Thu. Nov 21st, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்வதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றுவாரா?

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் (Rashtriya Bal Swasthya Karyakramஆர்பிஎஸ்கே) மூலம் கோடிக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களின் உடல்நலத்தை பரிசோதனை செய்து, நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின்படி, அரசு மருத்துவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்கான நிதியையும், அவர்களின் பயன்பாட்டிற்காக வாடகை கார்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவதற்கும் தனியாக விதிகளை வகுத்து கோடிகளில் நிதிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

கடந்த 2015 ஆண்டு அறிமுகப்படுத்த இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வேலையில்லாத இளைஞர்கள், வங்கிக் கடன் மூலம் கார்களை கொள்முதல் செய்து, அவர்களே ஓட்டுநர்களாகவும் மாறி அரசு மருத்துவர்களுக்கு கார்களை இயக்கி வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த திட்டத்தில் முந்தைய அதிமுக ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் இயங்கி வந்த வாடகை ஒப்பந்தக் கார் ஓட்டுநர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே உள்ளூர் திமுக பிரமுகர்கள் அடாவடியாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஆகிய  பதவிகளை வகிக்கும் நிர்வாகிகளே பகல் கொள்ளையர்களாக மாறி மாவட்ட அளவில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களை மிரட்டி, மாத வாடகையில் கார்களை இயக்கி வரும் இளைஞர்களிடம் இருந்து மாமூல் வசூலித்து திரட்டி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த கார் ஓட்டுநர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறப்பட்டு வந்து தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் வளாகத்தில்,  தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தினை தமிழகத்தில் நிர்வகித்து வரும் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்ஸிடம் முறையிட்டனர்.

நேர்மையானவர் மற்றும் துணிச்சலான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரெடுத்துள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரியின் கண்டிப்பான உத்தரவையடுத்து, திமுக நிர்வாகிகளின் அராஜகத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது.

ஆனால், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை விட அதிகாரம் மிஞ்சியவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வாடகை ஒப்பந்தக் கார்களை இயக்கி வரும் இளைஞர்களை, திமுக எம்பியும் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளருமான கேஆர்என் ராஜேஷ்குமார் மாமூல் கேட்டு மிரட்டி வருகிறார் என்ற புகார் தற்போது எழுந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 கார்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. கார் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் மாமூல் தர வேண்டும் என்று திமுக எம்பி ராஜேஷ்குமாரின் தொடர் மிரட்டலின் காரணமாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், விடுமுறையில் சென்றுவிட்டார் என்கிறார்கள்.

சேந்தமங்கலம் திமுக ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட ஒன்றிரண்டு ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே திமுக எம்பியும் நாமக்கல் மாவட்ட செயலாளருமான கேஆர்என் ராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் திமுக எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் வாடகை ஒப்பந்த கார்களை இயக்கும் இளைஞர்களை நேரில் அழைத்து மிரட்டுவதாகவும், மாமூல் பணத்தை தரவில்லை என்றால், ஒப்பந்தத்தில் இருந்து கார்களை நீக்கி விடுவோம் என்று அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு தரக்குறையான வார்த்தைகளில் திட்டுவதாகவும் கண்ணீரோடு கூறுகிறார்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்.

ஆளும்கட்சியான திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் தனித்தனியாக மிரட்டல் பாணியை கையில் எடுத்திருப்பதால், வாடகை ஒப்பந்ததாரர்களான இளைஞர்கள் தங்களின் எதிர்கால வாழ்வு சூன்யமாகிவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மாமூல் கேட்டு திமுக நிர்வாகிகள் மிரட்டிய விவகாரம், ஆடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வாட்ஸ் அப் வாயிலாக மாநிலம் முழுவதும் பரப்பப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர்களைப் போல, ராணிப்பேட்டை மாவட்டம் திமுக எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரனும், வாடகை ஒப்பந்த கார் இளைஞர்களிடம் மாமூல் கேட்டு அடாவடி செய்கிறார் என்ற குற்றஞ்சாட்டும் தற்பொழுது புதிதாக எழுந்துள்ளது.

திமுக எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரன்…

நாமக்கல், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் பகல் கொள்ளையர்களாக மாறி, வாடகை ஒப்பந்ததாரர்களை மிரட்டி மாமூல் கேட்பதும், மாமூல் பணம் தர மறுப்பவர்களிடம் ஒப்பந்தத்தையே ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டி வருவதாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

திமுக எம்பி, எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர்களின் அடாவடி மற்றும் அராஜகச் செயல்களை கண்டித்து இன்றைய தினம் ( டிசம்பர் 21 )தலைமைச் செயலகத்தில் சிறப்பு அதிகாரி ஷில்பா சுதாகர் சதீஷ் ஐஏஎஸ்ஸிடம் நேரில் முறையிட, மாநிலம் முழுவதும் உள்ள வாடகை ஒப்பந்த கார் ஓட்டுநர்கள் குழுவாக புறப்பட்டு வந்துள்ளார்கள் என்ற தகவல் நல்லரசுக்கு கிடைத்திருக்கிறது.

திமுக எம்பி, எம்எல்ஏ உள்ளிட்டோர் நேரடியாக மாமூல் கேட்பதால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் ஓட்டுநர்கள், தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து முறையிடும் திட்டத்திலும் உள்ளதாகவும், திமுக ஆட்சியாளர்களின் அராஜகத்தை மாநிலம் முழுவதும் அம்பலப்படுத்தும் வகையில் வரும் நாட்களில் முதற்கட்டமாக நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்னோர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் புலம்பினாலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டிப்புடன் கூறினாலும், மாவட்டங்களில் உள்ள திமுக எம்பி, எம்ல்ஏக்களின் பகல் கொள்கைக்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாது போல..

ஜனநாயகவாதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பாணியை கையில் எடுத்து, அராஜகத்தில், அடாவடியில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள் மீது சாட்டையை சுழற்றினால்தான் அடங்குவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா…