Wed. Apr 24th, 2024

திமுக ஆட்சியோ.. அதிமுக ஆட்சியோ.. உணவுத்துறையில் நடைபெறும் ஊழல்களுக்கு  யாராலும் ஒரு போதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதுதான் அறப்போர் இயக்கம் போன்ற சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில், உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆர்.காமராஜ், பொது விநியோகத் திட்டத்திற்கு வாங்கிய அரிசி, பருப்பு,  கோதுமை, எண்ணெய் போன்றவற்றில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாகவே முன் வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்ட கிறிஸ்டி நிறுவனம், சத்து மாவு, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியதில், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக முறைகேடில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. அதனையடுத்து, அந்த நிறுவனத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு, பல நூறு கோடி ருபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியது. தொடர் விசாரணையும் கிறிஸ்டி நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆர்.காமராஜுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்களும் கிறிஸ்டி நிறுவனத்தில் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் வெளியானது. கிறிஸ்டி நிறுவனமும், ஆர்.காமராஜும் வருமான வரித்துறையின் தொடர் கண்காணிப்பு வளையத்தில் சிக்குண்டு கிடக்கிறார்கள். இப்படியெல்லாம் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பிரசாரக் கூட்டங்களில் குற்றம் சாட்டியவர், வேறு யாருமல்ல.. தற்போதைய முதல்வரும், அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சித்தலைவருமாக திகழ்ந்த மு.க.ஸ்டாலின்தான்.

உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் மீது திமுக ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, ஊழல் புரிந்தவர்களை திமுக அரசு நிச்சயம் சிறையில் அடைக்கும் என்று வீரமாக முழங்கியவரும் மு.க.ஸ்டாலின்தான்.

ஆனால், அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்று சொல்கிற வகையில்தான், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் உணவுத்துறை பல்வேறு முறைகேடுகளில் சிக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று குமறுகிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள். முந்தைய அதிமுக ஆட்சியில் ஊழல் நிறுவனமாக கூறப்பட்ட கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்துதான் திமுக ஆட்சியிலும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்பதுதான் வேதனையான ஒன்று என்கிறார்கள் உணவுத்துறை அதிகாரிகள். அதுவும், இதற்கு முன்பு இல்லாத உணவுத்துறை அமைச்சர்களை விட திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணியின் வேகம் மிரட்டலாக இருக்கிறது என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட திமுக என்று சொன்னாலே, எல்லோருக்கும் ஐ.பெரியசாமிதான் சட்டென்று நினைவுக்கு வருவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக அரசை மு.க.ஸ்டாலின் அமைந்த போது, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமிக்கு உப்பு சப்பில்லாத கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டது.  அதேநேரத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சக்கரபாணிக்கு உணவுத்துறை வழங்கப்பட்டது. செல்வாக்கு இல்லாத துறையை வழங்கியது மட்டுமின்றி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கி, தனது முக்கியத்துவத்தை குறைந்து விட்டார்கள் என நீண்ட காலமாக புலம்வி வந்தவர்தான் ஐ.பெரியசாமி.

சக்கரபாணி, உணவுத்துறை அமைச்சர் பதவியையே விலைக்கு வாங்கியதாகவும் திண்டுக்கல் மாவட்ட திமுகவிலேயே பரபரப்பாக பேசப்பட்ட காலமும் உண்டு. முதல்முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பே, பொதுமக்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கியதாக மாநிலம் முழுவதும் பரவலாக பொதுமக்கள் பொங்கிய நேரத்தில், தனக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே முதல்வரின் குடும்ப உறவுகளால்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்று எட்டப்பரை போல காட்டிக் கொடுத்தவர்தான் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி என்று அப்போதே குமறினார்கள் துறைசார்ந்த அரசு அதிகாரிகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டை நெருங்கிவிட்ட நேரத்தில், அமைச்சர் ஆர். சக்கரபாணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை உணவுத்துறை அதிகாரிகளே சுமத்தி வருவதுதான் தலைமைச் செயலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுவும், கூட்டுறவு மற்றும் உணவுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கும் நாள்தவறாமல் சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள் உணவுத்துறை அதிகாரிகள்.

அமைச்சர் பதவிக்கு போட்ட முதலீட்டை விரைவாக எடுப்பதற்கு அவசரம் காட்டி வருகிறார் அமைச்சர் ஆர்.சக்கரபாணி என்றும் அதற்காக, காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகளையும் மிஞ்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தும் காரியத்தையும் துணிந்தே செய்து கொண்டிருக்கிறார் என்றும் ஆவேசம் காட்டுகிறார்கள் துறை அதிகாரிகள்.

அதுவும், பட்ஜெட் தொடர்பான உணவுத்துறை மானியக் கோரிக்கை தாக்கலின் போது காக்கப்பட வேண்டிய ரகசியத்தையும் கூட காற்றில் பறக்கவிட்டிருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாக இருக்கிறதாம்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாத காலத்தை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துறை சார்பிலும் அந்தந்த அமைச்சர்கள், மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து வருவதைப் போல, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானிய கோரிக்கையும் ஏப்ரல் 6 ஆம் தேதி  கடந்த ஆறாம் தேதி நடந்தது. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மான்ய கோரிக்கை விவகாரம் தான், அமைச்சருக்கும் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கும் இடையே முட்டல் மோதலை அதிகப்படுத்திவிட்டது என்கிறார்கள்.

