Thu. Apr 18th, 2024

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி உயிரிழந்தார்.

கிட்டதட்ட பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் இன்றைய தேதி வரையில், அவரின் முதல் மற்றும் இரண்டாவது மனைவி குடும்பத்திற்கான சொத்துப் பிரச்னை முழுமையாக தீரவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார் சேலம் மாவட்ட திமுக முன்னோடிகள்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆண் வாரிசுகளில் இரண்டு பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரே வாரிசான மருத்துவர் ஆ.பிரபு, வீரபாண்டியாரின் பூர்வீக வீட்டில் தங்கியிருந்து திராவிட மாடல் ஆட்சியின் புகழை பரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த சோகம் என்கிறார்கள் வீரபாண்டியாரின் விசுவாசிகள்.

வீரபாண்டியாரின் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்ட திமுகவில் வீரபாண்டியார் வாரிசுகளின் போராட்டத்தை இனி விரிவாக வாசிக்கலாம்….

இவர் பெயர் மருத்துவர் ஏ.கே.தருண்.

சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் பரிட்சயமானவர்.

2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்குவதற்கான வாய்ப்பு ஏ.கே. தரணுக்கு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள் சேலம் திமுக நிர்வாகிகள்.

கடந்த பல மாதங்களாக சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வரை இரண்டாம் கட்ட திமுக தலைவர்களிடம் ஆசி பெறுவது என  மருத்துவர் ஏ.கே.தருண் காட்டிய சுறுசுறுப்பு, சேலம் திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஏ.கே. தருண் சுமந்து கொண்டிருக்கும் அடையாளம் வீரபாண்டியார் குடும்பத்து உறவினர் என்பதுதான்.

சேலம் மாவட்ட அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த வீரபாண்டி கே. ஆறுமுகத்தின் மூத்த புதல்வரான மறைந்த ஆ.நெடுஞ்செழியனின் மருமகன்.   

வீரபாண்டி ஆ. நெடுஞ்செழியன் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், வீரபாண்டியாரை விட பன்மடங்கு ஆளுமைமிக்க தலைவராக உருவாகியிருப்பார் என்பது அவர்களது குடும்பத்து விசுவாசிகளின் ஆதங்கமாகும்.  

செழியன் என்று அழைத்த திமுக நிர்வாகிகள், 11 ஆண்டுகள் கடந்த விட்ட பிறகும் கூட வீரபாண்டியாரின் விசுவாசிகள் கூட்டம், இன்றைக்கும் அவரது பெயரையே உரக்க கூவிக் கொண்டே இருக்கிறார்கள். 2001ல் இவர் மறைந்துவிட்டார். 21 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் செழியனின் புகழ் பாடும் திமுக நிர்வாகிகள் சேலத்தில் இன்றைக்கும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

வீரபாண்டி ஆ.செழியன் மீதான பாசத்தின் காரணமாகவே, மருத்துவர் தருணின் அரசியல் பிரவேசம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைவிட முக்கியமாக மருத்துவர் அருணின் தந்தை ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி காசி விஸ்வநாதன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர்.மு.கருணாநிதியிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர் காசி விஸ்வநாதன்.  

 ஆ.செழியனின் மருமகன், ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகன் என்பதாலேயே கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கி வருகிறார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

மேலும், 1990 காலகட்டங்களில் திமுக இளைஞர் அணியை எழுச்சியோடு மாநிலம் முழுவதும் செயல்பட வைத்த மு.க.ஸ்டாலின் அன்பை பெற்றவராகவும் ஆ. நெடுஞ்செழியன் இருந்தார். 

அந்த பழைய  நட்புக்கு மரியாதை தரும் வகையில் நெடுஞ்செழியனின் மருமகனான மருத்துவர் கா.தருணை அரவணைத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

2021 சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டியார் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின் என்ற அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக வீரபாண்டியார் குடும்பத்தில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் களம் இறக்கப்பட்டார் மருத்துவர் தருண்.

