசு செய்தியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 20க்கு மேற்பட்டோர் சென்னையில் மட்டுமே பணிபுரிந்து வந்தார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கே வழியில்லாமல் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்படியாக இக்கட்டான காலத்தில், திமுக அரசின் விளம்பரங்கள் கிடைத்தால், தராசு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தார் தராசு ஆசிரியர் ஷ்யாம்.

அன்றைய காலத்தில் தலைமைச் செயலக வளாகத்தில் தராசு  செய்தியாளராக பணியாற்றியவர் அசதுல்லா என்ற மூத்த செய்தியாளர். இன்றைய தேதியில் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்  அசதுல்லா.

அவரை அழைத்து பேசிய ஷ்யாம், அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை சந்தித்து தராசு நாளிதழுக்கு அரசு விளம்பரம் தர கருணை காட்ட வேண்டும் என்ற வேண்டுகோள் அடங்கிய கோரிக்கை மனுவை ஒப்படைத்தார்.  அசதுல்லாவும், திமுக அரசின் விளம்பரத்தை பெறுவதற்கு முயற்சித்து வந்தார். 6 மாத காலம் ஓடியதே தவிர, அரசு விளம்பரம் கிடைக்கவில்லை.

அரசு விளம்பரம் உடனடியாக கிடைக்காததால் மிகுந்த மனவருத்தம் அடைந்தார் தராசு ஆசிரியர் ஷ்யாம். அன்றைய காலகட்டத்தில் சென்னையில் தராசு நிறுவனத்தில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜ்கணேஷிடம் ஒருநாள் தராசு ஆசிரியர் ஷ்யாம் தனது மனஉளைச்சலை வெளிப்படுத்தினார்.

அன்றைய தேதியில் தராசு ஆசிரியர் ஷ்யாமின் பொருளாதார நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தததாலும், பொருளாதார நெருக்கடியால் மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருந்த தராசு நிறுவனத்தை கரை சேர்க்கவும், தனது முழு சக்தியையும் பயன்படுத்தினார் ராஜ்கணேஷ்.

மதுரை உள்பட தென் மாவட்டங்கள் முழுவதும் பல ஆண்டுகள் செய்தியாளராக பணிபுரிந்த அனுபவத்தின் காரணமாக, ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பே மூத்த அரசியல் தலைவரும் மதுரை மண்ணின் சொக்க தங்கம் பெரிய மனிதர், எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நொடியில் மன்னிப்பு வழங்கி, அடைக்கலம் தருபவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரராக திகழ்ந்த பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கருணையை பெற முயற்சித்தார் ராஜ்கணேஷ்.

1996 ல் இருந்து 1999 தொடக்க காலம் வரை திமுக ஆட்சிக்கு எதிராகவும், அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் தராசு தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்ததால், ராஜ்கனேஷிடம் பிடி கொடுக்காமலேயே பேசியிருக்கிறார், அப்போதைய பேரவைத் தலைவர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.

பல நாட்கள் தலைமைச் செயலகத்திற்கு படையெடுத்து, பிடிஆர் பழனிவேல் ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மன்றாடினார் ராஜ்கனேஷ். அவர் மீது இரக்கம் கொண்ட பேரவைத் தலைவர், அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடன் தராசு ஆசிரியர் ஷ்யாமை நேரடியாக சந்திப்பதற்கு உதவி புரிவதாக வாக்குறுதி அளித்தார்.

பெரிய மனிதர்கள்.. எப்போதுமே பெரிய மனிதராகவே இருப்பார்கள் என்பதற்கும் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராகவே இருப்பார்கள் என்பதற்கும் மறைந்த மாபெரும் மனிதர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள்தான் சிறந்த உதாரணமாக இருப்பார்.

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு செல்வதற்கு முன்பாக பேரவைத் தலைவர் அறைக்கு செல்வதை அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மரபாகவே கடைபிடித்து வந்திருக்கிறார்.

அந்த வழக்கத்தை பயன்படுத்தி தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு உதவி புரிவதற்காக பிடிஆர் பழனிவேல் ராஜன் வகுத்த வியூகம், அபாரமானது. ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடியது.

பேரவைத் தலைவர் அறைக்குள் கலைஞர் காலடி எடுத்து வைக்கும் போதே அவருக்கு முகம் தெரியும் வகையில் தான் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் இருக்கை அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதனால், கலைஞர் வருவதற்கு முன்பாகவே, தராசு ஆசிரியர் ஷ்யாமை தமது அறைக்கு வரவழைத்து, தனது இருக்கைக்கு பின்புறம் உள்ள சிறிய அறையில் அமர வைத்துவிட்டார் பிடிஆர் பழனிவேல் ராஜன்.