உணவுத்துறையின்  கொள்கை விளக்க புத்தகம் மற்றும்  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் பற்றிய புத்தகம் ஆகியவை மரபு மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில், தமிழ்நாடு அரசு அச்சகத்தில்தான் இதுவரை அச்சிடப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.சக்கரபாணியை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சாதாரண அரசு பணியாளர் ஒருவரால், தனியார் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை சீற்றம் கொள்ள வைத்துவிட்டது.

இரண்டு துறைகளுக்கான செயலாளராக உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸையும் மோசடியில் சிக்க வைக்கும் வகையில், தனியார் அச்சகத்தில் அச்சடித்தவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பவர் தான் சுட்டிகாட்டுகிறார்கள். ஸ்ரீதர், அமைச்சர் சக்கரபாணி அவர்களை பொம்மை போல் ஆட்டி வைப்பதாகவும் பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகளை சத்தமில்லாமல் எப்படியெல்லாம் செய்யலாம் என்றும்  கற்றுக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு முன்பு கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு செயலாளராக இருந்த உயர் அதிகாரி, அமைச்சர் ஆர்.சக்கரபாணி எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று தண்ணீர் தெளித்துவிட்டு ஒதுங்கி கொண்டு விட்டார். ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸால், துறைக்குள் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமலும் போக முடியவில்லை.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கான மானிய கோரிக்கை புத்தகங்கள் தனியார் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை கண்டு பிடித்தவுடன், ஸ்ரீதரை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறைக்கே அழைத்து கடுமையாக எச்சரித்தார் என்று நான்கு சுவருக்குள் ஏற்பட்ட எரிமலை தாக்கத்தை, அதே சூடு குறையாமல் வெளிப்படுத்தினார்கள்.

அரசு துறைகளின் மானிய கோரிக்கையில் இடம் பெற்றிருக்கும் புள்ளி விவரங்கள், புதிய அறிவிப்புகள், கொள்கை முடிவுகள் என ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.. ரகசியம் காக்கப்பட வேண்டியவை. மானிய கோரிக்கையில் இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு சில தகவல்கள், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொதுமக்களிடம் கசிந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஒரு சில ஆயிரம் ரூபாய் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தனியார் அச்சகத்திற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற சுயநல அரசு பணியாளர்களுக்கு எந்தவொரு தீமையும் ஏற்பட்டு விடாது. அரசுத்துறை செயலாளரான எனக்கும், துறை அமைச்சருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்தான் மிகப்பெரிய அவமானத்தையும் ஆபத்தையும் உருவாக்கிவிடும் என பொரிந்து தள்ளியுள்ளார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

எப்போதுமே சாந்தமானவராகவே பார்த்து பழக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், முதல்முறையாக கண்கள் சிவக்க, முகம் முழுவதும் கடுகடுக்க, அமில வார்த்தைகளை உதிர்த்ததை கண்டு ஆடிப்போய்விட்டார் ஸ்ரீதர். 

துறை செயலாளரின் கடுமையான எச்சரிக்கையால் மிரண்டு போன ஸ்ரீதர், அமைச்சர் ஆர்.சக்கரபாணியை நேரில் சந்தித்து புலம்பியுள்ளார். அப்போது அவரை ஆறுதல்படுத்திய அமைச்சர் ஆர்.சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணனை பற்றி பேசிய வார்த்தைகள்தான் துறை செயலாளரை மேலும் மேலும் கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது என்கிறார்கள் உணவுத்துறை அதிகாரிகள்.

தலைமைச் செயலகத்திற்கு வெளியே உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் பணியாளர் ஸ்ரீதரைவிட, குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதில் உணவுத்துறை அமைச்சரின் பி.ஏ.க்களும் கில்லாடிகளாக இருக்கிறார்கள் என்று கூறுபவர்கள், குறிப்பாக பாலசங்கர் என்ற அமைச்சரின் பி.ஏ., உணவுத்துறையை ஒட்டுமொத்த விற்பனை செய்வதற்காக கூவி கூவி ஒப்பந்ததாரர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

ரேஷன் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப்பொருட்களில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று மிரட்டலோடு நடந்து வரும் அதிகார துஷ்பிரயோகங்களை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் துறைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் என்பதுதான் உணவுத்துறை அதிகாரிகளின் வேதனைக் குரலாக இருந்து வருகிறது.

பொதுமக்களிடம், குறிப்பாக விளிம்பு நிலை மக்களிடம் ஒரு ஆட்சிக்கு நல்ல பெயரை உருவாக்கி தருவது, உணவுத்துறைதான். ரேஷன் கடைகளில் தரமான உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டால், வாக்காளர்களில் பெரும்பான்மையான உள்ள ஏழை எளிய மக்கள், திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கொண்டாவே செய்வார்கள். ஒரு சில நூறு கோடிகளுக்கு ஆசைப்பட்டு, திமுக அரசு  படுகுழியில் விழுந்தாலும் பரவாயில்லை என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணியின் செயல்பாடுகள் அமைந்தால், ஏழைகளின் கண்ணீர் திமுக அரசை பழிவாங்காமல் விடாது.

திராவிட மாடல் ஆட்சி என்பதே அனைவருக்குமான ஆட்சிதான் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்றால், ஊழல் புரிவதில் வல்லுவர்களான  ஸ்ரீதர் மற்றும் பாலசங்கர் போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் சூடுபட்டுக் கொண்ட திராவிட மாடல் அரசு, உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணியின் செயல்பாடுகளை கண்காணித்து, நேர்மையான வழியில் செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு காட்ட வேண்டும் என்பதே திமுக அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.