Sat. May 4th, 2024

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது நடைபெற்ற வழக்கில், சரியாக காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வந்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம்: பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும்.

பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நிராகரித்துவிட்டார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்பதுரை மகிழ்ச்சி

தனி நீதிபதி தீர்ப்பு குறித்து பேசிய அதிமுக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அரசியல் கட்சியின் உள்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சட்டம், நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் தங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தால் ஓபிஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடாலாம் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.