ரசிகர்களை சுய லாபத்திற்காக நடிகர் விஜய் பயன்படுத்திக் கொள்ள கூடாது….
வெடித்து கிளம்பும் எச்சரிக்கை குரல்கள். …
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாட்களை கடந்து வீர நடை போட்டு கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைப் பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார், ராகுல்காந்தி.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் என 6 மாநிலங்களைக் கடந்துள்ள ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம், வெள்ளிக்கிழமையோடு (டிசம்பர் 16) 100 வது நாளை கடந்து விட்டது.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, வரும் 24 ஆம் தேதி, இந்தியாவின் தலைநகரான புதுடெல்லிக்குள் நுழைகிறார்.
அங்கு 8 நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று நிறைவாக காஷ்மீர் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு 150 வது நாளில் இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவுக் செய்கிறார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி.
அண்மையில் நடைபெற்ற குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முழுமையாக ஆர்வம் காட்டாதவர் ராகுல்காந்தி என்று பெருமையாக கூறும் காங்கிரஸ் முன்னோடிகள், அற்ப அரசியல் ஆதாயத்திற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ளவில்லை ராகுல் என்கிறார்கள் பெருமிதாக .
இந்தியாவின் மதச்சார்ப்பற்ற கொள்கையை சிதைக்கும் நோக்கத்தோடு மத வெறியை ஏற்படுத்தும் பாசிச செயல்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற தேசிய சிந்தனையை பொதுமக்களிடம் விதைப்பதுதான் ராகுல் காந்தியின் நடைபயணத்தின் முக்கிய நோக்கம் என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்கள்.
நாடு முழுவதும் பரந்துபட்டு இருக்கும் பண்பாட்டை, அவரவர் விரும்பும் வகையிலேயே துளியும் அச்சமின்றி மேற்கொள்ளவும் அவரவர் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கு அழுத்தமான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் பொதுமக்களை ஒன்று திரட்டுவதே பிரதான நோக்கம் என்றும் இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.
அரசியல் கலப்பின்றி ராகுல் காந்தியின் சிந்தனையும் செயல்களும் இந்தியாவின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டுவதற்காகதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதால்தான் பிரபல திரைப்பட நடிகர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அவரோடு கை கோர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் பாரத வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ராகுல்காந்தியோடு கை கோர்த்தால், மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டர். இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து ராகுல்காந்தியுடன் விரிவான ஒரு கலந்துரையாடலை ரகுராம் ராஜன் நடத்தியுள்ளார்.
இருவருக்கு இடையே தேச பக்தியோடு, தேச பற்றோடு நடைபெற்ற உரையாடல், நாடு முழுவதும் ஜனநாயகத்தை நேசிக்கிற உண்மையான தேச பக்தர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் வெளிப்பாடாகதான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் உலகநாயகனான நடிகர் கமல்ஹாசன், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ராகுல்காந்தியுடன் கை கோர்க்கும் விதமாக இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. ராகுலுடன் கமல்ஹாசன் கைகோர்க்கும் முடிவை வரவேற்றும் எதிர்த்தும் கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொள்ள முன்வந்திருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைமையிலான கூட்டணியிலும் நடிகர் கமல்ஹாசன் இணைய வேண்டும் என்றும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு மழை பொழிந்த கையோடு கே.எஸ்.அழகிரி நிறுத்தியிருந்தால், நடிகர் ரஜினிகாந்த்தை பற்றி யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவின் அழுத்தம் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த அழுத்தத்தை அதிகமாக்கிவிட்டது என்று கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
நடிகர் ரஜினிகாந்தைப் போல ஒரு பயந்தாக்கொள்ளியை திரையுலகில் பார்த்ததே இல்லை என்று சமூக ஊடகங்களில் சூடாக கருத்துகளை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
எப்போது எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள நேரிடுகிறதோ அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்தை இழுத்து நடுத்தெருவில் நிறுத்துவதற்கு ஒரு கும்பல் தயாராகவே இருந்து கொண்டிருக்கிறது என்று வருத்தம் கொள்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ஊர் உலகம் கேலி செய்யும் அளவிற்குதான் நடிகர் ரஜினிகாந்தின் நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன என்கிறார்கள் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன் வைக்கும் அரசியல் ஆய்வாளர்கள்.
