மதன் ரவிச்சந்திரன் அம்பலப்படுத்திய யூ டூப்பர்களுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?
தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி, மாரிதாஸின் அண்மைகால செயல்பாடுகள் மீதான சந்தேகங்கள், செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளை, நல்லரசு பார்வையாளர்களுக்கு முன் வைக்க விரும்புகிறோம்.
புற்றீசல் போல் சமூக ஊடகங்களில் இன்றைக்கு பலர் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், மாரிதாஸுக்கு என்று தனித்த சிறப்புகள் உண்டு. அவரே கூறுவதைப்போல, பத்தாண்டுகளாக திமுகவுக்கு எதிராகவும், திராவிட சித்தாங்களுக்கும் எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருபவர்களில் முதன்மையாக இருந்து வருபவர் மாரிதாஸ்தான்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு எதிராக மாரிதாஸ் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் சரி., இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்து வாரிசுகள், உறவினர்கள் மீதும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களாக இருந்தாலும், பொருளாதார வசதி குறித்தான விமர்சனங்களாக இருந்தாலும்கூட, மாரிதாஸ் பகிரங்கமாக குற்ற்ச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதே பாணியைதான் இன்றைக்கும் திமுக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் கடைப்பிடித்து வருகிறார் மாரிதாஸ்..
மாரிதாஸ் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும். திமுக தொடர்புடைய எந்தவொரு விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை நல்லரசுக்கு எப்போதும் ஏற்படாது.
இன்றைக்கு ஏன் மாரிதாஸ் ஏரியாவுக்குள் நல்லரசு நுழைந்து கேள்வி கேட்கிறது என்றால்,
யூ டியூப்பில் எதை வேண்டுமானாலும் பேசலாம். கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியத்தில் பேசி வந்த பலரின் முகமூடிகளை மதன் ரவிச்சந்திரன, அவர் கற்று வைத்திருக்கும் வித்தைகள் மூலம் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.
மதன் ரவிச்சந்திரனால் அவமானப்பட்டு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் ஊடகத்துறைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல வளர்ந்தவர்கள் எல்லோரும், அரசியல் கட்சித்தலைவர்களை குறிப்பாக திமுக தலைவர்களை மனம் போன போக்கில் விமர்சனம் செய்து வந்தவர்கள். அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து கொண்டிருப்பவர்கள்.
கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்ட யூ டியூப்பர்களுக்கு யார் மணி கட்டுவார்கள் என்ற எதிர்பார்த்திருந்த நேரத்தில், மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோக்கள், தமிழகத்தில் இன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மதன் ரவிச்சந்திரனால் அவமானப்படுத்தப்பட்டிருக்கும் யூ டியூப்பர்களை, ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்களுக்காக மனம் இரங்கி, மதுவிற்கும், 500 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கும் சோடை போயிருப்பவர்களை நேர்மையற்றவர்கள் என்று கூறி ஒதுக்கிவிடக் கூடாது என்று வக்காலத்து வாங்குகிறார் மாரிதாஸ்..
இந்த புள்ளியில்தான் மாரிதாஸோடு, நல்லரசு முரண்பட்டு நிற்கிறது.
இன்றைக்கு பிரபல யூ டியூப்பர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் எல்லோருமே, 5 ஆண்டுகளுக்கு உள்ளாகதான், பொதுமக்களிடம் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
சவுக்கு சங்கரை தவிர்த்து மற்றவர்களைப் பற்றி பார்ப்போம்.
ஆதன் யூ டியூப் தொடங்கப்பட்டதே, கடந்த 2019 ஆம் ஆண்டில்தான். மாதேஸ் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகதான் பொது வெளிக்கே அறிமுகமானவர். ஆதன் யூ டியூப் சேனல், பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம், சவுக்கு சங்கர் மற்றும் ரவீந்திரன் துரைசாமி ஆகிய இருவரால்தான்.
இருவருமே டூபாக்கூர்கள். போல சமூக போராளிகள் என்பதை, ஆதன் டியூப் சேனலுக்கு போட்டியாக உள்ள யூ டியூப் பிரபலங்கள், பல பேட்டிகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஊடகத்துறையை வாழ்க்கையாக கொண்டவர்களான சாவித்திரி கண்ணன், மணி, துக்ளக் ரமேஷ் போன்றவர்கள், அச்சு ஊடகங்களில் செய்தியாளராக பணியாற்றி, அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தை கொண்டுதான், 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள்.
