பிரதமர் மோடி, இன்று அசாம் மாநிலத்தில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்கு திரண்டிருந்த மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அசாமில் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் மொழிகளில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதால், ஏழைக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் கூட மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் உயர முடியும் என்று குறிப்பிட்டார்.
(Enabling study of engineering and technical education in local languages will open many opportunities for youngsters.)
பிரதமரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டிதான் தமிழ் தேசியவாதிகள் கொதிக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தில் உள்ளூர் மொழிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் மருத்துவராகவும், பொறியாளராகவும் வர முடிந்தால், தமிழ்நாட்டிலும் ஏழைப் பெற்றோரின் குழந்தைகள் தமிழ் பள்ளிக்கூடங்களில்தானே படிக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும் வர வேண்டும் என்பதுதானே, இந்த நாட்டின் பிரதமரான மோடியின் ஆசையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கூடுதலாக ஏன் ஹிந்தியைக் கட்டாயமாக கற்றுக் கொள்ளவேண்டும். ஏன் நீட் தேர்வை எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். ஏன், அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்த கேள்விகளுக்கு எல்லாம், தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடி பதிலளிப்பாரா? என பொங்குகிறார்கள், தமிழ் தேசியவாதிகள்…
அசாமில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, மூன்று முறை பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். இன்றைய தினம் 3,300 கோடி ரூபாயில் வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்தும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அரசு விழாவில் பேசிய பிரதமர், ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள், அசாமை டெல்லியில் இருந்து வெகு தொலைவில் வைத்திருந்தார்கள். ஆனால், தற்போதைய பா.ஜ.க. அரசு, அசாம் மக்களின் வீட்டு வாசலுக்கே டெல்லியை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.