பாஜக தலைவர்களுடனும் பிரதமர் மோடியுடனும் எப்போதும் நட்புறவுடனேயே இருப்பதையே ரஜினிகாந்த் விரும்புகிறார் என்ற விமர்சனத்தை முன் வைக்கும் எதிர் தரப்பினர், காவி துண்டை ஒரு போதும் தனக்கு அணிவிக்க முடியாது என வீரமாக பேசிய ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் யாத்திரை மேற்கொண்ட போது காவி துண்டை அணிந்து சென்றது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
பாஜக ஆதரவு நிலை என்பது ரஜினியின் மறைமுகமான திட்டம். ஆனால், அதை வெளிப்படுத்தினால் பெரியார் மண்ணான தமிழகத்தில் தனக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று பயப்படுகிறார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.
70 வயதை கடந்து விட்ட நிலையிலும், உடல் ஆரோக்கியமும் நன்றாக இல்லாத போதும் பணத்தாசையால் புதுப்புது திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொள்ளவே இல்லை என்று ரஜினி மீது குற்றம் சாட்டுகிறார்கள் அரசியல் விமர்சனர்கள்.
பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் ரஜினிகாந்த், நலிந்த நிலையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களை, அதுவும் தனக்கு மார்க்கெட் இல்லாத நேரங்களில் தன்னை வைத்து திரைப்படம் தயாரித்த பழங்கால தயாரிப்பாளர்களை கண்டு கொள்வதே இல்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒரு படத்திற்கு சம்பளமாகவும், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் படத்தை திரையிடம் உரிமை பெற்றுக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் ஒரே ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல் வருமான் ரஜினிக்கு கிடைத்து விடுகிறது என்று அதிர்ச்சியோடு கூறுகிறாகள்.
வருடத்திற்கு இரண்டு படம் என்று 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நடிகர் ரஜினிகாந்த், வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இருந்த போதும் சமுதாய நலனும் பொதுப் பார்வையும் சுத்தமாக இல்லாமல் சுயநலவாதியாக இருக்கிறார் என்பதுதான் அவருக்கு எதிரான பலத்த குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
சௌந்தர்யா, ஐஸ்வர்யா என்ற இரண்டு மகள்களின் திருமணங்கள் என மூன்று திருமணங்களை நடத்தி முடித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒருநாள் கூட அவர் விருந்து வழங்கி உபசரித்ததே இல்லை.
தன்னுடைய ஒவ்வொரு திரைப்படமும் ரீலிஸ் ஆகும் போது மட்டும் ஏதாவது பரபரப்பாக பேசி, ரசிகர்களை உசுப்பு ஏற்றுவார். அதன் பிறகு அமைதியாகி விடுவார்.
கர்நாடகாவில் அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் பஸ் கண்டக்ராக போராடிய நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சொத்துகளை சேர்ப்பதற்கு ரத்தங்களை வியர்வையாக சிந்தியவர்கள்தான் அவரது ரசிகர்கள்.
2021 ஆம் ஆண்டிற்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் என்று 50 வயதை கடந்து குடும்ப பாரத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த ரசிகர்களை மீண்டும் மீண்டும் அரசியல் ஆசை காட்டி வெறுப்பு ஏற்றியவர் ரஜினிகாந்த்.
“நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்யத் தயாராக தயாராக இருக்கிறேன். ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக தான் இருக்க வேண்டும் என்ற முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ரஜினிகாந்த், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று, ஒருமித்த உணர்வாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள் தேச பக்தர்கள்.
2020 ஆம் ஆண்டில் ரஜினிகாந்தின் மனநிலை முழுமையாக மத துவேசத்திற்கு எதிராகதான் இருந்தது. நேர்மையான ஆட்சி தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அமைய வேண்டும் என்று ஆவேசமாக பேசியவர்தான் ரஜினிகாந்த்.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே கொரோனாவால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி அரசியலில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு அரசியலுக்கு குட் பைட் சொன்னவர் நடிகர் ரஜினிகாந்த்.
