Thu. Nov 21st, 2024

அதிமுக தலைமை அலுவலகத்தை இழுத்து மூடி வைக்கப்பட்ட முத்திரையை அகற்ற கோரி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்ற இந்த விசாரணையின் போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நாள் அன்று கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் நுழையக் கூடும் என்று கூறி காவல்துறை பாதுகாப்பு கோரி மனு அளித்தோம். ஆனால், போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்காததால் வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன. பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை எடுத்துச் சென்றுவிட்டார். வன்முறை ஏற்பட்ட போது தடுக்காமல் காவல்துறை அமைதி காத்ததாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அதிமுக அலுவலகத்தை பொறுத்தவரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது. கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளர் தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர். அலுவலகத்தின் உரிமை, சுவாதீனம் தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. பிரதான எதிர்கட்சியின் அலுவலகத்தை சீல் வைத்தது ஜனநாயகததிற்கு விரோதமானது என்று வாதாடினார்.
பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் (ஓபிஎஸ்) கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார். அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ், கட்சி அலுவலகத்தை பூட்டி தங்கள் தரப்பினர் நுழைவதை தடுத்தனர். பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அலுவலகம் சென்றார். வானகரத்தில் இருந்த இபிஎஸ், எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார். சீல் வைத்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இருவருக்கும் இடையிலான பிரச்னையை வேறு வழிகளில் தீர்கக முடியும். சிவில் நீதிமன்றத்தை நாட இருவருக்கும் அறிவுறுத்தலாம். செட்டில்மென்ட் மூலம் தீர்வு காணலாம் என்றும் வாதாடப்பட்டது.
அதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அளித்த விளக்கத்தின் போது, கட்சி அலுவலகம் தனி நபர் சொத்தல்ல. தற்போது அவர் ஒருங்கிணைப்பாளரும் அல்ல. அவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீல் வைக்கும் முன்பு உரிய நடைமுறைகள் பின்பற்றபடவில்லை. கலவரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் கலவரம் சாலையில் நடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், ஊர்வலமாக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னிர்செல்வத்தை தடுத்த நிறுத்த முயற்சித்தும் அவர்கள் கேட்கவில்லை. இது காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையிலான தகராறு அல்ல. கட்சியின் இரு பிரிவினகுக்கும் இடையிலான பிரச்னை. 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த நிகழ்கள் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (ஜூலை 15) பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.