Sat. May 18th, 2024

சேலம் மாவட்டம் தலைவாசலில் 1200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சேலம் ஆட்சியர் ராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.


தொடர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் போருக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.
மகளிர் அணி முயற்சி செய்தால், சேலம் மாவடடம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும்.
ஆத்தூர் வட்டத்தில் உள்ள தலைவாசல், தனியாக பிரிக்கப்பட்டு இனிமேல் தனிவட்டமாக செயல்படும். முதல்வர் திட்டங்களை அறிவித்தபடி உள்ளார், அவர் என்ன மந்திரவாதியா என மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். நான் மந்திரவாதி இல்லை. சொல்வதை செய்யும் செயல்வாதி.

கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகையை ரூ. 18,000 அதிகரித்தது அதிமுக அரசு, இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 25 லட்சம் தாய்மார்கள் பயன்பெற்றுள்ளனர்


10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், முதலமைச்சர் பதவிக்கான கோரப்பசியில் மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை முறியடித்து தேர்தல் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.