இப்படி அடிக்கடி பல்டி அடிக்கும் ரஜினிகாந்த்தை பார்த்து அவரது ரசிகர்களே மனம் வெதும்புகிறார்கள்.
2 ஆண்டுகள் அமைதியாக இருந்த ரஜினிகாந்த், நான்கு மாதங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆளுநரிடம் அரசியல் பேசியதாக கூறியது., அப்போதே சர்ச்சையை கிளப்பியது.
அரசியலிலும் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையுள்ள ரஜினிகாந்த், பாஜக ஆதரவு மனநிலையில் இருந்தாலும் அதை வெளிப்படுத்த அவருக்கு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது என்ற விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் இளைஞர்களிடம், பெண்களிடம், பொதுமக்களிடம் புரட்சி வெடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தியுடன் கை கோர்ப்பதற்கு ஏன் பயப்படுகிறார் என்றும் ஆவேசமாகவும் கேள்வி எழுப்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காத போதும் நடிகர் கமல்ஹாசன், இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் மத துவேஷத்திற்கு எதிராக கருத்துகளை அடிக்கடி தெரிவித்தவாறே அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், நடிகர் கமல்ஹாசனைவிட பொருளாதாரத்தில், குடும்ப வாழ்வில் நிலையான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நாட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும், தேச ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு, அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கும் மத துவேஷத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் மவுனம் சாதித்து வருவது ஏன் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அநீதிக்கு எதிராக பொங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஆனால், திரைப்படங்களில் அநீதிக்கு எதிராக ஆவேசம் காட்டும் ரஜினிகாந்த், தன்னுடைய இறுதி காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட இந்திய மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தேவையான அரசியல் கட்டமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் பயந்தாங்கொள்ளியாக வாழ்வது எல்லாம் ஒரு வாழ்வா? என பொங்குகிறார்கள் ஜனநாயக பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தன்னார்வலர்கள்.
தனி மனிதருக்கு லாபம், நட்டம் பார்த்து குரல் கொடுப்பதை விட, சமூகத்திற்கு எது நல்லது என்பது பற்றி உரத்த குரலில் பேசுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் ரஜினி மீது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கே வெறுப்பு ஏற்பட்டிருப்பதுதான் துயரமான ஒன்று.
40 ஆண்டு காலமாக சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இரண்டு உச்சபட்ச நடிகர்கள், இரு வேறு திசைகளில் பயனித்துக் கொண்டிருக்கும் போது, இரண்டாம் தலைமுறை ஹீரோவான நடிகர் விஜய், அண்மைகாலத்தில் இரண்டு முறை தனது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோரை அழைத்து அசைவ உணவு வழங்கி மகிழ்வித்திருக்கிறார்.
ரசிகர்களுடனான உரையாடலில் நடிகர் விஜய் பேசியதை வைத்து, நடிகர் கமல்ஹாசன் வழியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயும் அரசியலில் குதிப்பார் என்ற ஆரூடங்கள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இல்லாத தில்லு, நடிகர் விஜயிடம் இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் குதித்தால், ஆளும்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
நடிகர் விஜய் அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, மதச்சார்பு கொள்கையில் ஆர்வம் உள்ளவரா.. அல்லது மதச்சார்ப்பற்ற கொள்கையில் ஆர்வம் உள்ளவரா என்பதை பொதுமக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.
அதைவிட்டு தான் நடித்த திரைப்படம் ரீலிஸ் ஆகும் நேரத்தில் அதற்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கி கொள்வதற்காக தனது ரசிகர்களை விஜய் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நடிகர் ரஜினி போல, ரசிகர்களை பகடை காயாக்குவது போன்ற எந்தவொரு விபரீதமான வழியிலும் நடிகர் விஜய் சென்று விடக் கூடாது.
தப்பித் தவறி பச்சோந்திதனமாக நடிகர் விஜய் நடந்து கொள்வார் என்றால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்திற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை இன்னும் 5, பத்து ஆண்டுகளிலேயே நடிகர் விஜயும் சுமக்க நேரிட்டு விடும் என்று எச்சரிக்கிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்த அறிவு ஜீவிகள்..