Thu. May 16th, 2024

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:

இந்திய – மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.அய்யனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.

இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டன. எந்தவித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், கொலைகாரர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.