சவுக்கு சங்கர், முன்னாள் காவல் துறை பணியாளர். துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானதால், தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்த காலத்தில், முழுமையாக பணியில் இருந்து நீக்கப்பட்டவர்.
அரசு சம்பளத்தை பெற்று கொண்டிருந்த நேரத்தில்தான், முந்தைய அதிமுக அரசுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியாக திமுக இருந்த போதும், ஆட்சியில் அமர்ந்த பிறகும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஒரு நிமிடம் பேசினால், 50 நிமிடங்கள் பயங்கரமான பொய்களாக இருக்கும் என்று சவுக்கு சங்கரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
இன்றைய தேதியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை சவுக்கு சங்கர் விழுந்து விழுந்து ஆதரிப்பதற்கும் ஓ.பி.எஸ்.ஸை கடுமையாக எதிர்ப்பதற்கும் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் வியாபாரியாக மாறி போயிருக்கும் சவுக்கு சங்கருக்கும், மதன் ரவிச்சந்திரனுக்கும் திரைமறைவில் தொடர்பு இருக்கிறது என்பதை கட்டமைக்க மாரிதாஸ், சிரத்தை எடுத்துக் கொள்வது ஏன் என்பதுதான் நல்லரசுவின் கேள்வியாக இருக்கிறது.
நேரிடையாகவே மாரிதாஸ் மீது நல்லரசு பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
துக்ளக் ரமேஷின் அண்மைகால யூ டியூப் பேட்டிகளை பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கும்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக கே. அண்ணாமலை நீடிப்பதை, பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே குழு மனப்பான்மையோடு செயல்படுபவர்கள் விரும்ப வில்லை என்று கூறி வருகிறார் துக்ளக் ரமேஷ்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் மட்டுமல்ல, பாஜக மேலிடம் என்று கூறப்படும் அகில இந்திய பாஜக தலைவர்களுடனும், மத்திய பாஜக அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர் துக்ளக் ரமேஷ்.
துக்ளக் ரமேஷின் கூற்றுப்படி பார்த்தால், கே.அண்ணாமலையை விரும்பாத பாஜக நிர்வாகிகள் கூட மதன் ரவிச்சந்திரனை இயக்கி இருக்கலாம்.
மதன் ரவிச்சந்தின் வெளியிட்ட வீடியோக்களில் அண்ணாமலையை பற்றிய எந்தவொரு விமர்சனமும் இல்லை என்று மழுப்புகிறார் மாரிதாஸ்.
ஒன்றிரண்டு திருக்குறள் அர்ஜென்டாக வேண்டும் என்று கே.அண்ணாமலை கேட்கிற ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார் மதன் ரவிச்சந்திரன்.
திருக்குறள் கூட தெரியாத அண்ணாமலைதான் 20 ஆயிரம் புத்தகங்களை படித்திருக்கிறார் என்று முக நூல்களில், டிவிட்டர்களில், யூ டியூப்புகளில் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள்.
கே. அண்ணாமலை, அரசியலுக்கு தகுதியற்றவர் என்றும் மதன் ரவிச்சந்திரன் மிக மிக கேவலமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் மாரிதாஸ் கவனத்தில் கொள்ளாமல் போனது ஏன் என்றே தெரியவில்லை.
அதைவிட முக்கியமாக, அமர் பிரசாத் ரெட்டியின் சித்து விளையாட்டுகள் பற்றியும் மதன் ரவிச்சந்திரன் வீடியோ ஆதாரங்களுடன் அமல்படுத்தியிருக்கிறார்.
கே.அண்ணாமலையின் மனசாட்சியாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் திருச்சி சூர்யா, அமர் பிரசாத் ரெட்டி, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியை பற்றி போட்டு உடைக்கிறார்.
