Sat. Nov 23rd, 2024

சட்டப்பேரவையில் தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்தற்கு கண்டனம் தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது..இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. அதன் விவரம் ……

திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ₹1 லட்சம் கோடியாக இருந்தது; தற்போது ₹5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியதுதான் அதிமுகவின் சாதனை .

கடன் வாங்கி, வாங்கி தமிழகத்தை ரூ.5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசுதான் இந்தப் பழனிசாமி அரசு.

கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை, டெண்டர் விட்டு பினாமிகளுக்குச் சலுகைகள் செய்து கொடுத்துள்ளார்கள். கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்யாமல் தேர்தல் நேரத்தில் சுயநலத்தால் பணம் கொடுக்கிறது பழனிசாமி அரசு.

விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவு செய்கிறார் பழனிசாமி.

தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள டெண்டரை விட்டு அரசு கஜானாவை காலி செய்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டு காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

தமிழக நிதி மேலாண்மை நிர்வாகத்தில் ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர்.

அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கைத்தான் இது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிதிநிலை மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமை வேகமாகச் சீரமைக்க்கப்படும்.

இவ்வாறு திமுக பொருளாளர் துரை முருகன் கூறினார்…