Thu. Nov 21st, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். மேலும் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சக்தி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி காலையில் பள்ளியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளியின் நிர்வாகத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடற்கூராய்வு அறையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஸ்ரீமதியின் உடலின் பல இடங்களில் காயம் இருந்ததையடுத்து, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

ஸ்ரீமதியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்கும் வரை அவரது உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீமதியின் பெற்றோர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினரும் கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டத்தில் நாளுக்கு நாள் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட போதும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரோ, காவல் கண்காணிப்பாளரோ நிகழ்வு இடத்திற்குச் சென்று, அவர்களை சமாதானப்படுத்தவில்லை.

அதன் காரணமாக 5 ஆம் நாளாக இன்று காலையில் இருந்து பள்ளி வளாகத்திற்கு முன்பு திரண்ட பல்லாயிரக்கணக்கானோர், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பள்ளி வாகனம் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்து எரித்தனர். இதனை தடுத்த காவல்துறையினர் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும், வன்முறை முடிவுக்கு வரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே பதற்றம் நிலவி வந்த நிலையில் கனியாமூர் பகுதி கலவரப்பூமியாக மாறியது.

இதனிடையே சென்னையில் பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த தவறும் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், இதேநேரத்தில், கனியாமூர் பள்ளி வன்முறை நிகழ்வு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாவும், பள்ளி வளாகத்தை நேரில் ஆய்வு செய்து டிஜிபியும், உள்துறைச் செயலாளரும் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து கனியாமூருக்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறைச் செயலாளர் பனிந்தீர் ரெட்டி ஆகியோர் பள்ளி வளாகம், சின்னசேலம் அருகே கலவரம் நடந்த பகுதி உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.