போதையில் பேசினாலும் கூட பாரதிய ஜனதா பெயரை சொல்லியும், கே.அண்ணாமலையின் நட்பை பயன்படுத்தியும் வசூல் வேட்டையில் குறியாக இருந்து வரும் அமர் பிரசாத் ரெட்டியின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய நிர்ப்பந்தம், மாரிதாஸ் சொல்வதை போல திமுகவுக்கு என்ன வந்தது என்று கேள்வியை முன் வைப்பது நியாயமான ஒன்றுதானே.
இதே அமர் பிரசாத் ரெட்டி பற்றி இரண்டுக்கும் மேற்பட்ட காணொளிகளை வெளியிட்டவர்தானே மாரிதாஸ்.
அண்ணாமலையை கேடயமாக வைத்துக் கொண்டு அமர் பிரசாத் ரெட்டி செய்து வரும் சட்ட விரோத செயல்கள் அனைத்தும் மாரிதாஸுக்கு நன்றாக தெரியும்.
சட்டத்திற்கு புறம்பாகவும், அநியாயமாகவும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் அமர் பிரசாத் ரெட்டியை, பாரதிய ஜனதாவில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்று மாரிதாஸ் பொங்கிய அதே நேரத்தில், அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பில் அவருக்கு அருகிலேயே தான் அமர் பிரசாத் ரெட்டி அமர்ந்து கொண்டிருந்த அவலமும் ஏற்பட்டது.
அண்ணாமலையையும், அமர் பிரசாத் ரெட்டியையும் பிரிக்கவே முடியாது என்பது இன்றைய தேதியில் பாஜக மூத்த நிர்வாகிகள் அனைவருக்மே தெரிந்திருக்கும் போது, அண்ணாமலை மீது மாரிதாஸுக்கு கோபம் வரவில்லை என்பது விசித்திரமாகதான் இருக்கிறது.
மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு வரும் வீடியோக்கள் அனைத்தும் 6 மாதத்திற்கு முன்பு எடுத்தவைதான். அதே காலகட்டத்தில்தான் அமர் பிரசாத் ரெட்டியின் ஆட்டமும் தமிழ்நாடு பாரதிய ஜனதாவில் தலை தூக்குகிறது.
அமர் பிரசாத் ரெட்டியின் சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்தினால், தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்குதான் அவப்பெயர் ஏற்படும், வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மாரிதாஸுக்கு இந்து மத ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவேதான், அமர் பிரசாத் ரெட்டி பற்றியும், அவரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வார் ரூம் பற்றியும் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிடும் முடிவில் இருந்து பின்வாங்கி விட்டார் மாரிதாஸ்.
மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு வரும் வீடியோக்களின் பின்னணியில் ஆளும்கட்சியான திமுக இருக்கிறது என்பதை நிரூபிக்க படாதபாடு படுகிறார் மாரிதாஸ்.
ஆதன் யூ டியூப் சேனல் மாதேஸ்., பேசு தமிழா பேசு யூ டியூப் சேனல் ராஜவேல் உள்ளிட்டவர்கள், மதன் ரவிச்சந்திரன் வலையில் சிக்கியதற்கு, மாரிதாஸை போல நல்லரசுவும் பரிதாப படலாம். ஆனால், போதையிலும், 500 ரூபாய் நோட்டுகளுக்கு மயங்கி பிரபல யூ டியூப்பர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் மனசாட்சிக்கு செய்யும் துரோகம்..
திமுகவை எதிர்க்க வேண்டும் என்று லட்சியத்தோடு யூ டியூப்பை தொடங்குபவர்கள், நேரடியாக திமுகவுடன் மோத வேண்டும். அதுபோல, அதிமுகவை, பாரதிய ஜனதாவை, எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வத்தை, அண்ணாமலையை எதிர்க்க வேண்டும் என்றால் நேரடியாக மோத வேண்டும்.
அதைவிட்டு விட்டு சாலையில் பிச்சை எடுப்பவர்கள் கூட போடாத வேடங்களை எல்லாம் தரித்துக் கொண்டு, திரைமறைவில் நின்று கொண்டு, அரசியல்வாதிகளை எதிர்ப்பது என்பது அறமற்ற செயல் அல்லவா..
மது விருந்து, அன்பளிப்பு பெறுவதை எல்லாம் மாரிதாஸ் போன்றவர்கள் ஆதரிக்க கூடும். பொது வாழ்வில் மிகுந்த நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சிந்தனைப்போக்கோடு அரைநூற்றாண்டு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில், மதுவுக்காக ஒரு பேச்சு பேசுவோம். அன்பளிப்புக்காக ஒரு பேச்சு பேசுவோம் என்று நடமாடிக் கொண்டிருப்பவர்களை ஊடகவியலாளர்கள் என்றோ, அரசியல் திறனாய்வாளர்கள் என்று அங்கீகரிக்க முடியும்..
யார் மது வாங்கி கொடுத்தாலும், அவர்களுக்காக யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்போம். அன்பளிப்பு கொடுத்தால், தேர்தல் காலங்களில் ஒருவரின் வெற்றிக்காக போட்டியாளரை கேவலப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று பேசவதை எல்லாம் எந்த வகையிலான தொழில் தர்மம் என்று மாரிதாஸ் கூறுகிறாரோ… நல்லரசுக்கு தெரியவில்லை.
கிஷோர் கே.சாமி உள்பட அனைவருமே பத்தாண்டு காலத்திற்குள் தான் சமூக ஊடகங்களை, லாபம் தரும் தொழிலாக கருதி களத்தில் குதித்து இருப்பவர்கள்.
இவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருவாய் என்பது எல்லாம் தூசு போல.. பல கோடி ரூபாயை குறுகிய காலத்தில், அதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது சம்பாதித்து கொள்ள வேண்டும் என்ற வெறியோடு அலைபவர்கள்.
இப்படிபட்டவர்களை அடையாளப்படுத்துவதற்கு மதன் ரவிச்சந்திரன் கையாண்ட யூக்தி வேண்டும் என்றால் ஜனநாயகத்திற்கு மாறானதாக இருக்கலாம். முள்ளை முள்ளால் எடுக்கும் யுக்தியைதான் கையாண்டிருக்கிறார் மதன் ரவிச்சந்திரன் என்கிறார்கள் யூ டியூப்பை சித்தாந்த ரீதியாக பயன்படுத்தி வரும் பிரபல யூ டியூப்பர்கள்.
நிறைவாக, மதன் ரவிச்சந்திரனை இயக்கியது ஆளும்கட்சியான திமுகதான் என்பதை கட்டமைக்கும் முயற்சியில்தான் குதித்திருக்கிறார் மாரிதாஸ்.
அவருக்கு தெரியாத உண்மையை நல்லரசு மட்டுமே கண்டுபிடித்திருக்கிறது என்று பெருமிதப்படுவதற்கு எல்லாம் நல்லரசுக்கு விருப்பம் இல்லை.
கே.அண்ணாமலையால், அமர் பிரசாத் ரெட்டியால், திருச்சி சூர்யாவால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒரு சிலர் மதன் ரவிச்சந்திரனை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அதேநேரத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, மிகவும் ரிஸ்க்கான வேலையில் குதித்திருக்கிறார்கள் மதன் ரவிச்சந்திரனும், வெண்பாவும் என்றால், நிச்சயம், இருவருக்கு பின்னால் ஆளும்கட்சியின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது நல்லரசு.
மதன் ரவிச்சந்திரனின் முகமூடியை கிழிக்க களத்தில் குதித்திருக்கும் மாரிதாஸ், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் திரைமறைவு வேலைகளையும், உள்ளது உள்ளபடியே பொதுமக்களின் பார்வைக்கு மாரிதாஸ் கொண்டு வர வேண்டும் என்பதே நல்லரசுவின் வேண்டுகோளாக இருக்கிறது.
சவுக்கு சங்கரோடு மறைமுகமாக கூட்டு வைத்திருக்கிறார் மதன் ரவிச்சந்திரன்… மதனின் கூட்டாளிகளாக செயல்பட்ட நவீன், சோனியா என பெயர்களை எல்லாம் அடுக்கி வழக்கம் போல, ஆளும்கட்சியான திமுக மீது முழு பழியையும் போடும் திட்டத்தோடு செயல்பட துணிந்திருக்கும் மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரனுக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கி விட வேண்டாம் என்று நல்லரசு கேட்டுக் கொள்கிறது.
நன்றி நண்பர்களே, மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்போடு மீண்டும் சந்திக்கிறோம்.