முதல்வராக கலைஞர் பதவி வகித்தால், அவரது வருகையின் போது, காவல்துறை உயரதிகாரிகளின் மிடுக்கான நடை,  பேரவைத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான மார்ஷலின் கம்பீரமான நடை போன்றவை எழுப்பும் ஒருவிதமான சத்தம், பேரவைத் தலைவர் அலுவலகத்தையே பரபரபாக்கிவிடும்.  

அப்படிபட்ட ஒலிச்சத்தம் கேட்ட நேரத்தில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, பேரவைத் தலைவர் அறைக்குள் வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்ட ஷ்யாம், ஏற்கெனவே பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறிய அறிவுரைக்கு ஏற்ப ஐந்து நிமிடம் கடந்த பிறகு, பிடிஆரின் முதுக்கு பின்பக்கம் இருந்து முன்பக்கம் வந்தார்.

அந்த நொடியில், பேரவைத் தலைவரின் முகம் பார்த்தவாறே அமர்ந்திருந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி நேரிடையாக ஷ்யாமை பார்த்துவிட்டார். அந்த நொடியில், தனித்துவமான புன்னகையை வெளிப்படுத்தியவாறே ஷ்யாம் வணக்கம் சொல்லியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாத எதிரியை பார்த்தால் உடலில் எப்படி அதிர்வுகள் தோன்றுமோ, அது போல, பேரதிர்ச்சி ஏற்பட்டதை போன்ற ஒரு உணர்வை, கலைஞர் மு.கருணாநிதியின் உடல்மொழி  வெளிப்படுத்தியிருக்கிறது.

ஷ்யாமை வரவழைத்திருப்பது பிடிஆர் பழனிவேல் ராஜன்தான் என்பதை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டு, இயல்பு நிலைக்கு வந்த கலைஞர் மு.கருணாநிதியிடம், ஷ்யாமை அறிமுகப்படுத்தி வைத்த பேரவைத் தலைவர், ஏதோ அரசு விளம்பரம் வேண்டும் என்று கோரிக்கை மனு கொண்டு வந்திருக்கிறார். தலைவர் என்னை பார்க்க வருவார். அவரிடம் நீயே நேரில் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டேன் என்று சிறுநகையோடு கூறியிருக்கிறார் பிடிஆர் பழனிவேல் ராஜன்.

துரோகிகளையே மன்னித்து பழகிவிட்ட கலைஞர் மு.கருணாநிதிக்கு, தராசு ஆசிரியர் ஷ்யாமை மன்னித்து ஏற்றுக் கொள்வதற்கு ஒருசில வினாடிகள் கூட தேவைப்படவில்லை. பிடிஆர் பழனிவேல் ராஜன் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக, ஷ்யாம் கொடுத்த விண்ணத்தை வாங்கி பொறுமையாக படித்த கலைஞர் மு.கருணாநிதி, அரசு விளம்பரம் கிடைக்கும் என்று உறுதிமொழியை தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு வழங்கியிருக்கிறார்.

2000 ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதி கொடுத்த உறுதிமொழிதான், தராசு ஆசிரியர் ஷ்யாமிற்கும் தராசு நிறுவனம் தொடர்ந்து இயக்குவதற்கான பூஸ்டாகி மாறி மறுவாழ்வு தந்திருக்கிறது.  

பிடிஆர் பழனிவேல் ராஜன், ஒருவருக்கு பரிந்துரை செய்கிறார் என்றால், அவர் திமுகவுக்கும், தமக்கும் பல காலம் துரோகம் இழைத்திருந்தாலும் கூட ஒருநொடியில் மன்னித்து, அவர்களை அரவணைத்து கொள்ளும் அளவுக்கு கலைஞர் மு.கருணாநிதியின் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது பிடிஆர் குடும்பத்தின் பாரம்பரியம். விசுவாசம்.. என பல அம்சங்களை காரணமாக கூறலாம்.

அரசு விளம்பரம் தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு எப்படி கிடைத்தது.. கலைஞர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கலைஞரை தராசு ஆசிரியர் ஷ்யாம் சந்தித்த போது நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு, இரண்டாம் பாகமாக விரைவில் வெளியிட உள்ளது நல்லரசு யூ டியூப் சேனல்..

இரண்டு நாட்கள் காத்திருங்கள் நண்பர்களே.. மீண்டும் சந்திப்போம்.

One thought on “தராசு  ஷ்யாமுக்கு கலைஞர் வழங்கிய மறுவாழ்வு; பிடிஆர் பழனிவேல்  ராஜன் மீது கலைஞர் வைத்திருந்த தூய அன்பை வெளிப்படுத்திய சிறந்த தருணம்..”
  1. நான் சேலம் செய்தியாளர் கா.தங்கதுரை. செய்திகள் அனைத்தும் உண்மையை உரக்கச் சொல்கிறது. மகிழ்ச்சி.

Comments are closed.