Fri. Apr 26th, 2024

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடிவாளம் போடுவாரா, முதல்வர்?

தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அண்மைக்கால செயல்பாடுகள், ஆளும்கட்சியான திமுகவிற்குள்ளும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மற்றும் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கும் விவகாரங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிர்வாக நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் ‘திடீர்’ புகழைப் பெற்றிருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திராவிட சித்தாந்தம் குறித்தும் வடமாநில ஊடகங்களுக்கு அளித்து வரும் நேர்காணலிலும் தன்னை பிரதான தலைவராக முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வேகத்தைப் பார்த்து, மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என்று தேசிய தலைவர்களால் அரசியல் வேறுபாட்டை மறந்து பாராட்டப்படும் திருச்சி சிவா எம்பியின் தீவிர விசுவாசிகளும், 2ஜி விவகாரம் மட்டுமின்றி பகுத்தறிவு, திராவிட மாடல் ஆகியவற்றை மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவின் தீவிர ஆதரவாளர்களும் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.


திமுகவில் தன்னைத் தவிர அறிவுஜீவிகளே இல்லை என்பதைப் போல, தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் நோக்கத்தோடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஹிந்தி மற்றும் ஆங்சில ஊடகங்களில் அடிக்கடி தோன்றி முழங்கும் வேகத்தைப் பார்த்து இரண்டாம் கட்ட தலைவர்களான பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி உள்பட பலர் பதற்றத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுஷனைக் கடித்த கதையாக கடந்த ஒரு வாரத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் துறையை குறிவைத்து தாக்கிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன், மது உற்பத்தி மற்றும் விற்பனையில் மர்மங்கள் நிறைந்திருப்பதாகவும், அரசின் கவனத்திற்கு வராத வகையில் குளறுபடிகள் நடப்பதாகவும் சமூக ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு மட்டுமின்றி திமுக தலைமைக்கும் கடும் தலைவலியை ஏற்படுத்திவிட்டதாக குமறுகிறார்கள் அவர்கள்.

தமிழக அரசின் கூட்டுப் பொறுப்பாக கருதப்படும் அமைச்சரவைக்கே சிக்கலை ஏற்படுத்தும் விதமாகவும், திமுக தலைமையாகவே தன்னை நினைத்தும் கொள்ளும் அளவுக்கு அதிகார மமதையில் பிடிஆர் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் கொந்தளிக்கிறார்கள் திமுக முன்னோடி நிர்வாகிகள். மேலும், மதுரை மாவட்ட திமுகவிலும் தன்னைத் தவிர எந்தவொரு முன்னோடி நிர்வாகிகளுக்கும் செல்வாக்கு கிடைத்து விடக் கூடாது என்று பதவி வெறியோடு நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் பிடிஆருக்கு எதிராக ஏற்கெனவே திமுக தலைமையிடம் முறையிடப்பட்டுள்ளதையும் இந்த நேரத்தில் நினைவுப்படுத்தும் திமுக மூத்த நிர்வாகிகள், திமுக அரசியல் வரலாற்றில் கத்துக்குட்டியான பிடிஆர், தனது முன்னோர்களின் தியாகத்தின் பேரில் குளிர் காய நினைப்பது படு முட்டாள்தனம் என்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள் ஆவேசமாக.


அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பிடிஆர் பழனிவேல் ராஜனின் காலத்திலேயே அரசியலில் செல்வாக்கு மிகுந்தவரும் மு.க.அழகிரி மதுரையில் தனி ராஜியத்தை கட்டமைப்பதற்கு முன்பாகவும், பின்பாகவும் தென் மாவட்ட திமுகவில் வல்லமை மிகுந்தவர் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியால் வெகுவாகப் பாராட்டப்பட்டவர் கூட்டுறவுத்துறை அமைச்சரான திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் தியாக பின்னணி பற்றியும், கலைஞர் குடும்பத்தின் மீதான விசுவாசம் பற்றியும் தெரிந்து கொள்ளாமல், சகட்டுமேனிக்கு அவரையும் விமர்சனம் செய்கிறார் பிடிஆர் தியாகராஜன் என்றால், அவருக்கு எந்தளவுக்கு புத்தி பேதலித்து இருக்கும் என்று நெற்றிக்கண்களை திறக்கிறார்கள் தென்மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள்.
1992 – 93 காலகட்டத்தில் திமுக தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அப்போது கலைஞரின் தளபதிகளில் ஒருவரான வைகோ, மதிமுக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது திமுகவே, இரண்டாக பிளவுப்பட்டதைப் போல, வடமாவட்டங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மதுராந்தகம் ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோ பக்கம் நின்றனர். இதேபோல, தென் மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களையும் தன் பக்கம் இழுக்க வைகோ முயற்சி மேற்கொண்டார். அந்தநேரத்தில் பதற்றமான கலைஞர் தென்மாவட்ட திமுகவைக் காப்பாற்ற ஐ.பெரியசாமியைதான் நாடினார்.

