இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திலும் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றிருக்கிறார் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் சீனிவாசன் என்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அது தொடர்பான வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகயில் மிகுந்த அனுபவம் பெற்ற வல்லுநர்கள்.
கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டதை சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், அமித்ஷா மற்றும் அவரது புதல்வர் ஜெய் ஷா ஆகியோருடன் மிகுந்த நட்புடன் இருந்து வருபவர் சீனிவாசன் என்பதையும் அவர்கள் நினைவுக்கூர்கிறார்கள்.
மூவர் கூட்டணியில் அழுத்தமான நட்பு தொடர்ந்து இருந்து வருவதன் காரணமாகவே, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடியுன் புதல்வர் அசோக் சிகாமணி எளிதாக வெற்றிப் பெற முடிந்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
இப்படி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பின் அதிகாரமிக்க ஆட்சியாளர்களிடம் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் சீனிவாசன், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தடுத்து நிறுத்த முடியாமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தவித்துக் கொண்டிருப்பதாக நல்லரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அதன்பிறகு முதல்வர்களாக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தை புனரமைக்கவோ, இருக்கைகளை அதிகரிக்கவோ ஒருபோதும் அனுமதி தரப்படவில்லை.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தலைமையுடனான நெருக்கம் மற்றும் மத்திய பாஜக அரசில் அசைக்க முடியாத செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக, 5306 இருக்கைகளை கூடுதலாக நிறுவும் வகையில் ரூ.90 கோடியில் புனரமைப்பு பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒருமுறை மைதானத்திற்குள் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றது. அதற்காக 190 கோடியும் செலவிட்ட போதும், விளையாட்டு மைதானத்தின் உள்பகுதியில் விளையாட்டு ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்வதற்கு வசதியாக இருக்கக் கூடிய அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி.பெவிலியன் ஆகியவற்றை அப்போதைய அதிமுக அரசின் அனுமதி கிடைக்காததால் புதுப்பிக்க முடியவில்லை.
ஆனால், திமுக அரசில் எளிதாக அனுமதி பெற்றதையடுத்து, உள்புறம் மற்றும் வெளிபுறம் ஆகிய பகுதிகயில் புனரமைப்பு பணிகள் பகல், இரவு பராமல் நடந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 15 ம் தேதிக்குள் பணிகளை முடிக்க ந்த நிலையில், இன்றைய தேதி வரை (டிசம்பர் 23) புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடியவில்லை.
திட்டமிட்ட காலத்திற்குள் பணிகள் முடியவில்லை என்ற ஆத்திரத்தில் பணிகளை துரிதப்படுத்த சட்டத்திற்கு புறம்பான அனைத்து வகையிலும் சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனை தட்டிக் கேட்க வக்கில்லாத நிர்வாகமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் இருந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சென்னை சேப்பாக்கத்தில் பறக்கும் சாலை அமைந்துள்ள சாலையில், நடைபாதையை முழுமையாக சேதப்படுத்தியும், நடைபாதையை மறைத்தும் தடுப்புச்சுவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையின் ஒரு முனையில் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.
திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கத்தை இணைக்கும் அந்த சாலையில் பகல் முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்துவரும் நிலையில், நடந்து செல்வோர் மற்றும் பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையைதான் முழுமையாக பயன்படுத்துவார்கள்.
ஆனால், கடந்த பல மாதங்களுக்கு முன்பு நடைபாதையை சிதைத்து புனரமைப்புப் பணிகளுக்காக அந்த இடத்தை பயன்படுத்துவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் ஆய்வு நடத்தி, ஆக்கிரமைப்பை அகற்ற கோரி சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதான நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த தகவல் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனர் சீனிவாசனுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ்ஸை தொடர்பு கொண்டு அவர் மிரட்டியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதன் காரணமாகவே, மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் அமைதியாகிவிட்டார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அதிகாரத்திற்கு முந்தைய அதிமுக முதல்வர்கள் துளி கூட பயப்படவில்லை. ஆனால், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதுகெலும்பே இல்லாமல் போய்விட்டது என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மூத்த அமைச்சரான துரைமுருகன், கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நடைபாதையில் தனது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையினரின் ஓய்வுக்காக, பத்துக்கு பத்து சதுர அடியில் அமைக்கப்பட்ட தற்காலிக ஓய்வு அறை குறித்து புகார் எழுந்தது. உடனடியாக அதனை அகற்ற உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.
கலைஞர் மு.கருணாநிதி வழியில் ஆட்சியில் நடத்துவதாக கூறும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட ஆட்சியில் செல்வந்தர்களின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்கள் சேப்பாக்கம் பகுதி மூத்த திமுக நிர்வாகிகள்.