Tue. Apr 23rd, 2024

 திராவிட மாடல் ஆட்சியில் 3 வது முறையாக தமது தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டதாக மூத்த திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இரண்டொரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி மற்றும் மா.சுப்பிரமணியம், ஆகியோரின் துறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், முதல் முறையாக கடந்த ஆண்டு அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக துபாய் சென்றிருந்த போது, அப்போதைய போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன், தாழ்த்தப்பட்ட அரசு அதிகாரியை சாதியை சொல்லி திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

துபாய் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்முறையாக அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றத்தை மேற்கொண்டார்.

ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துறை பிடுங்கப்பட்டு, சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. அவரது துறையான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

திராவிட மாடல் ஆட்சி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு., தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மா.சுப்பிரமணியம் ஆகியோரின் துறைகள் மாற்றப்படவுள்ளன என்ற தகவலை விட, புதிய அமைச்சர்களாக மருத்துவர் எழிலன், டிஆர்பி ராஜா, தமிழரசி ஆகியோர் பதவியேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் திமுக நிர்வாகிகளிடம் அதிகமாக இருந்து வருகிறது.

திமுகவுக்கு வெளியே பொதுதளங்களிலும் அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் அதேநேரத்தில், அரசியல் ரீதியான கண்ணோட்டத்துடன் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மீது என்ன மாதிரியான நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், ஜென்ம எதிரியான பாரதிய ஜனதாவும் அரசியல் ஆதாயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இரண்டொரு நாளில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பழனிவேல் ராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்டைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பில் அனுபவம் மிகுந்த, முதன்மை செய்தியாளர் ஜூலி மாரியப்பன், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக இரண்டு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது நிதித்துறையை பறித்துக் கொண்டு முக்கியத்துவம் இல்லாத துறையாக, குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையை கூட பிடிஆருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் முதன்மை செய்தியாளர் ஜூலி மாரியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிடிஆருக்கு எதிரான குற்றச்சாட்டாக கூறப்படுவது, முதல்வரின் மகன்  மற்றும் மருமகன் ஆகியோரின் வசூல் வேட்டை குறித்து பிடிஆர் பேசியதாக கூறி வெளியான இரண்டு ஆடியோ விவகாரங்கள்தான்.

முதல்வரின் குடும்பத்தின் மீது குற்றம் சுமத்திய பிடிஆர் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், உட்கட்சியான திமுகவில் வெளிப்படையாக எந்தவொரு எதிர்ப்பும் எழுந்துவிட வில்லை. மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்-ஆர்.கே. பன்னீர்செல்வம் போன்றவர்கள் பிடிஆரை கண்டித்து அறிக்கைகளை வெளியிடவில்லை.

பிடிஆரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விசாரணை நடத்தியதாகவும் தகவல் கசியவில்லை. தான் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்தாகவும் தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட திமுக தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன்,  ஆடியோ விவகாரம் தனிப்பட்ட நபர் தொடர்புடையது. அதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பழனிவேல் தியாகராஜனே முடிவு எடுத்துக் கொள்வார் என்று விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு  ஆடியோ விவகாரம் அரசியல் களத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆடியோ அரசியலில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து கொண்ட பிறகுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினும், வீடியோ மூலம் அளித்த பதிலில், அந்த ஆடியோ விவகாரத்திற்கு எந்தவொரு முக்கியத்துவம் வழங்கவில்லை.

வெளிப்பார்வைக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் சாதாரண விஷயமாக நினைத்து கடந்து சென்றுவிட்டார்கள். அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் முதல்வர் குடும்பத்தினர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த காலத்திலும், அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் மிகுந்த ராஜதந்திரியான கலைஞர் மு.கருணாநிதி, தமக்கு எதிராக முன் வைக்கப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுவார். அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் திமுக குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய விவகாரமாக மாறியது கிடையாது.

ஆனால், அன்றைக்கு இல்லாத நெருக்கடி இன்றைக்கு என்னவென்றால், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், முதல்வர் குடும்பத்திற்கு எதிரான ஆடியோ விவகாரம் எல்லா நாளுமே உயிர்ப்புடன் இருந்து கொண்டே இருக்கிறது.

இப்படிபட்ட நேரத்தில், கலைஞர் மு.கருணாநிதி போல ராஜதந்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்துவாரா.. அல்லது எதிர்க்கட்சியினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நடவடிக்கை எடுத்ததைப் போல முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இருக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் திமுக உட்கட்சியிலேயே சூடான விவாதமாவும் மாறியிருக்கிறது. 