இன்றைக்கு திமுக தலைவரும் முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, மதுரையில் காலூன்றிக் கொண்டிருக்க மு.க.அழகிரி உள்ளிட்ட குடும்ப உறவுகள் அனைவரும் திண்டுக்கல் சென்று ஐ.பெரியசாமியை சந்தித்து கலைஞ்ரின் உருக்கமான வேண்டுகோளை விவரித்து, தென் மாவட்ட திமுக அணி மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


கலைஞர் குடும்பத்து உறவுகளே ஐ.பெரியசாமியிடம் நேரில் வலியுறுத்த சென்றது ஏன் என்றால், அந்த காலக்கட்டத்தில் தென் மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த நிர்வாகிகள் சிலர், வைகோ துவங்கிய மதிமுகவுக்கு தாவலாமா ? என்று மதில்மேல் பூனைப் போல இருந்தார்கள். அணி மாறுவது தொடர்பாக அவர்கள் ஐ.பெரியசாமியின் அனுமதிக்காக காத்திருந்தார்கள். அன்றைக்கு ஐ.பெரியசாமி மட்டும் கலைஞர் மீதான விசுவாசத்தை தூக்கியெறிந்துவிட்டு வைகோவின் தலைமையை அங்கீகரித்து மதிமுகவிற்கு சென்றிருந்தால், வட மாவட்டங்கள் போல தென் மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களாக இருந்த ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் மதிமுகவில் இணைந்திருப்பார்கள். அன்றைக்கே திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு இருக்கும்.
ஆனால், நெல்முனையளவும் கலைஞர் மீதான விசுவாசத்திற்கு களங்கம் வந்துவிடக் கூடாது என உறுதிகாட்டியவர் ஐ.பெரியசாமி. அவரின் கட்டளைக்கு தலைவணங்கி வைகோவின் வலையில் விழுந்து விடாமல் தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் முழுமையாக கலைஞரின் விசுவாசிகளாகவே நீடித்தார்கள்.
அன்றைக்கும் மட்டுமல்ல, அதன் பிறகும் கூட கலைஞர் மீதோ,அவரது குடும்ப உறவுகள் மீதோ தான் வைத்திருக்கும் விசுவாசத்தை ஒருபோதும் குறைத்துக் கொண்டவர் இல்லை ஐ.பெரியசாமி..

கலைஞர் குடும்பத்திற்கும் மறைந்த முரசொலி மாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரிவின் போது இருகுடும்பத்தினரிடமும் சமாதானம் பேசியவர் ஐ.பி.தான். இதேபோல, தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளிடையே மோதல் எழுந்தாலோ, உட்கட்சிப் பிரச்னை பூதாகரமானலோ சமரசம் காண்பதற்கு ஐ.பெரியசாமியைதான் அனுப்பி வைப்பார் கலைஞர் மு.கருணாநிதி.


இப்படி கலைஞரின் கண்ணசைவுக்கு ஏற்ப கமுக்கமாக காரியங்களை செய்து வந்த ஐ.பெரியசாமி, ஒரு காலத்திலும் அந்த நம்பிக்கையை ஆதாயமாக்கி குளிர்காய நினைத்தவர் இல்லை என்பதை கலைஞர் குடும்பத்து உறவுகள் நன்கறிவார்கள். இப்படி எண்ணற்ற தியாகங்களை புரிந்த ஐ.பெரியசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முக்கிய துறை வழங்கப்படவில்லை என்ற வருத்தம் திண்டுக்கல் திமுக நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அதிகாரத்தில் இல்லாத போது அவரை நாடிச் சென்ற திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு முகம் சுளிக்காமல் உதவி செய்தவர் ஐ.பெரியசாமி.
இன்றைக்கு செல்வாக்குமிக்க துறை அவருக்கு வழங்கப்பட்டிருந்தால் தென் மாவட்ட திமுக மிகப்பெரிய எழுச்சியோடு மக்கள் பணியில் முழு மூச்சாக சேவையாற்றிக் கொண்டிருப்பார்கள்.
செல்வாக்குமிக்க துறை ஒதுக்கவில்லையே என்ற வருத்தத்தில் துவண்டு கொண்டிருக்கும் நேரத்தில், 2006 – 11 திமுக ஆட்சியில் ஐ.பெரியசாமி வகித்து வந்த வீட்டுவசதி வாரியத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் எழுந்த புகாரில் மத்திய அரசின் அமலாக்கத்துறையின் விசாரணை வளையமும் அவரை சுற்றிக் கொண்டுள்ளது. அந்த காலகட்டத்தில் தலைமைச் செயலகத்தில் சுற்றி வந்த மூத்த திமுக நிர்வாகிகளுக்கு எல்லோருக்கும் தெரியும், ஐ.பெரியசாமிக்கும் அதற்கும் துளியளவு கூட சம்பந்தம் இல்லை என்று. அன்றைக்கு அமைச்சர்களை சுதந்திரமாகவே செயல்பட அனுமதிக்கவில்லை தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி…அன்றைக்கு அவரின் சிஷ்யரான பொட்டு சுரேஷ் கத்தை பைல்களோடு அமைச்சர் அறைகளுக்கு வருவார். பூட்டிய அறைக்குள் அமைச்சர்களிடம் அரசின் அனுமதியைப் பெற்றுச் செல்வார். அதேபோலவே, அப்போதைய முதல்வரின் தனிச் செயலாளர்களாக இருந்த ஒன்றிரண்டு பேரின் அழுத்தத்தால்தான் வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம், திமுக அரசுக்கும் சேர்த்தே தலைக்கு மேலே கத்தியாக நின்றுக் கொண்டிருக்கிறது.


இன்றைய விசாரணையின் போது ஐ. பெரியசாமி ஒரு வார்த்தை உண்மையை சொன்னால் போதும். மறைந்த திமுக தலைவர் கலைஞரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். அப்படிபட்ட ஒரு காரியத்தை தன் இறுதி மூச்சு இருக்கும் வரை ஐ.பெரியசாமி செய்யமாட்டார். அப்படியொரு சிந்தனையும் எழாது.

திமுகவுக்காக தங்களையே அழித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் 2016க்கு முன்பாக திமுகவின் கடந்த கால தியாகங்களும் தெரியாததால்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்.
தன் தலைமையை ஏற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பற்றி முதல்வருக்கு தெரியாதா? அவரை மிஞ்சிய அதிகாரம் படைத்தவராக பிடிஆர்? உலக மகா புத்திசாலியாக பேசுகிறாரே?

2021 மே மாதம் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது பிடிஆர் என்ன சொன்னார்? முறையான தரவுகள் இல்லாததால்தான் அரசின் சலுகைகளை தகுதியற்றவர்களுக்கும் சென்று அரசு நிதி வீணாகிறது என்று பொங்கியவர்தானே.. திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யப் போகிறது.. இவர் சொன்னபடி தகுதியானவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டாரா? அரசு பேருந்துகளில் அரசு பணியில் இருக்கும் மகளிர், செல்வ சீமாட்டிகள் எல்லாம் இலவசமாக தானே செல்கிறார்கள்.. இந்த ஒரு திட்டத்தில் கூட தகுதியானவர்களுக்கு அரசின் சலுகை கிடைக்கும் வகையில் செயல்பட முடியவில்லையே.. அப்படியென்றால் இதுவரை அவர் என்ன கிழித்தார் என்று கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
பதவி வந்தால் பணிவு வர வேண்டும். அதை கற்றுக் கொண்டால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் எதிர்கால அரசியல் ஒளிமயமாக இருக்கும். இல்லையென்றால்… திமுக தலைமை இன்றைக்கு இருப்பதை போல வரும்காலங்களிலும் அமைதியாக இருக்கும் என்று எங்களால் உறதியாக சொல்ல முடியாது என்கிறார்கள் தென் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள்.


அடக்கி வாசிப்பாரா… அத்துமீறுவாரா.. பிடிஆரின் செயல்பாடுகள்தான் பதில் சொல்லும்….

One thought on “ஐ.பெரியசாமியின் தியாகத்தை பற்றி தெரியாமல் ஆட்டம் போடுகிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்….”
  1. அவருடைய இயல்பான குண அதிசயம் என்று அவரை தலைமை விட்டு விடும்

Comments are closed.