கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து எழுந்த வரலாறு காணாத வன்முறையால், உள்ளூர் மக்கள் கதிகலங்கி போய்வுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்துக்கு காரணம் என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வகுப்பு முடிந்து இரவு உணவு அருந்திவிட்டு தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர், தரை தளத்தில் ரத்தம் உறைந்தபடி பேச்சு மூச்சின்றி ஸ்ரீமதி தரையில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளி நிர்வாகிகள், ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்து காவல்துறைக்கு பள்ளி நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மாணவியின் பெற்றோர், தங்களது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்.
ஸ்ரீமதியின் மர்ம மரணம் பற்றி தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் தீயாக பரவியது. ஏற்கெனவே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து இருப்பதால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருந்த பெற்றோர் மற்றும் இளம்தலைமுறையினர் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஸ்ரீமதியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையை மேற்கொண்ட போலீசார், கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கல்லூரி தாளாளர், பள்ளி முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று நண்பகரில் ஸ்ரீமதியின் உடற்ஆய்வு வெளியாகி பொதுமக்களை மேலும் ஆத்திரமூடியது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்பிற்கு காரணமான தனியார் பள்ளியை இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் எண்ணிக்கை இல்லாததால், போராட்டக்காரர்கள் பாதுகாப்பு தடுப்புகளை மீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். பள்ளி வகுப்புறைகளுக்குள்ளும் புகுந்து சூறையாடினார்.
வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்ததையடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில், டிஐஜி பாண்டியன் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.
பள்ளி வளாகம் மட்டுமின்றி சென்னை சேலம் நெடுஞ்சாலை முழுவதுமே போர்க்களம் போல காட்சியளித்தது. ஒரு மணிநேரத்திற்கு மேலாக வன்முறை நீடித்ததையடுத்து, அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
ஒருமணிநேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
ஆட்சியர் விளக்கம்…
போராட்டத்தை கைவிட்டு ஸ்ரீமதியின் உடலை பெற்று இறுதிச்சடங்கு நடத்துங்கள். விரைவாக விசாரணை நடத்தி மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கண்டிப்பாக தண்டனை பெற்று தருவோம் என ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் போராட்டக்காரர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உறுதியளித்தார். ஆனால், பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
தீயணைப்புத்துறைக்கு சிக்கல்…
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு அருகே போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறை வீரர்கள் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அந்த வாகனங்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி...
ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்து:
போலீசார் மீது குற்றச்சாட்டு…
ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்து இன்றோடு ஐந்தாவது நாள் ஆகிவிட்டது. கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சமாதானமடையாத நிலையில், பள்ளி நிர்வாகிகளில் சிலரை கைது செய்து விசாரணை நடத்தியிருந்தால், பொதுமக்களின் கோபம் இந்தளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் கடந்த கால செயல்பாடுகளும், மாணவிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்தும் பெற்றோரிடமும் பொதுமக்களிடமும் எதிர்மறையான சிந்தனையே உள்ளது. இப்படிபட்ட சூழலை போலீசார் உரிய முறையில் உள்வாங்கி, அதற்கேற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருந்தால் இந்தளவுக்கு மக்கள் போலீசாருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
பள்ளிக் கூடம் அமைந்துள்ள பகுதியும் கள்ளக்குறிச்சியும் கிராமங்களை போன்ற அமைப்பில் இருப்பவைதான். இப்படிபட்ட சூழலில் இவ்வளவு மக்கள் திரள்வதற்கு பள்ளி நிர்வாகத்தின் மீதான எதிர்ப்பும் போலீசாரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையும்தான் காரணமாக அமைந்துவிட்து. உளவுத்துறை போலீசார் இந்த விவகாரத்தில் தோல்வியடைந்துவிட்டது.
5 நாள் போராட்டத்திற்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் திரட்டப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கு காவல்துறை தவறிவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் காவல்துறை உயரதிகாரிகளும் கள்ளக்குறிச்சியில் வரலாறு காணாத போராட்டம் மூளும் அளவுக்கு அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்று கள்ளக்குறிச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சமூக ஊடகங்களிலும் நீதி கேட்பு…
ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு விரைவான நீதி கேட்டு சமூக ஊடகங்களிலும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.