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்தால் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படும் என்று பார்த்தால் பெரிய பட்டியலே நீள்கிறது.

பிடிஆரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும், துறை மாற்றப்பட்டாலும், ஆளும்கட்சியான திமுகவிற்குள்ளேயே கொண்டாடுவதற்கு பெருங்கூட்டம் தயாராக இருக்கிறது என்கிறார்கள் இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக பதவியேற்று 6 மாதத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, அவரின் செயல்பாடுகள் மீது மூத்த திமுக அமைச்சர்களுக்கு அதிருப்தி ஏற்பட தொடங்கிவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் போடபட்ட திட்டங்களுக்கு உரிய பணம் வழங்காமல் நிலுவையில் இருந்த தொகைகளை விடுவிக்க வேண்டும் என்று மூத்த திமுக அமைச்சர்கள், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய அதிமுக ஆட்சியில், கமிஷன் பார்ப்பதற்காகவே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்யாமல், நிலுவையில் உள்ள நிதியை விடுவித்தால், தணிக்கை துறைக்கு பதிலளிக்க வேண்டும் என்பதால், பிடிஆர் மறுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, அதிமுக ஆட்சி கால ஒப்பந்ததாரர்களிடம் நல்ல பெயரை எடுக்க முடியாமல் போனதாலும், அவர்கள் மூலம் கிடைக்க கூடிய பொருளாதார ஆதாயமும் தடைபட்டதால், பிடிஆர் மீது மூத்த அமைச்சர்கள் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாவது காரணமாக, திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கும் கூட உடனுக்குடன் நிதியை ஒதுக்கீடு செய்யாமல், திட்டத்திற்கான செலவுகளை குறைக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை பிடிஆர் எழுப்பியுள்ளார். அதனாலும் அவருக்கு எதிரான அதிருப்தி மூத்த அமைச்சர்களிடம் அதிகமாகிவிட்டது.

மூன்றாவதாக, அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க வேண்டும், அரசு துறைகளில் பணி நியமனம் என்பது தேர்வாணையம் மூலம் தான் நடக்க வேண்டும் என அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை பிடிஆர் விதித்ததால், அமைச்சரவையில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலினை தவிர எஞ்சிய அனைத்து அமைச்சர்களும் பிடிஆருக்கு எதிராக கடும் கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

நான்காவது காரணம் தான் மிக மிக முக்கியமானது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் நிதித்துறை செயலாளரின் பேச்சுதான் வேத வாக்காக இருந்து வந்திருக்கிறது.

ஐஏஎஸ் உயரதிகாரிகள் மட்டத்தில், துறை செயலாளர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்கு நிதித்துறை அமைச்சர் தயவை பெறுவதற்கு பதிலாக நிதித்துறை செயலாளர் மூலமாகவே நிதியை தாராளமாக பெற்று வந்தார்கள்.

ஆனால், நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் ராஜன் பதவியேற்ற பிறகு துறை செயலாளர்களான உயர் ஐஏஎஸ் அதிகாரிகளை தனது அறைக்கே அழைத்து திட்ட மதிப்பீடு, செலவிடப்படும் தொகை ஆகியவை குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

இதன் காரணமாக, துறை செயலாளர்களான ஐஏஎஸ் உயரதிகாரிகள், நிதியமைச்சரின் ஆய்வுக் கூட்டம் என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்வி தவிர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி மூத்த அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒருசேர பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வில்லனாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானதாக மதுரை மாவட்ட திமுக அரசியல் அமைந்துவிட்டதுதான்.

பிடிஆரின் அரசியல் குடும்ப வரலாற்றில், நீண்ட அரசியல் அனுபவம் இல்லாத பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி இருப்பதால், மதுரை மாவட்ட அரசியலில் அதிகமாக ஈடுபாடு காட்டினார். திமுகவில் சீனியர்களான அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோருடன் இணைந்து செயலாற்றாமல், அவர்களை விட தனக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில் கெடுபிடி காட்டியதால், மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் பிடிஆருக்கு எதிராக கை கோர்த்துக் கொண்டார்கள்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்பாகதான் ஆடியோ விவகாரம் வெடித்து விட்டது.

தனக்கு எதிராக உட்கட்சியான திமுகவிற்குள்ளேயே கோப அலைகள் பெருகுவதை கவனிக்க தவறிவிட்டார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதும், எட்டு திக்கும் எழுந்த எதிர்ப்பலைகளை சபரீசன் என்ற கேடயம் மூலம் தடுத்து, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த பிடிஆர் பழனிவேல்ராஜன், சபரீசன் என்ற கேடயத்தையே பதம் பார்த்ததாக எழுந்த புகாரால், ஒற்றை மனிதராக, பரிதாபத்திற்குரியவராக மாறியிருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதுதான் யதார்த்தம்.

திமுக ஆதரவாக இல்லை. முதல்வர் மற்றும் உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் ஆகியோரின் வெறுப்பிற்கு ஆளாகிவிட்ட பரிதாபம். ஆதரித்து பேச வேண்டிய மூத்த அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். சொந்த மாவட்ட மதுரை திமுக நிர்வாகிகளும், சரிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்வா.. சாவா என்ற போராட்டத்தில் உள்ள பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு, வானில் தோன்றும் சிறு நட்சத்திரங்கள் போல, ஆதரவு குரல்கள் திராவிட சித்தாந்தவாதிகளிடம் இருந்து எழுந்து நிற்பதுதான் திடீர் திருப்புமுனையாக மாறியிருக்கிறது.

வட இந்திய தலைவர்கள், குறிப்பாக இந்துத்துவா வாதிகள், தமிழ்நாட்டில் தனித்துவமாக இருக்கும் அரசியலை எப்போதுமே எரிச்சலுடன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா, இரா.செழியன், முரசொலி மாறன், வை.கோ., திருச்சி சிவா, ஆ.ராஜா ஆகியோரின் அனல் கக்கும் வாதங்களை கேட்டு கேட்டு, தமிழ்நாட்டின் மீதான எரிச்சல், வட இந்தியர்களுக்கு மேலும் மேலும் அதிகரித்துவிட்டது.

எரிகிற எண்ணெய்யில் நெய் ஊற்றுவதைப் போல, வட இந்தியர்களின் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பேச தொடங்கியதை கண்டு தனிப்பட் முறையில் அவரை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தை வட இந்திய தலைவர்கள், குறிப்பாக இந்துத்துவா வாதிகளும் எதிர்பார்த்து காத்து கொண்டே இருந்தனர்.

சட்டப்பேரவையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதாகட்டும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்து வரும் நாட்டாமையை கேலி செய்வதாகட்டும், இந்துத்துவா கோட்பாடுகளை அழுத்தமான, ஆணித்தரமான வாதங்களை முன் வைப்பதாகட்டும், பிடிஆர் எதை பேசினாலும், பாஜகவினரின் கோபத்தை பன்மடங்கு கிளறிவிடுவதைப் போலதான் அமைந்திருந்தது.

தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி, சுயமரியாதை, மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம் என எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் தெளிவாக வாதத்தை முன் வைத்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தமிழில் தட்டு தடுமாறி பேசினாலும் கூட , ஆங்கிலத்தில் பொளுந்து கட்டினார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

பின்விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேதிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டிய அதிரடி அரசியல், நிறைய எதிரிகளை உருவாக்கிவிட்டது.

ஆனால், பிடிஆரின் ஆணித்தரமான வாதங்கள், திராவிட சித்தாந்தவாதிகளிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சசிதரூர், மிகப்பெரிய அறிவுஜீவியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அவரிடமே பாராட்டுகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் பெற முடிந்ததை பார்த்து, கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

இந்தியா முழுமைக்கும் குறுகிய காலத்தில் பிரபலமாகியிருக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, மேலும் மேலும் திமுக தலைமை உற்சாகப்படுத்த வேண்டும்.

வடஇந்தியா அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஹிந்தி, ஆங்கில ஊடகங்களே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிரடி அரசியல் பேச்சுகளை ரசித்து, கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

திமுகவின் உயிர்நாடியான திராவிட சித்தாந்தங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, சமரசம் இன்றி அரசியல் களத்தில் முழங்கிக் கொண்டிருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது அரசியல் காரணங்களுக்காக, தனிப்பட்ட வெறுப்புகளுக்காக நடவடிக்கை எடுத்தால், திராவிட மாடல் ஆட்சிக்குதான் தேசிய அளவில் கெட்ட பெயர் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முதிர்ச்சி மிகுந்த அரசியல் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுரையும் கூறுகிறார்கள்.

தியாகராஜன் மீதான நடவடிக்கை என்பது திமுக ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டுமே தவிர, திராவிட சித்தாந்தகளுக்கு எதிராக நிற்பவர்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சி தருவதாகவும், அவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டமாகவும் அமைந்துவிடக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.