அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9.15 மணியளவில் துவங்கியது.
பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை அடையாறு பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்து காலை 6 மணியளவில் புறப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, வழியெங்கும் திரண்டிருந்த அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
3 மணி நேர வரவேற்புக்குப் பிறகு 9 மணியளவில் வானகரம் திருமண மண்டபத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மலர் கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.
காலை 9 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு வழங்கியதையடுத்து, கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள் வருகை தந்தனர்.
செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல்
முதல் நிகழ்வாக அவைத்தலைவர் தமிழ்உசேன் மகன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 16 தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
எம்ஜிஆர் வழியில் எடப்பாடியார்…
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது. மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொர்ந்து அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
பொதுக்குழுக் கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி தருமாறு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை கே.பி.முனுசாமி வழிமொழிந்தார்.
வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைப் போல, மாபெரும் சபை தனில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும் என்பதை போல எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் மாறாதய்யா மாறாது மனமும் குணமும் போல சிலர் இருக்கிறார்கள். அதிமுகவை எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா வழியில் நடத்த எடப்பாடியார் இருக்கிறார் என்று கூறினார்.
தொண்டர்களை மகிழ்விக்கும் எடப்பாடியார்..
முதல் 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்மொழிந்தார். அதிமுகவின் மூன்றாவது தலைமுறைக்குரிய தலைவரை அடையாளம் காட்டிய பொதுக்குழு என்பதால், இது வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
5 நிமிடத்தில் 500 தொண்டர்களைச் சந்தித்து மகிழ்ச்சி படுத்தும் தலைவராக எடப்பாடியாராக இருக்கிறார்.
(1)அதிமுக அமைப்புத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல், (2)தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். (3) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதும் குறித்தும் (4) இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு பொதுக்குழுவால் தேர்வு செய்தல் (5) இடைக்கால பொதுச் செயலாளராக தலைமை நிலையச் செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அனைத்து பொதுக்கழு உறுப்பினர்களுடன் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறது உள்ளிட்ட 9 தீர்மானங்களை உணர்ச்சிகரமாக வாசித்து முடித்தார்.
தொடர்ந்து, 8 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டன.
பொதுச் செயலாளருக்கான தகுதிகள்
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரை 4 மாதத்திற்குள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தகுதியாக 10 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழகப் பணியில் தொடர்ந்து 5 ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இனிமேல் துணைப் பொதுச் செயலாளர்கள் என்று அழைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசுக்கு கண்டனம், பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் உள்பட 9 முதல் 16 வரையிலான தீர்மானங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாசித்தார்.
முன்னதாக புரட்சித்தலைமகன் எடப்பாடியாருக்கு பட்டத்தை கொடுத்து புகழ்மாலை சூடினார், ஓ.எஸ்.மணியன்.
அதிமுகவின் வரவு செலவு கணக்கை அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சமர்பித்தார்.