வீரபாண்டியாரின் சொந்த கிராமமான பூலாவரியை உள்ளடக்கிய வீரபாண்டி சட்டமன்ற தொகுதியை குறி வைத்தனர் அவரின் நேரடி வாரிசுகள். முதல் மனைவியின் இளைய மகன் ஆ.ராஜா. இரண்டாவது மனைவியின் ஒரே புதல்வர் மருத்துவர் பிரபு. மற்றொரு உறவினரான வெண்ணிலா சேகரும் காய் நகர்த்தினார்.  பலத்த போட்டியில் மருத்துவர் தருணுக்கே வாய்ப்பு வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் மறைந்த ஆ.ராஜா..
முதல்வருடன் மருத்துவர் வீரபாண்டி ஆ. பிரபு..
வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் வெண்ணிலா சேகர்…

வீரபாண்டியாரின் உறவுகள் ஒத்துழைக்காததால் தோல்வியை தழுவினார்  மருத்துவர் தருண். முதல் தேர்தலில் தோல்வியை சந்தித்தால் தருண் மீது அனுதாபம் ஏற்பட்டது. திமுக பொருளாளர், மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவின் புதல்வர் டிஆர்பி ராஜா எம்எல்ஏவின் நம்பிக்கைக்குரிய நண்பராக உயர்ந்தார் மருத்துவர் தருண்.

 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவில் சேர்ந்த கோவை தொழில் அதிபர் மகேந்திரன், திமுக எம்பி தமிழச்சி சந்திரசேகரின் சம்பந்தி ஆனார்.  அவரும் மருத்துவர் தருணோடு நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். 

வலமும் இடதுமாக டிஆர்பி ராஜாவும் மகேந்திரனும் நிற்பதால், இரண்டாம் கட்ட திமுக தலைவர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமாகியிருக்கிறார் மருத்துவர் தருண். 

குறுகிய காலத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது புதல்வரும அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரிடம் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் பொன்னான வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் தருண். 

திமுக ஐடி விங்கின் துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கும் மருத்துவர் தருண், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதை மிகவும் ரசித்து ரசித்து செய்து கொண்டிருக்கிறார். 

திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வீரபாண்டியாரின் பெயரை நினைவுகூரும் வகையில் மருத்துவர் தருணின் அரசியல் பயணம் புதிய எழுச்சியை பெற்றிருக்கிறது. 

2024 ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், சேலம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்துகிறார் மருத்துவர் தருண் என்கிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள். 

தற்போது சேலம் திமுக எம்பியாக இருப்பவர் எஸ்.ஆர்.பார்த்திபன். 

தனித்த தலைவராக சேலம் மாவட்டத்தில் பார்த்திபன் வலம் வந்ததால், மூத்த முன்னோடிகள் டி.எம்.செல்வகணபதி, சேலம் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூன்று மாவட்ட செயலாளர்களும் பார்த்திபனை புறக்கணித்து விட்டனர். 

ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு என ஆறு தொகுதிகளும் மூன்று மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

பார்த்திபனை வெறுக்கும் மூன்று மாவட்டச் செயலாளர்களும், தருணை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் கூட, திமுக தலைமையிடம் தருணை எம்பி வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவார்கள் என்கிறார்கள் வீரபாண்டியாரின் விசுவாசிகள். 

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரன் எம்எல்ஏவுடன் மருத்துவர் தருண்…

சேலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மருத்துவர், வீரபாண்டியாரின் விசுவாசிகள் ஆதரவு போன்றவற்றால், சேலம் எம்பி தேர்தலில் வெற்றியை சுவைப்பது சாத்தியமான ஒன்றுதான் என்று நினைக்கிறார் மருத்துவர் தருண். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருந்தாலும் கூட சேலம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தொண்டர்களோடு நெருங்கிப் பழகி வருகிறார் மருத்துவர் தருண். 

இன்றைய தேதியிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதி வேட்பாளராக தருண் களம் கண்டால், வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள். 

வீரபாண்டியாரின் நேரடி வாரிசாக இல்லாத மருத்துவர் தருணின் அரசியல் பயணத்தின் வேகத்தை கண்டு விக்கித்து நிற்கிறார்கள் வீரபாண்டியாரின் நேரடி வாரிசுகள்.

