முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இரண்டொரு நாளில் அதிரடி மாற்றம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த அமைச்சர்கள் முதல் இளைய அமைச்சர்கள் வரையிலான செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தியுடனேயே இருந்து வந்தார். இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் குறித்த விவரம் பின்வருமாறு:
மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும் மற்றும் எஸ்.ரகுபதி தொழில்துறை அமைச்சராகவும் மாற்றப்படவுள்ளனர்.
மா.சுப்பிரமணியத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படவுள்ளது.
ஆவடி நாசர், கயல்விழி ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக டாக்டர் எழிலன், டிஆர்பி ராஜா, தமிழரசி ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ளனர்.
டாக்டர் எழிலனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழரசிக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படும் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நீக்கத்திற்கான காரணம்
பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மீது கடந்த ஓராண்டாகவே பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. பால் விலை உயர்வு, தட்டுப்பாடு, தரமற்ற பொருட்கள் விற்பனை, பால் அளவு குறைவு என கடந்த பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
பால்வளத்துறையை மேம்படுத்துவற்குப் பதிலாக, அதனை அழிக்கும் வேலைகள் தான் மும்முரமாக நடைபெறுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அமைச்சர் நாசர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், நாசரின் மகனின் அதிகார துஷ்பிரயோகமும், நாசரிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்கும் முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை தள்ளிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றத்திற்கான பின்னணி:
முதல்வர் குடும்பத்து உறவுகள் பணம் குவிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக ஊடகங்களில் வெளியான ஆடியோ, ஆளும்கட்சியான திமுகவிற்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ் உயரதிகாரிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் தேவையற்ற காலதாமதம் செய்து வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இதன் காரணமாகவே, நிதித்துறையில் இருந்து தியாகராஜனை விடுவித்து, தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அவரை மாற்றும் முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார் என்றும் துறை மாற்றம் குறித்து தியாகராஜனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரில் விளக்கமளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இரண்டொரு நாளில் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன,
Waste details.