விரக்தியில் இருக்கும் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக பிசாசை கையில் எடுக்கும் தந்திரம்….
தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக பொதுதளத்தில் விவாதம் சூடு பறந்துக் கொண்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் அதிரடி அரசியலால் பெரியார் மண்ணில் பாஜக வேகமாக காலூன்றி வருவதாக இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரான கள போராளிகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வேலூர் மாவட்டத்திதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், வரும் காலங்களில் திமுகவுக்கு அதிமுக எதிரியல்ல., பாஜகதான் நேரடி அரசியல் எதிரியாக இருக்கப் போகிறது. தமிழக அரசியல் களத்திற்கு முற்றிலும் மாறான அரசியல் போக்கை கையில் எடுத்துள்ள பாஜக, பிசாசு போல அச்சுறுத்துகிறது என்று பொருள்படும்படியான கருத்தகளை முன்வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள பொதுச்செயலாளர் துரைமுருகனின் இந்த பேச்சு, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ள நிலையில், வேலூர் மாவட்ட திமுக முன்னோடிகள் அமைச்சர் துரைமுருகனின் பேச்சை சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன் நல்லரசுக்கு அறிமுகமான வேலூர் திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். கலகலவென சிரிப்போடு அவர் கூறிய அனைத்து தகவல்களும் அதிர்ச்சி ரகம்…
வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் பிரிப்பதற்கு முன்பு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அமைச்சர் துரைமுருகன். ஆனால், இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ராணிப்பேட்டை அமைச்சர் காந்தி வசமும், திருப்பத்தூர் தேவராஜ் எம்எல்ஏவின் முழு கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது.
துரைமுருகனின் சொந்த ஊர், அவர் குடியிருக்கும் காட்பாடி ஆகிய இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பாலான நாட்கள் துரைமுருகன் சென்னையிலேயே தங்கிவிடுகிறார். ஆனால், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி, காட்பாடிக்கும், சென்னைக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் துரைமுருகன் இருக்கும் நிலையில், அவரையே நம்பி உள்ள பழங்கால திமுக நிர்வாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு அமைச்சரும் ஒன்றும் செய்வதில்லை. அவரது வாரிசு கதிர் ஆனந்த்தும் ஒன்றும் செய்வதில்லை.
ஆனால், இருவரும் வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போது உள்ளூர் நிர்வாகிகள் தத்தம் கை காசை செலவழித்துதான் வரவேற்பு, மாலை மரியாதை, கூட்டம் நடத்துதல் போன்றவற்றை செய்ய வேண்டியுள்ளது.
திமுக ஆட்சியில் இல்லாத போது கை காசை செலவழித்தால் கூட பரவாயில்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் அரசு மூலம் வருமானத்திற்கு ஏற்பாடு செய்யாமல் இப்போதும் சொந்த காசையே செலவழிக்க வைத்தால், எந்த நிர்வாகி அமைதியாக இருப்பான். அந்த வகையில்தான் அன்றைக்கு துரைமுருகன் முன்னிலையில் பேசிய பிகே புரம் ராஜேந்திரன், அரசு கான்ட்ராக்ட்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு 12 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் என்ற குண்டை தூக்கிப் போட்டார்.
அவரின் பேச்சுக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்கள். அடுத்தடுத்து அவர் பேசியது எல்லாம் சரவெடி.
நாம கை காசை செலவழித்து ஜெயிக்க வைக்கிறோம். ஜெயிச்ச பின்னாடி காரில் ஏறி போய்விடுகிறார்கள்.
இந்த ஆவேசம் யாருக்கு எதிரானது என்றால், அமைச்சர் துரைமுருகனுக்கும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பிக்கும் எதிரானதுதான். அதனால், மேடையின் முன்வரிசையில் இருந்து கடைசி வரிசையில் அமர்ந்திருந்த அத்தனை திமுக தொண்டர்களும் உரக்க குரல் கொடுத்து அவரது பேச்சை வரவேற்றதுடன், அரங்கம் அதிர கை தட்டி, மேடையில் இருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு அதிர்ச்சி வைத்தியமே செய்து விட்டனர்.
அடுத்து அவர் சொன்னது, சென்னைக்கு போனால் சாப்பிட்டியா என்று கூட கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று சுமத்திய குற்றச்சாட்டு. இது நேரடியாக அமைச்சர் துரைமுருகனை நோக்கி வீசிய அம்புதான். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் மூத்த முன்னோடியாக இருந்தாலும்கூட ஒரு டம்ளர் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால், அதே சமயம் கோடிகளில் சம்பாதிக்கும் கான்ட்ராக்டர்கள் என்றால், அவரின் படுக்கையறைக்கே அழைத்துச் சென்று உபசரிப்பு பலமாக செய்வார்கள்.