வீரபாண்டியாரின் இளைய மகன் ஆ.ராஜா. 

கடந்த 2021 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இளம் வயதில் இயற்கை எய்தியதற்கு சேலம் மாவட்ட திமுகவில் தனித்த அரசியல் செல்வாக்கு கிடைக்கவில்லை என்ற மனவருத்தம் தான், ஆ.ராஜாவை மரணத்தை நோக்கி தள்ளிவிட்டது என்கிறார்கள் வீரபாண்டியாரின் விசுவாசிகள். 

ஆ.ராஜாவின் மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப அவரது புதல்வி மலர்விழி, அரசியல் பயணத்தை தொடங்கி வீரபாண்டியாரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறார். 

அமைச்சர் கே.என்.நேருவுடன் வீரபாண்டி மலர்விழி ஆ.ராஜா…

வீரபாண்டியாரின் ஆண் வாரிசுகளில் எஞ்சியிருப்பவர் மருத்துவர் பிரபு. 

இரண்டாவது மனைவியின் புதல்வரான பிரபு, கடந்த பத்தாண்டுகளாக சேலத்திலேயே தங்கியிருந்து வீரபாண்டியாரின் விசுவாசிகளை அரவணைத்து திமுக அரசியலை முன்னெடுத்து வருகிறார். 

தற்போது சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவியில் இருக்கும் பிரபு, 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். 

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துடன் வீரபாண்டி ஆ.பிரபு..

அப்போது வாய்ப்பு கிடைக்காததால், 2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். வீரபாண்டியாரின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் தனக்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக  வீரபாண்டியாரின் நினைவிடம், ஆ.நெடுஞ்செழியன் நினைவிடம், ஆ.ராஜா நினைவிடம் அமைந்துள்ள பூலாவரியில், வீரபாண்டியாரின் பூர்விக இல்லத்தில் தங்கி அரசியல் பணியாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். 

வீரபாண்டியாரின் சொத்துகள் தொடர்பாக முதல் மனைவியின் வாரிசுகள் மற்றும் மருத்துவர் பிரபு ஆகியோரின் குடும்பத்திற்கு இடையே சுமூக உறவு இல்லை.  வீரபாண்டியார் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சொத்துகள் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வராததால், பூலாவரியில் குடில் ஒன்றை அமைத்து, அதில் தங்கி வீரபாண்டியாரின் விசுவாசிகள், தொண்டர்கள் ஆகியோரின் குறைகளை கேட்டு உதவி வருகிறார் மருத்துவர் பிரபு.

பூலாவரியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் பூர்வீக இல்லம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடில்……

மலர்விழியும், பிரபுவும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியை குறி வைத்தே அரசியல் செய்கிறார்கள் என்ற பேச்சு சேலம் திமுகவில் பலமாக கேட்கிறது. 

அதே வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியை குறி வைத்தே வீரபாண்டியாரின் உறவினரும் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளருமான வெண்ணிலா சேகர் என்பவரும் காய் நகர்த்துவதால், மூவரில் யாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்பதுதான் வீரபாண்டியார் விசுவாசிகளின் கேள்வியாக எழுந்து நிற்கிறது. 

வீரபாண்டியார் உயிரோடு இருந்த காலத்தில் அவரின் கண்ணசைவுக்கு ஏற்ப சேலம் மாவட்ட திமுக அசைந்தது. ஆனால், இன்றைக்கு அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் சிறிய அளவிலான உயர்விற்கே முட்டி மோத வேண்டிய பரிதாபம் வீரபாண்டியாரின் வாரிசுகள்கு ஏற்பட்டிருப்பதுதான் சோகம் என்கிறார்கள். 

மண்ணில் விழுந்து கிடப்பவர்கள் வானத்தில் பறப்பதும்

வானத்தில் பறப்பவர்கள் பாதாளத்தில் வீழ்வதும்

காலம் கற்பிக்கும் பாடமாகும்…