Wed. Apr 24th, 2024

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

முரசொலி பத்திரிகை ஒரு டாய்லெட் பேப்பர் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பின் போது அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் நடுநிலை ஊடகவியலாளர்கள் பதிலடி கொடுக்க நினைத்தாலும் கூட, முரசொலியில் அவ்வப்போது வரும் கட்டுரைகளும் கூட ஊடகத் தர்மத்திற்கு எதிரானதாகவே இருப்பதால், அவர்களும் மௌனமாகிவிடுகிறார்கள்.  

1980 – 1990 காலகட்டத்தில் மறைந்த திமுக முன்னோடி சொற்பொழிவாளர்கள் வெற்றிக் கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் பேசிய பேச்சுநடை, அன்றைக்கு பெரிய விவகாரமாக மாறவில்லை. இன்று மிகப்பெரிய அளவில் செல்வாக்குப் பெற்றிருக்கும் சமூக ஊடகங்களைப் போல,  கடந்த காலத்தை ஒப்பீட்டுப் பார்த்தால், இளம் தலைமுறையினரிடம் திமுக மீது அபரிதமான வெறுப்பு ஏற்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணமாக தமிழரின் பண்பாடுதான் அமைந்திருக்கிறது.

இன்றைய சூழலில் இளம் பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் கூட பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு எதிரான நெல்மணியளவு விமர்சனத்தைக் கூட நேருக்கு நேராக எதிர் கொள்கிற தைரியமும், சமூக ஊடகங்களில் பொங்கி எழுகிற கூட்டமும் நிறைந்திருக்கிறது. உண்மையிலேயே ஆணாதிக்க சிந்தனைப் போக்கை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு நிமிடத்திற்கு நிமிடம் பொது வாழ்க்கையில் இருந்து விலகியிருக்கும் மகளிரிடம் கூட அதிகமாக காணப்படும் அறச்சீற்றத்திற்கு வரவேற்பும், ஆதரவும் அதிகரித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சமூக வாழ்க்கையில்  இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் தலைகீழாக மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் மட்டுமல்ல, ஊடக வாழ்க்கையிலும் கண்ணியம் காப்பது மிகவும் அவசியமாகி இருக்கிறது. அதுவும் திமுகவின் தாரக மந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை மீறி திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டால் அதனை உடனடியாக கண்டிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு ஆளும்கட்சி தலைமைக்கும், ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கும் உண்டு.

ஆனால், ஆட்சியின் தலைமைப் பொறுப்பை முதல் முறையாக ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும் வகையில் முரசொலியில் சிலந்தி எனும் பெயரில் அவ்வப்போது வெளியாகும் கட்டுரை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருப்பதாக திமுக முன்னோடிகளே வருத்தப்படுகின்றனர்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போகிற போக்கில் பேசிய ஒரு கருத்து, திராவிட பற்றாளர்களிடம் கூட கோபத்தை ஏற்படுத்தாத நேரத்தில், சிலந்தி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள தமிழிசையை சீண்ட, பதிலடியாக தமிழிசையும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் பூர்வீகத்தைப் பற்றியும் தாய்மொழியை பற்றியும் ஆளுநர் என்ற பதவிக்குரிய மரபையும் மீறி சாடினார். அதற்குப் பிறகும் அதே தரத்தோடு சிலந்தி கொந்தளித்தது.

இப்படிபட்ட செய்திக் கட்டுரைகள் இன்றைக்கு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிற இளம்தலைமுறையினரிடம் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பலைகளை உருவாக்கி விடுகிறது.

திமுகவையோ அதன் தலைமையையோ வசைப்பாடுகிறவர்களை அதே பாணியில்தான் வசைப்பாடுவோம் என்று பழங்காலத்தைப் போல இப்பவும் முரசொலி நடந்து கொள்ள வேண்டுமா? 1980-90 காலகட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஆள் உயரத்திற்கு தோளில் துண்டு அணிந்து திரிந்தார்கள். இன்றைக்கு அந்த மாதிரி துண்டு போடுகிற ஒரு திமுக நிர்வாகியை பார்கக முடியுமா? அப்படி நடமாடினால் எவ்வளவு கேலிகளை எதிர்கொள்ள நேரிடும். கால மாற்றத்திற்கு ஏற்ப அன்றாட நடவடிக்கைகள் மாறுவதைப் போல,  பேசும் மொழியிலும் நாகரிகம் வேண்டாமா?

திமுக முன்னோடிகளின் நாகரிகமற்ற செயல்பாடுகளால்தான் தூக்கம் இன்றி துன்பப்படுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் புலம்பி கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள்தானே…

திமுகவை மட்டுமே சமூக ஊடகங்கள் குறி வைக்கின்றன என்று வருத்தப்படுகிற நேரத்தில், அவர்களுக்கு மேலும் தீனி போடுகிற வகையில் முரசொலியில் நேற்றைய தினம் நடிகை குஷ்புவை பற்றி சிலந்தி எழுதியுள்ள கட்டுரை, ஆபாசத்தின் உச்சம். மலத்தை கிளறி பார்க்கிற செயல் என்கிறார்கள் பொதுவுடைமைவாதிகள்.

தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை… என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், திரைத்துறையில் நடிகை குஷ்பு ஏற்ற கதாபாத்திரங்களை சுட்டிக்காட்டி ஆபாசத்தின் ஒட்டுமொத்த உருவம் என்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை என்று பாஜக முன்னணி தலைவர் ஹெச். ராஜா, குஷ்பு மாற்றுக்கட்சியில் இருந்த போது செய்த விமர்சனத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார் சிலந்தியார்.

இப்படி ஹெச். ராஜா பேசிய அனைத்து பேச்சுகளையும் சிலந்தியார் முரசொலியில் தொடராக போடுவாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குஷ்புவை நடிகையாக்கியது யார்? ஆபாசத்தை முதலீடாக்கி பிழைக்க வேண்டும் என்றா குஷ்பு தமிழகத்திற்கு வந்தார் ?. 20 ஆண்டுகளுக்கு மேலாக அவரை ஆபாசமாக நடிக்க வைத்து வயிற்றைக் கழுவிக் கொண்டவர்கள் திரைத்துறையைச் சேர்ந்த 99 சதவீதம் தமிழர்கள் தானே? ஆபாசமாக  நடித்தது குற்றம் இல்லை. ஆபாசத்தை ரசித்த, கொண்டாடிய தமிழர்கள்தான் குற்றவாளிகள். சிந்தனை முழுவதுமே வக்கிரமும், காமமும் நிறைந்தது தமிழ் சமூகம் என்றுதானே வரலாறு பேசும்..

கட்சி மாறியது பெருங்குற்றமா? இன்றைய திமுக அரசில் முக்கிய துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தடம் மாறாமல் பயணித்தவர்களா, என்ன?

நடிகை குஷ்பு திமுகவில் இருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணத்தை புலனாய்வு செய்து வெளியிடும் துணிச்சல் இருக்கிறதா?

தன் இறுதிமூச்சு வரை பகுத்தறிவை போதித்தது மட்டுமின்றி பெண்களின் முன்னேற்றத்திற்காகவே குரல் கொடுத்த தந்தை பெரியாரின் சீடர்கள் நாங்கள் என்று சொல்லி கொள்கிறவர்கள் செய்கிற செயலா, இது. அதுவும் கண்ணியம் காக்க வேண்டிய ஊடகம் தடம் மாறலாமா?” என்கிறார்கள் திமுகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் மகளிர்.

பொது வாழ்க்கையில்  கண்ணியத்தை காப்பதுடன் கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும் என்ற திமுகவின் பாலபாடத்தை படித்தவர்கள் கூட இதுபோன்ற அவதூறுகளை கண்டிக்க வேண்டும். ஆனால், நேற்றைய சிலந்தியின் கட்டுரையை கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அனுபவம் மிகுந்த திராவிட போராளிகள், பெண் இனத்திற்கு அவமானத்தைத் தேடி தரும் கட்டுரையை படித்து புளாகிதம் அடைந்து சிலந்தியை பாராட்டுகிறார்கள் என்றால், எங்கே செல்கிறது திராவிடம் என்ற கோபம்தான் ஏற்படுவதாக கூறுகிறார்கள் மனிதத்தை நேசிக்கும் தமிழ் கவிஞர்கள்.

கடந்து போன ஒரு விஷயத்தை சிலந்தி கிளறிவிடும் அளவுக்கு நடிகை குஷ்பு அப்படியென்ன மாபாதகத்தை செய்தார்?

திமுக அமைச்சர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக பேச்சாளர் ஒருவர், பாஜகவில் உள்ள குஷ்பு உள்ளிட்ட நடிககைகளை தரக்குறைவாக பேசுகிறார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நேரத்தில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் பெண்கள் பலர் கண்டனக் குரல் எழுப்பினர். அதேபோல, நடிகை குஷ்புவும் தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அநாகரிகமாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்துகொண்டு சிறிதும் காலம் தாமதிக்காமல் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் மாநில மகளிரணி தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி, உடனடியாக மன்னிப்பு கேட்டு நடிகை குஷ்புவின் கோபத்தை தணிக்க முயன்றார்.

மேலும், இந்த விவகாரத்தில் திமுக மீது விழுந்த களங்கத்தை துடைக்கும் வகையில்தான் திமுக பேச்சாளர் மீது காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்தனர்.

நடிகை குஷ்பு விவகாரத்தில் திமுக தலைமையே நியாயம் தேடி கொண்டதால், சமூக ஊடகங்களிலும் அந்த விவகாரம் மறந்து போனது. இப்படிபட்ட நேரத்தில் ஒருவாரத்திற்குப் பிறகு, நடிகை குஷ்புவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, முதல்வரை விமர்சனம் செய்தார் என்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படாத ஒரு செய்தியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் குஷ்புவை சீண்டும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வார்த்தைக்கு வார்த்தை ஆபாசமே தூக்கலாக இருக்கிறது.   

டாய்லெட் பேப்பர் என்றால் உங்களுக்கு எல்லாம் கோபமே வராதா?

நடுநிலை ஊடகவியலாளர்களுக்கு ரத்தம் கொதிக்கிறது!