இதற்கு முன்பு வேலூர் உள்பட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என எந்தவொரு மாவட்டத்திலும் உட்கட்சி கூட்டத்தில் இந்த மாதிரி ஒரு நிர்வாகி பேசியதே கிடையாது. அதுவும் அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருக்கும் மேடையில் இப்படி ஒருவர் பேசுவதற்கு துணிந்தால், அவரது சட்டையை கிழிக்காமல் விட மாட்டார்கள். ஆனால், அன்றைக்கு கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் பேச்சை ஒட்டுமொத்த கூட்டமே ஏகோபித்த ஆதரவுடன் ரசித்து வரவேற்றது.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலத்தில் உட்கட்சி விவகாரம் என்றால் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றால், உடனடியாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்திலாவது நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை சாதாரண கட்சி நிர்வாகிகளுக்கு இருந்தது. ஆனால், திமுக தலைவராகவும் முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் இருக்கும் இன்றைய தேதியில், எந்தவொரு கட்சி பிரச்னையும் அவரது கவனத்திற்கே கொண்டு செல்ல முடியவில்லை.
அதைவிட கொடுமையாக, கட்சிக்காக உழைத்து பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கூறி அமைச்சரையோ, அவரது மகனையோ சென்று பார்த்தால், தலைமை சம்பாதிக்கவே விடவில்லை. அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் துறையின் மொத்த செயல்பாடுகளும் உள்ளது. அவர்களை மீறி ஒன்றும் செய்ய முடியாததால் தேர்தலுக்காக நாங்கள் பட்ட கடனையே அடைக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.
இதற்கும் மேலாக, மூன்று மாவட்டச் செயலாளர்களும் சுயநலத்துடனேயே நடந்து கொள்கிறார்கள். அவர்களது ஆதரவாளர்களால் உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு பதவி கிடைப்பதில்லை. இருக்கும் பதவியும் பறிக்கப்படுகிறது. உட்கட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள் என்று பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் திமுக நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவர்களிடம் இருந்து தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்கட்சிப் பிரச்னையில் ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறார். துறை நடவடிக்கைகளில் முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று கூறி, தொண்டர்கள், நிர்வாகிகளின் கோபம் தங்கள் மீது விழாமல் திருப்பி விடும் கலையில் மூத்த அமைச்சர்கள் கை தேர்ந்தவர்களாக மாறிவிட்டார்கள்.
அந்த வகையில்தான் 12 சதவீதம் கமிஷன் விவகாரம் பெரிதாக்கப்பட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் பாஜக விவகாரத்தை கையில் எடுத்து தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் பேசினார் அமைச்சர் துரைமுருகன் என்பதுதான் அவரின் அரசியல் பாணியை கூட இருந்து பாத்துக் கொண்டிருக்கும் பல முன்னோடிகளின் எண்ணமாக இருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் அதிமுகதான் நமக்கு எதிரி என்று சொன்னால் ஒரு தொண்டனும் நம்பியிருக்க மாட்டான். ஏன் என்றால், அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. உள்ளூரில் உள்ள அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் அதிமுக தலைவர்களின் செயல்பாடுகளால் மனம் வெதும்பி அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளிடம்தான் புலம்பி வருகிறார்கள்.
இதன் காரணமாக அதிமுக நமக்கு எதிரி என்று சொன்னால் கிராம அளவிலான திமுக நிர்வாகிகள் கூட நம்ப மாட்டார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டதால்தான், பாஜகவை கையில் எடுத்துக் கொண்டார் துரைமுருகன்.
கிராமம் கிராமமாக சுற்றி வருகிற திமுக நிர்வாகிகளுக்கு தெரியாதா? புதிது புதிதாக பாஜக கொடிக்கம்பம் எந்தெந்த ஊர்களில் நடப்பட்டிருக்கிறது என்பதும் திமுக, அதிமுகவைப் போல மாநில அளவில் ஒரே சமயத்தில் பாஜகவால் பூத் கமிட்டி கூட்டத்தை கூட்டினால் அதன் செல்வாக்கை எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதும் அடிமட்ட திமுக தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்.
ஆக மொத்தத்தில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நேரத்தில் கூட தலைமையிடம் இருந்தோ, திமுக அமைச்சர்களிடம் இருந்தோ, எந்தவொரு ஆதாயமும் கிடைக்காததாலும், கட்சி அளவில் அங்கீகாரம் கிடைக்காததாலும் திமுக ஆட்சியிலும் அரசு அதிகாரிகள் மூலம் அதிமுகவினர் எளிதாக காரியம் சாதித்துக் கொண்டிருப்பதாலும் மனம் வெதும்பி இருக்கும் கிளைக்கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கள் மீது விழுந்து பிராண்டி விடக் கூடாது என்ற தந்திரத்துடன்தான் அமைச்சர் துரைமுருகன், பாஜக பிசாசு காட்டி திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுவது போல பேசி தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று வேலூர் திமுக நிர்வாகி ஒரே மூச்சில் பேசியதைக் கேட்டு, தலைச் சுற்றியது.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா….